அன்பான மக்களே ! இப்போது கடும் வெயிலினால் நாம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது ஏழு வாதைகளில் நான்காவது வாதையில் நாம் இருப்பதைப்போல் தோன்றுகிறது. அன்று இயேசு சொன்னது நினைவிற்கு வருகிறது. “ காலம் நிறைவேறிற்று. மனம் திருந்தி நற்செய்தியை நம்புங்கள் “ என்றது.
இப்போது நடப்பதைப்பார்த்தால் இறுதிக்காலத்தில் இருப்பதைப்போன்றுதான் தோன்றுகிறது. எங்கும் வேசித்தனமும், பணப்பேய்களும், மதுப்பேய்களும், பாவம் செய்கிறோம் என்பதைக்கூட உணராமல் மறத்துப்போனவர்களாய், கீழ்படிதல், தாழ்ச்சி என்ற புண்ணியங்கள் இல்லாமல் தான்தோன்றித்தனமாய் நடந்தால் இப்படி நடக்காமல் வேறு எப்படி நடக்கக்கூடும். சுயபரிசோதனை, மனமாற்றம் கட்டாயம் தேவை..திருவெளிப்பாடு தொடர்கிறது,
பின், ஆலயத்தினின்று உரத்த குரல் ஒன்றைக் கேட்டேன்: "நீங்கள் போய், கடவுளின் கோபம் நிறைந்த ஏழு கலசங்களையும் மண்ணுலகின்மீது ஊற்றுங்கள்" என்று அக்குரல் ஏழு வானதூதர்களிடமும் கூறியது.
முதல் வானதூதர் போய், தம் கலசத்தை மண்ணுலகின்மீது ஊற்றவே, கொடிய விலங்கின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள், அதன் சிலையைத் தொழுதவர்கள் உடம்பெல்லாம் மிகக் கொடிய புண் உண்டாயிற்று.
இரண்டாவது வானதூதர் தம் கலசத்தைக் கடலில் ஊற்றவே, அது பிணத்தின் இரத்தம் போல் மாறியது. கடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் மடிந்தன.
மூன்றாவது வானதூதர் தம் கலசத்தை ஆறுகள்மீதும், நீரூற்றுக்கள்மீதும் ஊற்றவே, அவையும் இரத்தமாயின.
நீர்த்திரளைப் பார்வையிடும் வானதூதர் இவ்வாறு சொல்லக் கேட்டேன்: "இருக்கிறவரும் இருந்தவருமான புனிதரே! இங்ஙனம் தீர்ப்பிடும் நீர் நீதியுள்ளவர்.
ஏனெனில், பரிசுத்தருடைய இரத்தத்தையும், இறைவாக்கினருடைய இரத்தத்தையும் மக்கள் சிந்தியதால், நீர் அவர்களுக்கு இரத்தத்தையே குடிக்கக் கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே."
பீடத்தினின்று எழுந்த குரலும், "ஆம், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவையே" என்றது.
நான்காவது வானதூதர் தம் கலசத்தைக் கதிரவன் மீது ஊற்றவே, அது மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மை பெற்றது.
கடும் வெப்பத்தால் மனிதர் எரிக்கப்பட்டவர்களாய், இவ்வாதைகளின் மீது வன்மை கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் தூஷித்தார்களேயொழிய, மனந்திரும்பி அவரை மகிமைப்படுத்த விரும்பவில்லை.
இயேசுவுக்கே புகழ் !