ஜெர்த்ரூத்தின் இருதயம் இப்போது ஆண்டவரிடம் திரும்பி விட்டது. அஞ்ஞான உரோமை கவிஞர்களின் கவிதையும், அஞ்ஞான பேச்சாளர்களின் சொற்பொழிவும் அவளது காதுகளை இப்போது கவர்ந்திழுக்கவில்லை. செபத்திற்கும் மடத்துப் பணிகளூக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் வேதாமத்தைத் தியானிப்பதிலும், திருச்சபைத் தந்தையர்களின் எழுத்துக்களைப் படிப்பதிலும் தனது நேரத்தைச் செலவிட்டாள். இப்போது காட்சி தியானம் ஒரு புதிராக அவளுக்குக் காணப்படவில்லை. வேதாகமத்தில் மறைந்திருக்கும் உட்பொருளை ஊடுறுவிப் படிக்கும் ஆற்றலை அவள் அவளுக்கு ஆண்டவர் அளித்தார். அவளது பரந்த வேதாகம அறிவின் காரணமாக தன்னை நாடிவந்த குருக்களுக்கு வேதாகமத்தின் உண்மைகளை போதித்தாள். விண்ணக உண்மைகளை தன்னுள் கொண்ட கருவூலமான அவள், தன்னை சுற்றி இருப்போருக்கு அவற்றை வாரி வழங்கினாள். செபத்திலும், தியானத்திலும், படிப்பிலும் அவள் சேகரித்துக்கொண்ட உண்மைகளை, எதிர்கால தலைமுறையினரும் தெரிந்து கொள்வதற்காக அவற்றை புத்தமாக எழுதினாள்.
சேசுவும் அவளது அர்ச்சிப்புப் பணியை அவளில் தொடர்ந்து நடத்தினார். அதாவது அவளது இருதயத்தை தனது இல்லடமாக மாற்றும் பணியை தொடர்ந்து ஆற்றினார். அவர் தொடர்ந்து பணி செய்த போதிலும்கூட, இரண்டு நாட்கள் அவற்றில் மறக்க முடியாதவை.
அவற்றில் ஒன்று 1247-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி தேவதாயின் மங்கள வார்த்தை திருநாளுக்கு முந்தின நாள். இது பற்றி அவள் கூறியதாவது :
“ என் ஆன்மாவின் விளக்கொளியே, உமது முதல் தரிசனத்திலிருந்து நான் பெற்றுக் கொண்டகொடை அநேக வரப்பிரசாதங்கள். ஆனால் அவற்றில் ஒன்று மற்றொன்றை விட சிறப்பானது. இதற்கு முன் நான் என் ஆன்மாவை உற்று நோக்கவில்லை. இப்போது நீர் தந்த ஒளியில் என் ஆன்மாவின் நிலையைப் பார்க்க முடிகிறது. எவ்வளவு குப்பைகள், எவ்வளவு ஒழுங்கீனங்கள், கண்ணால் பார்க்க முடியாத அளவு சீரழிந்த நிலை. என் ஆன்மா உமக்கு எந்த விதத்திலும் ஏற்றதல்ல. ஆனால் ஆண்டவரே, கண்களால் பார்க்க சகிக்காத எனது ஆன்ம நிலையை கண்டு நீர் என்னை தள்ளிவிடவில்லை. மாறாக நீர் என்னுள் பிரசன்னமாய் இருக்கிறீர் என்பதைக் கண்டு கொண்டேன். பகலின் வெளிச்சத்தில் காண்பதுபோல உம்மை நான் கண்டேன்.”
“ பிதாவே, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, மங்கள வார்த்தை திருநாளுக்கு முந்தினம் யாமப்புகழ் ( Matins) முடிந்த பிறகு உமது சந்திப்பின் மகிழ்ச்சியை எப்படி விவரிப்பேன்! அதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அன்பரே எல்லாவற்றிலிருந்தும் என் இருதயத்தை எடுத்து உம்மிடம் என்னை இழுத்துக்கொண்டீர்”
மேலும் இங்கு அவள் மூன்று சலுகைகள் குறித்துப் பேசுகிறாள்:
முதலாவதாக, அவளது இருதயத்தில் சேசுவின் திருக்காயங்கள் பதிக்கப்பட்டன. இது 1249-ம் ஆண்டு குளிர்காலத்தில் நடந்தது. இரண்டாவது, 1254-ம் ஆண்டு திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று அவளது இருதயம் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டது. மூன்றாவது அதே ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று குழந்தை சேசு அவளது இருதயத்தில் வந்தார். தனக்கு கிடைத்த சலுகைகளைப் பற்றி அவளே எழுதுகிறாள் :
“ எனது மனந்திரும்புதலுக்குப்பின் முதலாவது வந்த குளிர்காலத்தில் ஒரு சிறு புத்தகத்தில் கீழ்கண்ட செபத்தைப் பார்த்தேன்:
“ ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவே, உயிருள்ள கடவுளின் மகனே, உம்மை எனது உடைமையாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் உருவாக்கும். இதுகுறித்து தீவிர தாகத்தை உண்டாக்கும். உம்மில் வாழவும் உம்மையே எனது உயிர் மூச்சாகக் கொள்ளவும் தீராத ஆவலை எனக்கு உண்டுபன்னும். எனது ஒவ்வொரு நாடித்துடிப்பும் உம்மை நோக்கியே இருக்கட்டும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் என் இருதயத்தில் உமது காயங்களைப் பதிப்பித்தருளும். உமது துயரங்களை நான் என்னிருதயத்தில் வாசிக்கும்போது உமது காயங்களை ஆற்ற முயல்வேனாக. உம்மீதுள்ள அன்பு என்னில் பற்றி எரியட்டும். அனைத்து படைப்புகளும் எனக்குக் கசப்பாக மாறட்டும். நீர் ஒருவரே எனது எல்லாமுமாக இருப்பீராக.”
இச்செபம் எனக்கு மிகவும் பிடித்துப்போனதால் நான் அடிக்கடி இதைச் சொல்லி வந்தேன். எனது தகுதியின்மையைப் பாராமல் என் செபத்தைத் தேவரீர் ஏற்றுக் கொண்டீர். எனது இருதயத்தில் உமது ஐந்து காயங்களைப் பதித்தீர் என்பதை நான் உணர்ந்தேன்.”
“ ஒரு கிறிஸ்துமஸ் இரவு, விண்ணகம் தனது பனித்துளிகளால் மண்ணை ஈரமாக்கிய வேளை, மனதரான கடவுளின் பரிசுத்த தாயாரை நான் வேண்டிக் கொண்டிருந்த போது எனது இருதயத்தில் குழந்தை சேசு வந்ததை உணர்ந்தேன்.”
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !