திருவெளிப்பாடு இறைவெளிப்பாடு ஆகும். அவற்றில் பெரும்பகுதிகள் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இப்போது நடப்பதை ஆண்டவராகிய கடவுள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார். அதனால்தான் அவரை நாம் கடவுள் என்கிறோம். சாத்தானையும், போலித்தீர்க்கதரிசிகளையும், அசுத்த ஆவிகளையும் பற்றி தெளிவாக கூறுகிறது. நாம் எவ்வளவு விழிப்பாகவும், தெளிவாகவும், உறுதியாகவும், விசுவாசமுள்ளவர்களாகவும் இறுதிவரை நிலைத்து நிற்பவரே பேறுபெற்றவர்கள். இறைவார்த்தைக்கு செல்வோம்.
ஐந்தாவது வானதூதர் தமது கலசத்தை விலங்கின் அரியணை மீது ஊற்றவே, அதன் அரசை இருள் கவ்வியது. பட்டபாட்டைத் தாங்க முடியாமல் மக்கள் தங்கள் நாவைக் கடித்துக்கொண்டனர்.
தங்கள் பாடுகளையும், புண்களையும் முன்னிட்டு, விண்ணகக் கடவுளைத் தூஷித்தார்களேயொழிய, தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை.
ஆறாவது வானதூதர் தமது கலசத்தைப் பெரிய யூப்ரடீஸ் ஆற்றில் ஊற்றவே, தண்ணீர் வற்றிப்போக, கீழ்த்திசை மன்னர்களுக்கு வழியுண்டாயிற்று.
பறவைநாகத்தின் வாயினின்றும் விலங்கின் வாயினின்றும் போலித் தீர்க்கதரிசிகளின் வாயினின்றும் தவளை வடிவில் மூன்று அசுத்த ஆவிகள் வெளிவரக் கண்டேன்.
அவை அருங்குறிகளைப் புரியும் பேய்களின் ஆவிகள். எல்லாம் வல்ல கடவுளின் பெருநாளிலே போர் செய்யுமாறு உலகனைத்திலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்க அவை செல்லுகின்றன. இதோ நான் திருடனைப்போல் வருகின்றேன்.
ஆடையின்றி எல்லார் முன்னிலும் வெட்கி நிற்க நேராதவாறு ஆடைகளைக் களையாமல் விழித்திருப்பவன் பேறுபெற்றவன்.
எபிரேய மொழியில் அர்மகெதோன் எனப்படும் இடத்தில் அரசர்களை அவை ஒன்று சேர்த்தன.
ஏழாவது வானதூதர் தம் கலசத்தை வான் வெளியில் ஊற்றவே, ஆலயத்தின் அரியணையினின்று. 'முடிந்துவிட்டது' என்றொரு பெருங்குரல் ஒலித்தது.
மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதன் மண்ணில் தோன்றிய நாள்முதல், இதுவரை இத்தகைய நிலநடுக்கம் உண்டானதேயில்லை. அது அவ்வளவு கொடியதாய் இருந்தது.
அந்தப் பெருநகரம் மூன்று பாகங்களாகப் பிரிந்து போயிற்று; மாநிலத்தின் நகரங்கள் இடிந்து விழுந்தன. பாபிலோன் மாநகரையும் பழிவாங்கக் கடவுள் மறக்கவில்லை;
தம் கடுங்கோபம் என்னும் மதுக் கிண்ணத்தைக் குடிக்கச் செய்தார். எல்லாம் மறைந்து போயின. மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.
அம்மிக் கல் போலக் கல்மழை விண்ணின்று மக்கள் மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைத் தூஷித்தனர்.
திருவெளிப்பாடு 16 : 10-21
இயேசுவுக்கே புகழ் !