ஆன்மாக்களின் அர்ச்சிப்பில் தேவதாயின் பங்கு என்ன என்பதைப்பற்றி மற்ற அர்ச்சிஷ்ட்டவர்களை விட ஜெர்த்ரூத் நன்கு அறிந்திருந்தாள். பரிசுத்த தமத்திருத்துவம் தேவதாயை எவ்வளவு உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார்களென்றால் தெய்வீகத் திட்டம் அனைத்தையும் செயல்படுத்துவதில் தேவதாயின் பங்கு இன்றியமையாதாகிவிட்டது என்று நமதாண்டவரே ஜெர்த்ரூத்திற்கு தெரிவித்தார்.
ஒருநாள் யாமப்புகழ் நேரத்தில் மங்கள வார்த்தை ஜெபம் பாடப்பட்டது. அப்போது பிதா, சுதன், இஸ்பீரீத்துசாந்துவானவர் ( பரிசுத்த ஆவி) ஆகிய தேவ ஆட்களிடமிருந்து மூன்று ஒளிக்கதிர்கள் புறப்பட்டு தேவதாயின் உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்து பின்பு அவை புறப்பட்ட இடத்தை வந்து சேர்ந்தது. அப்போது அவளது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு குரல் கேட்டது.
“ அது பிதாவின் வல்லமைக்கு அடுத்தபடி, சுதனின் ஞானத்திற்கு அடுத்தபடி, பரிசுத்த ஆவியானவரின் இரக்கத்திற்கு அடுத்தபடி தேவதாயின் வல்லமையை, ஞானத்தை, இரக்கத்தைப் போல இன்னொரு வல்லமை, ஞானம், இரக்கம் இல்லை “ என்று கூறியது.
அப்போது இன்னொரு செய்தி அவளுக்கு தெரிவிக்கப்பட்டது. பூமியில் ஒரு ஆன்மா மங்கள வார்த்தை மங்கள வார்த்தை ஜெபத்தை பக்தியுடன் சொல்லும்போதெல்லாம் இதுபோல தமதிருத்துவத்தின் மூன்று ஆட்களிடமிருந்து ஒளிக்கதிர்கள் புறப்பட்டு மாமரியின் மாசற்ற இருதயம் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே போய்ச்சேருகின்றன என்று தெரிவித்தது. அதாவது ஆண்டவர் அனுப்பும் மகிழ்ச்சியினை தேவதாயின் வழியாகவே சம்மனசுக்களும், அர்ச்சிஷ்ட்டவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் இதனால் மனுவுருவெடுத்ததின் வழியாக ஆண்டவர் உண்டாக்கிய திரவியங்கள் இன்னும் அதிகமாக உண்டாக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒருநாள் சேசுநாதர் தமது தாயாரிடம் கீழ்க்கண்டவாறு கூறுவதை அவள் கேட்டாள் :
“ ஓ அரசியே ! அன்புள்ள அம்மா, உங்களை முன்னிட்டே நான் பாவிகள் மேல் இரக்கம் காட்டுகிறேன்.”
தேவதாய் அவளிடம்
“ நான் ஆண்டவரை கருவுற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியை யார் எனக்கு சொல்லிக்காட்டுகிறார்களோ அவர்களுக்கு நான் சலுகை காட்டுவேன். திருச்சபையானது ‘ தாய் என்பதை காட்டும்’ என்று பாடும்போது நான் திருச்சபையின் ஆசைகளை நிறைவு செய்வேன். நான் மகிமையின் அரசரின் தாய் என்பதையும், கெஞ்சி மன்றாடும் மனிதர்களுக்கு உதவும் வல்லமை படைத்தவர் என்பதையும் அடுத்து எனது பரிவிரக்கத்தை அவர்கள் மீது பொழிவேன் என்பதையும் காட்டுவேன் “ என்றார்கள்.
மாமரியின் இருவித தாய்மைக் குறித்து ஜெர்த்ரூத் நன்கு அறிந்திருந்தாள். ஒரு கிறிஸ்மஸ் அன்று “ கன்னிமாமரி தன் தலைச்சன் பிள்ளையை “ என்று பாடப்பட்டபோது அவள் தனக்குள்ளே சேசு நாதருக்கு தலைச்சன்பிள்ளை என்பதற்கு பதிலாக ஒரே பிள்ளை என்று பாடப்பட்டிருக்குமானால் மிகப்பொருத்தமாயிருந்திருக்கும் என்று சொல்லிக்கொண்டாள். அப்போது தேவதாய் காட்சியளித்து,
“ இல்லை, ஒரே மகன் என்பதைவிட தலைச்சன் பிள்ளை என்பதுதான் உரிய பட்டம். ஏனெனில் எனது மிகமிக பிரிய குமாரனுக்கு அடுத்தபடி அவராலும் அவரிலும் எனது ஸ்நேகத்தின் வயிற்றிலிருந்து பிறந்த நீங்கள் அனைவரும் எனது பிள்ளைகள். அதாவது சேசுவின் சகோதரர்கள் ஆகிவிட்டீர்கள் “ என்று கூறினார்கள்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே... ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !