நம் புனிதர் லூயிஸ் மரிய மோன்போர்ட் ஆயரின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் வெகுதொலைவில் இருந்த ஒரு தீவுக்கு செல்ல தீர்மானித்தார். அது ஆபத்து நிறைந்த கடல்வழி. போகும் வழியில் கடற்கொள்ளையர் தாக்குதல், வழிப்பறி போன்ற ஆபத்து, கடினமான கடற்பயணம், மற்றும் நம் புனிதரைக் கொலை செய்ய சதி என்ற பலவித தடைகளையும் மீறி எதற்கும் அஞ்சாமல் கடற்பயணம் செல்ல தீர்மானித்தார் புனிதர்.
கடற்பயணம் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்பது மைல் கடக்க வேண்டியிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகைத் துடுப்புகளால் ஓட்ட வேண்டியிருந்தது. கொள்ளைக்காரர்களின் படகுகள் இரண்டு தங்களை நோக்கிவருவதாகப் பார்த்தார்கள்.
“ தொலைந்தோம், தொலைந்தோம் “ என்று படகில் இருந்தவர்கள் கத்தினார்கள்.
புனிதரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பக்திப்பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். தம்மோடு சேர்ந்து பாடும்படியாக அவர்களைக் கேட்டார். பாடுவதற்கு பதிலாக ஓலமிட்டு அழுவதற்குத்தான் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
பாடமுடியாவிட்டால் ஜெபமாலை சொல்லுவோம் என்று சொல்லி ஜெபமாலை ஜெபிக்க ஆரம்பித்துவிட்டார்.
மிகவும் விசுவாச உணர்வோடு எல்லாரும் ஜெபித்தனர். ஜெபமாலை முடிந்ததும் படகிலிருந்தவர்களைப் பார்த்து
“ அஞ்ச வேண்டாம் நண்பர்களே நம் பரலோக மாதா நம்மைக் காப்பாற்றிவிட்டார்கள் “ என்றார் புனிதர்.
“ என்ன சொல்கிறீர்கள் ஐயா, காப்பாற்றி விட்டார்களா? கொள்ளைக்காரர்கள் நம் மேல் விழுந்து நம்மைக் கைதியாக்கப் போகிறார்கள். நீர் இப்படிச் சொல்கிறீரே “ என்றார்கள். "விசுவாசம் வையுங்கள் நண்பர்களே ! எல்லாம் சரியாகும் “ என்றார். இப்படிச் சொல்லி முடிந்ததும் கொள்ளைக்கார்களின் படகுகள் வேறு திசையில் திரும்பிப் போய்விட்டன.
அந்தச் சமையத்தில் எழும்பிய காற்றும் அவர்கள் வேறு திசைக்கு செல்ல துணை செய்தது.
மக்கள் அனைவரும் கடவுளுக்கு நன்றி செலுத்தினர்…
தீவுக்கு சென்ற புனிதரும் ஜெபமாலைப் பற்றி உருக்கமாக எடுத்துரைத்து நாள்தோறும் இதைச் ஜெபிக்கும்படியாக வலியுறுத்தினார்.
நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் வாழ்க்கை வரலாறு நூல்.
“ ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்கிறவன் நரகத்திற்கு செல்லமாட்டான். அவனிடம் பசாசின் முயற்சிகள் பலனற்று போகும். இதை மகிழ்ச்சியோடு என் இரத்ததினால் கையொப்பமிட்டு அறிக்கையிட நான் தயார்” - புனித லூயிஸ் மரிய் மோன்போர்ட்
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை...
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!