கீழே உள்ள இறைவார்த்தைகள் ஒரு தனிப்பட்ட விபச்சாரப்பெண்ணைக் குறிக்கவில்லை. அது ஒரு நாட்டையோ அல்லது ஏழு நாடுகளையோ குறிக்கிறது. குறிப்பாக ஆன்மாக்கள் கெட்டுப்போக ஆபாசங்களையும், அருவெறுப்பையும் யாருக்கும் எளிதில் கொடுக்கும் நாடாக இருக்கலாம். நல்ல விசயங்களைக் கற்றுக்கொள்ள விடாமல் எதிலும், ஏன் நல்ல விசயங்களைத் தேடிப்போனாலும் அதின் நடுவிலும் கெட்டவிசங்களைக்கொடுக்கும் நாடாகவும், முக்கியமாக இளைஞர்கள் மற்றும் குடும்பங்களைக்கெடுக்கும் காரியங்களை முனைப்போடு செய்யும் நாடுகளாக இருக்கலாம்.
கடவுள் எதை வேண்டுமானாலும் மன்னிப்பார் ஆனால் கடவுள் தன் சாயலாகவும், பாவனையாகவும் படைத்த ஆன்மாக்களை கெடுப்பதை மட்டும் பொறுத்துக்கொள்ளவே மாட்டார். அதை யார் செய்தாலும் எந்த நாடுகள் செய்தாலும் அதற்கு இப்படித்தான் முடிவு. இதுபோன்ற கேடுகளினின்று தன் ஆன்மாக்களைக் காப்பாற்றிக்கொள்வோர் பேறு பெற்றவர்கள். திருவெளிப்பாடுகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் இப்போது நிறைவேறி வருவதை வெளிப்படையாக நாம் காணலாம். விவேகி தப்பிப்பான். இறைவார்த்தைகள் தொடர்கின்றன.
இதற்குப்பின் பெரும் வல்லமையுள்ள இன்னொரு வானதூதர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மண்ணுலகு அவரது மாட்சியால் மிகுந்த ஒளி பெற்றது.
அவர் உரத்த குரலில் கூறினதாவது; 'வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர், அது பேய்களின் உறைவிடமாயிற்று, அசுத்த ஆவியெல்லாம் நடமாடும் கூடமாயிற்று, அசுத்தமும் அருவருப்பும் மிக்க பறவைகள் எல்லாம் வாழும் கூடம் ஆதுவே.
அவ்வேசி காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்தாள். மண்ணக அரசர்கள் அவளோடு விபசாரம் செய்தனர். அவளது செல்வச் செருக்கினால் மண்ணக வணிகர்கள் செல்வம் திரட்டினர்.'
பின்னர் விண்ணினின்று இன்னொரு குரலைக் கேட்டேன். அது சொன்னதாவது "என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும், அவளுக்கு நேரும் வாதைகளில் அகப்படாதிருக்கவும், அவளைவிட்டுப் போய்விடுங்கள்.
அவளுடைய பாவங்கள் வானளாவக் குவிந்துவிட்டன; அவளுடைய அநீதச் செயல்களைக் கடவுள் நினைவில் வைத்துள்ளார்.
அவள் கொடுத்ததற்கேற்றபடி திருப்பிக் கொடுங்கள்; அவள் செயல்களுக்கேற்றவாறு இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்; அவள் கலந்து கொடுத்த கிண்ணத்தில் இரு மடங்காகக் கலந்து கொடுங்கள்.
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச் செருக்குடன் வாழ்ந்த அளவுக்கு வேதனையும் துயரமும் அவளுக்குக் கொடுத்துவிடுங்கள். 'நான் அரசியாக வீற்றிருக்கிறேன், நான் கைம்பெண் அல்லேன், ஒருநாளும் துயருறேன்' என்று தன் இதயத்தில் கூறினாளன்றோ?
ஆகவே, சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகளெல்லாம் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்; நெருப்பு அவளை எரித்துவிடும்: ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பிடும் ஆண்டவராகிய கடவுள் வல்லமை மிக்கவர்.'
அவளோடு விபசாரம் செய்து செல்வச் செருக்கோடு வாழ்ந்த மண்ணக அரசர்கள் அவள் எரியும்போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து
அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று, 'ஐயோ! ஐயோ! வல்லமை மிக்க நகரே! பாபிலோன் மாநகரே ஒரு மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்து விட்டதே" என்று அழுது புலம்புவார்கள். திருவெளிப்பாடு 18 :1-10
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !