ஆண்டவரைத் தொட அருட்சகோதரிகளுக்கே அதிகாரம் இல்லையென்றால்..
புதுமைக்கு செல்லலாம்...
மெக்ஸிகோ நாட்டின் தலைநகரம் மெக்ஸிக்கோ பட்டணம். அப்பட்டணத்துக்கு சிறிது தூரத்தில் அமெக்கா என்னும் ஊர் இருக்கிறது. அங்கு இருந்த கார்மேல் சபை கன்னியர் மடத்துக்கு ஒரு நாள், சேவகர்கள் சென்றார்கள். வாசலை உடைத்து உள்ளே நுழைந்து கன்னியரை வெளியே போகும்படி உத்தரவிட்டார்கள்; சேவகர்கள் யாவரும் முரடர்கள். கன்னியரோ யாருக்குமே தீங்கு செய்யாதவர்கள். சேவகர்கள் மரியாதையின்றி கன்னியரைத் திட்டி “உடனே இந்த வீட்டை விட்டுக் கிளம்புங்கள்” என்றார்கள். வேத கலக காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மிகு சாதாரணம்.
கன்னியரின் தலைவி சேவகர்களை அணுகி எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். பணிவுடன் அவர்களை மன்றாடினார்கள், கெஞ்சிக் கேட்டார்கள். “இன்னும் சிறிது காலமாவது எங்களை விட்டு வையுங்கள். திடு திடுப்பென நாங்கள் எங்கு போக முடியும்? இன்னொரு இடம் அகப்படும் வரை பொறுமையாயிருங்கள். நாங்கள் ஏழைகள், எங்களுக்கு உதவியில்லை” என மன்றாடினார்கள். அந்தக் கொடிய சேவகர்கள், “உடனே வெளியேறு'' எனக் கத்தினர்.
அந்த முரடர்களோடு பேசிப் பயனில்லை என்று கன்னியர் கண்டனர். தங்களுக்குள்ள சொற்ப சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்படத் தயார் செய்யும்படி தலைவி ஏனைய கன்னியரிடம் கூறினார்கள்.
சில கன்னியரோடு தலைவி கோயிலுக்குச் சென்றார்கள். கோயிலில் திவ்ய நற்கருணை இருந்தது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அல்லாவிடில், அந்தத் துஷ்ட சேவகர்கள் சற்பிரசாத அப்பங்களை நிந்திப்பார்கள், பரிகசிப்பார்கள், ஒருவேளை தரையில் வீசி காலால் மிதிப்பார்கள், இதை விட மோசமான தேவ துரோகங்களையும் அவர்கள் செய்யலாம். தலைவியே திவ்ய நற்கருணையை தன்னுடன் தூக்கிப் போக வேண்டும், ஏனெனில் குருவானவர் ஒருவரும் கிடையாது. குருக்களை ஏற்கெனவே வேத விரோதிகள் துரத்திவிட்டார்கள்.
மிகு பக்தியுடனும் உருக்க மிகு நேசத்துடனும் தலைவி திவ்ய நற்கருணைப் பேழையைத் திறந்து, சற்பிரசாத பாத்திரத்தின் மூடியை எடுத்து, நீர் நிரம்பிய கண்களோடு ஆராதனைக்குரிய சிறு வெள்ளை அப்பங்களை - தன் கடவுளை-நோக்கி, “நேசமிகு ஆண்டவரே, வேறு வழியில்லையே. உம்மையே நான் தொட வேண்டியிருக்கிறதே'' என்றார்கள்.
தலைவி கரங்குவித்து அங்கு நிற்கையில் பாத்திரத்திலிருந்து திரு அப்பங்கள் தாமாகவே எழும்பி; ஏனைய கன்னியருடைய உதடுகள் முன்போய் நின்றன, தங்கள் பரலோக பத்தாவின் அற்புத நேசத்தைக் கண்டு கன்னியர் கண்ணீர் சிந்தி வாயைத் திறந்தனர். நடுங்கிக் கொண்டிருந்த அவர்களது நாவினுள் சற்பிரசாத அப்பம் இறங்கினது. என்ன ஆச்சரியம்! கடவுளே தம்மை அவர்களுக்குக் கொடுத்தார். நற்கருணைப் பாத்திரம் வெறுமனாயிற்று.
ஆனால் திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திற்கு உபயோகிக்கப்படும் பெரிய அப்பம் இன்னும் இருந்தது: பாத்திரத்தோடு இருந்தது. தலைவி அதை தன் கை யில் எடுத்தார்கள். உடனே திரு அப்பம் பாத்திரத் திலிருந்து ஆகாயத்தில் எழும்பியது, ஆகாயத்தில் நின்ற அது தானாகவே இரண்டாய் மடங்கியது பூசை நேரத்தில் குருவானவர் திவ்விய நற்கருணை உட்கொள்ளுகையில் திரு அப்பத்தை மடிப்பது போல் மடிந்திருந்த, அது தலைவியின் உதடுகள் முன் போய் நின்றது. பரலோக மகிழ்ச்சியுடன் அவர்கள் தன் கடவுளை உட்கொண்டார்கள். திவ்விய நற்கருணையில் யேசு தம்மை நேசித்தவர்களின் இருதயங்களில் பத்திரப்படுத்தப்பட்டார்
அவர்கள் தங்கள் மடத்தை விட்டுப் போன போது, யேசு அவர்களுடனிருந்தார். தம் நேசர்களின் ஆறுதலுக்காக யேசு அந்தப் புதுமையைச் செய்து தம் அளவற்ற இரக்கத்தைக் காண்பித்தார்.