பாத்திமா புனிதச் சிறுவன் பிரான்ஸிஸ் :
மாதாவின் முதல் காட்சியில் மாதாவோடு பேசிய சிறுவர்களின் உரையாடலில் சிறு பகுதி.
லூசியா : “ நான் மோட்சத்திற்கு போவேனா “
மாதா : “ ஆன் போவாய் “
லூசியா : “ ஜசிந்தா? “
மாதா : “ அவளும் போவாள் “
லூசியா : “ பிரான்சிஸ்? “
மாதா : “அவனும் அங்கு போவான். ஆனால் அதற்கு முன் அவன் நிறைய ஜெபமாலை சொல்ல வேண்டியிருக்கும் “
தன் பெயர் கேட்டதும் பிரான்சிஸ் லூசியாவிடம்,
“ என்னால் ஒருவரையும் பார்க்க முடியவில்லையே. ஒரு கல்லை எரி. அது ஆள்தானா என்று பார்ப்போம் “ என்றான். லூசியா அதை மறுத்து ஆச்சரியத்துடன்:
“ பிரான்சிஸ் உங்களை ஏன் பார்க்க முடியவில்லை ? “
“ அவனை ஜெபமாலை சொல்லச் சொல். அப்போது என்னைக் காண்பான். “
லூசியா இதை பிரான்சிஸிடம் சொன்னாள். உடனே அவன் தன் ஜெபமாலையை எடுத்து ஜெபிக்க ஆரம்பித்தான். ஆறு, ஏழு அருள் நிறை மந்திரங்கள் சொல்லவும் தெடீரென அவனும் அந்தக்காட்சியைக் கண்டான்.
மாதாவின் முதல் காட்சிக்குப்பின் குழந்தைகள் :
லூசியா : “ ஜெசிந்தா நீ போய் விளையாடு “
“ இன்றைக்கு எனக்கு விளையாட மனமில்லை “
“ ஏன் ? “
“ பாவிகளுக்காக பரித்தியாகம் செய்து ஜெபமாலை சொல்ல வேண்டும் என்று அம்மா சொன்னார்கள்
தானே? அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இனி மேல் நாம் ஜெபமாலை சொல்லும் போது மந்திரங்களை முழுவதும் சொல்ல வேண்டும் “.
( இதற்கு முன் குழந்தைகள் தங்கள் விளையாட்டுப்
புத்தினால் தேவ இரகசியங்களை சரியாக தியானிப்பது இல்லை. மேலும் பரலோக மந்திரத்தை, “ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே! “ என்று முடித்து விடுவார்கள். அருள் நிறை மந்திரமும் “ அருள் நிறைந்த மரியாயே “ என்பதுடன் முடிவுக்கு வந்து விடும். அதைத்தான் ஜெசிந்தா இங்கு குறிப்பிடுகிறாள்..)
“ நீ எப்படி பரித்தியாகங்கள் செய்யப்போகிறாய் ? “ என்று ஜெசிந்தா லூசியாவைப் பார்த்து கேட்டாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரான்சிஸ்,
“ நம் பகல் சாப்பாட்டை நம் ஆடுகளுக்கு கொடுத்து விடுவோம். நாம் சாப்பிடாமல் இருந்து பரித்தியாகம் செய்வோம் “
அன்றிலிருந்து பிரான்சிஸ் ஆடுகள் தண்ணீர்க்குடித்த ஒரு குட்டையிலுள்ள் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தான். அதிலே பெண்களும் துணி துவைப்பார்கள். ஏறக்குறைய அரைமைல் தொலைவிலிருந்து அல்யுஸ்திரலுக்குப் பிச்சை எடுக்க வரும் சிறு பிள்ளைகளுக்கு தங்கள் மதிய உணவைக் கொடுத்துவிடுவார்கள். இது ஜஸிந்தாவின் ஏற்பாடு.
மதியம் திரும்பியதும் குழந்தைகளுக்குப் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்துவிடும். பிரான்சிஸ் அங்குள்ள அஸின்ஹேரா மரக்காய்களைத் தின்ன ஆரம்பித்தான். அவை ருசியாய் இருந்தன. ருசியுள்ள காயைத்தின்பது பரித்தியாகமாகாது என்று ஜஸிந்தா வேறு ஒரு மரத்தின் காய்களைத் தின்றாள். அது கசப்பாயிருக்கும். தினமும் இப்படி கசந்த காய்களை தின்று வந்தாள் ஜஸிந்தா.
“ இதைத் திண்ணாதே ஜசிந்தா, இந்தக்காய் ரொம்ப கசப்பாயிருக்கிறது “
“ கசப்பிற்காகத்தான் நான் இதைத் தின்கிறேன். பாவிகள் மனம் திரும்ப “ என்றாள் ஜசிந்தா.
பின்பு ஒரு சமையம்…
பிரான்சிஸ் துன்பத்தை சகித்துக்கொள்வது மட்டுமல்ல அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டான்.
“ நாம் துன்பப்பட நேரிடும் என்று நம் அம்மா சொன்னார்கள்
தானே ? பரவாயில்லை. அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவுக்கு நான் துன்பப்படுவேன். “
இப்போதெல்லாம் பிரான்சிஸ் தனிமையையும், மவுனத்தையும் விரும்பினான். ஒரு நாள் அவர்கள் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டபின், பிரான்சிஸ் மற்ற இருவரையும் விட்டுவிட்டு ஒரு உயரமான பாறையின் உச்சியில் ஏறிப்போய் அங்கு நின்று கொண்டு கீழே பார்த்து,
“ நீங்கள் இங்கே வர முடியாது. என்னை இங்கே தனியாக விட்டுவிடுங்கள் “ என்று கூறினான்.
லூசியாவும், ஜஸிந்தாவும் அவனை அதிகமாகக் கவனிக்கவில்லை. அவர்கள் வண்ணத்துப் பூச்சிகளை துரத்தி விளையாட ஆரம்பித்தார்கள். அப்படியே பிரான்சிஸை மறந்து விட்டனர். பசியெடுத்த பிறகுதான் அவனைப் பற்றிய நினைவு வந்தது. அவனைத் தேடினால் அந்தப்பாறையின் மீது அசையாமல் படுத்திருந்தான்.
“ பிரான்சிஸ் ! பிரான்சிஸ் ! கீழே வந்து சாப்பிட விருப்பமில்லையா ?”
“ இல்லை. நீங்கள் சாப்பிடுங்கள் “
“ ஜெபமாலை சொல்ல வரவில்லையா ? “
“ ஜெபமாலை பிந்தி சொல்வோம் “
மீண்டும் லூசியா அவனைக் கீழே வரும்படி கூப்பிட்டாள்.
“ நீங்கள் இங்கே வந்து ஜெபம் செய்யுங்கள் “ என்றான் அவன்.
அவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்று எண்ணி விளையாட்டாகச் சொன்னான்.
ஆனால் இரு சிறுமியரும் மிகவும் கஷ்ட்டப்பட்டு, கை, விரல்களும் பாறையில் உராய, மெதுவாக ஏறி, பாறை உச்சியை அடைந்தார்கள்.
“ இங்கே இவ்வளவு நேரமாக என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? “
“ நான் சர்வேசுரனைப் பற்றி நினைத்துக்
ண்டிருக்கிறேன். எத்தனை பாவங்களால் அவர் எவ்வளவு மனம் நொந்துப் போயிருக்கிறார்!. அவருக்கு என்னால் மகிழ்ச்சியூட்ட முடியுமானால் எவ்வளவு நல்லது “ என்று அமைதியோடு அவன் பதில் சொன்னான்…
நன்றி : நூல் “ பாத்திமா காட்சிகள் “, மாதா அப்போஸ்தலர்கள் சபை.
சிந்தனை : சிறு பிள்ளைகள் பாவிகள் மனம் திரும்ப எவ்வளவோ பரித்தியாகங்கள் செய்கிறார்கள்... ஆனால் நாம் நம் பாவங்களுக்கும், பிறரின் பாவங்களுக்காக பரித்தியாகம் செய்கிறோமா?? அட்லீஸ்ட் நமக்கு வரும் துன்பங்களையாவது முனுமுனுக்காமல் " நாம் தண்டிக்கப்படுவது முறையே " என்ற அந்த நல்ல கள்ளனைப்போல் ஏற்றுக் கொள்கிறோமா??
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!