புனித அந்தோனியார் திருத்தலம்
இடம்: பொம்மிடி
மாவட்டம்: தருமபுரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: அரூர்
நிலை: பங்குத்தளம் (திருத்தலம்)
கிளைப்பங்குகள்:
1. புனித பெரியநாயகி அன்னை சிற்றாலயம், கலைஞர்நகர்
2. புனித லூர்து அன்னை கெபி, கொப்பகரை
பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கிய ஜேம்ஸ்
குடும்பங்கள்: 250 கிளைப்பங்கு சேர்த்து
அன்பியங்கள்: 13
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
திங்கள், வியாழன் திருப்பலி காலை 06:30 மணி
வெள்ளி, சனி திருப்பலி மாலை 06:30 மணி
செவ்வாய் மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
புதன் திருப்பலி காலை 07:00 மணி (கன்னியர் இல்லம்)
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 05:30 மணி செபமாலை. மாலை 06:00 மணி புனித அந்தோனியார் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் நகர்வலம் வந்து, 06:45 மணி கூட்டுத் திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, திருத்தைலம் பூசுதல்.
திருவிழா: ஜூன் மாதம் 01 ஆம் தேதி கொடியேற்றம். ஜூன் 13 ஆம் தேதி ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி. ஜூன் 14 ஆம் தேதி நன்றி திருப்பலி.
மண்ணின் இறையழைத்தல்கள்:
Fathers:
1. Fr. Panneer Selvam, Diocese of Dharmapuri
2. Fr. Arul John Bosco, SJ
3. Fr. John Messi, SJ
4. Fr. Elavarasn (Samson), OMI
Sisters:
1. Sr. Maria Kalyani, FMA (Salesian)
2. Sr. Lourdu, Cluny
3. Sr. Josphin Mary, Augustinian
4. Sr. Sagaya Mary, Charity of St. Anne
5. Sr. Regina Stella, FMM
6. Sr. Monica, CSST
7. Sr. Alphonsa Mary Lavanya, Augustinian
8. Sr. Thenmozhi, CSST
9. Sr. Princy Paulina, SMMI
10. Sr. Jessi Pricillia, SMMI
Brothers:
1. Bro. Paul Joney, Montfort
2. Bro. Felix Kumar, Patrician
Up coming Fathers:
1. Bro. Vivek Vinnarasan, SJ
2. Bro. Jermanus Sagayaraj, Diocese of Dharmapuri
3. Bro. Praveen Kumar, MIC
4. Bro. Antony Shiyam, Diocese of Dharmapuri
வழித்தடம் : பொம்மிடி இரயில் நிலையத்திலிருந்து, பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 500 மீட்டர் தொலைவில் உள்ள பொம்மிடி பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது இவ்வாலயம்.
Location map: https://maps.app.goo.gl/u41wmxV89YYWMP8g9
வரலாறு:
அமைவிடம்:
மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நாடாகிய, தருமபுரி மறை மாவட்டம், அரூர் மறைவட்டத்தில், தருமபுரியிலிருந்து கடத்தூர் வழியாக சுமார் 35 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து பாப்பிரெட்டிபட்டி வழியாக சுமார் 55 கி.மீ தொலைவிலும், இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் மரங்கள் சூழ உள்ள சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் கோடி அற்புதங்களை புரிந்து வரும், 'பொம்மிடி, கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலம்' அமைந்துள்ளது.
இந்தப் பங்கில், ஜாலியூர், பில்பருத்தி கலைஞர் நகர், பண்டாரசெட்டிப்பட்டி கொண்டகரஅள்ளி, மணலூர், கொப்பகரை, சிக்கம்பட்டி, B.நடூர், B.துரிஞ்சிப்பட்டி, கடத்தூர், தாளநத்தம் ஆகிய ஊர்களும் இணைந்துள்ளன. பொம்மிடி கிளைப்பங்கான கே.மோரூர் ஆலயமானது 24.04.1997ல் தருமபுரி மறைமாவட்டம் உதயமானபோது, சேலம் மறைமாவட்டத்தைச் சார்ந்த கொங்கரப்பட்டியின் கிளைப்பங்காக மாற்றம் பெற்றது.
'பொன்முடி' என்பதே பின்னர் பொம்மிடியாக மருவியது என்ற மரபு உண்டு. இந்த பொன்முடி ஒரு புலவரா! அல்லது சிற்றரசரா? எனத் தெரியவில்லை. எனினும் பொம்மிடி வருவாய் கிராம பெயராக 'பொ. மல்லாபுரம்' என்று உள்ளது.
திருத்தல வரலாறு :-
பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய பங்கு தலத்திருஅவையின் வரலாறு, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்குகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழைமையானது. சேலம் மேற்றிராசன சரித்திர சுருக்கம் என்ற நூலில் கொடுக்கப்பட்ட விவரப்படி, பொம்மிடியில் கிறிஸ்தவம் தோன்றிய ஆண்டு 1866 ஆகும். {பக்கம் 141-142}. 1861 ல் சில்லாராஹள்ளிலிருந்து, கோவிலூர் உபதேசியார் குடும்ப முன்னோர் 98 பேர், கோவிலூர் பங்குதந்தை அருட்திரு. ஜோசப் திரியோன் அவர்களால், 1866ல் திருமுழுக்கு பெற்றதாக [பக்கம் எண் 129] கூறுகிறது. 1872ல் பாண்டிச்சேரி ஆயர் மேதகு லவுவென்னான் வருகைப் புரிந்தார். மல்லாபுரத்தில் (பொம்மிடி) இருந்த 80 பேர்களில் அநேகமாக எல்லாருமே புது கிறிஸ்தவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. {பக்கம் 134}. கிறிஸ்தவர்கள் மல்லாபுரம், செல்லியம்பட்டி, கொல்லப்பட்டி ஆகிய இடங்களில் சிறிய செபக்கூடங்கள் அமைத்தனர்.
அப்போதைய இறைமக்கள் தேவைக்கு ஏற்ப சிறிய குடிசைக் கோவிலை கட்டி, இறைவனை வழிபட்டு வந்தனர். அச்சமயத்தில் இரயில்வேயில் பம்ப் டிரைவராக பணிபுரிந்து வந்த திரு. அந்தோணி, என்பவர் சிறிய புனித அந்தோணியார் சுரூபம் இக்கோயிலுக்கு வழங்கியதாக பாரம்பரியம் கூறுகிறது. இதன் காரணமாகவே, இப்பங்கு பின்னர் புனித அந்தோணியார் பங்காக உருவாக காரணமாக அமைந்தது எனக் கூறுவர்.
இரயில்வேயில் பணிபுரிந்த காரணத்தால் கோவிலூரிலிந்து வந்த திரு. டேனியல் குடும்பம் முதன்முதலாக பொம்மிடி வந்தார்கள். இவர்தான் முதல் கோயில் பிள்ளையாக இருந்தவர் எனவே இவர் குடும்பம் 'கோவில்தாய்' குடும்பம் என்றழைக்கப்பட்டது. பின்னர் செபஸ்தியான் குடும்பம், வேட்டைகார ஆரோக்கியசாமி குடும்பம், என படிப்படியாக தென்கரைகோட்டை மற்றும் பி பள்ளிபட்டிலிருந்து வந்து பொம்மிடியில் குடியேறி விசுவாசத்தில் வளர்ந்தார்கள்.
04.08.1930 அன்று, சேலம் முதல் ஆண்டகை மேதகு புருனியர் அவர்கள் பொம்மிடி, தென்கரைக்கோட்டை, மோரூர், விசுவாசம்பட்டி ஆகிய ஊர்களை இணைத்து பி. பள்ளிப்பட்டியை புதிய பங்காக உருவாக்கினார். (தருமபுரி மறை மாவட்ட வரலாறு பக்கம் எண் 43)
கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாலும் மக்களின் வளர்ச்சியை மனதிற்கொண்டும் 1955 ஆம் ஆண்டு சேலம் ஆயர் மேதகு. V. S. செல்வநாதர் ஆண்டகை அவர்கள் பொம்மிடியை - பி. பள்ளிப்பட்டிலிருந்தும், தாசரப்பள்ளியை - கிறிஸ்துபாளையத்திலிருந்தும் பங்காக உருவாக்கினார்.
26.03.1956 அன்று பி. பள்ளிப்பட்டி பங்குதந்தை அருள்திரு. T.C. ஜோசப் அவர்கள் பொம்மிடி குடிசை கோவிலை மாற்றி, ஓடு வேய்ந்த கோவிலையும் பங்குதந்தை இல்லத்தையும் கட்டி முடித்தார்.
15.10.1958 ல், பொம்மிடியில் புனித தெரேசா கான்வென்ட்' என்ற பெயரில் இல்லம் அமைத்து, Salesian Missionary of Mary Immaculate (SMMI) சபை
அருட்சகோதரிகளால் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பொம்மிடி பங்கின் முதல் பங்கு தந்தையாக ஜெர்மனியை சேர்ந்த சங்கைக்குரிய தெப்ஃஞி லிஜோன் MEP அடிகள் பொறுப்பேற்றார்கள். 13.09.1968 அன்று இறந்த இவரின் கல்லறை தற்பொழுது ஏற்காட்டில் உள்ளது. இவரின் இறப்பிற்கு பின்னர் பி. பள்ளிப்பட்டி பங்கு தந்தை அருட்திரு. தாமஸ் கிராஞ்சிரா அவர்கள் பொறுப்பு வகித்தார்கள். இவரின் காலத்தில் தான் பழைய கோவில் சுற்று சுவர் கட்டப்பட்டது.
பின்னர் பங்கு தந்தையாக அருட்திரு. மத்தேயு தெக்கடம் பணிபுரிந்தார். இவருக்கு பின், அருட்திரு. அந்தோணி கலத்தில் பெறுப்பேற்றார். இவர் காலத்தில் 'சிலைக்கு பின்னால்' என்ற மேடை நாடகங்கள் நடத்தப்பட்டன. திரு. இருதயம், திரு. அன்பு எ அருள்வாணன் அவர்களின் முயற்சியால் புனித பவுல், புனித பேதுரு, [திறவுகோல் ] புனித அருளானந்தர், புனித தோமையார், புனித செபஸ்தியார் போன்ற நாடகங்கள் நடத்தப் பெற்றன. புனித அந்தோணியார் தேரானது இரவு 8 மணிக்கு எடுத்தது இவர் காலத்தில்தான். அதற்கு முன்பு இரவு 12 மணிக்கு எடுத்து விடியற்காலையில் தேர் வந்து சேரும். மேலும் வறுமையில் வாடிய மக்களுக்கு அனைத்து மக்களுக்கும் சாதி, சமய பேதமின்றி கோதுமை, எண்ணெய் கொடுத்தும், விவசாயக் கிணறுகள் வெட்டிக் கொடுக்கப்பட்டு மக்களின் வாழ்வை வளமாக்கினார். பழைய கோவிலின் முன்புறம் மண்டபமும், கோவிலுக்கு சிமென்ட் தரையும், பீடத்திற்கு மொசைக் தரையும் போடப்பட்டது.
அருட்சகோதரி. ஜோஸ்பின் அவர்கள் முயற்சியால் பங்கில் நற்கருணை வீரர் சபை, மறைக்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் கன்னியர் இல்லம் சார்பில் இந்த பகுதியிலேயே முதன் முதலாக நர்சரி பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இவருக்குபின், அருள்தந்தை. ஐசக் ஜூனியர், அருள்தந்தை. ஐசக் சீனியர், அருள்தந்தை. A.L. இருதயம், அருள்தந்தை. குரியாக்கோஸ் ஆகியோர் மிக சிறப்பாக பணிபுரிந்தனர். பின்னர், அருள்தந்தை. ஜெகநாதன் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் கல்லறைத் தோட்டம் சுத்தம் செய்யப்பட்டது. முதன் முதலாக செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோணியார் நவநாள் செபம் செபிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவருக்குப் பின், அருள்தந்தை குருவில்லா தாமஸ் பணியாற்றினார்.
பின்னர் பொறுப்பேற்ற அருள்பணி. சூசை காலத்தில் மரியாயின் சேனை, பீடசிறுவர்கள் அணி ஏற்படுத்தபட்டது. ஆலயத்தின் இடதுபுறம் மேடை [Stage ] சீரமைக்கப்பட்டது. தற்பொழுது தேரில் வைக்கப்படும் புனித அந்தோணியாரின்
நான்கு அடி சுரூபம் வாங்கப்பட்டது.
பின்னர் அருள்பணி. புஸ்பநாதன்
பணிபுரிந்தார். தொடர்ந்து அருள்பணி. ரொசாரியோ காலத்தில் வின்சென்ட் தே பால் சபை ஆரம்பிக்கப்பட்டது. மாதா கெபி அமைக்கப்பட்டது. புனித அந்தோணியார் நவநாள் அட்டை அடிக்கப்பட்டு திருப்பலிக்கு முன் செபிக்கப்பட்டது. பின்னர் அருள்பணி. சவரியப்பன் காலத்தில், மண்ணின் முதல் அருள்சகோதரியான (சலேசிய சபை ] Sr. மரிய கல்யாணி F. M. A., அவர்களுக்கு மேதகு ஆயர் ஜோசப் ஆண்டனி இருதயராஜ் மற்றும் மேதகு ஆயர் A.M சின்னப்பா, ஆகியோர் தலைமையில் 25 வருட சில்வர் ஜூபிலி விழா கொண்டாடி சிறப்பிக்கப்பட்டது.
அருள்பணி. அதிரூபன் நோலாஸ் பொறுப்பேற்ற பிறகு, பங்கில் புதிய ஆலயம் கட்ட 04.12.2001 செவ்வாய்க்கிழமை அன்று, தருமபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு. ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்கள் புதிய ஆலயம் அமையும் இடத்தை அர்ச்சிப்பு செய்தார்கள். 21.12.2001 வெள்ளிக்கிழமை அன்று அருள்பணி. அருள்சாமி அவர்களால் புதிய ஆலயப்பணி தொடங்கி வைக்கப்பட்டது.
23.12.2001 ஞாயிற்றுக்கிழமை பங்கில் நாட்டாமை, மணியக்காரர், கோல்காரர்
என்ற பழங்கால முறையை மாற்றி முதன் முறையாக 12 பேர் கொண்ட பங்குப்
பேரவை அமைக்கப்பட்டது. ஆலய முன்புறம் ஆழ்துளை கிணறு போடப்பட்டது.
13.06.2002 புனித அந்தோணியார் திருவிழா அன்று, மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால், கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் புதிய ஆலயம் புனிதம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. பீடத்தில் புனித ஜெனோ (St. Zeno) அருளிக்கம் பதிக்கப்பட்டது.
11.08.2002 ல் ஆலயத்தில் சிலுவைப் பாதை சுரூபங்கள் வைக்கப்பட்டது. 07.12.2002 அன்று 15 புனித அந்தோணியார் மன்றாட்டு ஸ்தலங்கள் மற்றும் ஐந்து மகிழ்ச்சி தேவரகசிய ஸ்தலங்கள் ஆகியவை அர்ச்சிக்கப்பட்டன. 07.01.2003 ல் ஆயர் அவர்களால் பங்குதந்தை இல்லம் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
பொம்மிடியிலேயே எட்டு அடி உயர இரண்டு அந்தோணியார் சுரூபங்கள் செய்யப்பட்டு, ஒன்று கோவில் முகப்பிலும், மற்றொன்று ஆலய பின்புறமுள்ள கெபியிலும் வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை புனித அந்தோணியார், வியாழக்கிழமை அற்புத குழந்தை இயேசு, சனிக்கிழமை சகாய மாதா நவநாள் செப
அட்டைகள் புதியதாக அடிக்கப்பட்டு செபிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோணியார் தேரும், முதல் சனிக்கிழமைகளில் மாதா தேரும் எடுக்கப்பட்டது.
கோவிலின் மேற்கு புறம் மற்றும் தெற்கு புறம் கம்பி வேலி அமைக்கப்பட்டது. கல்லறைத் தோட்டத்தின் வடக்கு புறம் சுற்று சுவரும் மற்ற பக்கங்களில் கம்பி வேலியும், முன்புறத்தில் கேட்டும் அமைத்தது, மாதத்தின் கடைசி திங்கட்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அருள்பணி. ஜோசப் காலத்தில் அன்பியங்கள் தொடங்கப்பட்டன. பின்புற நுழைவு வாயில் சீரமைக்கப்பட்டு. புனித ஆரோக்கிய மாதா சுரூபமும் முன்புற வாயிலில் சிறிய புனித அந்தோணியார் சுரூபமும் வைக்கப்பட்டது.
அருள்பணி. கிறிஸ்டோபர் காலத்தில் பங்கு தொடங்கி 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. அதன் நினைவாக 50 அடி உயர கொடி மரம் நிறுவப்பட்டது. கோவிலின் சுற்று சுவர் கட்டப்பட்டது. ஒளி, துயர் மற்றும் மகிமை தேவரகசிய ஸ்தலங்கள் 15 அமைக்கப்பட்டது. பழைய கோவிலின் மேற்கூரை, கதவு சன்னல்கள் சீரமைக்கப்பட்டது. முன்புறம் மூன்று வணிக வளாக கடைகள் கட்டப்பட்டது. லூர்து மாதா கெபி ஆலய வளாகத்தில் கட்டப்பட்டது. ஆலய பின்புறம் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. குளியல், கழிப்பறைகள் இரண்டு கட்டப்பட்டது. கலைஞர் நகரில் புனித பெரியநாயகி அன்னை கெபியை கட்டி, முதன் முதலில் திருப்பலி நிறைவேற்றினார்.
ஆலய வளாகத்தில் மரங்கள் நட்டு இவரால் தனிப்பட்ட விதத்தில் பாராமரிக்கப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் சோலையாக மாற்றினார். வெளிநாட்டு மாணவர்கள் பொம்மிடியிலேயே தங்கி ஏழை குடும்பங்களுக்கு இருபது வீடுகள் கட்டி தந்தது போன்றவையும் குறிப்பிடத்தக்கது.
அருள்பணி. ஆல்பர்ட் வில்லியம் காலத்தில் அன்பியங்களுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்ற சிறிய பீடம் கட்டப்பட்டது. 75 கிலோ ஆலய மணி பொருத்தப்பட்டது. ஆலயப் பீடத்தின் இருபுறமும் சுரூபங்கள் வைக்க இரண்டு பீடத் தூண்கள் கட்டப்பட்டது.
அருள்பணி. அற்புதராஜ் 20.06.2011 ல் பொறுப்பேற்றார். பக்தர்கள் முழந்தாள் படியிட்டு செபித்து வர மணல் தளம் அமைக்கப்பட்டது. 750 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் செபமாலை செபிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பயணிகள் தங்குவதற்கு பழைய ஆலயத்தை சீர்படுத்தப்பட்டது. குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஐந்து குளியல் அறைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டது. வியாகுல மாதா சுரூபம் அமைத்தது. மீன்களுக்கு போதிப்பது போல புனித அந்தோணியார் மண்டபம் கட்டியது. கெபியின் மூன்று கோபுரங்களில், அதிதூதர்களான புனித மிக்கேல், புனித கபிரியேல், புனித இரபேல் சுரூபங்கள் அமைத்தது. கல்லறைக்கு கிழக்கு மற்றும் தெற்கு புறங்கள் சுற்று சுவர்கள் கட்டியது.
கல்லறைத் தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற்றது. ஆலயப் பீடப்பகுதியை பெரிதாக கட்டி, தரைக்கு டைல்ஸ் பதித்து, புதுப்பொழிவுடன் சீரமைத்தது திருப்பண்ட அறை, மின்சாதன அறைகள் கட்டி டைல்ஸ் பதித்தது. புனித அந்தோணியார் மண்டபத்திற்கு டைல்ஸ் பதித்தது. வழிபாதை இருபுறமும் சிறிய தடுப்பு சுவர் கட்டி அழகுப்படுத்தியது. பழைய ஆலய வளாகப் பகுதி, மாதா கெபி முன் தரைத்தளம் அமைத்தது.
சீயோனின் சிகரங்கள், அந்தோணியாரின் நாவுகள், அந்தோணியாரின் சிறகுகள், அந்தோணியாரின் சகோதரிகள், அந்தோணியாரின் கரங்கள், அந்தோணியாரின் மொட்டுகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, ஒவ்வொரு முதல் செவ்வாய் கிழமைகளில் பல இடங்களிலிருந்து மறையுரையாளர்களை வரவழைத்து, மக்களுக்கு ஆன்மீகத்தை ஆழமாகக் கொடுத்ததின் விளைவாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து பல்சமயத்தவரும் பொம்மிடியை நாடி வந்து இறைவனின் ஆசீர் பெற்றுச் சென்றனர். உலகமெல்லாம் புனித அந்தோணியாரை அறிவர்கள் ஆனால் இவர், பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியாரை உலகமெல்லாம் அறிய செய்தார்.
அருள்பணி. பிரிமஸ் ராஜன் 28.06.2015ல் பொறுப்பேற்றார். இவர் காலத்தில். திருப்பொருள்கள் அறை கட்டியது, மாதா கோவில் தெருவில் மாதா கெபி கட்டியது போன்றவையாகும். புனித மிக்கேல் அதிதூதர் சுரூபம் புனரமைக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. ஆலய பீடம் பின்புறம் அழகாக வடிமைக்கப்பட்டது.
அதன்பின் 29.04.2017 ல் அருள்பணி. ஈ. இராபர்ட் அவர்கள் பங்கு தந்தையாக பொறுப்பேற்றார்கள். பணியேற்று சில மாதங்களே ஆன நிலையில், இவர் மிகுந்த ஆர்வத்துடன் இப்பங்கை ஆன்மீகத்தில் உயர்த்தும் நோக்குடன் ஈடுபட்டு, இறைமக்களை இறைநம்பிக்கையில் வளர்க்க திருவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து கிளை பங்குகளிலும் கூட மாதம் ஒருமுறை திருப்பலி நிறைவேற்றியது. மேலும் மறை மாவட்டத்திலேயே முதன்முறையாக பங்கில் 'திருவழிபாட்டு குழு' ஏற்படுத்தி விசுவாசத்தில் மக்களை வழிநடத்தி வந்தார். சிறுவர் மற்றும் இளையோர் திருப்பலிகள் மாதந்தோறும் நிறைவேற்றினார். கிளைப் பங்கிலும் அன்பியங்கள் ஏற்படுத்தினார்.
இவர் காலத்தில், ஆலய வலது புறமுள்ள சுற்றுச் சுவர் பூசப்பட்டது. கல்லறைத்
தோட்டத்தில் 500 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டது. சில்வரிலான கொடி மரம் அமைக்கப்பட்டது. புனித அந்தோணியார் மண்டபத்திற்கு கிரில் கேட் வைக்கப்பட்டது. கலைஞர் நகரில் மேற்கூரை, தரை, பலிப்பீடம் அமைக்கப்பட்டது. சிறிய பொருட்கள் வைக்கும் அறை கட்டப்பட்டது. புனித பெரிய நாயகி அன்னை ஆறு அடி சுரூபம் வைக்கப்பட்டது.
இவருக்குப்பின் 27.04.2019ல் அருட்பணி. மை அந்தோணிசாமி பங்குதந்தையாக பொறுப்பேற்றார். இவர் இருந்த மூன்று ஆண்டு பணிக்காலத்தில் கொரோனா பெறும் தொற்றுக் காரணத்தால் ஆலயங்கள் திறக்கப்படவில்லை. திருப்பலிகள் இல்லை எனினும் தம்முடைய அறையிலேயே திருப்பலி நிறைவேற்றி மக்களின் ஆன்மீக தாகத்தை தீர்த்து வைத்தார்..
இவர் காலத்தில் 7 அடி உயர புனித அந்தோணியார் சுருபம் கொண்டு வரப்பட்டது. குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது 4.6 அடி உயர நற்கருணை கதிர் பாத்திரம் வாங்கப்பட்டது. இருநூறு நாற்காலிகள் வாங்கப்பட்டன. திருப்பலி திருஉடைகள் (Chasuble} 50 வாங்கப்பட்டன. ஆலயத்தின் ஆறு பக்கத்திலுள்ள படிகட்டுகளுக்கு சில்வரில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டது. ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டது திருவிழாவிற்காக புதிய தேர் செய்யப்பட்டது. 12 நபர்கள் கொண்ட திருவிழாக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் அவர்களே பங்கு அருள்பணிப் பேரவையாக செயல்பட்டது.
அருள்பணி. K. ஆரோக்கிய ஜேம்ஸ், 28.05.2022 ல் பங்கு தந்தையாக பொறுப்பேற்றார். மீண்டும் கல்லறைத் தோட்டத்தில் கடைசி திங்கட்கிழமைகளில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி தரைத்தளம் { Inter Lock Stone } கல் பதிக்கப்பட்டது. இடதுபுறம் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது CCTV Camera (😎 பொறுத்தப்பட்டது. பொருட்கள் வைக்கும் அறை ( Store Room ) கட்டப்பட்டது. புதிய பத்து குளியல் / கழிப்பறைகள் கட்டப்பட்டது.
கலைஞர் நகரிலுள்ள புனித பெரிய நாயகி அன்னை கெபியில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. திருத்தலத்தில் திருப்பயணிகள் தங்குவதற்காக பத்து தங்கும் இல்லங்கள் கட்டப்பட்டது. முதல் செவ்வாய்கிழமைகளில் புனித அந்தோணியார் சுரூபம் தாங்கிய புதிய சிறிய தேரானது மாதா கோவில் தெரு வழியாக எடுத்து வரப்பெற்றது.
பொம்மிடி மக்கள் இறைப்பற்றில் மட்டுமல்ல, நாட்டுப் பற்றிலும் சிறந்து விளங்கினர். 1942 ல் நடந்த ஆகஸ்டு புரட்சியில் இம்மண்ணைச் சார்ந்த தியாகி. சி. ஆரோக்கியசாமி மற்றும் தியாகி தசரா, இராயப்பன் ஆகியோர் பங்கு பெற்று, சிறைச் சென்று, நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார்கள். (தகடூர் வரலாறும் - பண்பாடும் பக்கம் எண். 3481)
ஆலயத்தின் சிறப்புகள் ;-
1) ஆலயத்தின் மேற்கு புறம் தமிழக புனித அந்தோணியார் ஆலயங்களில் எங்கும் இல்லாத வகையில் புனித அந்தோணியாரின் மன்றாட்டு ஸ்தலங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது.
2) கிழக்கு புறம் மகிழ்ச்சி, ஒளி, துயர், மகிமை செபமாலை ஸ்தலங்கள் 20 அமைந்துள்ளது.
3) ஆலயத்தின் உட்புறம் ஒன்றும் வெளிபுறம் ஒன்றும் ஆக இரண்டு மாதா கெபிகள் உள்ளது.
4) தமிழகத்தின் வேறு எந்த புனித அந்தோணியார் ஆலயத்திலும் இல்லாத வகையில், புனித அந்தோணியார் மீன்களுக்கு போதிப்பது போல புனித அந்தோணியாரின் தியான மண்டபம் அமைந்துள்ளது.
5) தியான மண்டபத்தின் மூன்று உயர் கோபுரங்களிலும் அதிதூதர்களான புனித மிக்கேல், புனித கபிரியேல், புனித இரபேல், சுரூபங்கள் உள்ளது.
6) வேளாங்கண்ணியை போன்று, பக்தர்கள் முழந்தாள் படியிட்டு செபித்து வர 200 அடி மணல்தளம் அமைந்துள்ளது.
7) மணல்தளம் முன்புறம் 12 அடி உயர சிலுவையுடன் கூடிய வியாகுல மாதா சுரூபம் உள்ளது.
8) திருப்பயணிகள் தங்குவதற்கு பழைய ஆலயம் மற்றும் 10 தங்கும் இல்லங்கள் உள்ளது.
9) குடிநீருக்காக குடிநீர் தொட்டிகள் இரண்டு உள்ளது.
10) 17 கழிப்பறை, குளியல் அறைகள் உள்ளன.
முதல் செவ்வாய் கிழமை சிறப்பு நிகழ்வுகள் :-
a) பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் ஆடம்பர தேர்பவனி.
b} 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியாரின் செபமாலை செபித்தல்.
c) புனித அந்தோணியாரின் புகழ் மாலை.
d) குணமளிக்கும் உள் மனக்காயங்கள் போக்கும் நற்கருணை ஆராதனை. ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலி
f) திருப்பலி முடிவில் திருத்தைல எண்ணெய் பூசும் நிகழ்வு.
இது தவிர, ஒவ்வொரு செவ்வாய்கிழமை மாலையில் புனித அந்தோணியார் செபமாலை, நவநாள் மன்றாட்டு, புகழ்மாலை. திருப்பலி மற்றும் நற்கருணை வழிபாடும் நடைபெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 ஆம் தேதியில் கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் திருவிழாவும், மாலையில் ஆடம்பர தேர்பவனியும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
"வந்து பாருங்கள்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப ஏராளாமான இறைமக்கள் மற்றும் பல்வேறு சமயத்தவரும் (இந்துக்கள், இஸ்லாமியர்) இங்கு வந்து கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் வல்லமைமிக்க பரிந்துரையால் பல்வேறு வகையான அதிசயங்கள், அற்புதங்களை அனுபவித்து சாட்சியம் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றில் ஒரு சில மட்டும் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த கீழ்கண்ட சாட்சியங்கள்..
1. ஹைதராபாத்தை சேர்ந்த கிரேசி என்பவரின் குழந்தை மேக்சிமுஸ் இரண்டு கிட்னியும் வேலை செய்யாமலிருந்து, கனவில் தோன்றி புனித அந்தோணியார் பரிந்துரையால் பூர்ண குணம் பெற்றது.
2. பெங்களுர், இராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் 33 நாட்கள் காணாமல் போய், இங்கு வந்து செபித்த அன்றே கிடைக்கப் பெற்றது.
3. பெங்களூர் இராஜாஜி நகரைச் சார்ந்த சோபியாவின் மூளைக்காய்ச்சல் அந்தோணியாரின் பரிந்துரையால் குணம் ஆனது.
4. சேலம் மாவட்டம், இராமமூர்த்திநகரைச் சேர்ந்த திரு. மணிகண்டன் - சசி தம்பதியருக்கு, 15 ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமல் அந்தோணியாரின் பரிந்துரையால் இரட்டை குழந்தை பிறந்தது.
5. தேன்கனிகோட்டையை சேர்ந்த ஹென்றி - ஜெயமேரி, மகன் ஸ்டீபன்ராஜ் இரு சிறுநீரகமும் பழுதடைந்து அந்தோணியாரின் வரத்தால் குணமடைந்தது.
6. சேலத்தை சேர்ந்த திரு. ராபர்ட் பாரதி கருவில் குழந்தைக்கு மூளையில் கட்டி இருந்து குணம் பெற்றது.
7. தருமபுரி மதலைமுத்து விபத்தினால் காயமுற்று, கோமா நிலையில் நாற்பது நாட்கள் இருந்து அந்தோணியார் பரிந்துரையால் சுகம் பெற்றது.
8. சென்னை ஏஞ்சல் டெங்கு காய்ச்சலிருந்து குணம் பெற்றது.
9. பி. துரிஞ்சிப்பட்டியை சார்ந்த பதினேழு வயது பால் பாலாஜி இதய நோயிலிருந்து சுகம் பெற்றது.
10. 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாமலிருந்து பின் பிரசவத்தின் போது, உயிர் பிரியும் நிலையிலிருந்த பி. பள்ளிப்பட்டியை சார்ந்த திருமதி ஜோஸ்பின் பாபு அந்தோணியாரின் வரத்தால் உயிர் பிழைத்தது.
மேலும் ஏராளமான புதுமைகள் உள்ளன. அவற்றையெல்லாம் எழுதி படிக்க பக்கங்கள் போதாது…
SMMI கன்னியர்கள்:
St. Teresa nursery school.
புனித தெரேசா தையல் பயிற்சி மையம்
புனித தெரேசா மருத்துவமனை. ஆகியவற்றை சிறப்புற நடத்தி வருகின்றனர்.
பங்கில் உள்ள பக்த சபைகள்:
1. திருவழிபாட்டுக் குழு
2. நற்செய்தியாளர்கள் பணிக்குழு
3. புனித வின்சென்ட் தே பவுல் சபை
4. மரியாயின் சேனை
5. பீடச்சிறுவர்கள் குழு
6. இளைஞர்கள் பணிக்குழு
7. சீயோனின் சிகரங்கள்
8. அந்தோனியாரின் நாவுகள் குழு
9. பாடற் குழு
அன்பியங்களின் பெயர்கள்:
1. திருக்குடும்பம்
2. புனித அந்தோனியார்
3. புனித குழந்தை தெரசா
4. அற்புத குழந்தை இயேசு
5. புனித அன்னை தெரசா
6. புனித ஆரோக்கிய அன்னை
7. புனித சூசையப்பர்
8. புனித லூர்து அன்னை
9. புனித பெரியநாயகி அன்னை
10. புனித சகாய அன்னை
11. புனித அருளானந்தர்
12. புனித யோவான்
13. புனித தேவசகாயம்
பங்கின் வேதியர்கள்:
1. Mr. தானியல்
2. Mr. மைக்கேல்
3. Mr. குழந்தை சாமி
4. Mr. இருதயநாதன்
5. Mr. A. ஜோசப்
6. Mr. C. ஸ்டீபன் ராஜ்
7. Mr. நெல்சன்
8. Mr T. சவரிநாதன்
9. Mr. A. சகாயராஜ்
பொம்மிடி பங்குத் தந்தையர்களின் பட்டியல்:
(1955 ல் பொம்மிடி தனிப் பங்காக பிரிக்கப்பட்டது. 26.03.1956 ல் குடிசை கோவிலை மாற்றி ஓட்டு கோவிலாக பி. பள்ளிப்பட்டி பங்குதந்தை அருள்பணி. T. C . ஜோசப் அவர்கள் கட்டினார்கள். பொம்மிடிக்கு முதல் பங்குதந்தை வரும்வரை இவர் தான் பொறுப்பு பங்கு தந்தையாக இருந்தார். முதல் பங்குதந்தை மறைவுக்குப் பிறகு பி. பள்ளிப்பட்டி பங்குதந்தை அருள்பணி. தாமஸ் கீராஞ்சிரா 1966-1969 வரை பொறுப்பு பங்கு தந்தையாக இருந்தார்.)
1. அருள்பணி, தெஃப்ஞி லிஜோன், MEP (1957-1966)
1.a. பி. பள்ளிப்பட்டி பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் கீரஞ்சிரா (1966-1969) பொறுப்பு பங்குதந்தை
2. அருள்பணி. மத்தேயு தெக்கடம் (1969-1974)
3. அருள்பணி. அந்தோணி கலத்தில் (1974-1979)
4. அருள்பணி. ஐசக் ஜீனியர் (1979-1986)
5. அருள்பணி. ஐசக் சீனியர் (1986-1987)
6. அருள்பணி. AL இருதயம் (1987)
7. அருள்பணி. குரியாக்கோஸ் (1987Sep-Nov)
8. அருள்பணி. ஜெகநாதன் (1987-1989)
9. அருள்பணி. குருவில்லா தாமஸ் (1989-1990)
10. அருள்பணி. சூசை (1990-1991)
11. அருள்பணி. புஷ்பநாதன் (1991-1992)
12. அருள்பணி. ரொசாரியோ (1992-1999)
13. அருள்பணி. சவரியப்பன் (1999-2001)
14. அருள்பணி. அதிரூபன் நோலாஸ் (2001-2003)
15. அருள்பணி. ஜோசப் (2003-2005)
16. அருள்பணி. கிறிஸ்டோபர் (2005-2009)
17. அருள்பணி. ஆல்பர்ட் வில்லியம் (2009-2011)
18. அருள்பணி. அற்புதராஜ் (2011-2015)
19. அருள்பணி. பிரிமிஸ் ராஜன் (2015-2017)
20. அருள்பணி. ராபர்ட் (2017-2019)
21. அருள்பணி. அந்தோணிசாமி (2019-2022)
22. அருள்பணி. ஆரோக்கிய ஜேம்ஸ் (2022....)
கவலைகள், கண்ணீர், வேதனை என எதுவென்றாலும் கோடி அற்புதராம் பொம்மிடி புனித அந்தோனியாரிடம் வாருங்கள்.... உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்...
கட்டுரை எழுதியவர்: திரு. பூர்ணநாதன் (Ex-VAO) முன்னாள் தமிழ்நாடு ஆயர் பேரவை செயலாளர்.
தகவல் சேகரிப்பு: திரு. A. சகாயராஜ், பொம்மிடி பங்கு வேதியர்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: Yesudass Joseph Krishnagiri