திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதனென்றால் உமது பாரமான சிலுவையாலே உலகத்தை மீட்டு ரட்சித்தீர்.
“ தன் நண்பனுக்காக உயிரைவிடுவதைத் தவிர மேலான அன்பு ஒன்றுமில்லை “ என்று சொன்னார். அதையும் செய்து காட்டினார். இந்த உலகத்தைப் பொறுத்தவரை சொன்னதைச் செய்த ஒரே தலைவர் நம் இயேசு தெய்வம் மட்டுமே. “ தலைவனாக இருக்க விரும்புகிறவன் முதலில் தொண்டனாக இருக்கட்டும் “ என்றார். தன் சீடர்களின் பாதங்களை கழுவி, “ நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன் “ என்றார். இப்படி எந்தவிசயத்தை எடுத்தாலும் தான் சொல்லியதை செய்து காட்டினார் நம் தேவன். அவரிடம் இருந்த கடைசி சொட்டு ரத்தம் வரை நமக்காக சிந்தினார். அவரால் எவ்வளவு கஷ்ட்டங்கள், வலிகள் அனுபவிக்க முடியுமோ அத்தனையையும் அனுபவித்தார். கடைசியில் உயிரையும் விட்டுவிட்டார். இந்த மாதிரி யாராலாவது நேசிக்க முடியுமா? கடவுள்,
மனிதன் மீது கொண்ட அன்பு அளவிடமுடியாதது.
இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிக்கும் ஒரு அளவுகோல் உண்டு, ஒரு எல்லை உண்டு அதாவது உயர்ந்த பட்ச அளவு (Maximum Limit) அல்லது தாங்கும் திறன்.. அதற்கு மேல் அதால் தாங்க முடியாது. அது எப்பேற்பட்ட அளவாக இருக்கலாம்; எடையாக இருக்கலாம், பெரும்பாலும் சோதனை (Testing) செய்வதற்காக பயன்படுத்துவார்கள்..
இந்த உலகத்தில் உள்ள அத்தனை சோதனையும் தாங்கி யாராலும் அளவிடமுடியாத, யூகிக்கமுடியாத அளவு கடந்த அணை கடந்த அன்புதான் நம் ஆண்டவராகிய இயேசு தெய்வத்தின் அன்பு.. அந்த அன்பை புரிந்துகொண்டவர்கள் அந்த அன்பை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள் அதற்காக உழைப்பார்கள்.
மீண்டும் அவர் கூறிய அதே வார்த்தைக்கு வருகிறோம். “ தன் நண்பனுக்காக உயிரைவிடுவதைத் தவிர மேலான அன்பு ஒன்றுமில்லை “ ஏன் இப்படி சொன்னார். நம்மை மறைமுகமாக அவர்கள் நண்பர்கள் என்று அழைக்கிறார். அந்த அளவு நமக்கு உரிமை தருகிறார். பிதாவாகிய கடவுள் “ தன் சாயலாகவும் பாவனையாகவும் படைத்த மனிதனை, அவரின் ஒரே மகனாகிய சுதன் இயேசு சுவாமி தன் நண்பன் என்று அழைக்கின்றார். நாம் அவரின் நண்பர்களாக இருக்கிறோமா ?
நடக்கிறோமா ? சரி அதற்கு முன்,
அவர் தன் நண்பர்களுக்காக உயிரை கொடுத்தார். நாம் நம் நண்பர்களாகிய சகோதர- சகோதரிகளுக்கு என்ன கொடுக்கிறோம்.
“ அவர்களோடு இன்முகமாக பேசுகிறோமா? இல்லை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறோமா? அவர்களுக்கு எதாவது உதவி என்றால், நம்மால் உதவி செய்ய முடிந்தும் செய்கிறோமா? நம் சகோதர- சகோதரிகளை நேசிக்கிறோமா?
அவர்களுக்காக ஏதாவது விட்டுக்கொடுக்கிறோமா? அவர்களை மன்னிக்கின்றோமா?
நாம் நம் சகோதர-சகோதரிகளுக்காக உயிரைக்கொடுக்க வேண்டாம். அட்லீஸ்ட் மேலே சொன்னவைகளாவது செய்கிறோமா?
இப்போது மீண்டும் முதலில் சொன்ன பகுதிக்கு வருகிறேன். நாம் இயேசுவின் நண்பர்களாக தகுதி பெறுகிறோமா?
மேலே உள்ளவைகளைச் செய்தால் இயேசுவின் நண்பர்களாக முடியும். நாம் இயேசுவின் நண்பர்களானால் நம்மால் முடிந்த நன்மைகளை நம் நண்பர்களுக்குச் செய்வோம்.
ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள், அனாதைகள், எளியோர்கள், பசியுற்றோர்கள், சிறையில் வாடுவோர்கள் அத்தனைபேரும் நம் நண்பர்களே !
இயேசு தெய்வம் தன் நண்பர்களுக்காக அதாவது நமக்காக எல்லாவற்றையும் கொடுத்தார். நாம் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் எதாவது கொடுக்கலாம் அல்லாவா? கொடுப்போம்.
"கொடுங்கள் உங்களுக்கும் கொடுக்கப்படும்" என்றார் நம் தேவன்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பார கடவது, ஆமென்
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !