ஜெபம் : திவ்ய பலி பூசை, ஜெபமாலை.. திவ்ய பலி பூசையில் தகுந்த தயாரிப்போடும், பக்தியோடும், பயத்தோடும், தேவ நேசத்தோடும் பங்கேற்க வேண்டும்.. ஜெபமாலை பக்தியோடு தேவ இரகசியங்களை தியானித்து தனியாக, குடும்பத்தோடு மற்றும் குழுக்களோடு ஜெபித்தல்.. தினமும் ஒரு 53 மணிகள் கண்டிப்பாக தேவை.. இப்போதைய சூழ்நிலையில் தினமும் 153 மணிகள் கண்டிப்பாக தேவை.. அதில் குடும்பத்தோடு ஜெபிக்கும் 53 மணிகள் மிக மிக அவசிய தேவை..
தவம் : வெள்ளிக்கிழமைகள், தலை வெள்ளி, தவக்காலங்கள் நாம் வழக்கமாக இருக்கும் ஒரு சந்தி சுத்த போசனம் தவம்தான். ஆனால் அது மட்டும் தவமல்ல.. நமக்கு பிடித்த உணவை சாப்பிடாமல் இருப்பதும் தவம்தான்; பிடிக்காத உணவை சாப்பிடுவதும் தவம்தான். நாம் தேவைக்கு அதிகம் பேசாமல் இருப்பதும், பயனற்ற வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பதும் தவம்தான்.. பிறர் முகத்தை கூர்ந்து கவனிக்காமல் செல்வது, பிடிக்காத நபர்களோடு புண்முறுவலோடு பேசுவதும் தவமே.. பிடித்த டிவி சிரியலை பார்க்காமல் குடும்ப ஜெபமாலை செய்ய உட்காருவதும் தவமே.. ஓய்வு நேரங்கள் கிடைக்கும் போது டிவி பார்த்து பொழுதை போக்காமல் ஆலயம் சென்று நற்கருணை நாதரை சந்தித்து ஜெபிப்பதும் தவமே.. சுருக்கமாக சொல்லப்போனால் பிடிக்காத விஷயங்களிய ஏற்றுக்கொள்வதும், பிடித்த விஷயங்களை நம் நேச ஆண்டவருக்காக விட்டுக்கொடுப்பதும் தவமே..
பரிகாரம் : கடவுள் நமக்கு கொடுக்கும் துன்பங்களை அமைந்த மனதோடு ஏற்று அவைகளை நமது பாவங்களுக்காகவும், பிறரின் பாவங்களுக்காகவும், ஒப்புக்கொடுப்பது.. மிகச்சிறந்த உதாரணம் பாத்திமா சிறுமிகள் கடைபிடித்தது.. பாத்திமா காட்சிகளில் தேவ மாதாவால் வலியுறுத்தப்பட்டது. நிறைய புனிதர்கள்.. கிட்டத்தட்ட எல்லா புனிதர்களும் கடைப்பிடித்தது.. அவர்கள் சிலுவைகளை ஏற்றுக்கொண்டு பரித்தியாகங்கள் செய்துதான் எண்ணற்ற ஆன்மாக்களை மனம் திருப்பினார்கள் உதாரணமாக இருவர். ஒருவர் புனித பிரான்சிஸ் சவேரியார் மற்றவர் புனித குழந்தை இயேசுவின் தெரசாள்.. இன்னும் எண்ணற்ற உதாரணங்கள் சொல்லலாம்…
ஆண்டவர் நமக்கு கொடுக்கும் சிலுவைகளை ஏற்றுக்கொள்வது…
நோய் ( ஆனால் வைத்தியம் செய்ய வேண்டும்.. குணமாகும் வரை அந்த வேதனைகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தல்) , கை வலி, கால் வலி, தலை வலி, மழை, வெயில், கூட்ட நெருசல், பஸ் நெரிசல், அசவுகரீக பயணங்கள், உச்சி வெயிலில் கரண்ட் போவது, அலைச்சல், வேதனை, மன வேதனை, பிடிக்காத மாமியார், பிடிக்காத மருமகள், படிப்பு, வேலை, சமையல், சின்ன சின்ன கஷ்ட்டங்கள், பிடிக்காத சூழ்நிலை, இன்றைய லாக் டவுன் என்று இன்னும் எண்ணற்ற சிலுவைகளை சொல்லிக்கொண்டே போகலாம்…
ஒறுத்தல் முயற்சிகள் தவத்திலும் சேரும்.. பரிகாரத்திலும் சேரும்..
பரிகாரங்களுக்கு பைபிளில் இருக்கும் உதாரணங்கள் நல்ல கள்ளன், சக்கேயு மற்றும் உதாரி மைந்தன் ( எப்போது பரிகாரம் செய்தான்? பஞ்சத்தில் அகப்பட்டு பன்றிக்கு வைக்கப்படும் உணவை தின்று பசியாறியபோது)
இந்த ஜெப, தவ, பரிகாரங்களே மாதா கிட்டத்தட்ட தன் அனைத்துக் காட்சிகளிலும் கேட்பது.. இவைகளை நாம் செய்தால் நம் ஆன்மாவையும், நம்மோடு இருப்பவர்கள் ஆன்மாக்களையும், பாவிகள் ஆன்மாக்களையும் மீட்கலாம்… பெரிய அளவில் செய்ய முடியவில்லை என்றால் சிறிய அளவில் சின்ன சின்ன தவ மற்றும் பரிகாரமுயற்சிகளை செய்யலாம்.. குறிப்பாக நம் அன்றாட அலுவல், வேலை, சமையல் இதை நாம் எப்படியும் செய்துதான் ஆக வேண்டும்.. ஆனால் அவற்றை முனுமுனுக்காமல் இயேசு சுவாமியின் திரு இருதயத்திற்கும், தேவ மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து செய்தால் அவைகள் புண்ணியமாக மாறிவிடும்..
மொத்தத்தில் முக்கியமாக நாம் கடைப் பிடிக்க வேண்டியது தவத்திலும், பரிகாரத்திலும் முனுமுனுக்காமல் அவற்றை அமைந்த மனதோடு ஏற்று கடைப்பிடிப்பது… குறிப்பாக அன்று இஸ்ராயேல் மக்கள் செய்ததை நாம் செய்யாமலிருப்பது.. எப்படியிருந்தாலும் நம்முடைய சிலுவைகளை நாம் சுமந்துதான் ஆக வேண்டும்.. சுமப்பதே சுமக்கிறோம்.. அமைந்த மனதோடும், மகிழ்ச்சியோடும் சுமந்தால் அது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் புண்ணியமாக மாறிவிடும் அல்லவா?
"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.” மத்தேயு 6 : 19-21
நன்றி : உலகளாவிய வாழும் ஜெபமாலை இயக்கம், சென்னை, Ph:9094059059, 9790919203.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !