“ நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே." அருளப்பர் (யோவான்) 6 : 51
"வானினின்று இறங்கிவந்த உணவு நானே" அருளப்பர் 6 : 41
“ நானே உயிர் தரும் உணவு “ அருளப்பர் 6 : 48
“ என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.”
“என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம். அருளப்பர் 6 : 54-55
நம் இயேசு ஆண்டவர் அருளப்பர் நற்செய்தி 6-ம் அதிகாரத்தில் 32 -லிருந்து 58 வரை திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பற்றி பேசுகிறார். கிட்டதட்ட பத்து முறை பேசுகிறார்.. விளக்குகிறார் …
திவ்ய திருப்பலியையும், திவ்ய நற்கருணை ஆண்டவரையும் கொண்டிருக்கும் ஒரே திருச்சபை நம் கத்தோலிக்க திருச்சபை..
திவ்ய நற்கருணையில் இயேசுவே திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் நம்மிடம் வருகிறார்.. முழுமையான இயேசுவே திவ்ய நற்கருணையிலும் திவ்ய திருஇரத்தத்திலும் வீற்றிருருக்கிறார்..
யாருக்கும் கிடைக்காத பெரிய பாக்கியம் கடவுளையே நாம் உணவாக உட்கொள்கிறோம்.. தூய தமத்திருத்துவமும் நற்கருணையில் பிரசன்னமாகிறார்கள்..
கத்தோலிக்க திருச்சபையின் மையமே திவ்ய நற்கருணை ஆண்டவர்தான்..
சமீப காலமாகவே (சில பல வருடங்களாகவே) நம் திவ்ய நற்கருணை ஆண்டவர் நம்மால் அவசங்கைப் படுத்தப்படுவது தெறிகிறது..
அவரை எதோ நோய் பரப்புவரைப்போல நினைத்துக் கொண்டு நாம் சில காரியங்களில் இறங்கிவருவது மிகவும் வருத்தத்திற்குரியது.
அவரை கரங்களில் மட்டும்தான் வாங்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் வாங்குகிறோம் ?
இன்னும் சில இடங்களில் திவ்ய நற்கருணை ஆண்டவர் இருக்கும் பாத்திரத்தில் நம்முடைய கையை விட்டு ஆண்டவரை நம் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருஇரத்தப் பாத்திரத்தில் கரங்களை விட்டு ஆண்டவருடைய இரத்தத்தில் ஆண்டவரை நம் கையால் தோய்த்து எந்த தைரியத்தில் நம் நாவில் வைக்கிறோம்..
(இச்செயல் காலை பாதகச் செயல். தண்டனைக்கு உரிய குற்றம் என்பதை யாரும் மறக்க கூடாது)
நம் கரங்கள் அர்ச்சிக்கப்பட்ட கரங்களா?.. குருவானவருக்கு மட்டுமே உள்ள தகுதியை.. அந்தஸ்த்தை நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும் அல்லது அபகரித்துக் கொள்ள முடியும்..
குருக்களுக்கு என்று மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்த்து உள்ளது.. அவர்கள் மட்டுமே நம் ஆண்டவர் இயேவுவைத் தொட முடியும்.. ஏனென்றால் திவ்ய திருப்பலியில் அவர்களே ஆண்டவர் இயேசுவாக மாறுகிறார்கள்.. இயேசுவாக மாறித்தான் ஆண்டவர் இயேசுவை திவ்ய பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.. ஆக..
அவர்களுக்கு மட்டுமே உள்ள தகுதி.. உரிமை.. ஆண்டவர் இயேசுவைத் தொடுவது..
ஆண்டவரைத் தொட நம் கரங்கள் நடு நடுங்க வேண்டாமா?
கடவுள் விசயத்தில் எதுவும் சாதாரண விசயம் அல்ல..
இன்றைய காலகட்டங்களில் எச்சரிக்கை உணர்வும், விசுவாச விழிப்புணர்வும் நமக்கு அதிகம் தேவை...
திவ்ய நற்கருணை ஆண்டவரே கிறித்துவத்தின் மையம்..
கத்தோலிக்க திருச்சபையின் மையம்..
ஆண்டவர் இயேசுவை உணவாக.. அதாவது கடவுளையே உணவாக சாப்பிடும் மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமே..
அவருக்கு.. நம் ஆண்டவருக்கு.. தன்னையே நமக்கு உணவாக தந்த கடவுளுக்கு நாம் தெறிந்தோ.. தெரியாமலோ எந்த அவசங்கையும் செய்துவிடக் கூடாது..
அதுபோல் அவரை உட்கொள்ள நம்மை தயாரித்து தகுதியான உள்ளத்தோடு நாம் அவரை உட்கொள்ள வேண்டும்..
நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை.. ஏனென்றால் நம் ஆண்டவர் நம்மோடு.. ஆண்டவரையே நம்மோடு வைத்துக் கொண்டு நாம் எதற்கு பயப்பட வேண்டும்..
நோய்க்கா? பேய்க்கா ? வேதனைக்கா? நோவுக்கா? சோதனைக்கா? கஷ்ட்டங்களுக்கா? சாவுக்கா?
நோய்களை குணமாக்கியர், தண்ணீரை திராட்சை இரசமாக்கியர், முடவர்-குருடர்களை குணமாக்கியவர், அப்பங்களை பலுகச் செய்தவர், காய்ச்சலை குணமாக்கியவர், தன் ஆடையின் விளிம்பை திட்ட பெண்ணை குணமாக்கியவர், போகாமலே நூற்றுவத் தலைவனின் ஊழியனைக் குணமாக்கியவர், பேய்களை ஓட்டியவர் ஏன் இறந்தவர்களை உயிர்ப்பித்தவர் நம் கடவுள்.. நம்மோடு இருக்கும் கடவுள், உணவாக தன்னையே தரும் கடவுள்..
அவர் இருக்க அச்சம் ஏன்?
“இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." – மத்தேயு 28 : 20
என்ற நம் ஆண்டவரின் வாக்கு.. அருள் மொழி.. நமக்கு மறந்துவிட்டதா?
" கண்டு விசுவசிப்பனை விட காணாமல் விசுவசிப்பனே பேறு பெற்றவன் "
இதில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்..?
நற்கருணை நாதரை நேசிப்போம்.. விசுவசிப்போம்.. அவரை நம் வாழ்வின் மையமாக்குவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !