“ பின் விண்ணகத்தில் ஒரு போர் உண்டாயிற்று. மிக்கேலும் அவருடைய தூதர்களும் பறவைநாகத்தோடு போர் தொடுத்தனர். பறவைநாகமும் அதன் தூதர்களும் போரிட்டனர்.
பறவைநாகமும் தோல்வியுற்றது. விண்ணகத்தில் அவர்களுக்கு இடமேயில்லாமல் போயிற்று.
அப்பெரிய பறவைநாகம் வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அதுவே ஆதியில் தோன்றிய பாம்பு; உலகனைத்தையும் வஞ்சிப்பதும் அதுவே. அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் அதன் தூதர்களும் தள்ளப்பட்டனர். திருவெளிப்பாடு 12 : 7-9
அதற்குத் தூதர், " நான் கடவுளின் திருமுன் நிற்கும் கபிரியேல். உன்னிடம் பேசவும், இந்நற்செய்தியை உனக்கு அறிவிக்கவும் அனுப்பப்பெற்றேன். லூக்காஸ் 1: 19
ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார். லூக்காஸ் 1 : 26
“தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.” லூக்காஸ் 1: 28
“நானே உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன். இரகசியமாயிருந்தாலும் ஒரு வார்த்தை கூட உங்களுக்குச் சொல்லாமல் விட மாட்டேன்.
நீர் கண்ணீரோடு மன்றாடி இறந்தோரைப் புதைத்து, உம் உணவை மறந்து, செத்தவர்களைப் பகலில் உம் வீட்டில் ஒளித்து வைத்திருந்து இரவில் புதைத்து வந்தீர் அல்லவா? அப்பொழுது நான் உம் மன்றாட்டை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன். நீர் அவருக்குப் பிரியமானவராய் இருந்ததனால் உம்மைப் பரிசோதிக்கச் சோதனைகள் வர வேண்டியிருந்தன. இப்போதோ உமக்கு நலம் அளிக்கவும் உம் மகனின் மனைவி சாராளைப் பேயினின்று விடுதலையாக்கவும் நான் கடவுளால் அனுப்பப்பட்டுள்ளேன். ஏனெனில் நான் ஆண்டவரின் திருமுன் நிற்கும் ஏழு வானவர்களுள் ஒருவன்; என் பெயர் இரபாயேல்" என்றார். தொபியாசு 12 : 11-15
மேலும் யோசுவா எரிக்கோவுக்கு வெளியே இருந்த போது ஒருநாள் தன் கண்களை ஏறெடுத்து பார்க்க, இதோ ஒருவர் உருவிய "வாளை கையில் ஏந்தியவராய்த் தனக்கு முன் நிற்கக் கண்டார். யோசுவா அருகில் சென்று, "நீர் யார்? எம்மவரைச் சார்ந்தவரா? என் எதிரிகளைச் சார்ந்தவரா? என்று கேட்டார்.
அதற்கு அவர், "அல்ல; நாம் ஆண்டவருடைய படைத்தலைவராய் இப்பொழுது வந்துள்ளோம்" என்றார்.
அதைக் கேட்டு யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவரைப் பார்த்து, "என் ஆண்டவர் தம் ஊழியனுக்குச் சொல்லுகிறது என்ன?" என்று கோட்டார். அதற்கு அவர், "உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு, ஏனெனில் நீ நிற்கிற இடம் மிகவும் புனிதமானது" என்று கூறினார். யோசுவா அக்கட்டளைப்படியே நடந்தார். யோசுவா 5 : 13-15
இன்னும் வேதாகமத்தில் அதிதூதர்கள் மிக்கேல், கபரியேல். ரஃபேல் பல இடங்களில் (தானியேல் 10:13) வருகிறார்கள்..
இன்று மட்டுமல்ல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இந்த அதிதூதர்களையும், நம் காவல் சம்மனசையும் அடிக்கடி நினைவு கூறுவோம் அவர்களிடம் ஜெபிப்போம். அவர்கள் துணையை மன்றாடுவோம்.. அவர்கள் துணையோடு பாதுகாப்பாக வாழ்வோம்..
அதிதூதர்கள் பெயர் விளக்கம்,
புனித மிக்கேல் : “ கடவுளுக்கு நிகர் யார்?”
புனித கபிரியேல் : “ கடவுளின் வல்லமை “ அல்லது கடவுள் வல்லமையானவர்”
புனித ரஃபேல் : “ கடவுள் குணமாக்குகிறார் “
அதிதூதர்கள் தரும் செய்தி 'உடனிருப்பு.' அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள்.. அவர்களையும் நம் காவல்தூதரரையும் அடிக்கடி நினைவு கூறுவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !