“ சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன்; என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன் “ என்று தம் அப்போஸ்தலர்களிடம் கூறும் ஆண்டவர், தொடர்ந்து, “ உலகம் கொடுக்கிறதைப் போல நான் (அதைக்) கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், அஞ்சாமலும் இருப்பதாக “ என்று கூறுவதைக் கவனியுங்கள் ( அரு.14: 27). உலகம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது, கலக்கமும், அச்சமும் கொள்கிறது; அவற்றை எதிர்த்துப் போராடுகிறது. அவற்றிலிருந்து விடுபட எல்லா வகையிலும் முயல்கிறது.
ஆனால் சேசு நாதர் தரும் சமாதானமோ, துன்பங்களின் வழியாகவே தரப்படுகிறது. ஏனெனில் துன்பங்களை அமைந்த மனதோடு ஆண்டவரின் அன்பின் நிமித்தம் ஏற்றுக்கொள்ளும் ஆன்மா, மோட்சப் பாதையில் உறுதியோடு முன்னேறிச் செல்கிறது. நித்தியப் பேரின்பத்தை இழந்துவிடும் அச்சமோ, கலக்கமோ அதற்கு இல்லை. எனவே அது உலகம் தர முடியாத, ஆண்டவர் மட்டுமே தருகிற சமாதானத்தில் மூழ்கித் திளைக்கிறது.
உலகமோ, சரீரமோ, பசாசோ அந்த சமாதானத்தை ஆத்துமத்திடமிருந்து பறித்துக் கொள்ளவே இயலாது.
சகல புண்ணியங்களிலும் வளர்ச்சி அடைதல் :
துன்பப்படும் ஆன்மா கிறிஸ்துவைப் போல் ஆகிறது என்பதன் பொருள், அது கிறீஸ்து நாதரின் சகல புண்ணியங்களிலும் வளர்ச்சியடைகிறது என்பதுதான். அவர் சர்வேசுவரனாயிருந்தும் மனிதர்களுக்கு கீழ்படிந்து, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு தாழ்ச்சியும், கீழ்படிதலும் உள்ளவராயிருந்தார்; தம்மைக் கொலைப்படுத்துவோருக்காகப் பிதாவிடம் மன்றாடும் அளவுக்கு சாந்தமும், அளவற்ற பொறுமையும் உள்ளவராயிருந்தார். அவரது வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவரது தெய்வீகப் புண்ணியங்களின் சாட்சியங்களாக விளங்கின. தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு அவரைப் பின் செல்லும் ஆன்மா, அவரில் வளர்கிறது. அவரது புண்ணியங்களில் வளர்ச்சியடைகிறது. அந்த ஆன்மா அவராகவே மாறுகிறது.
பிறரை மனந்திருப்புவதில் வல்லமை :
துன்பங்களின் மூலம் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக் கொள்ளும் ஆன்மா, ஆத்தும தாகத்தோடு வெளியிடும் ஒரு பெருமூச்சும் கூட, ஆன்மாக்களை மனந்திருப்ப வல்லதாக இருக்கிறது. தவத்தோடும், உபவாசத்தோடும் இணைந்த ஜெபத்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
இன்று அநேகர் கடவுளால் தங்கள் பொறுப்பில் விடப்பட்டுள்ள ஆன்மாக்கள் நரகப்பாதையில் செல்வதைக் காண நேரும்போது பதைபதைக்கிறார்கள்; கடவுளுக்குத் தாங்கள் கடுமையான கணக்குக் கொடுப்பது பற்றி நினைத்து நடுங்குகிறார்கள். இத்தகையவர்களுக்கு தவச் செயல்களொடு கூடிய ஜெபம் மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. மிகக்கொடிய பாவிகளையும் கூட அது மனம் திருப்புகிறது.
எனவே வார்த்தையின் மூலமும், தங்கள் உத்தம மாதிரிகையின் மூலமும் கூட தங்களால் திருத்த முடியாதவர்களை மனந்திருப்ப, அவர்கள் தபசோடு கூடிய ஜெபத்தில் தஞ்சமடைவார்களாக. ஏனெனில் கிறிஸ்து நாதர் இவர்களுக்காக ஜெபிக்கிறார்.
“ எவ்வளவுதான் பலவீனமுள்ளனாக இருந்தாலும், எவனுக்கும் திருச்சிலுவையின் வெற்றியில் ஒரு பங்கு ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை. எந்த மனிதனும் கிறிஸ்துவின் ஜெபத்தின் உதவியைப் பெற முடியாதபடி அவரிடமிருந்து தொலைவாக இல்லை. அவருடைய ஜெபம் அவருக்கு எதிராகக் கடுங்கோபத்தை வெளிப்படுத்திய மக்கள் கூட்டங்களுக்கும் கூட நன்மை செய்தது. அப்படியிருக்க , ( தவச் செயல்களின் வழியாக) உத்தம மனஸ்தாபத்தோடு அவரிடம் திரும்புபவர்களுக்கு அது இன்னும் எவ்வளவு அதிகமாக நன்மை செய்யும் ! “ என்று அர்ச். பெரிய சிங்கராயர் கூறுகிறார்.
இந்த மனஸ்தாபத்தை நம்மைச் சேர்ந்தவர்களுக்குப் பெற்றுத் தர நம் தவச் செயல்கள் வல்லமையுள்ளவையாக இருக்கின்றன.
நன்றி : மாதா பரிகார மலர். இந்த இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, 9487257479
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !