"இச்சிறுவருள் ஒருவனையும் புறக்கணியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவர்களுடைய விண்ணுலகத் தூதர் வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்தேயு 18 : 10-11
காவல் தூதர்களைப்பற்றி போதிப்பது கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே. மேலே உள்ள நம் இயேசு தெய்வத்தின் வார்த்தைகளை கவனியுங்கள். அவர் காவல் தூதரைப்பற்றிப் பேசுகிறார். இன்னும் பல ஆதாரங்கள் உண்டு.
ஆகவே நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் உண்டு என்று கத்தோலிக்கத்திருச்சபையின் போதனை மிகச்சரியானதே. கத்தோலிக்க திருச்சபையின் ஒரு சிறு போதனை கூட ஆழ்ந்து, தியானித்து, ஜெபித்து, விவாதித்து ஆதாரப்பூர்வமாக உண்மை என்று அறிந்தபின்தான் தன் மக்களுக்குப்போதிப்பார்கள்.
கத்தோலிக்க மக்களாகிய நம் கடமை எப்போதுமே நம் தாய்த்திருச்சபை போதிப்பதை ஏற்று கீழ்படிந்து, கடைபிடிக்க வேண்டும். இதற்கு தேவமாதாவின் ‘ கேள்வியற்ற கீழ்படிதல் ‘ என்ற புண்ணியம் நமக்கு உதவும்.
கத்தோலிக்க போதனை என்பது நம் தாய்திருச்சபையின் போதனை. தனி மனித போதனை அல்ல. ஒருவேளை தனிமனிதர்கள் தவறாலாம் ஆனால் திருச்சபை ஒரு தவறாது. எனெனில் நம் ஆண்டவர் சொல்லிவிட்டார் “ நரகத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா “ என்று.
அது புனித இராயப்பரின் மேல் கட்டப்பட்ட இயேசுவின் திருச்சபை. ஆகவே மற்றவர்களுக்கு பயப்பட்டு நாம் தவறு செய்கிறோமோ என்று குழம்பத்தேவையில்லை.
அன்னை மாமரியின் மேல் பக்தி, புனிதர்கள் பக்தி, காவல் தூதர்கள், தேவதூதர்கள் பக்தியெல்லாம் சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும். அன்றாட நம் காவல் தூதர் ஜெபம், மிக்கேல் அதிதூதர் ஜெபங்கள், மாதாப்பிராத்தனை, புனிதர்கள் பிராத்தனையெல்லாம் கத்தோலிக்கர்களுக்கு தேவையான ஒன்று. அதனால்தான் நம் திருச்சபை கொடுத்துள்ளது.
அவர்கள் அப்படி நினைப்பார்களோ ! இவர்கள் இப்படி நினைப்பார்களோ ! என்று குழம்பி நம் வழிப்பாட்டு முறைகளையோ ! நம்முடைய தனித்துவத்தையோ மாற்றத்தேவையில்லை. நாம் அப்படித்தான் இருப்போம்; ஜெபிப்போம். எல்லாரையும் போல இருக்க கத்தோலிக்கன் பிறக்கவில்லை. கத்தோலிக்க திருச்சபை நமக்கு போதிக்கும் நம் விசுவாச சத்தியங்களை கடைபிடித்தல்; அதைப்போற்றி பாதுகாத்தல், அதை அறிக்கையிடுதல் நமது கடமை.
அதே போல் தப்பித்தவறி கூட திருச்சபையின் போதனையை தவிர்த்து யாரும் தன் சொந்த போதனைகளை போதிப்பதும், அதை மாற்றுவது இதை மாற்றுவது என்பது ஆகாது. எவ்வளவு படித்தாலும், எல்லாம் தெறியும் என்று நினைத்தாலும் கத்தோலிக்க விசுவாச சத்தியங்களை விட்டு ஒரு நூல் அளவு கூடவெளியே செல்லக்கூடாது.
அது போல மேலே உள்ள நம் ஆண்டவரின் வார்த்தையான சின்னஞ்சிறுவர்களுக்கு யாரும் இடறலாய் இருக்கக்கூடாது. சிறுவர்களை நேசிப்போம் அவர்களை நன்னெறியில் வளர்ப்போம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !