“ அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே “ லூக்காஸ் 1 : 28
இந்த வார்த்தைகள் கபரியேல் தூதர் அன்னை மரியாளைப்பார்த்து சொல்லிய வார்த்தைகள். கபரியேல் தூதரிடம் இவ்வார்த்தைகளை சொல்லச் சொல்லி அனுப்பியவர் மூவொரு கடவுளில் பிதாவாகிய தந்தை. ஆண்டவருடைய வார்த்தைகளை கபரியேல் தூதர் ஒரு கடவுளின் செய்தியை ( தபால்காரல் போல்) கொண்டு வந்து அன்னையிடம் சேர்த்துள்ளார். ஆகவே அந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் பிதாவாகிய கடவுள். ஆகவே அருள்நிறை மந்திரத்தின் முதல் இரண்டு வரிகளை இயற்றியது பிதாவாகிய கடவுள்.
அது கடவுளின் வார்த்தை அவ்வார்த்தைகளை சொல்லி நாம் ஜெபிக்கும்போது கடவுள் மகிமைப்படுத்தப்படுகிறார்.
“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே “ லூக்காஸ் 1 :42
இது எலிசபெத் அம்மாள் சொல்லியவார்த்தை எப்போது சொல்கிறார். பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு சொல்கிறார். அப்படியென்றால் பரிசுத்த ஆவியான கடவுளும் அன்னை மரியாளை வாழ்த்துகிறார். இரண்டாவது வரிகள் பரிசுத்த ஆவியானவர் இயற்றிய வரிகள். இந்த வரிகளை சொல்லும்போது தூய ஆவியானவரை மகிமைப்படுத்துகின்றோம்.
மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் திருவிவிலிய வார்த்தைகளே ! உயிருள்ள கடவுளின் வார்த்தைகளே
திருவயிற்றின் கனியாகிய இயேசு நாதரும் ஆசீர்வதிக்கப்பட்டவரே ! என்று இயேசுவையும் போற்றுகின்றோம்.
இவ்வாறாக பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற கடவுளின் மூன்று ஆட்களையும் நாம் வாழ்த்துகின்றோம்.
“ அர்ச்சிஷ்ட்ட மரியாளே ! சர்வேசுவரனுடைய மாதாவே ! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும் “ –ஆமென்.
அன்னையிடம் வேண்டுதலை வைக்கிறோம். யாரிடம் வேண்டச்சொல்கிறோம். சுதனாகிய இயேசுவிடம் நமக்காக வேண்டச்சொல்கிறோம். கடவுளுக்கே அன்னையாயிருக்கிற நீ எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும்- நாங்கள் பாவங்களை விடுவதற்காகவும், உலகை வென்று நல்ல மரணம் அடையவும் வேண்டுகிறோம்.
ஆகவே, மங்கள வார்த்தை ஜெபமான அருள் நிறைந்த மரியே ஜெபம், “ மூவொரு கடவுளை வாழ்த்தி, அவர் தாயை வாழ்த்தி, நாம் பாவியென்பதை அறிக்கையிட்டு, நம் மரணவேளை வரை நமக்காக அன்பு அன்னையிடம் வேண்டுதல் செய்யும் ஜெபம்.
அதே போல் பரலோக மந்திரம் நம் இயேசு ஆண்டவர் சொல்லிக்கொடுத்த ஜெபம். முடிவில் பிதாவுக்கும், சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக என்றும் சொல்லும்போதும் மூவொரு கடவுள் மகிமைப்படுத்தப்படுகிறார்.
“ ஓ என் இயேசுவே “ ஜெபம், 1917-ல் நம் அன்னை பாத்திமாவில் மூன்று சிறுவர்கள் மூலமாக கற்றுக்கொடுத்த ஜெபம். அதில் நம் பாவங்களுக்காக மன்னிப்பும், நரகத்திலிருந்து நம்மை பாதுகாக்கவும், உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காகவும் வேண்டுகிறோம்.
ஆக பிதா சுதன் பரிசுத்த ஆவியும், நம் தூய தாயும் இயற்றிய ஜெபமாலை, மூவொரு கடவுளை மகிமைப்படுத்தும் ஜெபமாலையைவிட திருப்பலிக்கு அடுத்தபடியாக சிறந்த ஜெபம் இப்புவியில் இல்லை.
விடிய விடிய நம் சொந்த ஜெபங்களைச்சொல்லி ஆண்டவரே வாரும் என்று உருகி உருகி ஜெபித்து Praise the Lord-ம் அல்லேலுயாவும் சொன்னாலும் நல்லதுதான் ஆனாலும் ஒரு ஜெபமாலைக்கு ஈடு இல்லை.
“ என்ன வளம் இல்லை நம் கத்தொலிக்கத் திருச்சபையில்.. ஜெபிப்போம்...ஜெபிப்போம் ஜெபமாலை..
இயேசுவுக்கே புகழ் ! அருள் நிறைந்த மரியே வாழ்க !