தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார். லூக்காஸ் 1: 26-28
(கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ வேதாகமான ‘வுல்காத்தா’ மொழிபெயற்பு, “ அருள் நிறைந்தவளே வாழ்க “ என்றே அன்னையை வாழ்த்துகிறது. நன்றி : கத்தோலிக்கம் நம் பெருமை நூல்.பொது மொழிபெயற்பின் அடிக்குறிப்பில் “ அருள் நிறைந்தவளே வாழ்க “ என்று போடப்பட்டுள்ளது. அதையே மேலே போடுவதற்கு என்ன கஷ்ட்டம்)
கடவுள் வந்து தங்கும் இடம் அருள் நிறைந்ததாக இருக்குமா? அருள் மிகப்பெற்றதாக இருக்குமா?
அதற்கு வானதூதர், " பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும் “ லூக்காஸ் 1: 35
பரிசுத்த ஆவியானவர் உன் மீது வருவார்... உன்னதரின் வல்லமை உன் மீது நிழலிடும்.. ஆதலின் பிறக்கும் இத்திருக்குழந்தை உன்னதரின் கடவுள் எனப்படும்.... இந்த வார்த்தைகளைக் கேட்டபின்னும் அதை உள் வாங்கி தியானித்தபின்னும் அன்னையை ஒருவர் “ அருள் மிகப்பெற்றவரே “ என்று யாராவது வாழ்த்தினால் அது தப்பரையன்றி வேறெது.
(திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது. அன்னை நம்மை விட ‘ அருள் மிகப்பெற்றவள் ‘ அல்ல. அருள் நிறைந்தவர்கள். எனென்றால் அன்னையிடம் பாவம் இல்லை. குருக்கள், ஆயர், கர்தினால்கள் ஏன் போப் ஆண்டவர் எல்லாருமே அருள் மிகப்பெற்றவர்கள்தான், அனைத்து புனிதர்கள் தொடங்கி மாதாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகப்பெரிய புனிதர் புனித சூசையப்பர் வரை எல்லோருமே அருள் மிக மிகப்பெற்றவர்களன்றி அருள் நிறைந்தவர்கள் அல்ல. அன்னை “அமல உற்பவி” பாவம் இல்லாதவர்கள். வேதாகமத்தின் முதலில் வரும் கடவுளின் நேரடி தீர்க்கதரிசனமான ஆதியாகம் 3: 15, “ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்” என்ற கடவுளின் வார்த்தைக்கு எதிராக இருப்பது யாருக்குமே தோன்றவில்லையா”)
ஏன் அருள் நிறை, பரலோக மந்திரங்கள் மாற்றப்படுகிறது. மாதாவின் பிராத்தனை விசுவாசப்பிரமான்ங்கள் எல்லாமே மாற்றப்படுகிறது. இதனால் திருப்பலியில் ஒரிருவர் தவிர யாருமே வாய்திறப்பதில்லை. எதை வேண்டுமாலும் மாற்றிக்கொள்ளுங்கள் தயவு செய்து அருள் நிறை மந்திரத்தை மாற்றாதீர்கள். அதில் தப்பரை ஒழிந்துள்ளது. தப்பரைகள் எங்கு நுழைந்தாலும், உடனே பாவங்கள் நுழைந்துவிடும். பின் அது சாவான பாவத்திற்கு வழிவகுக்கும்.
மாற்றங்கள் வர வர அழிவு சீக்கிரம் வரும். அது ஏற்கனவே வந்துவிட்டது.
பாத்திமா மாதாவின் காட்சியின் நூறாவது ஆண்டில் இருக்கும் நாம் சிறுமி ஜெசிந்தாவின் அறிவுரை மறக்கக்கூடாது,
“ சில நாகரீக பாணிகள் புகுத்தப்படும். அவை நமதாண்டவரை மிகவும் நோகச்செய்யும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்பாணிகளைப் பின்பற்றக் கூடாது. திருச்சபையில் நாகரீகப் பாணிகள் கிடையாது. நமதாண்டவர் மாற்றமடைவதில்லை “
அவரவர் அவரவர் விருப்பத்தின்படி செயல்பட்டால் கடவுள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்?
அருள் நிறை, பரலோக மந்திரங்கள் மக்கள் மனங்களில் பசுமரத்தானி போல பதிந்து அவர்கள் வாழ்க்கையில் இரண்டர கலந்துவிட்டன.
கடவுள் நம்மிடம் கேட்பதும் எதிர்பார்ப்பதும ஆன்ம மனமாற்றமா? இல்லை வார்த்தை மாற்றமா? தமிழுக்கு சேவை செய்துவிட்டால் அது ஆண்டவருக்கு செய்யும் சேவையாக நிறைவு பெற்றுவிடுமா? தமிழ்சேவை புரியவா அழைக்கப்பட்டுள்ளோம். தமிழ்சேவை செய்ய எத்தனையோ வேறு வழிகள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அதிர்ச்சி ஞாயிறு திருப்பலியில்.
நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருவது வார்த்தைகள்தானே தவிர வாழ்க்கை இல்லை. ஆன்மாக்களை மீட்க நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. அதுவே நமதாண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது. இப்போது எல்லா இடத்திலும் உலகப்போக்கே முன்னால் நிற்கிறது. முதலில் அதை மாற்றி ஆண்டவர் பக்கம் திருப்ப வேண்டும்.. ஏனென்றால் உலகம் அலகை கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..
நன்றாக மொழிச்சேவை செய்யுங்கள்..
“ அருள் நிறைந்தவள் “ என்பதற்கு அருள் மிகப்பெற்றவர்தான் சரியான வார்த்தை என்று எந்த தமிழ் அகராதியில் போட்டுள்ளது. யாராவது சொல்லுங்கள்.
நூறு முறை சொன்னாலும் யாரும் மாறப்போவதுமில்லை மாற்றப்போவதும் இல்லை. அவர்களுக்கு உண்மையை விட கவுரவம் பெரிது; ஆண்டவரை விட உலக மதிப்பீடு பெரிது..
நவீனத்தின் மேல் உள்ள கவர்ச்சி மாறும்வரை.. மாற்றம் வரும்வரை கத்தோலிக்கத்தை நேசிப்பவர்கள் பொறுமையுடன் காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை..
மீண்டும்... தயவு செய்து... “ அருள் நிறை மாற்றாதீர்கள்... தப்பரைக்குள் விழாதீர்கள்...” நம்மால் புலம்பத்தான் முடியும்...அதையாவது செய்வோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !