“ பச்சை மரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்திற்கு என்ன நேருமோ ? “
“ எனக்காக அழாதீர்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் “ - ஆண்டவர் இயேசு கிறிஸ்து
ஆறுதல் எல்லோருக்கும் தேவையான ஒன்றுதான். நான் இந்தக் கஷ்ட்டத்தில் இருக்கிறேன். எனக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா? என்று எல்லோருக்குமே தோன்றும் மனம் ஏங்கும். அதே போல் யாராவது அப்போது ஆறுதல் சொன்னால் மனம் லேசாகிவிடும். ஆறுதலை எல்லா மனமுமே விரும்பும்.
ஆனால் இங்கே ஒரு விந்தை அரங்கேறுகிறது. ஆறுதல் தேவைப்படும் தேவனே ஆறுதல் கூறுகிறார். பெரும்பாலும் பலவீனத்தில் இருப்பவர்கள் ஆறுதலை வாங்கவே விரும்புவார்கள். இங்கே நம் ஆண்டவரைப் பாருங்கள் மிக மிகவே பலவீனமாக தான் இருக்கும்போதும் “உன்னை திடப்படுத்துவேன். உன்னை பலப்படுத்துவேன். உனக்கு ஆறுதல் மொழி தருவேன். அதுவும் என்னால் முடியும். நான் பலம் இழந்தாலும் திடம் இழக்கவில்லை. வழுவிழந்தாலும் உறுதி இழக்கவில்லை. “உங்களுடைய வலுவின்மையில் ஆண்டவர் உங்களுக்கு வலுவூட்டுவார் “ என்ற இறைவனின் வார்த்தையை அவரே நிறைவேற்றி உங்களாலும் இது முடியும் “ என்று செய்து காட்டுகிறார்.
“ சொல்வதைத்தான் செய்கிறோம்; செய்வதைத்தான் சொல்கிறோம்;” என்று சொல்ல உலகில் ஆயிரம் பேர் உண்டு. ஆனால் சொன்னதை அனைத்தையும் செய்த வாழ்ந்து காட்டிய ஒரே தலைவர் நம் இயேசு தலைவர் மட்டும்தான்..
“ தன் நண்பனுக்காக உயிரைக்கொடுப்பதை விட மேலான அன்பு ஒன்றுமில்லை “ என்றார்.. தன் இன்னுயிரைக் கொடுத்தார்.
“ ஒரு கண்ணத்தில் அறைந்தால் உன் மறு கண்ணத்தையும் காட்டு “ என்றார், தன் கண்ணத்தையும் காட்டினார்.
“ உங்களை துன்புறுத்துவோருக்காக ஜெபியுங்கள் “ என்றார் தன்னை சித்ரவதை செய்து கொலை செய்துகொண்டிருப்போருக்காகவும் அந்த நிலையிலும் ஜெபித்தார்.
“ தாய் தந்தையை நேசி “ என்றார். தனக்குப்பின் தன் தாயாருக்கு யார் இருக்கிறார் என்று அந்த நிலையிலும் யோசித்து தன் அன்புச்சீடரிடம் தன் தாயாரை தாரை வார்த்தார். அதுமட்டும் போதாதென்று இந்த உலகத்திற்கே அவரை தாயாராக கொடுத்தார்.
“ உன் மேலாடையை பறிப்பவனுக்கு உன் உள் ஆடையையும் கொடு “ என்றார். தனக்கு இருந்த ஒரே ஆடையையும் கொடுத்துவிட்டார்..
இப்படி நம் ஆண்டவர் தான் சொல்லியதை எந்த சூழ்நிலையிலும் கடைபிடித்துக்காட்டியுள்ளார்...
அவர் அப்படி... நாம் எப்படி...
துன்புறுபவர்களைப்பார்த்து சிரிக்கிறோம்; நகைக்கிறோம்; அவனுக்கு..அவளுக்கு “நல்லா வேண்டும்” என்று மகிழ்கிறோம்.. அவர்களிடம் பேசும் போது “ ச்சே உனக்கு போயி இந்தக் கஷ்ட்டமா ? அந்தக் கடவுளுக்கு இது அடுக்குமா?” என்று பொய் ஆறுதல் கூறி நடிக்கிறோம்.
மற்றவரின் துன்பத்தைப்பார்த்து மனதுக்குள் மகிழ்வதும்; அவர்களிடம் ஆறுதல் சொல்வதுபோல் நடிப்பதும் எத்தனைபேர் செய்துகொண்டிருக்கிறோம்.
அது ஆண்டவருக்குத் தெறியாதா? “ என் மகனே ! என் மகளே ! நான் உனக்கு கட்டளை தந்திருக்கிறேன், உன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசி என்று.. ஆனால் நாம் யாராவது கடைபிடிக்கிறோமா?பாதி கடைபிடிக்கிறோம். தன்னை மட்டுமே நேசிக்கிறோம். சுய நலத்தில் வாழ்கிறோம். இதற்காகவா நான் சிலுவை சுமந்தேன்; உனக்காக மரித்தேன் “
“ நான் இந்தச் சூழ் நிலையிலும் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லி நான் ஆண்டவர் என்று காட்டிவிட்டேன்..
ஆனால் நீ உன் அயலானை நேசித்து என் மகன், என் மகள் என்று காட்டமாட்டாயா? அட்லீஸ்ட் நடிப்பதையாவது நிறுத்த மாட்டாயா? “ என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !