தூய ஆவியே எழுந்தருள்வீர் வானினின் றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தூய ஆவியே எழுந்தருள்வீர்

வானினின் றுமது பேரொளியின்

அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்

எளியவர் தந்தாய் வந்தருள்வீர்

நன்கொடை வள்ளலே வந்தருள்வீர்

இருதய ஒளியே வந்தருள்வீர்


1. உன்னத ஆறுதல் ஆனவரே

ஆன்ம இனிய விருந்தினரே

இனிய தன்மையை தருபவரே

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே

வெம்மை தணிக்கும் குளிர்நிழலே

அழுகையில் ஆறுதல் ஆனவரே


2. உன்னதப் பேரின்ப ஒளியே

உம்மை விசுவசிப்போருடைய

நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்

உமதருள் ஆற்றல் இல்லாமல்

உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை

நல்லது அளவில் ஏதுமில்லை


3. மாசு கொண்டதைக் கழுவிடுவீர்

வறட்சியுற்றதை நனைத்திடுவீர்

காயப்பட்டதை ஆற்றிடுவீர்

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்

குளிரானதைக் குளிர்போக்கிடுவீர்

தவறிப்போனதை ஆண்டருள்வீர்


4. இறைவா உம்மை விசுவசித்து

உம்மை நம்பும் அடியார்க்கு

கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்

இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்

அழிவில்லா இன்பம் அருள்வீரே