நம் வீட்டிற்குள் நாம் செருப்பை வெளியில் கழற்றிவிட்டு வீட்டிற்குள் செல்வோம். ஆனால் ஆலயத்திற்குள் மட்டும் செருப்பை போட்டுக்கொண்டு செல்வோம். அதுதான் நாம் நம் கடவுளுக்கு செய்யும் மரியாதை.
பிற மத கோவிலுக்குள் யாராவது செருப்பு அணிந்து கொண்டு செல்கிறார்களா? இல்லை. ஆயுத பூஜை போன்ற பூஜைகளை கட்டிடங்கள் கட்டும் இடத்திலும், தொழிற்சாலைகளில் வைத்து செய்தாலும் கூட செருப்பை கழற்றி மூலையில் போட்டுவிட்டுத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்களிடம் உள்ள பண்பாடு, ஒழுக்கம், அவர்கள் அவர்களுடைய கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை கூட நாம் நம்முடைய பரிசுத்த தெய்வத்திற்கு கொடுப்பதில்லையே ஏன் ?
“ என் செருப்பை யாராவது எடுத்துவிடுவார்கள்; அல்லது குருக்களே (சில). செருப்பு போட்டுதான் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். என்று சாக்கு சொல்லிவிட்டு அதனால் நானும் செருப்போடுதான் திருப்பலியில் பங்கேற்பேன் “
உங்கள் கடவுளுக்கு நீங்கள்தானே பொறுப்பு. செருப்பு போனால் போகிறது. பழைய செருப்பை போட்டு ஆலயம் சென்றால் என்ன?
நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ? யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் கடவுள் மட்டும் நமக்கு எல்லாம் செய்ய வேண்டும். என்ன சுய நல வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்.
பரிசுத்த இடத்திற்கு, பரிசுத்தரை பார்க்க, பரிசுத்தரை ஆராதிக்க, பரிசுத்தரை உட்கொள்ள செல்கிறோம் என்ற எண்ணத்தோடு நாமும் பரிசுத்த உள்ளத்தோடு செல்லாவிட்டால் அதே பரிசுத்தரிடம் ஒரு நாள் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதில் நற்கருணையை கரங்களில் வேறு வாங்குவது. கேட்டால் ஹைஜீனிக், சுத்தம் பார்க்கிறார்களாம். பரிசுத்த தெய்வம் நோயை பரப்புவாரா ? குணமாக்குவாரா? அப்புறம் ஏன் அவரிடம் அந்த நோயை குணமாக்குங்கள், இந்த நோயை என்று பெட்டிசன் போடுகிறீர்கள் ?
கரங்களில் வாங்குவதுதான் டீசன்சியாம். நீ கடவுளை பெறுவதில் இடறல்பட்டால், அவரும் உன்னைக்குறித்து இடறல்படுவார். கடவுள், கடவுளுக்காக என்று நினையாமல் பக்கத்தில் இருப்பவர் என்ன நினைப்பார் என்று நினைத்தால் உன் விசுவாசம் பொய். பொய்யான விசுவாசத்தோடு கேட்டால் கடவுள் உன்னை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்.
கடவுள், நம் தெய்வம், நமக்காக பலியாவர் நம்மைத் தேடி வருகிறார்; நமக்குள் வருகிறார்; அவருக்காக நான் சகலத்தையும் செய்வேன்; சகலத்தையும் விடுவேன்; அவரே எனக்கு எல்லாம். என்று நாம் சென்றால்; அவரும் சொல்வார் உனக்காக நான் எல்லாம் செய்வேன் என்று.
கண்ணியமான ஆடைகள் உடுத்தி, தலைக்கு முக்காடிட்டு, ஆண்களும் கண்ணியமான ஆடைகள் உடுத்தி எல்லாவற்றிக்கும் மேலாக நம் ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி நம் பரிசுத்தரை நமக்குள் ஏற்போம்.
இயேசுவுக்கே புகழ் ! இயேசுவுக்கே நன்றி ! மரியாயே வாழ்க !