ஆ! என் சர்வேசுவரா ! நீதீமான்கள் உமக்கு பிரியப்பட எவ்வளவோ பிரயாசைப்பட்டார்கள். ஐயோ ! நான் செய்வது எவ்வளவு சொற்பம்.. நான் தேவ நற்கருணை வாங்க ஆயத்தம் செய்வதில் எவ்வளவோ கொஞ்ச நேரம் செலவழிக்கிறேன் !. அந்நேரத்தில் முழுமையும் மன அடக்கத்தில் நிலைகொள்வது அபூர்வம். எவ்வித பராக்குமில்லாதிருப்பது அதிலும் அபூர்வம். ஆயினும் நான் உமது திவ்ய சமூகத்தில் இருக்கும் போது, தகாத நினைவொன்றும் எனக்குள் வரக்கூடாது. யாதோர் சிருஷ்ட்டியின் (நபரின்) பேரிலும் நான் கவனம் கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒரு சம்மனசானவரை அல்ல. ஆனால் சம்மனசுக்களின் ஆண்டவரை என் விடுதிக்குள்ளாக நான் ஏற்றுக்கொள்ள இருக்கிறேன்.
உடன்படிக்கைப் பேழையை விட வாக்குக்கெட்டாத உயர்ந்தவர் நம் நற்கருணை ஆண்டவர் :
உடன்படிக்கைப் பெட்டகம் அதைச் சேர்ந்த மற்ற பொருட்கள் முதலியவற்றிற்கும், உமது மிகப் பரிசுத்த சரீரம் அதன் வாக்குக்கெட்டாத புண்ணியங்கள் முதலியவற்றிற்கும் மிக அதிகமான வித்தியாசமுண்டு; எதிர்கால பலிக்கு அடையாளமான பழைய முறைகளின் பலிகளுக்கும், அவற்றையெல்லாம் பூரணமாக்குகிற உமது சரீரத்தின் மெய்யான பலிக்கும் வெகுதூர வித்தியாசமுண்டு.
இப்படியிருக்க நான் ஆராதனைக்குரிய உமது சந்நிதியில் அதிக பக்தி வேகமில்லாதிருப்பது ஏன்? முற்காலத்துப் பிதாபிதாக்கள், தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், பிரபுக்கள் முதலிய சகலரும் தேவ ஊழியத்தின் பேரில் அவ்வளவு பக்தி காண்பித்திருக்க, உமது பரிசுத்த சற்பிரசாதத்தை உட்கொள்ள நான் அதிகக் கவலையோடு ஆயத்தம் செய்யாததென்ன ?
ஓ ! திவ்ய நற்கருணையின் ஆச்சரியத்திற்குரியதும், மறைவுள்ளதுமான வரப்பிரசாதமே ! கிறிஸ்து நாதருடைய பிரமாணிக்கமுள்ள சீடர்கள் மாத்திரமே அதனை சுகித்து அநுபவிக்கிறார்கள், பாவத்திற்கு அடிமைகளாகிய பிரமாணிக்கமற்ற ஊழியரோ அதன் பலனை உணர முடியாது.
இந்த தேவதிரவிய அனுமானத்தை உட்கொள்பவர்களுக்கு ஞான வரப்பிரசாதம் கொடுக்கப்படுகின்றது. இழந்த பலன் மீண்டும் அளிக்கப்படுகின்றது. பாவத்தினால் உருமாறின ஆத்தும அழகு திரும்பக் கொடுக்கப்படுகின்றது. சில சமையங்களில் இந்த வரப்பிரசாதம் எவ்வளவு மகத்தானதாயிருக்கிறதென்றால் அதனால் உண்டான பக்திச் சுறுசுறுப்பின் சம்பூரணத்தால் (முழுமையால்) ஆத்துமத்திற்கு மாத்திரமல்ல, பலவீனமுள்ள சரீரத்திற்கு முதலால், ஒரு புதிதான சத்துவம் (திடன்) அளிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : கிறிஸ்துநாதர் அநுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
சிந்தனை : உண்மையில் சொல்லப்போனால் நம் சர்வேசுவரனின் பேரிரக்கத்தையும், திவ்ய நற்கருணை நாதரையும் நாம் முழுமையாக இன்னும் அறியவில்லை. நாம் நம் நற்கருணை ஆண்டவரை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கக் கூட திராணியில்லாமல் இருக்க மாட்டோம். ஏன் மலைபோல் பிரச்சனைகள், சோதனைகள், இன்னல்கள், இடையூறுகள் வந்தாலும் நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்…
அதற்கு நமக்கு விசுவாசம், நம்பிக்கை, தேவ ஸ்நேகம், தெய்வ பயம் வேண்டும். இவைகள் இருந்தால் மட்டுமே தெய்வீகத் திருப்பலியில் பக்தியோடும் தகுந்த தயாரிப்போடும் பங்கேற்போம். அவரைக் கண்டுகொள்ளவேண்டுமானால். உலகக் காரியங்களையும், அடுத்தவர் என்ன நினைப்பார் பற்றிய சிந்தனைகளையும் தூக்கி எரிய வேண்டும்..
ஒவ்வொரு திருப்பலிக்கும், ஒவ்வொரு திருவிருந்திற்கும் ஒரு தேடுதல் நிறைந்த உள்ளத்தோடு, ஆண்டவரிடம் நாம் செல்ல வேண்டும். நான் இன்று அவரிடம் என்ன பேசலாம், என்ன கேட்கலாம், அவரை நம் உள்ளத்தில் எப்படி பாவமின்றி வரவேற்கலாம்; ஆராதிக்கலாம் என்று ஆண்டவரைப் பற்றிய சிந்தனைகளோடும், ஆசைகளோடும், எவ்வித பராக்குகளுக்கும் இடம் கொடுக்காமல் சென்று அவரை பக்தியோடு வாங்கி உட்கொண்டால் மோட்ச பேரின்பம் கூட இந்த நம் மகிழ்ச்சியின் முன்னால் சிறியதுதான்..
ஆகவே, ஆண்டவரை நம் கடவுளை பக்தியோடு முழங்காலில் நின்று நாவில் வாங்குவோம்….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !