இப்பிரசங்கங்கள் முக்கியமானவைகள்.. எளிதில் கிடைக்காதவைகள்.. பழைய தமிழில் இருந்தாலும் விரல்களை ஸ்கிரோல் செய்யாமல் கொஞ்சம் நேரம் செலவழித்து படித்தால் கண்டிப்பாக நீங்கள் பயன் பெறாமல் போக மாட்டீர்கள்...
பிரசங்கம் ஆரம்பம்....
சருவேசுரனுக்கு ஊழியஞ்செய்வதுதான் நமது ஒரே அலுவல்
பாகம்-1
''ஒருவன் உலகம் முழுதையும் தன்னுடையது ஆக்கிக்கொண்ட போதிலும், தன் ஆத்துமத்தை இழந்துபோவானாகில் அதனால் அவனுக்கு என்ன பிரயோசனம்?' (அர்ச். மாற்கு சுவிசேஷம், 8; 36).
மனிதன் ஆத்துமமுஞ் சரீரமுஞ் சேர்ந்த ஒரு படைப்பு. சரீரம், காணப்படுகிற உலகத்தில் உள்ள பிற பொருட்களைப்போல கண்டிப்பான ஒரு பொருள். அது என்னத்துக்காக நமக்குத் தரப்பட்டது என்றது சொல்லாமலே விளங்கும். கையும் காலும், தலையும் வாயும், முதலிய அதன் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் என்னென்ன வேலைக்கு உதவியாகிறது என்று எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
சரீரத்துக்குள்ளே நிறைந்திருந்து, சரீரத்தை உயிருள்ளது ஆக்குகிறதாகிய ஆத்துமமோ காணப்படுகிற பொருட்களைப் போல் கண்டிப்பானதொன்று அல்ல; அது கண்ணுக்குப் புலப்படாதது; அரூபமானது; உலகத்திலே உள்ள சகல பொன் வெள்ளி மாணிக்க வைடூரியங்களிலும் பார்க்க விலையேறப்பெற்றது. அந்த அருமை பெருமையான பொக்கிஷத்தை மனிதனுடைய சரீரமானது அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறதினாலே தான், மனிதன் உலகத்திலே உள்ள மற்றப் படைப்புக்களுக்கெல்லாம் இராசாவாக விளங்குகிறான்.
புல் பூண்டு மரம் செடி கொடிகளுக்கு மாத்திரமல்ல, பட்சி பறவைகளுக்கும் சகல மிருக இனங்களுக்கும் மனிதன் அதிபதி; அவைகளை ஆண்டு நடத்தும் உரிமையையும் வல்லமையையும் கொண்டிருக்கிறவன். எந்த மிருகத்துக்கும் இல்லாத பரம கொடையாகிய ஆத்துமம் மனிதனுக்கு மாத்திரம் கிடைத்திருக்கிறபடியால், ஒரு சிறு பையன் தானும் நூறு இரு நூறு ஆடு மாடுகளைத் தான் விரும்பிய விரும்பிய இடத்துக்கு மேய்த்துக்கொண்டு போகிறதைக் காண்கிறோம். யானை சிங்கம் புலி முதலிய துஷ்ட மிருகங்களையும் மனிதன் அடக்கி வேலை கொள்ளுகிறதை அறிவோம்.
ஆத்துமத்தில் பிரகாசிக்கிற புத்தியின் விரிவுக்கும் வல்லமையின் பரப்புக்குமோ இணையில்லை. இவ்வளவு மேன்மை உள்ள ஆத்துமத்தைச் சருவேசுரன் மனிதனுக்குக் கொடுத்தருளிய நோக்கம் என்ன? அவனுக்கு உலக பொருட்கள் சகலத்தையும் ஆண்டு நடத்தத் தக்க புத்தியும், நன்மைக்கு மேல் நன்மையைத் தேடத் தக்க தன்னிட்டமும் கிடைத்திருப்பது என்ன முகாந்திரத்துக்காக? உழைத்து, பொருள் தேடி, தின்று குடித்துச் சீவியம் பண்ணுவதற்காகவா? அப்படியானால், புத்தியும் தன்னிட்டமும் பொருந்திய ஆத்துமம் இல்லாத பட்சிகளும் மிருகங்களும் நன்றாக ஊண் தேடித் தின்று, பலுகிப் பெருகி வாழுவதைக் காண்கிறோமே.
மனிதன் சரீரத்துக்குரிய சுக போகங்களை மாத்திரம் தேடி அனுபவிக்க வேண்டியவன் என்றால், இதற்கு, அழியாத ஒரு ஆத்துமம் அவனுக்கு தேவையில்லை. ஆத்துமம் இல்லாமலே நல்ல திருத்தமான சரீரசீவியம் நடத்திப்போடலாம்.
ஆதலால், ஆத்துமத்தைச் சருவேசுரன் நமக்குத் தந்தது அதற்காகவல்ல. ஆத்துமத்துக்கோ மேலான ஒரு சீவியம் உண்டு. அது என்னவானால், தன்னையும் தனக்காக உலகத்தையும் படைத்தருளிய சருவேசுரனை அறிந்து தோத்திரித்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அதனால் அவர்பேரிற் தனக்கு உள்ள நேசத்தைக் காட்டி நடந்து, அதனால் அவரிடத்தில் சேருவது தான்.
இந்த மேலான சீவியத்துக்காகவே மனிதனுக்கு ஒரு மேலான ஆத்துமம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சீவியந்தான் மனிதனை மிருகத்திலிருந்தும் பிரித்து மனிதனாகக் காட்டுவது. இதனாலேதான்: ''சருவேசுரனுக்குப் பயந்து அவர் திருக்கற்பனைகளைக் கைக்கொள்ளு. இதுவே மனிதனை மனிதனாக்குவது'' என்று வேதவாக்கியமும் விளம்புகிறது. (எக்கிளேசி. 12, 13).
பிரியமான கிறிஸ்தவர்களே, சருவேசுரனுக்கு ஊழியஞ்செய்வதுதான், அல்லது வேறுவகையாய்ச் சொல்லுகில், தன்னுடைய ஈடேற்ற அலுவல்தான், மனிதனை மனிதனாக்குகிற அலுவல். இந்த அலுவல் இல்லாமல் இவ் உலக வாழ்வை மாத்திரம் தேடுவதானால், மனிதனுக்கு சருவேசுரன் அவ் உலகத்துக்குரிய ஒரு ஆத்துமத்தைக் கொடுத்திருக்க மாட்டார். ''நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக'' என்று வசனித்து (ஆதியாகமம் 1, 26) அவ் ஆத்துமத்திற் தமது திருச்சாயலைப் பதித்திருக்கவும் மாட்டார்.
ஆதலால், இன்று, இந்த ஞான ஒடுக்கத் தொடக்கத்திலே, ஈடேற்ற அலுவல் தான் (1) மனிதனுடைய ஒரே அலுவலென்றும், (2) அது அவனவன் தான் தானே முடிக்க வேண்டிய அலுவலென்றும், (3) அது தாமதம் பொறாத ஒரு அலுவலென்றும் காட்ட விரும்புகிறேன். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். ஆதலால், நீங்கள் தேவ உதவியை மன்றாடிக் கேட்டுக்கொண்டு, இதிலே உங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டுமென்று உங்களை வினயமாய்க் கோருகிறேன். (பிரியதத்தம்).
”ஞான ஒடுக்கப் பிரசங்கம்” என்னும் புத்தகத்திலிருந்து... இந்த பதிவு