எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தாய், உம் ஒரே மகனின் வளர்ப்புத் தந்தையாக நீதிமானாக புனித சூசையப்பரைத் தேர்ந்தெடுத்தீரே. எங்களைக் காக்கவும் நல்வழியில் வளர்க்கவும் எங்களுக்கும் அவரைப்போன்றே காவலர்களைத் தந்தருளும். அதனால் உம் அன்பு மகன் இயேசுவைப் போன்று உருவாகும் இறைமக்கள் உமக்கு ஏராளமாகத் தோன்றுவார்களாக.
இறைவனாயிருந்தும் உம்மையே சூசையப்பர் கையில் ஒப்படைத்து அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே, நாங்களும் எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், திருச்சபைக்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள்புரியும்.
திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்த நித்திய புனித ஆவியே, எங்கள் குடும்பத்தையும் இறைவனின் திருவுளத்திற்கேற்ப அமைத்து பாதுகாத்தருள்வீராக.
இயேசுவை வளர்க்கும் பணியில் புனித சூசையப்பரை உமது வாழ்க்கையின் துணைவராகவும் உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய புனித கன்னிமரியே, அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத்தாரும். அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை இறைவனின் திருவுளத்திற்கேற்ப எளிமையில் அமைத்து நடப்போமாக.
திருக்குடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பரே, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. திருக்குடும்பத்தை உம் உழைப்பாலும் உணவூட்டிக் காத்த புனித சூசையப்பரே, எங்கள் அறிவாலும், உழைப்பாலும், எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து செழிப்புறச் செய்து துணைபுரிவீராக.
குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித சூசையப்பரே, எங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.
இயேசுமரியின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து நன்மரணமடைந்த புனித சூசையப்பரே, நாங்களும் நல்மரணமடைய எங்களுக்காக மன்றாடுவீராக. ஆமென்.