பாவசங்கீர்த்தனம் தவக்காலங்களில்தான் செய்யவேண்டும் என்றல்ல. அது போல ஜெபதவ ஒறுத்தல்களும் தவக்காலங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டவை அல்ல. நாம் எப்போதும் சீசன் கிறிஸ்தவர்களாக வாழக்கூடாது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜெபமாலை ஜெபிப்பது, நவம்பர் மாதத்தில் மட்டும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிப்பது; திருப்பலி ஒப்புக்கொடுப்பது, டிசம்பர் மாதத்தில் மட்டும் நம் இயேசு தெய்வத்தின் பிறப்பை தியானிப்பது, தவக்காலங்களில் மட்டும் இயேசுவின் திருப்பாடுகளை தியானிப்பது, தவங்கள், பரித்தியாகங்கள், ஒறுத்தல் முயற்சிகள் செய்வது பாவசங்கீர்த்தனம் செய்வது என்று இருக்கக்கூடாது.
இயேசு தெய்வத்தின் வாழ்க்கை, அவரின் பாடுகள், அவர் உயிர்ப்பு அடிக்கடி தியானிக்கப்படவேண்டும். இவற்றை தியானிக்க அடிக்கடி ஜெபமாலை சொல்ல வேண்டும்.அதேபோல் சிலுவைப்பாதையும் செய்யலாம்.
பாவசங்கீர்த்தனம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை அடிக்கடி பெறவேண்டும். அப்போதுதான் நம் ஆன்மாக்கள் பாவத்தை விட்டு விலகி இருக்கும். பாவம் செய்ய மனம் வராது. ஒருசந்தி, சுத்தபோசனம் மாதம் ஒருமுறையாவது கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒறுத்தல் முயற்சிகள் அனுதினமும் ஒன்றாவது செய்ய வேண்டும்.
நம் கத்தோலிக்கத் திருச்சபை நமக்கு நிறைய தேவதிரவிய அனுமானங்களை கொடுத்துள்ளது. அவைகளை நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
அதன் மூலம் நாம் எண்ணற்ற வரப்பிரசாதங்களைப் பெற முடியும். அது நாம் மேலும் பரிசுத்தமுள்ளவர்களாக நல்ல கிறிஸ்தவர்களாக வாழ நமக்கு உதவும்.
இந்தப்பதிவு ஒரு நினைவூட்டலுக்கான பதிவே அன்றி வேரொன்றுமில்லை.
அருட்தந்தையர்கள் கவனத்திற்கு : பாவசங்கீர்த்தனம் செய்ய வரும் மக்களுக்கு கூச்சம், தயக்கம் நீங்க பாவசங்கீர்த்தன தொட்டிகளில் அமர்ந்து அருட்தந்தையர்கள் கேட்டால் தயக்கமின்றி மக்கள் வந்து தங்கள் பாவங்களை அறிக்கையிடுவார்கள்.குறைந்தபட்சம் தட்டிகளாவது பயன்படுத்தவேண்டும்.நாற்கலிகள் போட்டு அமர்ந்து அருட்தந்தையர்கள் பாவசங்கீர்த்தனம் கேட்பது நிறைய மக்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும். நிறைய பாவங்களை விட்டுவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
இப்போதும் நிறைய பங்குத்தந்தையர்கள் வாரம் ஒருமுறை பாவசங்கீர்த்தனம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்; கத்தோலிக்க மக்கள் பலரும் பாவசங்கீர்த்தனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இது கடைப்பிடிக்காதவர்களுக்கே !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !