பொறுமைப் பிரவாக ஊருணியான அர்ச். தேவதாயாரே, பரலோக இராசாவாகிய உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரை யூதர்கள் பரிகாச இராசாவாக ஸ்தாபித்து, அவருடைய திருத் தலையிலே முண் முடி வைத்தடித்ததினாலே முட்கள் ஊடுருவினதைப்பற்றி அவர் திருமுகத்தில் ஓடின இரத்தத்தை நீர் கண்டு அந்த முட்கள் எல்லாம் உமது இருதயத்திலே ஊடுருவினதாக மிகுந்த துக்கப்பட்டீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்கள் எங்கள் இருதயத்திலிருக்கும் பாவமாகிய முட்களை உத்தம மனஸ்தாபத்தினாலே பிடுங்கி எறியத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - பத்து அருள். ஒரு திரி.
அர்ச். இரஃபாயேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.