868 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம் புனித அந்தோனியார் திருத்தலம், வாழப்பாடி

     
   


புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம் -புனித அந்தோனியார் திருத்தலம்

இடம்: வாழப்பாடி

மாவட்டம்: சேலம்

மறைமாவட்டம்: சேலம்

மறைவட்டம்: ஆத்தூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. நல்லாயன் ஆலயம், பேளூர்

2. புதுமை மாதா ஆலயம், சேசன்சாவடி

3. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், மைக்ரோ

4. புனித செபஸ்தியார் ஆலயம் -இறை இரக்க திருத்தலம், புத்திர கவுண்டம்பாளையம்

பங்குத்தந்தை அருட்பணி. R. ஜெயசீலன் 

குடும்பங்கள்: 350

அன்பியங்கள்: 17

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

திங்கள், செவ்வாய், வியாழன் மாலை 06:30 மணி திருப்பலி

புதன், வெள்ளி, சனி திருப்பலி காலை 06:30 மணி

செவ்வாய் காலை 11:00 மணி குணமளிக்கும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை. மாலை 06:30 மணி திருப்பலி தேர்பவனி. (வாழவைக்கும் வாழப்பாடி புனித அந்தோனியார் திருத்தலத்தில்) 

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.T. ஜான் கென்னடி.

2. அருட்பணி. கோபி இம்மானுவேல்

மற்றும் 3 அருட்சகோதரிகள். 

வழித்தடம்: சேலம் -ஆத்தூர் வழித்தடத்தில், சேலத்தில் இருந்து 25கி.மீ தொலைவில் வாழப்பாடி அமைந்துள்ளது.

Location map: St. Pius X Church (திருத்தந்தை பத்தாம் பயஸ் ஆலயம்)

https://maps.app.goo.gl/vwr92KHqSx83p5RK6

வரலாறு:

மிக நீண்ட காலமாக ஆத்தூர் பங்கின் ஒருபகுதியாக இருந்த வாழப்பாடி, புனித பத்தாம் பத்திநாதரை பாதுகாவலராகக் கொண்டு 1958 ஆம் ஆண்டு தனிப் பங்காக உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ரெவேல் அவர்கள் 1960 ஆம் ஆண்டு பொறுப்பேற்று வழிநடத்தினார்.

1957 ஆம் ஆண்டு ஆலயம் கட்டுவதற்காக திரு. ராயப்ப மேஸ்திரி அவர்களிடமிருந்து, தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம்  அப்போததைய ஆயர் மேதகு செல்வநாதர் அவர்களால் வாங்கப்பட்டது.  

ஆன்மீகக் காரணங்களுக்காக ஆத்தூர் மற்றும் மின்னாம்பள்ளி ஆலயங்களுக்கு சென்று வந்த வாழப்பாடி பகுதி மக்களின் சிரமங்களை போக்கும் வண்ணமாக, அப்போது ஆத்தூர் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்பணி. உர்மாண்ட் அவர்களின் பெரும் முயற்சியால் வாழப்பாடியில் ஆலயம் கட்டப்பட்டது. பங்குத்தந்தைக்கு உதவியாக ஆத்தூர் பங்கின் உபதேசியாராக இருந்த திரு. சூசை அவர்கள், ஆலய கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். 1958 ஆம் ஆண்டு மேதகு ஆயர் செல்வநாதர் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 

1965 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி.‌ மரிய ரொடேசினி அவர்களின் பெரும் முயற்சியால் பங்குத்தந்தை இல்லமும், அன்னாள் இல்லமும், கடைகள் மற்றும் புனித மைக்கேல் ஆங்கிலப் பள்ளியும் உருவாகின. புத்திரகவுண்டம் பாளையம், பேளூர், திருமனூர், மங்களபுரம் ஆகிய கிளைப் பங்குகளில் ஆலயம் மற்றும் சுற்றுப்புறச் சுவரையும் கட்டினார். மேலும் ஏராளமான பிற சமய மக்கள் மனம்மாறி திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ விசுவாசத்தில் வாழ வழி வகுத்தார். 

அருட்பணி. எஸ். அல்போன்ஸ் பணிக்காலத்தில் கிளைப்பங்கான சேசன்சாவடியில் புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம் கட்டினார்.‌

அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் பணிக்காலத்தில் லாசிம் உதவியுடன் வாழப்பாடி, திருமனூர், சேசன்சாவடி ஊர்களில் ஏழைகளுக்கு சில வீடுகளை கட்டிக் கொடுத்தார். மேலும் 1991 ஆம் ஆண்டு மூவேந்தர் கலைக் குழுவின் உதவியுடன் ஒலி, ஒளி நிகழ்ச்சிகளையும் அறிமுகப் படுத்தினார்.

அருட்பணி. ஜான் போஸ்கோ பணிக்காலத்தில் பெல்ஜியம் மாணவர்களின் உதவியுடன் 1995-96 இல் பேளூரில் ஏழைகளுக்கு 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

அருட்பணி. பன்னீர்செல்வம் பணியாற்றிய போது, லாசிம் உதவியுடன் ஒருசில ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. மேலும் வாழப்பாடியில் தூய லூர்து அன்னை கெபியை கட்டியதுடன், மங்களபுரத்தில் சுற்றுச்சுவரையும் எழுப்பினார். மேலும் பெல்ஜியம் மாணவ மாணவியரின் உதவியுடன் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆலய முன்புறம் கேட் அமைக்கப்பட்டது. 

அருட்பணி. ஜோசப் பால்ராஜ் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் உள்ள கிணறு புனரமைக்கப்பட்டது. மேலும் பழைய ஆலயம் புதுப்பித்து கட்டப்பட்டது.

அருட்பணி. குருசடி சகாயராஜ் பணிக்காலத்தில் சிறிய அளவில் புனித அந்தோனியார் கெபி கட்டப்பட்டது.

அருட்பணி. J. விமல்தாஸ் அவர்கள் பணிக்காலத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், துருக்கி மாணவர்களின் மூலமாக 11 ஏழைக் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆலய முன்புற நுழைவாயில் பெரிதாக அமைக்கப்பட்டது. புனித அந்தோனியார் கெபி திருத்தலம் புதுப்பிக்கப்பட்டு, 09.06.2020 அன்று சேலம் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் டாக்டர். லாரன்ஸ் பயஸ் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

புதுமை தூண்கள் (St. Antony's Miracle Stations) கட்டப்பட்டு, மேதகு ஆயர் செ. சிங்காராயன் அவர்களால் 23.06.2020 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. அருள்பணி. மரிய ரொடேசினி நினைவாக மேடை அமைக்கப்பட்டது. புனித அந்தோனியார் மணிமண்டபம் கட்டப்பட்டது. புதிய கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. புனித அந்தோனியார் திருத்தலத்தில் காலை 11:00 மணி திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது. வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய வளாகம் சீரமைக்கப்பட்டது.

அருட்பணி. ஏ. சிங்கராயன் அவர்கள் பணிக்காலத்தில் புனித வின்சென்ட் தே பால் சபை உருவாக்கப்பட்டது, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி ஒலி மற்றும் ஒளியாக பிரம்மாண்ட குடில் அமைக்கப்பட்டது.

அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்கள் தற்போது, புனித அந்தோனியார் பக்தர்கள் முழந்தாழ்படியிட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, புனிதரின் புனிதப் பாதை வளைவும் மணல்மேடையும், அந்தோனியார் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் எழுதி வைக்க அவற்றை நற்கருணை ஆண்டவர் முன்பாக வாசித்து பெற்ற எண்ணற்ற காரியங்கள் நிறைவேற வழிவகையும் செய்துள்ளார்.

வாழவைக்கும் வாழப்பாடி புனித அந்தோனியார்:

வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு அருகே 1958 இல் கட்டப்பட்ட புனித பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தின் உள்ளே நுழைந்தால், ஒரு புண்ணியபூமிக்குள் அடியெடுத்து வைக்கிற எண்ணமும், அங்கிருக்கும் மரம், செடிகளின் பசுமையும், வளாகத்தில் மிக மென்மையாக மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கும் புனித அந்தோனியார் பஜனும், அங்கே அமர்ந்து நம்மை தியானம் செய்ய வைத்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. 

கடந்த சில வருடங்களாக செவ்வாய்க்கிழமைகளில் இந்த ஆலயத்தைத் தேடி மதங்களைத் தாண்டி, மக்கள் வெள்ளம் வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் வெறுங்கையாய் வீடு திரும்புவதில்லை என்பதே இப்பகுதியில் வாழும் கிறிஸ்துவர் உள்ளிட்ட பிறமதத்தினர் விளம்பும் கூற்று. அதற்கு காரணம் இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் கோடி அற்புதர் புனித அந்தோனியார். செவ்வாய்க்கிழமை தோறும் இங்கு அந்தோனியார் நவநாள், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் வாரத்திலிருந்து அப்போதைய பங்குத்தந்தை முனைவர் அருள்திரு. ஜெ. விமல் தாஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

நவநாள் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது வார செவ்வாய்க்கிழமையன்று அதாவது 30.07.2018 அன்று பெருமழை பெய்தது. வளாகமெங்கும் தண்ணீர். "புனித அந்தோனியார் கெபி முன்பாக வட்டவடிவில் ஓர் இடத்தில் மட்டும் கட்டாந்தரையாக" இருப்பதை ஒரு சிறுமி பார்த்தாள். அதே இடத்தில்தான் அன்றையநாள் நடைபெற்ற நவநாளில், குருவானவர் திவ்யநற்கருணையை மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று, இறுதியாக அவ்விடத்தில் வந்து நின்று மக்களை ஆசீர்வதித்திருந்தார். அடுத்த நாள் ஊர்முழுக்கச் செய்தி பரவி, எல்லா மக்களும் அற்புதம் நிகழ்ந்த அவ்விடத்தை பார்க்க வந்தனர். பைபிளில் யோர்தான் ஆற்றில் உருவான வறண்ட தரையில் யோசுவா (4:22) கடவுள் வெளிப்படுத்திய உடனிருப்பை நினைவுகூர்ந்து, அவ்விடத்தில் ஒன்றரை டன் எடையில் கருங்கல்லில் ஒரு சிலுவைமாடம் எழுப்பப்பட்டது. இன்றளவும் இந்த இடத்தில் பரிசுத்த தமத்திரித்துவத்தை நினைத்துக்கொண்டு மூன்றுமுறை சுற்றி வந்தால், நினைத்த காரியம் உடனே நிறைவேறுகிறது. சிலுவை விடுதலையின் கருவி என கிறிஸ்தவர்கள் நம்புவதால் பிசாசு, பில்லிசூனியம், கட்டுகள், பாவப்பழி, குற்ற உணர்வு, பயம், நோய் என எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்காக மக்கள் இந்த சிலுவைமாடத்தை நம்பிக்கையுடன் சுற்றி வருகிறார்கள்.

இதுவரை 200க்கும் மேற்பட்டோர் தாங்கள் இக்கோவிலுக்கு வந்ததால் பெற்ற அதிசயத்தை பொதுமக்கள் முன்பு சாட்சியமாக சொன்னதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் குடும்பமாக வேன், கார், பேருந்து மூலம் செவ்வாய்க்கிழமைகளில் வந்த வண்ணம் உள்ளனர்.

கோடி அற்புதரின் புதுமைகள்:

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாத சேலத்தைச் சேர்ந்த தம்பதியர், மிகுந்த வேதனையுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று கடவுளிடம் வேண்டி வந்தனர். எட்டு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பின்னர் வாழப்பாடி புனித அந்தோனியாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, இவ்வருட்தலத்தைத் தேடி வந்து குழந்தை பாக்கியத்திற்காக கண்ணீரோடு மன்றாடினர். வாழப்பாடி புனித அந்தோணியார் நவநாள் செபத்தை நாள்தோறும் வாசித்து வந்தனர். வாழப்பாடி அருட்தலம் வந்த 10ஆவது மாதத்தில் கடவுள் அவர்களுக்கு புனித அந்தோனியார் வழியாக குழந்தை பாக்கியம் வழங்கினார். அதைத்தொடர்ந்து இந்த அருட்தலம் தேடிவரும் பக்தர்களுக்கும், பிறமதத்தைச் சேர்ந்த தம்பதியர் பலருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்து வருவது ஊரறிந்த உண்மை. தினமும் மதங்களைத்தாண்டி மக்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

இந்து பெண்மணிக்கு கனவில் தோன்றிய குழந்தை இயேசு, பிறமத சகோதரி ஒருவரின் மகன் விஷத்தை அருந்தி மிகவும் ஆபத்தான நிலையில், இக்கோவிலுக்குள் தயங்கியப்படி வந்து செபித்த தருணத்திலேயே, மருத்துவமனையிலிருந்து அவரது மகன் சுயநினைவு திரும்பி உயிர் பிழைத்துக்கொண்டான் என்ற செய்தி இக்கோவிலில் நடைபெற்ற புதுமை. 

சேலம், அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் காணாமல் போனத் தங்கச்சங்கிலி கிடைக்கப்பெற்றது.

கோடி அற்புதர் புனித அந்தோனியார் செய்த புதுமைகளை, இவ்வாலயம் வருகிற மக்கள் அறிந்துணரும்படி அழகாக கண்காட்சிபோல 3டி முறையில் அழகுற செதுக்கப்பட்டு, புதுமைத் தூண்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இக்கோவிலுக்கு வருபவர்கள் வெறுங்கையாக வீடு திரும்புவதில்லை என எல்லாரும் சொல்லும் அளவுக்கு கடவுளின் பிரசன்னம் இக்கோவிலில் இருப்பதும், புனித அந்தோனியாரின் பரிந்துரையால் புதுமைகள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளதும் நாடறிந்த செய்தி.   

வாரந்தோறும் பக்தர்களில் ஒருவராக இவ்வாலயத்திற்கு வருகைதரும் அருட்பணி. பிரான்சிஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கடந்த சில வருடங்களாக வாழப்பாடி அந்தோனியார் அருட்தலத்திற்கு மக்கள் வெள்ளம் அதிகரித்து வருவதை கேள்விப்பட்டேன். நானும் இங்கு வந்துப்பார்த்து இப்புண்ணிய பூமியில் நடைபெறும் அதிசயங்களைக் கண்டு வியந்தேன். குறிப்பாக 23.07.2019 அன்று வாழப்பாடி ஆலய பீடத்திற்கு முன்பாக ஆராதனை நேரத்தில் ஒரு வெண்புகை காட்சி கிடைத்தது. அதன் முழு விபரமும் அடுத்த செவ்வாய்க்கிழமை அப்படியே எங்களுக்கு அருளப்பட்ட விவிலிய வாசகத்தில் இடம்பெற்றிருந்தை நினைத்தால் இப்பொழுதும் புல்லரிக்கின்றது. அதுமட்டுமல்ல இவ்வாலயத்தில் மூன்றுமுறை போர்வெல்போட்டு தண்ணீர் கிடைக்காமல், அந்தோனியாரிடம் நவநாள் வைத்து மீண்டும் போர்வெல் போட்டபோது,  அளவுக்கடந்த தண்ணீர் கிடைத்ததுமில்லாமல் சுத்தமாக வறண்ட கிணறு நிரம்பியது என இந்த ஆலயத்தில் நடக்கும் புதுமைகளை பட்டியல் இட்டு கொண்டே போகலாம். 

செவ்வாய்க்கிழமையென்றாலே நான் வாழப்பாடிக்கு சென்று விடுவேன். இங்கு குடிகொண்டிருக்கும் வாழவைக்கும் அந்தோனியாரைப் பார்த்தால் எனக்கு நிம்மதி பேரின்பம் என்று தனது அனுபவத்தை பதிவிட்டார் அருட்பணி. பிரான்சிஸ் அவர்கள்..

செவ்வாய்க்கிழமைகளில் காலை 06:00 மணியிலிருந்தே மக்கள் சேலம், ஆத்தூர், நாமக்கல், கருமந்துறை, காரிப்பட்டி பகுதியிலிருந்து வருவதால் காலை 11:00 மணிக்கு குணமளிக்கும் நவநாள் திருப்பலியும் மாலை 06:00 மணிக்கு தேர்பவனி மற்றும் நவநாள் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. வருகிற எல்லா மக்களுக்கும் மதியம் 01:00 மணிக்கு அன்னதானமும், மாலையில் 08:00 மணிக்கு அந்தோனியார் ரொட்டித்துண்டும் வழங்கப்படுகிறது. 

புனித அந்தோனியார் திருத்தல தகவல் மையம்:

புனிதப் பொருட்கள், சுரூபங்கள் கிடைக்கும். மேலும் திருமண தகவல் மையமும் செயல்பட்டு வருகிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. பீடச்சிறார்

4. இளையோர் இயக்கம்

5. ஜெபக்குழு

6. பங்குப் பேரவை

7. மறைக்கல்வி

8. பாடகற்குழு.

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லங்கள்:

1. கொன்சாகா சபை, வாழப்பாடி

2. சலேசிய சபை, பெத்தநாயக்கன் பாளையம்

3. சேவாமிஷனரிஸ் , சேசன்சாவடி

பங்கின் பள்ளிக்கூடம்:

புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ ரெவேல் (1958-1962)

2. அருட்பணி.‌ அந்தோனி கலத்தில் (1962-1965)

3. அருட்பணி.‌ மரிய ரொடேசினி (1965-1979)

4. அருட்பணி. செல்வரத்தினம் (1979-1982)

5. அருட்பணி. M. அல்போன்ஸ் (1982-1987)

6. அருட்பணி. S. சிங்காராயன் (சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர்) (1987-1990)

7. அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் (1990-1995)

8. அருட்பணி.‌ ஜான் போஸ்கோ பால் (1995-1997)

9. அருட்பணி.‌ S. ஜான் ஜோசப் (1997-1998)

10. அருட்பணி. பன்னீர்செல்வம் (1998-2001)

11. அருட்பணி. புஷ்பநாதன் (2001-2004)

12. அருட்பணி. ஜோசப் பால்ராஜ் (2004-2009)

13. அருட்பணி. குருசடி சகாயராஜ் (2009-2014)

14. அருட்பணி.‌ A. ஆனந்த் (2014-2018)

15. அருட்பணி. J. விமல்தாஸ் (2018-2020)

16. அருட்பணி. A. சிங்கராயன் (2020-2022)

17. அருட்பணி. இரா. ஜெயசீலன் (2022----)

தகவல்கள் பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்கள்.

புகைப்படங்கள் ஆலய செயலர் திரு. மரிய ஆல்பர்ட் அவர்கள்