புனித செபஸ்தியார் திருத்தலம்
இடம்: கொக்கூரணி - 623 538, சனவேலி - வழி
மாவட்டம்: இராமநாதபுரம்
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: இராசசிங்கமங்கலம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. கருங்குடி
2. காவணக்கோட்டை
3. புதுநகர்
4. திருத்தேர்வளை
5. சம்மந்தவயல்
6. மரியாயிபட்டணம்
7. கொசக்குடி
8. மாந்தாங்குடி
9. அழியாதான்மொழி
10. சூச்சக்கனேரி - யாகப்பர்பட்டணம்
11. பூவாணி
12. வல்லமடை
13. தெற்கனேந்தல் (வடக்கு)
14. தெற்கனேந்தல் (தெற்கு)
15. கீழமடை - மேலமடை
16. சிறுகளத்தூர்
17. பாப்பணக்கோட்டை
18. கரவளத்தி.
பங்குத்தந்தை: அருள்பணி . இரா. ஆரோக்கிய ஆனந்த்
குடும்பங்கள்: 400 + கிளைப்பங்குகள் சேர்த்து
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
செவ்வாய் மாலை 07:00 மணி புனித செபஸ்தியார் நவநாள் திருப்பலி
மற்ற வாரநாட்களில் கிளைப்பங்குகளில் திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் செவ்வாய்:
காலை 10:30 மணி திருச்செபமாலை, 11:00 மணி புனித செபஸ்தியார் நவநாள் திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆராதனை மற்றும் அன்னதானம்.
திருவிழா: திருநீற்று புதனுக்கு முந்தைய சனி, ஞாயிறு.
பாஸ்கு திருவிழா: உயிர்ப்பு ஞாயிறு மற்றும் திங்கள்.
பங்கின் இறையழைத்தல்கள்:
1. அருள்பணி. மரியதாஸ் (late)
2. அருள்பணி. இலாசர், SJ
3. அருள்பணி. ஜெகநாதன் , HGN
4. அருள்பணி. டேவிட், SVD
5. அருள்பணி. யாகு, SJ
6. அருள்பணி. சலேத்துநாதன், SVD
7. அருள்பணி. ஜஸ்டின் திரவியம்
8. அருட்பணி. அந்தோனிசாமி, SVD
9. அருள்பணி. அந்தோனி பாஸ்கர், HFF
10. அருள்பணி. ஜார்ஜ், HFF
11. அருள்பணி. விஜய் அமிர்தராஜ், CSC.
12. அருள்பணி. வின்சென்ட், MMI
13. அருள்பணி. அமலன், SJ (late)
14. அருள்பணி. அந்தோனி பீட்டர், SVD
15. அருட்சகோதரி. ஒலிவியா, Sisters of Besantarion
16. அருட்சகோதரி. டோனி, St. Franciscan Sisters
17. அருட்சகோதரி. லீமா, Holy Cross
18. அருட்சகோதரி. பெஸ்கி, St. Anne's of Thampuram
19. அருட்சகோதரி. மார்த்தாள், ம.ஊ.ச (Late)
20. அருட்சகோதரி. மரியாள், ம.ஊ.ச (late)
வழித்தடம்: கிழக்கு கடற்கரைச் சாலையில், இராமேஸ்வரம் -திருச்சி வழித்தடத்தில் சனவேலி. இங்கிருந்து 6கி.மீ தொலைவில் கொக்கூரணி அமைந்துள்ளது.
மதுரை -கைகாட்டி. திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சனவேலி.
Location map: St. Sebastian's Church
https://maps.app.goo.gl/im4WeNpTNggYGU2E8
வரலாறு:
அமைவிடம்:
நன்செய், புன்செய், கரடு முரடான தரிசு நிலங்கள் சூழப்பெற்ற ஒரு கிராமம் தான் கொக்கூரணி. ஊரின் கிழக்கில் நன்செய்யும், புன்செய்யும் கலந்த நிலங்கள் நிறைந்துள்ளன. தெற்கே மழைக்காலங்களில் மட்டுமே வெள்ளமெடுக்கும் கோட்டைகரை ஆறும், இராசசிங்கமங்கலம் பெரிய கண்மாயும் அடுத்தடுத்து உள்ளன. ஊரின் மேற்கில் புஞ்சை நிலங்களும் புதர்களுமே அதிகம். ஊரின் வடக்கே கிராமத்தின் பாசனத்திற்கு பயன்படும் கொக்கூரணி கண்மாயும், நஞ்சை நிலங்களும் நிறைந்த பகுதியாகவும் உள்ளன. ஊரை ஒட்டி குடிப்பதற்கே மட்டுமே பயன்படுத்தப்படும் குளமும் மற்ற பயன்பாட்டிற்காக சிறிய ஏரி ஒன்றும் உள்ளன.
கொக்கூரணிக்கு மேற்கே ஆனந்தூர் 8கி.மீ தொலைவிலும், திருச்சி -இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சனவேலி, கொக்கூரணியிலிருந்து கிழக்காக 6கி.மீ தொலைவிலும் உள்ளன. சனவேலி, ஆனந்தூர் ஊர்களில் இருந்து கொக்கூரணி வந்து செல்ல தார்ச்சாலை வசதி உள்ளது.
பெயர்க் காரணம்:
கொக்குகள் நிறைந்த ஊரணி கொண்ட காரணத்தால் "கொக்கூரணி" எனப் பெயர் பெற்றது.
கொக்கூரணியில் கிறிஸ்தவம்:
மதுரை மறைபரப்புதள வரலாற்றின் (1606) தரவுகள் வழியாக உற்றுநோக்குகையில் இம்மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்கள் பில்லி, சூனியம், ஏவல், பேய், மாந்திரீகம் கட்டுக்களின் மாயையிலும்; சிறுதெய்வ வழிபாட்டிலும் ஊறித் திளைத்தவர்களாகவும் வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. இவர்களிடம் கொண்டிருந்த அச்ச உணர்வுகளைப் போக்க, கிறிஸ்தவ மறையை பரப்ப வந்த மேலைநாட்டு குருக்கள் மற்றும் உபதேசியார்கள்; புனித சூசையப்பர், புனித பதுவை அந்தோனியார், புனித செபஸ்தியார், புனித சந்தியாகப்பர் பேரால் புனித தீர்த்தம் வழங்கினார்கள். புனித நீர் தெளித்து வேளாண் பூச்சிகளையும் விரட்டினர் என்பதை அருட்தந்தை ஹென்றிக்ஸ் அடிகளார் எழுதிய 'அடியார் வணக்கம்' எனும் நூல் வழியாக அறிய முடிகிறது.
இராசசிங்கமங்கலம் பெரிய ஏரியின் வடகோடி உபரி நீரை வெளியேற்றும் கலுங்குமடையில், முனியய்யா என்ற சிறுதெய்வ வழிபாடு நடந்து வந்துள்ளது. இந்த சிறுதெய்வ பயம் இவ்வூர் மக்களையும் பாதித்தது. ஆகவே அங்கு புலம் பெயர்ந்த கிறிஸ்தவ மக்கள், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், ஒரு ஓலைக் குருசடி கோயிலைக் கட்டி, திருச்சிலுவையை நாட்டி வழிபட்டு வந்துள்ளனர். ஓலைக் கோயிலில் மண்ணில் பீடம் அமைத்து, மண் அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுவர். அந்த இடத்தில் இறைவனின் வல்லமை புனித செபஸ்தியார் பெயரில் வெளிப்படுத்தப்பட்டு வந்தது.
1888 ஆம் ஆண்டு இவ்வூரை பார்வையிட வந்த அருட்தந்தை பேபர் சே.ச அடிகளார், குருசடி கோவில்களை பார்த்ததாக எழுதியுள்ளார்.
கொக்கூரணியில் புனித செபஸ்தியார் சுரூபம்:
ஆனந்தா வருடம் ஆனி மாதம் 5ஆம் தேதி 1795 இல், ஆனந்தூரை அடுத்த விசவனூரில் 18 நாட்கள் போர் நடந்தது. மருது வீரர் படைகளுடன் அவரது ஆதரவாளர்களான சிவகங்கை சக்கந்தி வேங்கை பெரிய உடையத் தேவருக்கும், சிவகங்கை வேலுநாச்சி ராணியின் சுவிகார மன்னர் படமாத்தூர் கௌரி வல்லபருக்கும் இடையே போர் நடந்தது. கௌரி வல்லபருக்கு துணையாக முகவை சேதுபதி படைகளும், மருதுவீரர்கள் அப்போது ஆங்கிலேயர்களிடம் பகைமை கொள்ளாததால் கர்னல் இமானுவேல் மார்டீன்ஸ் அவனது ஆங்கிலேயப் படைகளுடன் மருது வீரர்களுக்கு துணைபுரிய பெரும்போர் நடந்தது. இறுதியில் மருது வீரர்களுக்கே வெற்றியும் கிடைத்தது. இந்த போர்க்காலத்தில் அங்கு முகாமிட்ட ஆங்கிலேயப் படை வீரர்கள் தாங்கள் வணங்கி வந்த புனித செபஸ்தியார் சிறு சுரூபத்தை, கொக்கூரணி குருசடியைக் காத்து வந்த மலையாத்தாளிடம் கொடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
மலையாத்தாள்:
மன்னர்கள் ஆட்சி காலங்களில் கிறிஸ்தவர்கள் ஓலையால் வேயப்பட்ட கோவில்களைக் கட்டினர். 16,17ஆம் நூற்றாண்டுகளில் சுரூபங்கள் இல்லை எனலாம். குருசடிகளில் மரத்தால் ஆன சிலுவை மரங்களை மட்டுமே ஒரு மண்மேடையில் நட்டு, புனிதர்கள் பெயரால் வழிபாடு செய்து வந்துள்ளனர். குருசடி என்பதை "சிலுவை அடி" என்று பொருள் கொள்ளலாம்.
கி.பி 1693 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதாவது புனித அருளானந்தர் மறைச்சாட்சியாக மரித்த பிறகு, கொக்கூரணியை சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் சாதியப் பாகுபாடின்றி எல்லா இனத்தவரையும் கிறிஸ்தவம் சென்று அடைந்தது. இந்த நாட்களில் கொக்கூரணியை சேர்ந்த மனுவேல் என்னும் பெயர் கொண்ட ஒரு படைவீரர் புனித செபஸ்தியார் பெயரில் ஒரு குருசடி கட்டி மக்கள் வழிபட ஏற்பாடுகள் செய்திருக்கலாம் எனவும், கி.பி 1713 ஆம் ஆண்டு புனித அருளானந்தரின் புனிதர் பட்டம் ஆய்வுக் குழுவிடம் கீழக்கரையில் சான்று பகர்ந்த, கொக்கூரணி படைவீரர் மனுவேலின் சாட்சியம் இந்த வரலாற்றைச் சொல்கிறது.
இதே காலகட்டத்தில் தான் மலையாத்தாள் என்ற பெண்மணி தனது கணவர் மற்றும் ஒரே மகனோடு கொக்கூரணிக்கு வடமேற்கே, ஓடக்கரை என்ற சிற்றூரில் (ஆனந்தூர் அருகில்) வசித்து வந்துள்ளார். தனது ஒரே மகன் இறந்து போகவே, மனமுடைந்த மலையாத்தாளும் அவரது பூசாரி கணவரும் கொக்கூரணிக்கு புலம்பெயர்ந்து புனித செபஸ்தியார் குருசடியே தஞ்சம் என்று வந்து, குருசடியை பராமரித்து வாழ்ந்து வந்தனர்.
புனித செபஸ்தியாரின் புதுமை ஆலயத்திற்கு தென்மேற்கில், வயது முதிர்வு காரணமாக இறந்து போன மலையாத்தாளின் சிதிலமடைந்த கல்லறை சான்றாக இன்றும் உள்ளது.
குருசடி ஆலயமாகிய வரலாறு:
1772ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியர் கர்னல் மார்ட்டீன்ஸ் என்பவரை இராமநாதபுரம் சீமைப் பொறுப்பாளராக அனுப்பி வைத்தனர். இவர் ஒரு கத்தோலிக்கர். இராமநாதபுரம் சேதுபதியிடம் வரிவசூல் செய்வதே இவரது பிரதான பணி. 1782 ஆம் ஆண்டின் மத்தியில் ஒருநாள் கொக்கூரணியை அடுத்து கிழக்கே உள்ள தெற்கனேந்தல் அருகில் கர்னல் கொண்டிருந்த சென்று கொண்டிருந்த போது, ஏற்கனவே அவருக்கு இருந்த வயிற்றுவலி தாங்க முடியாத அளவுக்கு வேதனை தந்து அதிகரித்தது. உடனே வைத்தியம் செய்ய நாட்டு வைத்தியர் எவராவது இப்பகுதியில் உள்ளனரா என்று தேடிய வேளையில், வைத்தியர் எவரும் இங்கில்லை, ஆனால் எங்களுக்கு நோய் வருகிற போது, கொக்கூரணி புனித செபஸ்தியார் குருசடி சென்று குருசடி மண்ணை மருந்தாக பூசிக்கொண்டு, குருசடி தீர்த்தம் குடிப்போம் என்று கூறியதைக் கேட்டு, கர்னலும் நம்பிக்கையுடன் கொக்கூரணி வந்தார். குருசடியில் இருந்த மலையாத்தாள், கர்னலை குருசடி மண்ணை பூச செய்து, தீர்த்தம் குடிக்கக் கொடுத்துள்ளார். பின்னர் குருசடியில் முழங்காலிட்டு ஜெபித்து விட்டு பயணத்தை வலியில்லாமல் தொடர்ந்தார். அதன் பின்னர் கர்னலுக்கு வயிற்று வலி வரவேயில்லை. புனித செபஸ்தியாரின் புதுமையை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.
புனித செபஸ்தியாருக்கு நன்றி கூறும் பொருட்டு ஒருநாள் வெள்ளை குதிரையில் மீண்டும் கொக்கூரணி குருசடி வந்தார். நன்றி செலுத்தினார். கிராம மக்களும் கூட்டமாக கூடினர். அவர்களிடம் புனிதருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, கிராம மக்களும், மலையாத்தாளும் சேர்ந்து , புனித செபஸ்தியார் குருசடியை பெரிய ஆலயமாக கட்டித்தர வேண்டுமென்று கர்னலிடம் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து 1782 ஆம் ஆண்டு, குருசடிக்கு அருகில் ஆலய நிர்மாணப் பணிகளைத் தொடங்கி, 1792 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். மேலும் அப்போதைய இராமநாதபுரம் சேதுபதியிடம் ஆலயத்தைச் சுற்றி சர்வ மானியமாக பதினெண் கலவிரை அடி நிலத்தையும் பெற்றுக் கொடுத்தார்.
புனித செபஸ்தியார் ஆலயம் எழுப்பிய கர்னல் மார்டீன்ஸ் 07.10.1810 அன்று இராமநாதபுரத்தில் இயற்கை எய்தினார். அவரது மற்றும் துணைவியார் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அருகருகே இராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்லறைத் தோட்டத்தில் இன்றும் இருக்கிறது.
கொக்கூரணியும் கோவா குருக்களும்:
கி.பி 1773-74 காலகட்டத்தில் திருத்தந்தை 14ஆம் கிளமெண்ட் சேசு சபையை உலகம் முழுக்க தடை செய்தார். ஆகவே 1788 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பத்திநாதர் அவர்கள் பிரெஞ்சு அந்நிய வேத போதக சபையை, சேசு சபையார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரக் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்கத் தயங்கிய பதுரவதோ குருக்கள் எனப்பட்ட கோவன் குருக்களும் சிரியன் திருச்சபையின் கத்தனார் குருக்களும், 1838 ஆம் ஆண்டுவரை மதுரை மிஷன் பகுதியை தங்களது மறைப்பணி பகுதியாகவே பாவித்துக் கொண்டனர். அதனால் கொக்கூரணி ஆலயமும் கோவன் குருக்களின் பராமரிப்பின் கீழ் வந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் இரட்டை ஆட்சிமுறை ஏற்பட்டு (பிரெஞ்சு அ.வே.போ. சபையினர் ஒருபுறம், கோவன் மற்றும் கத்தனார் குருக்கள் மறுபுறம்) ஞான அதிகார குழப்பமும், வழிபாட்டு முறைகளில் குழப்பமும் நிலவியது.
கொக்கூரணி கோவன் குருக்களின் பராமரிப்பில் இருந்த நாட்களில், கோவன் குருக்கள் நிரந்தரமாக இங்கு தங்குவதில்லை. ஓரியூரை தங்களது இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருவிழா நடத்தவும், காணிக்கை பொருட்களை எடுத்துச் செல்லவும் கொக்கூரணிக்கு வந்து சென்றனர்.
மறவ நாட்டு கிறிஸ்தவர்களுக்கு புனித செபஸ்தியாரின் திருத்தலம் புதுமை விளங்கும் திருத்தலமாக விளங்கியதால், நேர்த்திக் கடனாகவும், காணிக்கையாகவும் பெருமளவில் வருவாய் இருந்தது. ஆகவே போர்ச்சுக்கீசிய கோவன் குருக்களின் பெரிய வருமானம் உள்ள ஆலயமாக கொக்கூரணி விளங்கியது.
1800 ஆம் ஆண்டு முதல் கொக்கூரணி கத்தனார் குருக்களின் மேற்பார்வையில் கிராங்கனூர் -கொச்சி ஆயரின் கீழ் இருந்தது. ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா உண்டியல் காணிக்கை எடுக்கவே குரு ஒருவர் வருவார். ஏனைய நாட்களில் ஆலய பராமரிப்பு உபதேசியார் மற்றும் கிராமத் தலைவர் வசம் இருந்துள்ளது. இவ்வாறாக 1886 ஆம் ஆண்டு வரை கொச்சி மறைமாநிலத்தில் கொக்கூரணி பங்குத்தளம் ஓரியூர் பங்குடன் இணைந்து இருந்தது.
1838 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சேசு சபை பிரெஞ்சு குருக்கள் தைரியநாதர் (மாஹே) வரும் வரை, கல்லடிதிடல் ஆனது கொக்கூரணியுடன் இணைந்து கோவன் குருக்களின் வசமே இருந்தது. கல்லடிதிடலுக்கு பிரெஞ்சு தூலூஸ் குருக்கள் (4பேர்) வந்த பிறகு, கல்லடிதிடல் பிரெஞ்சு சேசு சபை குருக்கள் தலைமையிடமாக மாறியது. ஆகவே கொக்கூரணி திருத்தலத்திலிருந்து கல்லடிதிடல் பிரிக்கப்பட்டது.
கொக்கூரணி திருத்தலத்தை தங்களது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கோவன் குருக்களும், சேசு சபை குருக்களுக்குமிடையே கடும்போட்டி நிலவி வந்தது. திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் உத்தரவுப்படி 03.07.1927 அன்று கோவன் குருக்கள் வசமிருந்த பங்குகளும், திருத்தலங்களும் மதுரை மற்றும் திருச்சி மறைமாவட்டங்களோடு இணைக்கப் பட்டன. இவ்வாறாக இரட்டை ஆட்சிநிலை 1930 ஆம் ஆண்டுவாக்கில் ஓரளவிற்கு முடிவுக்கு வந்தது. இந்த jநிலையில் கொக்கூரணி அருகிலிருந்த பங்குத்தளமான கல்லடிதிடலில் சேர்க்கப்பட்டு, சேசு சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. கொக்கூரணி பணித்தளம் என்பது மறைந்து கல்லடிதிடலின் கிளைப்பங்கு கிராமமாக மாறியது.
பங்கின் வளர்ச்சியும் பங்குத்தந்தையர்கள் பணியும்:
1929-1938 வரை கொக்கூரணி திருத்தலம் திருச்சி மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்ட, கல்லடிதிடல் பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது.
1938 ஆம் ஆண்டு கல்லடிதிடல் பங்கு, மதுரை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு கொக்கூரணி தனிப்பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. குழந்தைசாமி சே.ச அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். ஆலயத்திற்கு தெற்கே ஒரு கிணற்றை உருவாக்கினார். இன்றளவும் ஆலயத்திற்கு தேவையான தண்ணீர் இந்தக் கிணற்றில் இருந்து தான் பெறப்படுகிறது. பங்கின் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு மேற்கே நிலங்கள் வாங்கினார்.
அருட்பணி. ஆசீர்வாதம் பணிக்காலத்தில், கொக்கூரணி மக்களை ஒருங்கிணைத்து, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மறியல் போராட்டம் நடத்தி, கொக்கூரணிக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இணைப்புச் சாலை வர வழிவகுத்தார். மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பை (தினக்கூலி) ஏற்படுத்திக் கொடுத்தார். இவரது பணிக்காலத்தில் 30.08.1987 அன்று சிவகங்கை மறைமாவட்டம் உதயமானது.
அருட்பணி. வின்சென்ட் தனராஜ் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் சீரமைக்கப்பட்டது.
அருட்பணி. சூசை ராசு பணிக்காலத்தில் ஆலயத்திற்கு சொந்தமான இடங்களை சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்தார்.
அருட்பணி. ஜெகநாதன் பணிக்காலத்தில் புதுமைக்கோவில் பழுதான நிலையில் இருந்த காரணத்தால், வழிபாடுகள் நடத்துவதற்கென ஒரு சிறிய ஆலயத்தைக் கட்ட தீர்மானித்து, பெல்ஜியம் நாட்டின் வெல்செல் பங்கு மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன், புதுமைக்கோவிலின் தென்புறம் ஆலயத்தையும் கட்டினார். பணிகள் நிறைவு பெற்று 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. A. செபஸ்தியான் பணிக்காலத்தில் கொக்கூரணி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் 300 வது ஆண்டு விழா 2007-2008 காலகட்டத்தில் கொண்டாடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருத்தல 300வது ஆண்டு விழா நிறைவு மேதகு ஆயர் முனைவர் செ. சூசை மாணிக்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
அருட்பணி. S. லூர்து ராஜ் பணிக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் வேப்பங்கன்றுகள் நடப்பட்டன.
2017 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட அருள்பணி. இரா. ஆரோக்கிய ஆனந்த் அவர்களின் முயற்சியால் பங்குப் பேரவையை செயல்பட வைத்தார். புனித செபஸ்தியார் கெபியை நன்கொடையாளர் உதவி மற்றும் புனித செபஸ்தியார் பக்தர்களின் நிதிப்பங்களிப்புடன் அழகுற விரிவாக்கம் செய்தார். ஸ்பெயின் நாட்டு கருமண்டா அமைப்பின் நிதி பங்களிப்புடன் கான்கிரீட் பள்ளிக்கூடத்தை கட்டி முடித்தார். பிரான்ஸ் நாட்டின் பெல்போர்ட் மறைமாவட்ட பேராயர் மேதகு டொமினிக் பளாங்கெட் அவர்களின் ஆசி மற்றும் நிதி பங்களிப்புடன் ஆலயத்திற்கு எதிர்ப்புறம், குருக்கள் இல்லத்தை புதிதாக கட்டினார்.
பழுதடைந்த புனித செபஸ்தியார் புதுமைக்கோவிலை பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஆரோக்கிய ஆனந்த் அவர்களின் அயராத முயற்சியினால், புனித செபஸ்தியாரின் பக்தர்கள், இறைமக்கள் கொடுத்த நிதிபங்களிப்புடன் அழகுற புதுப்பித்து, 18.02.2023 அன்று சிவகங்கை மறைமாவட்ட திருத்தூதரக நிர்வாகி மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
புதிய கொடிமரம்:
மண்ணின் மைந்தர் அருட்பணி. ச. லாசர், சே.ச அவர்களின் நிதிபங்களிப்புடன் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் 09.02.2023 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
பங்கில் அருட்சகோதரிகள் பணிகள்:
1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட R. C. தொடக்கப் பள்ளியில் 1977 ஆம் ஆண்டு முதல் புதுவை கொன்சாகா சபை அருட்சகோதரிகளில் ஒருவர் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். பங்கின் ஆன்மீகக் காரியங்கள், திருத்தலப்பணி, வீடு சந்திப்பு, மறைக்கல்வி என பல்வேறு பணிகளில் அருட்சகோதரிகள் தன்னலமற்று பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது பணிபுரிந்து வருகிற அருட்சகோதரிகள்:
அருள்சகோ. அமலா, FSAG
அருள்சகோ. ஜெயராணி, FSAG
அருள்சகோ. ஆரோக்கிய மேரி, FSAG
திருவிழாக்கள்:
சின்னத்திருவிழா:
புனித செபஸ்தியார் திருவிழாவைத் தான் சின்னத் திருவிழா என அழைக்கின்றனர். கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் திருநீற்று புதனுக்கு 11 நாட்களுக்கு முன் வருகிற வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, 11வது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
பெரிய திருவிழா:
இரட்சகர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா அன்று தான் பெரிய திருவிழா அல்லது பாஸ்க்கு திருவிழா என கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு திருவிழா நாட்களிலும் பங்கு மக்களும், கிளைப்பங்கு மக்களும் இணைந்து கொண்டாடுவர். மதுரை, தஞ்சாவூர் மறைமாவட்டங்களில் இருந்தும் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் வந்து தங்கி, உற்சாகமுடன் பங்கேற்பது வழக்கம்.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இயேசுவின் கண்மணிகள்
4. புனித செபஸ்தியார் இளைஞர் நற்பணி மன்றம்
5. புனித செபஸ்தியார் பாடகற்குழு
6. பங்கு அருள்பணிப் பேரவை
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
திருச்சி மறைமாவட்டம், கல்லடிதிடல் பங்கின் கீழ்
1. அருட்பணி. ரூவானே, SJ (1929-30)
2. அருட்பணி. ஜெர்மன் பிக்காடு, SJ (1930-31)
3. அருட்பணி. லூர்துராஜா (1931-35)
4. அருட்பணி. லூர்துசாமி (1936-38)
5. அருட்பணி. அல்டித்தா, SJ (1938-41)
1938 முதல் கல்லடிதிடல் பங்கு மதுரை உயர் மறைமாவட்டத்தின் கீழ் வந்தது. ஆகவே கொக்கூரணி கிளைப்பங்கு மதுரை மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.
1. அருட்பணி. சில்வேரியூஸ், SJ (1941-46)
2. அருட்பணி. அருளப்பர் (1946-47)
3. அருட்பணி. வேதமுத்து (1947-49)
4. அருட்பணி. அந்தோனி (1949-52)
5. அருட்பணி. அருளானந்தம் (1952)
6. அருட்பணி. மு. விசுவாசம் (1952)
7. அருட்பணி. A. D. குருசு (1962)
8. அருட்பணி. V. D. அருளானந்தம் (1962-65)
9. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பொன்னாடு, SJ
1970 ஆம் ஆண்டு கொக்கூரணி தனிப்பங்கான பின்னர் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. A. குழந்தைசாமி, SJ (1968-70)
2. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பொன்னாடு, SJ (1970-81)
3. அருட்பணி. ஜெகநாதன் (1981-83)
4. அருட்பணி. A. ஆசீர்வாதம் (1983-87)
5. அருட்பணி. வின்சென்ட் தனராஜ் (1987-90)
6. அருட்பணி. பங்கிராசு (1991-92)
7. அருட்பணி. A. அந்தோனிசாமி (1992)
8. அருட்பணி. சூசைராசு (1992-97)
9. அருட்பணி. G. ஜெகநாதன் (1997-2003)
10. அருட்பணி. A. செபஸ்தியான் (2003-2008)
11. அருட்பணி. S. லூர்துராஜ் (2008-2013)
12. அருட்பணி. ஜோசப் லூர்து ராஜா (2013-2016)
13. அருட்பணி. ஜான் பிரிட்டோ (2017)
14. அருட்பணி. இரா. ஆரோக்கிய ஆனந்த் (2017 .......)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. இரா. ஆரோக்கிய ஆனந்த் அவர்கள்.
ஆலய வரலாறு: "மண்ணே மருந்தாகிய திருக்கோவில்" புத்தகம்.