880 தூய லூர்து அன்னை ஆலயம், சேவூர்

     


தூய லூர்து அன்னை ஆலயம்

இடம்: சேவூர், காட்பாடி அஞ்சல், 632007

மாவட்டம்: வேலூர்

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: வேலூர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய நற்கருணைநாதர் திருத்தலம், காட்பாடி

பங்குத்தந்தை அருட்பணி. M. மார்ட்டின்

குடும்பங்கள்: 30

அன்பியங்கள்: 2

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி

திருவிழா: மே மாதத்தில்

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. ராஜ் மைக்கேல், SDB 

வழித்தடம்:

வேலூர் -காட்பாடி -VIT காலேஜிற்கு அடுத்த நிறுத்தம் சேவூர்.

Location map: https://g.co/kgs/N5NupP

வரலாறு:

இரத்தினபுரி சேவூர் கிராமம், வேலூர் மறைமாவட்டத்தின் காட்பாடி தூய நற்கருணைநாதர் திருத்தலத்தின் கிளைப்பங்காகும்.

இந்த ஊரின் நாட்டாண்மை திரு. பெருமாள் -திருமதி. தனக்கோடி அம்மாளுக்கும் பரசுராமன் பிறந்தார். இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பெயருக்கேற்ற பராக்கிரமசாலி. 1911-ஆம் ஆண்டு, 15-வது வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் பெங்களூர் சென்று இராணுவத்தில் (Boys.coy) பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து விட, பதறிப்போன பெற்றோர், பெங்களூர் சென்று மகனை வீட்டுக்கு வந்து விடும்படி கூறினர். பரசுராமன் வரவே மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விட, ஆங்கிலேய ரெஜிமென்ட் அதிகாரி, பெருமாளை சமாதானம் செய்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

பரசுராமனுக்கு பெங்களூரும் புதியது, தன்னோடு இராணுவத்தில் சேர்ந்த அனைவரும் புதியவர்கள். இராணுவத்தில்

மைசூர் மகாராஜாவின் மந்திரி மகன் சகாயநாதன் பணிபுரிந்தார்.

அவருடைய அணுகுமுறையைக் கண்ட பரசுராமன், அவரை நண்பராக்கிக் கொள்ள, மன தைரியமும், மகிழ்ச்சியும் வருவதை உணர்ந்தார். சகாயநாதன் ஒரு கத்தோலிக்கர். தமது ஆன்மிகக் கடமைகளை பொறுப்போடு கடைபிடிப்பதைக் கண்டு அவர்மீது மேலும் ஈடுபாடும் ஆர்வமும் ஏற்பட்டது. 

சகாயநாதன் வழியாக கிறிஸ்துவ வரலாற்றையும், மைசூரில் உள்ள புனித பிலோமினாள் வரலாற்றையும் அறிகிறார்.

அதிலிருந்து விவிலியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுப் படிக்கத் தொடங்குகிறார். தானும் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனாக மாறவேண்டும் என உறுதி எடுத்துக் கொள்கிறார்.

அமிர்தநாதன்: 

இந்த நேரத்தில்1914-ஆம் ஆண்டு முதல் 1919-ஆம் ஆண்டுவரை முதலாம் உலகப் போர் ஆரம்பமாகிறது. பாய்ஸ் கம்பனி முழுவதும் போரில் கலந்து கொள்ள நேச நாடுகளுக்குச் செல்கிறது. சகாயநாதனும், பரசுராமனும் இணைப்பிரியா நண்பர்களாக இருந்ததால், உரோமாபுரி வத்திக்கான் நகருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது. சகாயநாதனுக்கு எப்படியாவது திருத்தந்தை 10-ம் பத்திநாதரைப் பார்க்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. 

அப்போது திருத்தந்தை இராணுவத்திற்கு ஆசீர் வழங்கிக் கொண்டிருந்தார். சகாயநாதன் முழந்தாளிட்டு, பாப்பரசரின் புனித முத்திரை மோதிரத்தை முத்தமிட்டு எழுந்தார். அடுத்து, பரசுராமன் முழந்தாளிட்டு புனித மோதிரத்தை முத்தமிட்டபின் நெடுஞ்சாண் கிடையாக திருத்தந்தையின் காலில் விழுந்து விடுகிறார். கூடியிருந்த அனைவரும் திகைக்கின்றனர். திருத்தந்தை 10-ம் பத்திநாதர் அன்புடன் பரசுராமனை பார்த்து "what do you want my son? (என்ன வேண்டும் மகனே?) எனப் பாசப்பரிவுடன் கேட்டார். “உங்களின் திருக்கரத்தால் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்!" என பக்தியோடு கேட்கிறார். திருத்தந்தை சகாயநாதனைப் பார்க்க, பரசுராமனுடைய விசுவாச உறுதியைக்கூற, திருத்தந்தை அவரின் மனத்தை ஞான ஊடுருவல் மூலம் கண்டு மகிழ்ச்சியடைகிறார். "என்ன பெயர்?' எனத் திருத்தந்தை கேட்க, "அமிர்தநாதன்" என சகாயநாதன் கூற, திருத்தந்தை திருமுழுக்கைக் கொடுக்கிறார். பரசுராமன் ஆன்மாவில் தூய ஆவியார் இறங்கி வருவதை உணர்கிறார். 

புனித பூமியில் அமிர்தநாதன்:

நடந்து கொண்டிருக்கிற உலகப்போரின் காரணமாக, இயேசு கிறிஸ்து பிறந்து வாழ்ந்து, பாடுபட்டு, சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த 'புண்ணிய பூமி" (Holy Land) யைக் காணும் வாய்ப்பை பெற்றார். தன் வாழ்க்கையில் மகா அதிசயங்கள் நடப்பதைக் கண்டு பேருவகையடைந்தார். புனித பூமியில் ஒன்றித்து வாழ்ந்தே விட்டார் அமிர்தநாதன். ஜெருசலேம். பாலஸ்தீனம், பெதலகேம் முதலிய இடங்களில் கால் பதியும் போதெல்லாம், இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதாக முத்தமிட்டுக் கொண்டே நடந்தார்.

மரியின் மைந்தனாக அமிர்தநாதன்:

இராணுவ வீரர்களுக்கு பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சகாயநாதன், அமிர்தநாதனிடம் தூய லூர்து மாதாவின் வரலாற்றைக் கூற,  ஆர்வமுடன் செல்கின்றனர். அமிர்தநாதனும், சகாய நாதனும் இடது கையில் துப்பாக்கி, வலது கையில் எரியும் மெழுகுத்திரியுடன் வரிசையில் சென்று, தூய லூர்து மாதாவின் பாதம் பணிந்து முத்தமிட்டு வணங்கி ஆசிபெற்றனர். அமிர்தநாதன் தெய்வத்தாயின் புனிதப் பாசத்தைக் கண்டு மெய் மறந்துபோனார். 'அம்மா' உம் திருவுருவம் எடுத்துச் சென்று நான் பிறந்த மண்ணில் ஆலயம் கட்டி உம் மாட்சிமைக்குச் சாட்சி பகர்வேன்' என உறுதி எடுக்கிறார். உம் பாதத்தின் திருவடி ஆலயத்தில்தான் என் உயிர் உம்மிடம் வரவேண்டும் என வரங்கேட்டு, அன்னையின் அழகிய சுரூபம் ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.

1917-ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டிலுள்ள தூய பாத்திமா அன்னை காட்சி அளித்த போது, போர் முடிவுக்குவரும். உலகம் சமாதானம் பெறும் என்று வாக்களித்தபடியே, போரும் முடிந்து, சமாதானமும் உலகத்தில் நிலவியது.

போரிலிருந்து இராணுவ வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பரசுராமன் தூய லூர்து மாதா சுரூபத்துடன் அமிர்தநாதனாக தான் பிறந்த வீட்டில் நுழைய, பெற்றோர், மூன்று தங்கைகள் உறவினர்கள் ஒன்றுமே புரியாமல் வாயடைத்து நின்றனர். அனைவரும் போருக்குச் சென்ற மகன் பரசுராமன் கழுத்தில் சிலுவையும், கையில் மேரிமாதாவின் சுரூபத்தையும் கண்டு திகிலடைந்தனர். அமிர்தநாதன் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூறி, அற்புதமாக இயேசு ஆண்டவர் அழைத்ததை விளக்குகிறார். பெற்றோர், தங்கைகள், உறவினர் உட்பட மாதாவின் சுரூபத்தை அலங்கரித்து, முழந்தாளிலிருந்து செபிக்க, அவர்களும் அமிர்தநாதனோடு சேர்ந்து கொண்டார்கள். 

வேதபோதகன் அமிர்தநாதன்:

விவிலியத்திலிருந்து தினமும் படித்து,

விளக்கமளித்து, ஓர் உண்மையான கத்தோலிக்கப் போதகனாகவே மாறிவிட்டார் போதகர் அமிர்தநாதன். இவர் உண்மையான "உரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்" என்பதற்கு ஏற்ப சாட்சிய வாழ்வு வாழ்ந்து குடும்பத்தையே மனம் மாற்றிவிட்டார். குடும்ப செபத்தால் கூடி வாழ்ந்தனர்.

புனித மோட்ச இராக்கினி மாதா:

அமிர்தநாதன் குடும்பத்தோடு கிறிஸ்தியான் பேட்டை பங்கு ஆலயம் சென்று நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் பங்குத்தந்தையிடம் கூறினார்.

பங்குத்தந்தையோ, பரசுராமன் உங்களைப்

புதுமையாக ஆண்டவர் இயேசு அழைத்திருக்கிறார். இறைவனுக்கு நன்றி கூறுவோம் எனக் கூறி, அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார். அது முதல், ஞாயிறுதோறும்  திருப்பலியில் பங்கெடுக்க, மாட்டு வண்டியில் 7மைல் தூரத்திலுள்ள கிறிஸ்தியான் பேட்டை செல்லத் தொடங்கினர்.

மணமகன் அமிர்தநாதன்:

1928-ஆம் ஆண்டு அமிர்தநாதன் -லூர்துமேரி திருமணம் நடைபெற்றது. நல்லதொரு கத்தோலிக்க குடும்பமாக சாட்சிய வாழ்வு வாழ ஆரம்பித்தனர்.

1946-ஆம் ஆண்டு வேலூர் மறை மாவட்டத்திற்கு மேதகு மரிய செல்வநாதர் முதல் ஆயராக நியமனம் பெற்றிருந்தார். கிறிஸ்டியான பேட்டையில் பங்குத்தந்தையாக அருள்பணி. இன்னியாசி நாதர் இருந்த போது, சேவூரில் மூன்று குடும்பங்களுக்காக ஓர் அழகிய சிற்றாலயம் கட்டப்பட்டது. அதற்கு வேண்டிய 10 சென்ட் நிலத்தை அமிர்தநாதனே அளித்தார். அது முதல் பங்குத்தந்தை சனிக்கிழமை இரவு வந்து ஆலயத்தில் தங்கி, காலையில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, குதிரை வண்டியில் சென்று விடுவார். 

உடல்நலம் பாதித்த அமிர்தநாதன் 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாளில் சேவூர் தூய லூர்து அன்னையின் ஆலயத்திலேயே உயிர் துறந்தார்.

கிறிஸ்டியான் பேட்டையிலிருந்து 15.07.1964 அன்று காட்பாடி தனிப்பங்கான போது, சேவூர் ஆலயமானது காட்பாடியின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

1970 ஆம் ஆண்டு அருட்பணி. C. P. ஜோசப் பணிக்காலத்தில் பழைய ஆலயம் மாற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டது‌.

பங்குத்தந்தை அருட்பணி. V. C. ஜோசப் பணிக்காலத்தில் பெரிய ஆலயம் கட்டப்பட்டு, சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு A. M. சின்னப்பா, SDB அவர்களால் 27.02.2000 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

சேவூர் கிளைப்பங்கின் நூற்றாண்டு விழா நினைவாக, பங்குத்தந்தை அருட்பணி. M. மார்ட்டின் அவர்களின் வழிகாட்டலில் புனித லூர்து மாதா கெபி கட்டப்பட்டு, 28.04.2017 அன்று சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் மேதகு A. M. சின்னப்பா, SDB அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

29.04.2017 அன்று இக்கிளைப்பங்கில் கிறிஸ்தவம் தோன்றிய நூற்றாண்டு விழா (1917-2017) மேதகு ஆயர் முனைவர் சௌந்தரராஜூ அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

ஆலய முகப்பு மணி கோபுரம் கட்டப்பட்டு கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் 16.01.2019 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தூய லூர்து அன்னையின் பாதுகாப்பிலும், இறைவனின் ஆசியுடனும் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது சேவூர் இறைசமூகம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களின் வழிகாட்டலில் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள்.

ஆலய வரலாறு: காட்பாடி தூய நற்கருணைநாதர் திருத்தல பொன்விழா மலர் 2019.