அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
இடம்: நாட்டரசன்கோட்டை, காளையார்கோவில் தாலுகா, நாட்டரசன்கோட்டை அஞ்சல், 630556
மாவட்டம்: சிவகங்கை
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: சிவகங்கை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி
பங்குதந்தை அருள்பணி. S. லூர்து ராஜ்
குடும்பங்கள்: 15
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி
திருவிழா: அக்டோபர் மாதம் 13ம் தேதி
வழித்தடம்: மதுரை -சிவகங்கை. சிவகங்கை -தொண்டி வழித்தடத்தில், சிவகங்கையிலிருந்து 7கி.மீ தொலைவில் நாட்டரசன்கோட்டை அமைந்துள்ளது.
Location map:
https://maps.app.goo.gl/xsx2SMTArhxSLMho7
வரலாறு:
அற்புதங்களை அள்ளி வழங்கும் நாட்டரசன்கோட்டை என்னை வாழவைக்கும் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உருவான வரலாற்றைக் காண்போமா!!!
கி.பி 1940 -50 வருடங்களில் இப்போது இருக்கிற இறைசமூகத்தின் முதல் தலைமுறை பெரியவர்கள் வேலையின் நிமித்தம் ஆசிரியர் பணி வேலைவாய்ப்புக்காகவும் நாட்டரசன்கோட்டைக்கு குடியேறினார். அப்போது சுமார் 10 குடும்பங்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் ஆசிரியர் பணி செய்பவர்கள். இவர்கள் எல்லோரும் திருப்பலிக்கு சிவகங்கைக்கு சென்று தான் வர வேண்டும். மிதிவண்டி மூலமாகவோ அல்லது கால்நடயைகாவோ சிவகங்கை சென்று திருப்பலியில் பங்கேற்று வரவேண்டும்.
பேருந்து வசதிகள் அதிகம் இல்லாத 1980 காலங்களில், இங்குள்ள எல்லோருக்கும் தலைவரான திரு. எம் எஸ். ஏ அருள்சாமி ஆசிரியர் அவர்கள், எல்லோரையும் ஒருங்கிணைத்து, ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிற வேளையில், ஒருநாள் இரவு அவரது கனவில் மாதா தோன்றி, எனக்கு ஒரு ஆலயம் அமைப்பாயா..? என்றதும்!!! திடுக்கிட்டு எழுந்தவர்!! தேவாலயம் கட்டும் வேலையை துரிதப்படுத்தினார். தனது ஒரு ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியதோடு இந்த காரியத்தில் அப்போது உள்ள இறைசமூகத்தினர் தர்மநாதன்ஆசிரியர், செபஸ்தியார் ஆசிரியர், சபரிநாயகம் ஆசிரியர், அருள் ஆசிரியர் ஸ்டீபன் டைலர் ஜெயபிரகாசம், ஜெயராஜ் ஆசிரியர், தாஸ் டெய்லர், திரு. ஜேம்ஸ் என எல்லோரையும் இணைத்து, திரு. எம். எஸ். ஏ. அருள்சாமி அவர்கள் தலைமையில் அன்றைய பங்குதந்தை அருட்திரு. மரிய திரவியம் அடிகளார் அவர்களை சந்தித்து, கோவில் கட்டுவதற்கான இடத்தை காண்பித்து, அதற்கான முயற்சியை செய்தனர்.
எம். எஸ். ஏ. அருள்சாமி அவர்கள் தன் சொந்த செலவில் வழங்கிய இடத்தில் கோயில் கட்டுமானப்பணி 1982 களில் ஆரம்பிக்கப்பட்டது. 13.10.1983 அன்று மதுரை பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்கள் தலைமையில், அருட்திரு எஸ். ஜேசுதாசன் அவர்கள் ஆலயத்தை திருநிலைப் படுத்தினார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 13 க்கு அடுத்து வருகிற சனிக்கிழமை மாதாவுக்கு திருவிழா எடுத்து சிறப்பு செய்து கொண்டிருக்கின்றனர் நாட்டரசன்கோட்டை இறைசமூகத்தினர்.
அருட்திரு. அ. ரெமிஜியுஸ், அருட்திரு. தேவசகாயம் பணிக்காலத்தில் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்களால் 15.10.2005 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
சிவகங்கை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டில் வல்லனி பங்கு உருவாக்கப்பட்ட போது, நாட்டரசன்கோட்டை ஆலயமானது வல்லனியின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
அற்புதங்கள்:
இக்கோவிலில் கண்ணீரோடு வேண்டுவோருக்கு எல்லாம் கருணையை வாரிவழங்கிறார் அன்னை வேளாங்கண்ணி.
ஒருமுறை சுத்தமாக கண்பார்வை குறைந்த வயதான ஆச்சி மருத்துவர்களால் சரிசெய்ய இயலாது என்றபோது, ஆச்சி அன்னையிடம் வந்து நம்பிக்கையோடு மனம்முருகி வேண்டினார். அற்புதம்!!! கண்பார்வை கிடைத்தது. நன்றியின் வெளிப்பாடாக அந்த ஆச்சி தங்கத்தில் கண்மலர் காணிக்கையாக்கினார். அதுதான் ஆலயத்தின் முதல் தங்கநகை காணிக்கை. அதன்பிறகு எத்தனையேபேர் விதவிதமாக காணிக்கையளிக்கின்றனர் . பெரும்பாலானவர்கள் வேண்டி நலம்பெறுவது மாற்றுமதத்தினரே.
தினசரி மாலை வழிபாடு 06:00 மணிக்கு நடைபெறும். மே, மாதம் 31நாட்களும் நவநாள் வழிபாட்டு ஜெபங்களும், பூஜையும் நடைபெறும். இதிலும் மாற்றுமதத்தினர் பங்கெடுத்து சிறப்பிப்பர். ஒவ்வொருவரும் அன்னையை இப்படி சொல்லிப்பாருங்கள். என்னை வாழவைக்கும் அன்னை வேளாங்கண்ணி என்று ..! அள்ளியள்ளி தருவாள் ஆரோக்கியத்தையும், அன்பையும், அமைதியையும் ...!
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. லூர்து ராஜ் அவர்களின் வழிகாட்டலில், திரு. சிமியோன் பெரியநாயகம் அவர்கள்.