புனித ஆரோக்கிய மாதா ஆலயம்
இடம்: காட்டுச்சூரை, பனங்காடி அஞ்சல், 630556
மாவட்டம்: சிவகங்கை
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: சிவகங்கை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி
பங்குப்பணியாளர் அருள்பணி. S. லூர்துராஜ்
குடும்பங்கள்: 74
அன்பியங்கள்: 2
ஞாயிறு திருப்பலி மாலையில் நடைபெறும்
திருவிழா: செப்டம்பர் மாதம் 7&8 தேதிகளில்
மண்ணின் இறையழைத்தல்கள்
1. அருட்பணி. திவ்யானந்தம், OCD
2. அருட்பணி. அந்தோனி கிறிஸ்டோபர், MSFS
3. அருட்பணி. அருள், OFM
1. அருட்சகோதரர். டேவிட் ராஜா, Montfort
2. அருட்சகோதரர். கஷ்மீர் சேசுராஜா, Montfort
1. அருட்சகோதரி. அக்சிலியா, John the Baptist
2. அருட்சகோதரி. ஆரோக்கிய நிஷா, SMI
3. அருட்சகோதரி. மரிய லீமாரோஸ்
4. அருட்சகோதரி. ஆரோக்கிய ஜெனிட்டா, Presentation
5. அருட்சகோதரி. ஒலின்டா, Presentation
Location map: https://maps.google.com/?cid=11701178810502199132&entry=gps
வழித்தடம்: சிவகங்கை -பனங்காடி -காட்டுச்சூரை
வரலாறு:
தூய ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டுள்ள காட்டுச்சூரை கிராமம், சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது ஆகும். பல்வேறு இடங்களில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறினார்கள். தொடக்க காலத்தில் கிராமத்தின் பெயர் 'முடுக்குப்புளி' என்று அழைக்கப்பட்டது. பின்னர் காட்டுச்சூரை என்றானது.
தொடக்கத்தில் ஓடு வேய்ந்த சிறிய அளவிலான ஆலயம் ஒன்று கட்டப்பட்டு, மக்கள் இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். சிவகங்கை பங்குத்தந்தையர் இவர்களை வழிநடத்தி வந்தார்கள்.
காட்டுச்சூரை கிராமத்தைச் சுற்றிலும் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றனர். இங்கு விவசாயம் முதன்மை தொழிலாக விளங்குகிறது. இப்போது இந்த கிராமத்தில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அருள் வழங்கும் புனித ஆரோக்கிய தாய் பல புதுமைகளை இந்த கிராமத்திற்கு செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஊர் மக்களை மிகப்பெரிய பேராபத்திலிருந்து புதுமை செய்து காப்பாற்றினார்கள் என்பது பலரும் அறிந்த உண்மையாகும். அனுபவரீதியாக உள்ளூர உணர்ந்தவர்கள் இன்றளவில் இருக்கிறார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை குழந்தைப் பாக்கியம் இல்லாத எத்தனையோ குடும்பங்களுக்கு குழந்தை வரம் அளித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிவார்கள். அந்தக்காலத்தில் ஓலைச் சுவடியில் விண்ணப்பங்கள் எழுத்தப்பட்டு அவை நிறைவேறியுள்ளன. அதற்கு சான்றாக பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து மக்கள் நன்றி செலுத்தி வருகின்றனர்.
ஆலயத்தின் எதிரில் இருக்கின்ற அரசு தொடக்கப் பள்ளியானது, அப்போதைய சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தைகளின் முயற்சியால் அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திருமதி. குத்சியாகாந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பழைய ஆலயம் தற்போதுள்ள கோவிலுக்கு முன்புறம் இருந்தது. பின்னர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பழைய ஓடு வேய்ந்த ஆலயம் பழுதடைந்ததாலும், புதிய ஆலயம் கட்ட அப்போதைய சிவகங்கை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. சேசு அவர்கள் முயற்சி செய்து, காட்டுச்சூரை கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு, 07.09.2003 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
ஆலயம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிய நிலையில், சென்ற 2022-ம் ஆண்டு மாதா திருவிழாவிற்கு கொடியேற்றிய அன்று பலத்த மழை பெய்ததால் ஆலயம் தண்ணீரால் நிரம்பியது. எனவே ஆஸ்பெட்டாஸ் கூரையை நீக்கி விட்டு, கான்கிரீட் கூரை அமைக்க தீர்மானித்து, கிராமத்தில் கொஞ்சம், கொஞ்சமாக சேகரித்த நிதியைக் கொண்டு ஆலய கட்டுமானப் பணியை செய்ய ஆரம்பித்தனர். பணியை முடித்துவிடலாம் என்று நினைக்கையில், எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு செலவாகிவிட்டது. நிதி இல்லாமல் தத்தளித்து, துவண்டு போயினர் காட்டுச்சூரை மக்கள். பங்கு ஆலயமான வல்லனி அன்னை தெரசா ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால், நன்கொடையாளர்களை சந்திக்கத் தயங்கினார்கள். இருந்தாலும் புனித ஆரோக்கிய தாய் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், ஒரு சில நன்கொடையாளர்களின் பேராதரவோடும், காட்டுச்சூரை கிராம மக்களின் முழு ஒத்துழைப்போடும், பங்குத்தந்தை அருள்பணி. S. லூர்துராஜ் அவர்களின் அரவணைப்போடும் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் 09.09.2023 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
வாருங்கள் காட்டுச்சூரை ஆரோக்கிய அன்னையிடம்.... காத்திடுவார் காலமெல்லாம்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. S. லூர்து ராஜ் அவர்களின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திரு. S. மைக்கேல் அவர்கள்.