தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்
இடம்: நேதாஜி நகர், மத்திகிரி, 635110
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: ஓசூர்
நிலை : பங்குதளம்
கிளைப்பங்கு : தூய ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயம், குதிரைபாளையம்
பங்குத்தந்தை : அருள்பணி. கிறிஸ்டோபர்
குடும்பங்கள்: 130
அன்பியங்கள்: 7
1) தூய ஆரோக்கிய அன்னை
2) குழந்தை இயேசு
3) புனித சூசையப்பர்
4) தூய பூண்டி மாதா
5) புனித அந்தோணியார்
6) புனித சவேரியார்
7) புனித அன்னை தெரசா
பங்குத் திருவிழா:
செப்டம்பர் மாதம் 8-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Sr. பவுலின் மேரி, FSM
2. Sr. பிரிட்ஜித் மேரி
3. Sr. P. நித்தியா
4. Sr. அல்வீனா
5. Sr. A. நித்தியா
6. Sr. ஆலிஸ் ரூபி, SAB
வழித்தடம் : ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 6கி.மீ தொலைவில், தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் மத்திகிரி உள்ளது. மத்திகிரியில் நேதாஜி நகரில் உள்ள சேவியர் பள்ளிக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map: https://maps.app.goo.gl/wK4CUsPsRHJwgvFw9
வரலாறு:
பழைமையும் வளமையும் வாய்ந்த இந்தியாவில், கலைகளின் தாயகமாம் தமிழ்நாட்டின், அதன் புகழ்பாடும் தகடூர் மண்ணில், எல்லையில் காவேரியின் பிறப்பிடமாம் கர்நாடகா மாநில விளிம்பில், தொன்மையான வரலாற்றுக்கு சொந்தம் கொண்டாடும் ஏரிகளின் ஊர் எனப்படும், மத்திகிரி பங்கின் வரலாறு சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் மூன்றாம் மைசூர் யுத்தம் முடிந்தபின், ஆங்கிலேயர் வசம் சென்றது அன்றைய பாராமஹால் எனப்படும் இன்றைய பெங்களூர் கிழக்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகள். 1828 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் நேரடி வசம் சென்றது ஓசூர் பகுதி. பின்னர் சில கிறிஸ்தவர்கள் ஓசூரில் குடியேறினர். அதே காலகட்டத்தில் பேகூர், ஆனைக்கல், மத்திகிரி போன்ற பகுதிகளில் பாரீஸ் வேதபோதக (MEP) சபை அருட்தந்தையர்கள் தங்கி மறைப்பணி செய்தனர்.
1837 ஆம் ஆண்டு மத்தியிலேயே அருட்பணி. E. Charbonneaux, MEP அவர்களால் மத்திகிரியில் முதல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இவரால் 1845 இல் பங்குத்தந்தை இல்லமும் அமைக்கப்பட்டது. பின்னர் அருட்பணி. E. Charbonneaux, MEP அவர்கள் மைசூர் ஆயராக பொறுப்பேற்றார்.
1862 ஆம் ஆண்டு மத்திகிரி தனி பங்காக அறிவிக்கப்பட்டு அருள்தந்தை. Renaudin, MEP அவர்கள் முதல் பங்குத்தந்தையானார்.
ஆரம்பத்தில் பல இடர்பாடுகள், பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் குருக்களின் அயராத உழைப்பால் மத்திகிரி மட்டுமல்லாமல் ஓசூர், ஒன்னல்வாடி, கெலமங்கலம் போன்ற இடங்களில் ஆலயங்கள் உருவாக்கி, அவை கிளைபங்காக செயல்பட்டு வந்தன. இப்பகுதி மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு அருள்தந்தையர்கள் மிகவும் உழைத்தனர். உழைப்பின் பயனாக பலர் கிறிஸ்தவத்தை தேர்ந்தெடுத்தனர். இதில் மத்திகிரி பகுதி பெரும் வளர்ச்சி அடைந்தது.
1837 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமானது வலுவிழந்ததாலும், ஊருக்கு மத்தியில் இருந்ததாலும், பின்னர் 1924 ஆம் ஆண்டு மத்திகிரி அடுத்துள்ள குதிரைபாளையம் என்ற இடத்தில் நிலம் வாங்கி, தற்போது இருக்கும் தூய ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயம் அருட்பணி. A. Nauroy, MEP அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது. அதே வருடத்தில் ஆரோக்கிய அன்னை திருவிழாவும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தற்போது வருடந்தோறும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1930 ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டம் புதிதாக துவங்கப்பட்டது. அப்போது மத்திகிரி, மேட்டூர் போன்ற பகுதிகள் மைசூர் மறைமாவட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தது. பின்னர் இப்பகுதிகள் சேலம் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் 1937 ஆம் ஆண்டு அருட்பணி. M. Brun, MEP அவர்களால் பங்குத்தந்தை இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.
1962 இல் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. Quinquinel, MEP அவர்களின் அழைப்பை ஏற்று 26.05.1962 அன்று FSM கன்னியர் தங்களின் ஃபாத்திமா இல்லத்தை துவங்கினர். அதே ஆண்டு மத்திகிரியை அடுத்துள்ள ஓசூரில் ஜான் போஸ்கோ பெண்கள் ஆரம்பப் பள்ளியை துவங்கினர். மாட்டு வண்டிகள் வாயிலாகவும், கால்நடையாக நடந்தும் சென்று பலநாட்கள் பள்ளிகளை கவனித்து வந்தனர். பின்னர் ஓசூர் பங்கு உருவானபின் அங்கு புதிய இல்லம் துவங்கப்பட்டது. இன்று மெல்ல மெல்ல இந்த பள்ளி வளர்ந்து மேல்நிலைப் பள்ளியாக ஓசூர் பெண்களுக்கு சேவை புரிந்து வருகின்றது. ஆரம்பத்தில் ஒரு வாடகை வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இல்லம் பின்னர் 1974 ஆண்டு மத்திகிரியில் ஒரு மருத்துவமனையை கட்டி எழுப்பி, ஏழை மக்களுக்கு சேவைகள் புரிய ஆரம்பித்தனர். மற்றும் பெண்களுக்கு சுய உதவிக்குழு, பெண்கள் தையல் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையின் தரம் உயர்த்த மிகவும் துணை நின்றனர். 1991 இல் மத்திகிரியில் பாத்திமா துவக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறது. கன்னியர்களின் முயற்சியால் மத்திகிரி பங்கு பெரும் வளர்ச்சியடைந்தது குறிப்பிடத் தக்கது.
1974 ஆம் ஆண்டு ஆலயத்தின் பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை. தாமஸ் கீரஞ்சீரா அவர்கள், திருவிழாவை மிகப்பெரியதாக கொண்டாட ஏற்பாடு செய்தார். அவ்விழாவில் சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ மற்றும் பாண்டிச்சேரி உயர் மறைமாவட்ட பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆகியோர் தலைமையில் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1975 முதல் 1986 வரை பங்குதந்தையாக இருந்த அருள்திரு. T.C ஜோசப் அவர்கள் காலத்தில் ஓசூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 1978 இல் ஓசூரில் ஆலயம் கட்டப்பட்டு புதிய பங்கு உருவாக்கப்பட்டது.
பின்னர் மத்திகிரி பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை. அலெக்சாண்டர் சாவேலி, சென்னத்தூரில் புதிய சிற்றாலயம் கட்டி கிளை பங்காக்கினார். பின்னர் இவர் கெலமங்கலம் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அருள்தந்தை. C.S. அந்தோணிசாமி பங்கின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். இவர் காலகட்டத்தில் பெங்களூரு பரிசுத்த ஆவி சபை கன்னியர்கள் மத்திகிரியில் இல்லத்தை துவங்கி சுற்றுவட்டார கிராம மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவினர். தற்போது அவர்கள் வேறிடத்திற்கு பணிபுரிய சென்று விட்டனர்.
அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தையாக அருள்பணி. லெக்ராண்ட் பொறுப்பேற்றார். அவர்கள் காலகட்டத்தில் ஓசூர் பகுதி மிகவும் வளர்ந்தது. அதன் நீட்சியாக மத்திகிரி கிராமமும் பெரும் வளர்ச்சி அடைந்தது. அப்போதைய ஆலயத்தில் இடவசதி குறைபாடும் ஏற்பட ஆரம்பித்தது. இதை கவனத்தில் கொண்டு அருள்பணி. லெக்ராண்ட் அவர்கள், மத்திகிரி முக்கிய சாலையில் எதிர்கால ஆலயம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, ஓசூர் -தேன்கனிக்கோட்டை சாலையில் 7 ஏக்கர் நிலத்தை அப்போதைய கிறிஸ்துபாளைய பங்குத்தந்தை அருட்திரு. இருதய செல்வம் உதவியால் (இப்போதைய ஆலய நிலத்தை) நேதாஜி நகரில் வாங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாலையை இணைக்கப்படும் 25 அடி சாலையை மத்திகிரி பஞ்சாயத்துக்கு அளிக்கப்பட்டது. அருள்பணி. லெக்ராண்ட் அவர்கள் பெங்களூரூ தூய பேதுரு குருக்கள் இல்லத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பங்குதந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி. R. தோம்னிக் ராஜா காலகட்டத்தில் ஆலயத்தின் 75 ஆம் ஆண்டு பவளவிழா பழைய ஆலயத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு, அன்றைய தினமே நேதாஜி நகரில் அமைக்கப்படும் புதிய ஆலயம் பற்றிய விவரமும் மக்களுக்கு பகிரப்பட்டது. 1999ம் ஆண்டு ஆலயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆலய கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 12.05.2001 அன்று அப்போதைய தருமபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, புதிய பங்கு ஆலயமாக செயல்படத் தொடங்கியது.
2002 ஆம் ஆண்டு இதன் கிளைபங்காக இருந்த ஒன்னல்வாடி புதிய பங்காக உருவாக்கப்பட்டு, சென்னதூர் அதன் கிளை பங்காயிற்று. அதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு பங்கு இல்லமும் அருகில் கட்டப்பட்டது.
புதிய ஆலயம் கட்டப்பட்டு பங்குத்தந்தை அருட்பணி. ரொசாரியோ தலைமையில் முதலாம் ஆண்டு ஆலய திருவிழா 2002ல் கொண்டாடப்பட்டது. பின்னர் வந்த பங்குத்தந்தை அருட்பணி. சக்கரையாஸ் காலகட்டத்தில் சமூக ஆர்வலர் J. C. அந்தோணி முயற்சியால் மத்திகிரியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயனுக்காக விடப்பட்டது. பின்னர் பங்கு தந்தையாக இருந்த அருட்பணி. ஜான் கென்னடி அவர்கள் ஆலய பீடம் மற்றும் ஆலய முகப்பு ஆகியவற்றை மாற்றி, ஆலயத்தை புதுப்பொலிவுடன் மாற்றி 27.06.2016 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1924 முதல் 2001 வரை சுமார் 75 ஆண்டுகள் மத்திகிரி பங்கு ஆலயமாக செயல்பட்ட குதிரைபாளையம் தூய ஆரோக்கிய அன்னை ஆலயமானது, 2015 ஆம் ஆண்டு பங்குதந்தை அருட்பணி. ஜான் கென்னடி அவர்களால் புதுப்பிக்கப்பட்டு தற்போதைய தருமபுரி ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் பாரம்பரிய ஆலயம் என்று அழைக்கப்பட்டு, ஆலயத்திற்கு அருகில் ஓய்வுபெற்ற குருக்கள் தங்கும் இல்லம் கட்டப்பட்டு, அவர்களுக்கு என தனிப்பட்ட ஆலயமாக தற்போது செயல்பட்டு வருகிறது.
பின்னர் வந்த பங்குத்தந்தை அருட்பணி. பெரியநாயகம் அவர்களின் முயற்சியால் மழலையர் பள்ளியாக இருந்த சேவியர் அகாடமியின் தரைதளம் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு தொடக்கப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. தற்போது இது நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 195 வருடத்திற்கு முன்னர் MEP அருள்தந்தையர்களின் உழைப்பால் ஆரம்பிக்கப்பட்ட மத்திகிரி மறைப்பணித்தளம், அதன் மறைப்பணிக்கும், பொதுப்பணிக்கும் சிறந்த உதாரணமாய், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தின் தாய் பங்காக செயல்பட்டு கிறிஸ்துவ மக்களின் ஆன்மீக தேவைக்கு உறுதுணையாய் இருந்தது.
தற்போது மத்திகிரி பங்கு, அருள்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் வழிநடத்தலோடு, நூற்றாண்டு விழாவை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.
பங்கின் சபைகள் இயக்கங்கள்:
வின்சென்ட் தே பவுல் சபை
மரியாயின் சேனை
பீட சிறுவர்கள்
பங்கு பேரவை
இளையோர்
பாடகற்குழு
மறைக்கல்வி
கன்னியர்கள் சபை :
பிரான்சிஸ்குவின் மரியின் ஊழியர் (FSM)
பங்கில் உள்ள பள்ளி:
பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
St. Xavier Accademy CBSC School
முன்னாள் பங்குத்தந்தையர்கள்:
MEP Fathers
Rev. Fr. Bareille J (1856)
Rev. Fr. Rappart J (1857)
Rev. Fr. Riss A. (1858-1859)
Rev. Fr. Giraud J.M. (1859-1861)
Rev. Fr. Renaudin J.B (1862-1964)
Rev. Fr. Clemot J. (1865-1866)
Rev. Fr. Guillon P. (1866-1867)
Rev. Fr. De Kérizonat (1867-1869)
Rev. Fr. Barre (1869-1970)
Rev. Fr. Bouquet P.F. (1870-1872)
Rev. Fr. Jansoone P. (1873)
Rev. Fr. Gorrea (1873-1875)
Rev. Fr. Ignatius (1875-1876)
Rev. Fr. Noronha J.B. (1876-1879)
Rev. Fr. Monnier F (1979-1880)
Rev. Fr. Teissier H. (1880)
Rev. Fr. Marin J. (1880-1886)
Rev. Fr. Gourin Y. (1891-1896)
Rev. Fr. Auzuech C. (1897-1902)
Rev. Fr. Mariya Nadan (1902-1907)
Rev. Fr. Lazaro A. (1907-1910)
Rev. Fr. D'Silva S. (1910)
Rev. Fr. Lobo A. (1910-1914)
Rev. Fr. Pinto G. (1914)
Rev. Fr. D'Souza G. (1914-1917)
Rev. Fr. Nauroy A. (1922-1925)
Rev. Fr. Lobo A. (1926)
Rev. Fr. Furtado J.M. (1926-1928)
Rev. Fr. Mascarenhas C (1929-1930)
Rev. Fr. Bertail J.B. (1930-1931)
Rev. Fr. Chassain C.I. (1932)
Rev. Fr. Jusseau A. (1933-1934)
Rev. Fr. Brun M. (1934-1954)
Rev. Fr. Nalais R. (1954-1956)
Rev. Fr. Gravier J (1956)
Rev. Fr. Blons J. (1956-1957)
Rev. Fr. Quinquenel C. (1958-1964)
Rev. Fr. Chavely A. (1964-1973)
Diocese Priest:
Rev. Fr. Thomas Keeranchira, (1973-1984)
Rev. Fr. C.S. Anthonysamy (1984-1987)
Rev. Fr. Issac P. (1987)
Rev. Fr. Legrand. L, MEP (1987-1993)
Rev. Fr. Dominic Raja R. (1994-2001)
Rev. Fr. Rozario A. (2001-2006)
Rev. Fr. Zacharias L. (2006-2011)
Rev. Fr. John Kennedy P. (2011-2016)
Rev. Fr. Periyanayagam (2016-2021)
Rev. Fr. Christopher (from 2021)
தகவல்கள்: பங்குதந்தை அருள்பணி. கிறிஸ்டோபர் அவர்கள்
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: Yesudass Joseph Krishnagiri