913 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், வாழைத்தோட்டம்

          


தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: வாழைத்தோட்டம், குமாரபுரம் அஞ்சல், திசையன்விளை வழி, 627657

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பிரகாசியம்மாள் திருத்தலம், அணைக்கரை

பங்குதந்தை அருள்பணி. தே. செல்வரத்தினம்

உதவி பங்குத்தந்தை அருள்பணி. கு. பிரதாப் 

குடும்பங்கள்: 330

அன்பியங்கள்: 5 

ஞாயிறு திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 

புனித அந்தோனியார் ஆலயம், நடுத்தெரு:

தை மாதத்தில் திருவிழா, ஆராதனை, அசனம்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. ரினோஸ் அமுதா, நற்செய்தியின் தூதுவர் சபை

2. அருட்சகோதரி. பிலியோன்ஸ் மேரி, ICM

வழித்தடம்: நாகர்கோவில் -வள்ளியூர் -மன்னார்புரம் விலக்கு. மன்னார்புரம் -திசையன்விளை வழித்தடத்தில் 3 கி.மீ தொலைவில் வாழைத்தோட்டம் அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/bZv3Np

வரலாறு:

ஆரம்ப காலத்தில் ஊருக்கு கீழ்பக்கம் குமாரபுரம் என்ற ஊர் இருந்தது. அந்த காலத்திலே வாகனங்கள் இல்லாத காரணத்தினால், இங்கு இருந்து மாட்டு வண்டியில் பொருளை ஏற்றி, தூத்துக்குடியில் விற்பனை செய்வார்கள். அப்படி இருக்கும் நேரத்தில் குமாரபுரத்தில் இருந்து கொண்டு இப்பொழுது இருக்கும் வாழைத்தோட்டம் ஊருக்கு மேல்பக்கம் ஓர் ஊற்று தோண்டி திலா மூலமாக தண்ணீர் இறைத்து விவசாயம் செய்தார்கள். 

விவசாயம் செய்து விளைவித்தவற்றை தூத்துக்குடியில் விற்றுவிட்டு, அங்கிருந்து வேறு பொருட்களை வாங்கி வருவார்கள். அவ்வாறு வரும்போது வியாபாரி ஒருவர் வாழைக்கன்று வாங்கி வந்து நட்டு வளர்த்து வந்தார். வியாபார நிமித்தமாக அவரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு அடிக்கடி ஆட்கள் வந்து பார்ப்பது வழக்கம். அதில் ஒரு நபர் வரும் பொழுது அந்த வீட்டில் உள்ள பெண்மணி மேற்கே ஊற்றாங்கரையில் தோட்டத்தில் எனது கணவர் வாழைத்தோட்டத்தில் இருக்கிறார் என்று சொல்வது வழக்கம். நாளடைவில் இந்த ஊர் பெயர் "வாழைத்தோட்டம்" என்றானது. குமாரபுரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடும்பமும் இங்கு வந்து குடியேறினார்கள்.

ஊருக்கு கீழ்புறம், சாத்தான் தொல்லை செய்கிறது என எண்ணி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தை எழுப்ப வேண்டும், அவரால் தான் சாத்தானை ஓட்ட முடியும் என நினைத்து, பனை ஓலையால் ஆன கோவில் ஒன்றை செய்து அதனை ஊருக்கு கீழ்புறமாக வைத்தனர். அந்த இடம் இயற்கையிலேயே, பிணங்களை அடக்கம் செய்யும் இடமாக இருந்திருக்கின்றது.

ஓலைக்கூரை ஆலயத்தை ஓடு போட்ட ஆலயமாக மாற்ற முடிவு செய்தனர். அப்பொழுது தான் அஸ்திவாரம் தோண்டும் பொழுது, அங்கே எலும்புகூடுகள் தென்பட்டன. பின்னர், நாம் மேற்கே குடியேறியுள்ளோம். ஆகையால், கோவிலின் கிழக்குபுற வாசலை அகற்றிவிட்டு, மேற்கு பக்கம் வாயிலை அமைப்போம் என கருதினர். நாளாக நாளாக, குடும்பங்கள் ஊரில் பெருகப் பெருக, ஆலயத்தை பெரிதுபடுத்தினர். மிக்கேல் அதிதூதரினுடைய கிருபையினால், ஊரில் இறைமக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அதிதூதரின் ஆசியால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில், காலை முதல் மாலை வரை இறைமக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எப்பொழுதும் 5 முதல் 6 குடும்பங்கள் தங்கியிருப்பார்கள்.

இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், இடநெருக்கடி ஏற்பட்டது. ஆகவே ஆலயமானது விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டு, வாழைத்தோட்டம் இறைமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. விங்லிங்க் ரவி அவர்களின் வழிகாட்டுதலுடன் கான்கிரீட் மேற்கூரை அமைக்கப்பட்டு விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்று, 20.09.2007 அன்று மேதகு ஆயர் யுவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புனித மிக்கேல் அதிதூதர் நமக்கு எல்லையில்லா புதுமைகளை செய்து கொண்டு இருக்கிறார். சாத்தானின் பிடியில் இருக்கும் எத்தனையோ குடும்பங்கள் குணமடைந்து சென்றுள்ளனர். விலங்கினால் பூட்டப்பட்டு சாத்தானின் பிடியில் இருந்த மக்களும் குணமடைந்துள்ளனர். அவருடைய வல்லமையினால் தீராத நோயும் தீர்ந்து போகும்.

புனித அந்தோனியார் ஆலயம், நடுத்தெரு:

தொடக்கத்தில் நடுத்தெருவில் புனித அந்தோனியார் ஆலயம் தெற்கு புறமாக இருந்தது. பின்னர் இதன் வாயில் கிழக்குப் புறமாக மாற்றப்பட்டது. இவ்வாலயத்தின் முன்புறம் நாடகமேடை ஒன்று இருந்தது. இதில் பார்பரம்மாள் மற்றும் அந்தோனியார் நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மேடை அகற்றப்பட்டு, அவ்விடத்தில் புனித பார்பரம்மாள் கெபி அமைக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பு அமைப்புகள்:

1. திருக்குடும்ப சபை

2. அமலோற்பவ மாதா சபை

3. வளனார் சபை

4. நற்கருணை வீரர் சபை

5. மறைக்கல்வி 

ஜெபமாலை மாதா கெபி:

மே மாதம் மூன்றாவது சனிக்கிழமை திருவிழா, அசனம்

அதிதூதருடைய ஆசீரைப் பெற்று நோய் நொடிகள் நீங்கி நலம் பெற, உங்களை அன்புடன் அழைக்கும் ஊர் பொதுமக்கள் - வாழைத்தோட்டம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் ஆசியுடன் ஆலய உறுப்பினர் திரு. மிக்கேல் அகஸ்டின் அவர்கள்.