914 புனித பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர் -தூத்துக்குடி

    


புனித பாத்திமா அன்னை ஆலயம்

இடம்: பாத்திமா நகர், தூத்துக்குடி

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: பங்குதளம்

கிளைப்பங்கு: வேளாங்கண்ணி மாதா ஆலயம், பி.வி.ஆர் புரம்

Side Chapel:

திருச்சிலுவை ஆலயம், பாத்திமாநகர்

பங்குத்தந்தை: அருள்பணி. A. ஜேசுதாஸ் பெர்னாண்டோ

உதவி பங்குத்தந்தை: அருள்பணி. ஷிபு ஜோசப், Dominican

குடும்பங்கள்: 1500

அன்பியங்கள்: 58

திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி, காலை 07:00 மணி, மாலை 05:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி, மாலை 05:30 மணி

திருவிழா: அக்டோபர் மாதம் 03-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 13-ம் தேதி பெருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:

Rev. Fathers:

1. அருட்பணி.‌ டெரன்ஸ், SVD

2. அருட்பணி. சந்திரா நேவிஸ், Sc

3. அருட்பணி. ஹெனிஸ்டன், Diocese of Tuticorin

4. அருட்பணி. அருள்ராஜ், OMD (சிலி)

5. அருட்பணி. பெனோவாஸ், OMD 

Rev. Sisters:

1. அருட்சகோதரி.‌ ஷோபனா அமல்ராஜ், திருச்சிலுவை கன்னியர் சபை

2. அருட்சகோதரி. தஸ்நேவிஸ், குளூனி சபை

3. அருட்சகோதரி. அருணா, அமல அன்னையின் மறைபரப்பு சபை

4. அருட்சகோதரி.‌ ஜோஸ்லின், SH

Location Map: https://g.co/kgs/QwHmbr

வரலாறு:

எங்கு நோக்கினாலும் மணல் குன்றுகள், மணல் மேடுகள். ஆங்காங்கே முட்புதர்கள். அடர்ந்து குடை போல், முட்கள் நிறைந்த உடைமரங்கள். தூக்கில் தொங்க வேண்டுமா? பூச்சி மருந்து அருந்தி சாக வேண்டுமா? கொலையா? தற்கொலையா? ஓடு, மணல்மேட்டிற்கு. இதுதான் சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த மணல்மேட்டின் வரலாறு.

கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்திற்கு பின்புறம் இருந்த மணல்திட்டு என்பதால் இரவில், ஏன் பகலில் கூட மக்கள் நடமாட பயந்திருந்த காலம். இத்தகையை காலத்தில்தான் வீடில்லாமலும், வெளியூர்களில் இருந்தும் வந்த மக்கள் துணிவுடன் குடிசைகள் போட்டு குடியேற ஆரம்பித்தனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் தோன்றின. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் தான் மணல்மேடு என்று மக்களால் அழைக்கப்பட்ட ஊர். இன்று சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

ஆலயத் தோற்றம்:

"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதற்கேற்ப, இறைமக்களில் சிலர், தங்களது தேவைகளை இறைவனிடம் எடுத்தியம்ப, கோவில் ஒன்று அவசியம் என்று உணர்ந்தனர். ஆகவே ஓலைக் குடிசைக் கோவில் ஒன்றை அமைத்தனர். தினசரி செபத்திற்கு குடும்பங்கள் ஒன்று கூடின. மக்கள் திருப்பலியில் பங்கேற்க பக்கத்திலுள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு, அல்லது பரிசுத்த. பனிமய அன்னை பேராலயத்திற்குச் சென்று வந்தனர். எனவே இங்குள்ள மக்கள், ஆயர் இல்லம் சென்று, மறைந்த மேதகு தாமஸ் ஆண்டகை அவர்களிடம் தங்களுக்கு ஞாயிறு திருப்பலி வழங்கிட வேண்டும் என்று வேண்டுதலை முன் வைத்தனர். ஆயரின் பரிந்துரையுடன் பரி. பாத்திமா அன்னையின் சுரூபம் மந்தரிக்கப்பட்டு, மறைந்த அருட்தந்தை. பவுல் அலங்காரம் அடிகளார் அவர்களால், ஞாயிறு தோறும் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து மறைந்த அருட்தந்தை. செபஸ்தியான் அடிகளார் அவர்களால், ஞாயிறு திருப்பலி தொடரப்பட்டது. அன்னையின் திருச்சுரூபம், திரு. மரியமிக்கேல் அவர்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டது. கோவில் செப வழிபாடுகளுக்கு திருமதி. சூசையம்மாள் அலங்காரம் வாயிஸ் பொறுப்பேற்றார்கள். இவர்கள், புனித சவேரியாரைப் போல, விடியற்காலை ஞாயிறு திருப்பலிக்கு, கைகளில் மணியை ஒலித்துக் கொண்டு வீதிகள் தோறும் சென்று மக்களை தயார்படுத்துவார்கள்.

பங்கின் ஆரம்பநிலை:

“தங்களிடம் உள்ளதெல்லாம் பகிர்ந்து கொண்டனர்” என்ற ஆதித் திருச்சபையின் வாழ்வையே அன்றைய மக்கள் வாழ்ந்தனர். நான்கு திசைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்களிடையே உறவுகள் மலர்ந்தன. உறவினர்கள் ஆயினர். கோவில் பரிசுத்த பாத்திமா அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், மணல்மேடு என்ற பெயரில் விளங்கிய ஊர் “பாத்திமா நகர்" ஆனது. 

மக்களின் தேவைகளுக்கு உழைப்பதற்கென நல்லுள்ளம் கொண்ட  பெரியவர்கள் பலர் தங்கள் உடலுழைப்பையும், பொருள் உதவியையும் தாராளமாக அளித்து வந்தனர். ஊர் மக்களுக்காக கிணறுகள் தோண்டப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டு வீதிகள் தோன்றின. சிறுவர், சிறுமியர் பள்ளிகளுக்குச் சென்றனர். பாத்திமா நகரானது, பக்கத்திலுள்ள புனித அந்தோணியார் ஆலயப் பங்கின் இணைப்பங்கானது.

ஆலய வளர்ச்சி:

புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு. ஞானப்பிரகாசம் சுவாமியவர்கள் அன்னையின் குடிசைக் கோவிலை அகற்றி, பெரிய ஆலயம் ஒன்று அமைக்க ஆரம்பித்தார்கள். அஸ்திவாரம் எழுப்பப்பட்டபின் தந்தையவர்கள் பங்கு மாறிச் சென்றதால், அடுத்து வந்த அருள்தந்தை ஹெர்மஸ் அடிகளார் அவர்கள் ஆலயத்தை எழுப்பி முடித்தார்கள். பகலில் வேலைக்குச் செல்லும் மக்கள், இளைஞர். இளம்பெண்கள், பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு மாலைவேளைகளில் மணல், கற்கள், சிமெண்ட் கலவை சுமந்து கோவில் வளர ஒத்துழைத்தனர். ஆரம்பத்தில் கோவில் எழும்ப தடைகள் வந்தாலும், அன்னையின் அருளால் யாவும் நீங்கி ஆலயம் வானுயர எழும்பியது. அருள்தந்தை சேவியர் S. மரியான் அவர்களால் ஆலயக் கோபுரம் எழுப்பப்பட்டது. 

அன்றைய பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நூல் நூற்பு நிலையமும், வலை பின்னும் தொழிலையும் அருள்தந்தை சேவியர் S. மரியான் அடிகள் ஆரம்பித்து வைத்தார்கள். வேலைக்கு கூலியாக கோதுமையும் எண்ணெயும் வழங்கப்பட்டது. திருமதி. குழந்தையம்மாள் அவர்கள் மேற்பார்வையிலும், வழி காட்டலிலும் நூற்பு நிலையம் நன்கு செயல்பட்டு வந்தது. இதனால் பல பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

தனிப்பங்கு:

மாதா பக்தியில் மக்கள் நிலைத்திருந்த காலம். பிறசபைகள் புற்றீசல்கள் போல் தோன்றாத காலம். செபமாலைப் பக்தி தழைத்தோங்கிய காலம். அப்பொற்காலத்தில் மேதகு. அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 14.06.1984 அன்று பாத்திமாநகர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதற்பங்குக் குருவாக அமரர் அருட்திரு. அந்தோணி திலகராஜ் அடிகள் பொறுப்பேற்றார்கள். நடமாடும் புனிதர் என இம் மக்களால் பாராட்டப்பட்டவர். மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். மறைக்கல்வி கற்கும் சிறுவர்களை "மலர்த்தோட்டம்" என்றே குறிப்பிடுவார். 

பங்குத் தந்தையர்களின் பணி:

அருட்திரு. அந்தோணி திலகராஜ் அடிகளைத் தொடர்ந்து, அருள்தந்தை சேவியர் இக்னேஷியஸ், தந்தை செல்வஜார்ஜ், தந்தை பங்கிராஸ், தந்தை ஜோஸ் புருனோ ஆகியோர் எம் பங்குத்ததையர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்களது அருட்பணிகளால் எம் பங்கு மென்மேலும் வளர்ந்து வந்தது. தந்தை சேவியர் இக்னேஷியஸ் அவர்கள், வீட்டு மனையுள்ள சிலருக்கு வீடுகள் கட்டுவதற்கு, வெளிநாட்டு உதவி பெற்றுக் கொடுத்தார்கள். அருள்தந்தை செல்வ ஜார்ஜ் அவர்களால் பள்ளிக்கட்டிடமும், பாலர் பள்ளியும் கட்டப்பட்டது. கோவிலும் விரிவுபடுத்தப்பட்டது. அமலோற்பவ அன்னை கெபியும், அருட்தந்தை திலகராஜ் அடிகள் நினைவு கட்டிடமும், ஆயர் பீற்றர் பர்னான்டோ பெயர்தாங்கிய கட்டடமும், குருக்கள் இல்லமும் அவர்களாலேயே எழுப்பட்டது. மக்களின் குடிநீர் பிரச்சனையை நீக்க, தெருக்களை புல்டோசர் என்ற கருவியின் மூலம் ஆழப்படுத்தி, குடிநீர் குழாய்கள் பதித்ததும் அவரது முயற்சியால் தான். 

அருள்தந்தை பங்கிராஸ் அடிகளார் அவர்களால் கோவில் பீடம் புதுப்பிக்கப்பட்டது. அருள்தந்தை புருனோ அவர்களால் ஆலயம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போதைய பீடமும், நற்கருணை நாதர் ஆலயமும், பாத்திமா அன்னை சமுதாய நலக்கூடமும் எழுப்பப்பட்டது.

அருட்திரு. அந்தோனி பிச்சை பணிக்காலத்தில் ஆலயமானது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, பக்க கோபுரங்கள் கட்டப்பட்டு, 01.10.2017 அன்று மேதகு ஆயர் யுவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அன்னைக்கு நன்றி:

25 ஆண்டுகளாக வளர்ச்சியின் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் பாத்திமாநகர் பங்கானது, துத்துக்குடி மறைமாவட்டத்தில் பெயர் சொல்லும் பங்காக மாறியதற்கு, அன்னையின் வழி நடத்துதலும் செபமாலைப் பக்தியுமே காரணமாகும். இன்றும் இம்மக்களின் செபமாலைப் பக்தி வளர்ந்து தான் வருகிறது. மக்கள் கூடி செபிப்பதற்காக, திருச்சிலுவைநாதர் சிற்றாலயம் தற்போது பங்கில் இயங்கி வருகிறது. செபிக்கும் மக்கள், தங்கள் வேண்டுதல் நிறைவுறுவதை அனுபவித்து வருகின்றனர். 

அன்பின் பங்கு:

பங்கின் பாதுகாவலி தூய பாத்திமா அன்னையின் ஆதரவிலும், அரவணைப்பிலும் வாழ்ந்து வரும் பங்கின் மக்கள் இன்று கல்வியிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் வளர்ச்சி பெற்றுள்ளனர். அருட்தந்தையர்களாக, கன்னியர்களாக, மருத்துவர்களாக, கட்டடக்கலை வல்லுநர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவச் செவிலியர்களாக, கணினி வல்லுநர்களாக, கப்பல்களில், துறைமுகங்களில், தொலைக்காட்சி நிறுவனங்களில், விளம்பரத் துறைகளில் பணிபுரிபவர்களாக வளர்ந்து வருகின்றனர். தொடர்ந்து

இறை இயேசுவின் பாதையில், பாத்திமா அன்னையின் கரம் பிடித்து வழி நடந்து வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை

2. வளனார் சபை

3. திருக்குடும்ப சபை

4. மரியாயின் சேனை

5. தூய பாத்திமா அன்னை இளைஞர் இயக்கம்

6. கோல்பிங் இயக்கம்

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. வழிபாட்டுக் குழு

9. பாடகற்குழு

10. பீடச் சிறார்

11. பங்குப்பேரவை

12. நிதித்குழு

13. மறைக்கல்வி

14. தூய அமலோற்பவ மாதா இளம் பெண்கள் சபை

15. Servent of Fathima

பங்கின் சிறப்புகள்:

1. தூய லூர்து மாதா கெபி

2. நற்கருணை சிற்றாலயம்

3. இறையடியார் சூசைநாதர் நூலகம்

4. இ-சேவை மையம்

5. புனித பாத்திமா மாதா நடுநிலைப் பள்ளி 

6. OLF Trust:

பங்குதந்தை அருள்பணி. ஜேசுதாஸ் பெர்னாண்டோ அவர்களின் பணிக்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் OLF Trust தொடங்கப்பட்டு, தொடர்ந்து சிறப்புற சேவை வழங்கி வருகிறது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev.Fr. திலகராஜ் (1984-1987)

2. Rev.Fr. சேவியர் இக்னேஷியஸ் (1987-1991)

3. Rev.Fr. செல்வ ஜார்ஜ் (1991-1996)

4. Rev.Fr. பங்கிராஸ் பர்னாந்து (1996-2001)

5. Rev.Fr. ஜோஸ் புரூனோ (2001- 2006)

6. Rev.Fr. சகாயராஜ் ராயன் (2006-2011)

7. Rev.Fr. வியாகுல மரியான் (2011-2016)

8. Rev.Fr. அந்தோனி பிச்சை (2016-2021)

9. Rev.Fr. ஜேசுதாஸ் பெர்னாண்டோ (2021....)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி.‌ ஜேசுதாஸ் பெர்னாண்டோ அவர்கள்.