புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
இடம்: ஏழாயிரம்பண்ணை, 626201
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விருதுநகர்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்
பங்குத்தந்தை அருட்பணி. ஜான் மில்டன், MSFS
குடும்பங்கள்: 15
ஞாயிறு திருப்பலி காலை 10:30 மணி
திருவிழா: செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி
வழித்தடம்: மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சங்கரன்கோவில் என அனைத்து பேருந்துகளும் ஏழாயிரம்பண்ணை வந்தே செல்லும். மற்றும் மேற்கண்ட ஊர்களுக்கு பேருந்துகள் ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்படும்.
ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் வழித்தடத்தில், 1கி.மீ தொலைவில் காவல் நிலையத்திற்கு அருகே இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/RNbVpr
வரலாறு:
அருள் வரங்களை அள்ளி வழங்கும் ஏழாயிரம்பண்ணை புனித ஆரோக்கிய மாதா ஆலயமானது, கிழக்கே சாத்தூரையும், மேற்கே சங்கரன்கோவிலையும், வடக்கே சிவகாசியையும், தெற்கே கோவில்பட்டியையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அக்காலத்தில் மதுரை மறைப்பணித்தளத்திலிருந்து இயேசு சபை குருக்கள் தென்மாவட்டங்களில் மறைப்பரப்பு செய்து வந்தனர். ஆகவே தென்மாவட்டங்களின் மையப்பகுதியான விருதுநகர் பகுதிகள், திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், குறிப்பாக வடபட்டி, இந்திராநகர், சிவகாசி, ஆர்.ஆர்.நகர், மாதங்கோவில்பட்டி, மீனம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
அதன்படி சாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, இயேசு சபை குருக்கள் சுமார் 1929ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைப்பணியாற்றி வந்தனர். அதனால் சாத்தூரை சுற்றியுள்ள 26 கிராமங்களில் கத்தோலிக்க கிறிஸ்தவம் வேகமாக பரவியது. அதன் பயனாக தென்மேற்குப் பகுதியில் மடத்துப்பட்டி, ஏழாயிரம்பண்ணையில் கிறிஸ்தவ விதை முளைக்க ஆரம்பித்தது.
1931 ஆம் ஆண்டு ஏழாயிரம்பண்ணை கொசவக்குளம் என்னும் இடத்தில், புனித ஆரோக்கிய அன்னை குடிசை ஆலயம் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவை கட்டப்பட்டது. ஏழாயிரம்பண்ணை, மடத்துப்பட்டி, சோலைப்பட்டி, ஊத்துப்பட்டி, பாண்டியாபுரம் என சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஏழாயிரம்பண்ணை ஆலயத்தில் வந்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து கொசவக்குளத்தில் இருந்த குடிசை ஆலயம் மற்றும் பள்ளிக்கூடம் ஆகியன ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆகவே அந்த இடத்தை விட்டு விட்டு, மருதுபாண்டி நகரில் ஆலயம் கட்ட 1935 ஆம் ஆண்டில் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. மருதுபாண்டி நகர் வடக்குப் பகுதியில் ஆலயம் அமைக்க 15 சென்ட் நிலமும், மேற்குப் பகுதியில் 60 சென்ட் நிலம் பள்ளிக்கூடம் கட்டவும் வாங்கப்பட்டது.
1938 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. ஆலயத்திற்கு வாங்கப்பட்ட நிலத்தில் பந்தல் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர்.
1960-1967 வரை சாத்தூர் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி. சந்தியாகு, சே.ச அவர்களால் ஏழாயிரம்பண்ணை இறைமக்களுக்கு திருவருட்சாதனங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தது.
அருட்பணி. அல்போன்ஸ் அடிகளார் சே.ச பணிக்காலத்தில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, ஏழாயிரம்பண்ணை மருதுபாண்டி நகரில், 1982 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அருட்பணி. அல்போன்ஸ் சே.ச அவர்களின் முயற்சியாலும், இறைமக்களின் தாராள நன்கொடைகளாலும், ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டு, 1984 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. சுற்றிலுமுள்ள மடத்துப்பட்டி, சோலைப்பட்டி, உள்ளட்டி முதலிய கிராம மக்கள் தங்களது ஆன்மீகக் காரியங்களுக்கு ஏழாயிரம்பண்ணை ஆலயத்திற்கு சென்று வந்தனர்.
1995-1998 காலகட்டத்தில் சாத்தூர் பங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, பதிய ஒரு பங்கு உருவாக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், ஏழாயிரம்பண்ணை ஆலயத்தை பங்காக மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை பேராயரிடம் வைக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து வசதிகள் காரணமாக சாத்தூரின் கிளைப்பங்குகளில் ஒன்றான ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு ஆலயமானது, 1999 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. ஏழாயிரம்பண்ணை ஆலயமானது ஒத்தையாலின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.
அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ், MSFS பணிக்காலத்தில், ஆலயத்திற்கு முன்புறம் ஏழாயிரம்பண்ணை -சங்கரன்கோவில் பிரதான சாலை ஓரத்தில் புனித ஆரோக்கிய மாதா கெபி கட்டப்பட்டு, மதுரை உயர் மறைமாவட்ட அப்போதைய இணை ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் 10.09.2000 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு முதல் மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 08-ம் தேதியன்று திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு ஆலயத்தைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது. புனித ஆரோக்கிய அன்னையின் அரவணைப்பிலும், MSFS சபை குருக்களின் வழிகாட்டலிலும் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது ஏழாயிரம்பண்ணை இறைசமூகம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஏழாயிரம்பண்ணை ஆலய உறுப்பினர் திருமதி. J. ஜெயராணி அவர்கள் வழிகாட்டலில், புல்லக்கவுண்டன்பட்டி ஆலய உபதேசியார் V. சசி (எ) சாலமோன்.