புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்
இடம்: வாடிமாநகர், வாடிப்பட்டி, 625218
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை வடக்கு
நிலை: திருத்தலம்
கிளைப்பங்குகள்:
1. புனித காணிக்கை அன்னை ஆலயம், மரியம்மாள்குளம்
2. தூய லூர்து அன்னை ஆலயம், அலங்காநல்லூர்
3. புனித பேதுரு பவுல் ஆலயம், குறவன்குளம்
திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. S. வளன், SVD
Mob: +91 93608 02873
உதவி பங்குத்தந்தை:
அருட்பணி. அடைக்கல ராஜ், SVD
நிர்வாகி: அருட்பணி. ஆன்றனி வினோ, SVD
குடும்பங்கள்: 112 (கிளைப்பங்குகள் சேர்த்து 188)
அன்பியங்கள்: 6 (கிளைப்பங்குகள் சேர்த்து
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 05:30 மணி, காலை 08:30 மணி, காலை 11:00 மணி, மாலை 05:00 மணி
திங்கள் முதல் வியாழன் வரை திருப்பலி காலை 06:30 மணி, காலை 11:00 மணி, மாலை 06:00 மணி
வெள்ளி திருப்பலி காலை 06:30 மணி, காலை 11:00 மணி, மாலை 05:00 மணி
காலை திருப்பலிக்கு பிறகு குணமளிக்கும் வழிபாடும் மாலை திருப்பலிக்கு பிறகு நற்கருணை ஆராதனை நடைபெறும்.
சனி திருப்பலி காலை 05:30 மணி, காலை 10:00 மணி நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம்
காலை 11:00 மணி திருப்பலி
மாலை 04:15 மணி அன்னையின் தேர்பவனி
மாலை 05:00 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை
திங்கள் முதல் சனி வரை மாலை திருப்பலி முடிந்தவுடன் நற்கருணை ஆராதனை நடைபெறும்.
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை திருப்பலி முடிந்தவுடன் திருத்தல வளாகத்தைச் சுற்றி, எரிகின்ற மெழுகுதிரியுடன் நற்கருணை பவனி நடைபெறும்.
திருவிழா:
ஆகஸ்ட் 29 -ம் தேதி கொடியேற்றம், செப்டம்பர் 08-ம் தேதி திருவிழா, செப்டம்பர் 09-ம் தேதி கொடியிறக்கம்.
வாடிப்பட்டி மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Rev. Fr. R. Amal Raj
2. Rev. Fr. Kaspar
3. Rev. Sr. R. Christinal Rajam CSJB
4. Rev. Sr. R. Hilda Mary (Seva Missionaries)
5. Rev. Sr. Chella Regina Mary FSAG
கிளைப்பங்கு மரியம்மாள்குளம்
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்பணியாளர்கள்:
1. Rev. Fr. S. N. Arulsamy (late)
2. Rev. Fr. S. Soosaimanikkam (late)
3. Rev. Fr. Rev. Fr. L. Jerome, SJ
4. Rev. Fr. Gilbert
5. Rev. Fr. Charles Haston
6. Rev. Br. Angelo, OFM Cap
அருட்சகோதரிகள்:
1. Rev. Sr. Mary Viany, Holy Cross (late)
2. Rev. Sr. Adalfine Mary (Alphonsa), Sevan Dollars
3. Rev. Sr. Juliet Mary, Seven Dollars
4. Rev. Sr. Jacintha, Bon Secure
5. Rev. Sr. Sundaram, Seven Dollars (late)
6. Rev. Sr. Kanikkai Mary, Carmel
7. Rev. Sr. Mercy Regina, Sevan Dollars (late)
8. Rev. Sr. Mary Mutthu, Sevan Dollars (late)
9. Rev. Sr. Maria Selvam, Immaculate (late)
10. Rev. Sr. S. M. Susaiammal, (late)
11. Rev. Sr. Lourdu Mary, Servite (late)
12. Rev. Sr. Nercia, Pallotine
13. Rev. Sr. Amalorpava Mary, Seven Dollars (late)
14. Rev. Sr. Josephine Angela, St. Ann's
வழித்தடம்: திருவனந்தபுரம் -நாகர்கோவில் -மதுரை. மதுரையிலிருந்து 27கி.மீ தொலைவில் வாடிப்பட்டி.
சென்னை -திருச்சி -திண்டுக்கல் -கொடைரோடு -வாடிப்பட்டி. கொடைரோட்டிலிருந்து 12கி.மீ தொலைவில் வாடிப்பட்டி.
Location map: Vadipatti Shrine
https://maps.google.com/?cid=17766424391232895757&entry=gps
வாடிமாநகர் திருத்தல வரலாறு:
அன்னையின்றி வெற்றியில்லை, அன்னை இருக்க தோல்வியில்லை. அல்லல்பட்டு, அவதிப்பட்டு, துன்பத்தோடு, துயரத்தோடு, சுமைகளோடு, சோகத்தோடு அண்டிவரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் இந்த திருத்தலமானது, அமைதியின் பூங்காவாக, அடைக்கல கோட்டையாக, புகலிடம் தரும் புண்ணிய பூமியாக இருந்து வருகிறது. அன்பையும், அரவணைப்பையும் அகிலமெங்கும் விதைத்து, தியாக மேகமாய்ப் பூமியெங்கும் நிலைகொண்டு இருப்பவள் நம் ஆரோக்கிய அன்னை. அழுது தவிப்போரின் ஆன்மாவில் ஆறுதல் சுரப்பவள் அன்னை. ஆதரவிழந்தோரை அரவணைக்கும் தாழ்வாரம் அன்னை. உலகமே ஒரே குரலாய் உதட்டாலும் உள்ளத்தாலும் உச்சரிக்கும் மந்திரச் சொல் அன்னை. அன்னை, அவள் அண்டினோரை எல்லாம் சுமந்திடும் திண்ணை.
ஈராயிரம் ஆண்டுகளையும் கடந்து இறைவனோடு இரண்டறக் கலந்த அன்னை மரியாள், வற்றாத வரம் தரும் வாடிமாநகரில் அருட்பெருஞ்சுடராய், ஆனந்தக் கடலாய், அன்பின் அரசியாய், தேடி வருவோரை நாடிச்சென்று நலம் பல நல்கிடும் விண்ணக அரசியாய் வீற்றிருக்கிறாள்.
இறைவார்த்தை சபை (SVD):
"என் நுகம் இனிது என் சுமை எளிது" என்ற இறைமகன் இயேசுவின் ஈடுஇணையற்ற மதிப்பீடுகளை தாங்கி, எங்கெல்லாம் இதயத்தில் நற்செய்தி அறிவிக்கப்படவில்லையோ அங்கெல்லாம் நற்செய்தியினை அறிவிப்பதையும், நற்செய்தி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விசுவாசத்தை ஆழப்படுத்துவதையும், தலத்திருச்சபையைச் செயலாக்கம் பெறவைப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு, புனித அர்னால்டு ஜான்சன் அவர்களால் 1875 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள், அன்னை மரியின் பிறப்புப் பெருவிழா நாளன்று ஹாலந்து (நெதர்லாந்து) தேசத்தில், ஸ்டைல் என்னும் ஊரில் சிறப்புறக் கால்கோள் நாட்டப்பட்ட, இறைவார்த்தை சபை (SVD) மணம் பரப்பும் மலர்ச்சோலையாய்ப் பாரெங்கும் இறைப் பணியைப் பாங்குற ஆற்றி வருகிறது. 1932ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த இறைவார்த்தை சபையினர் இன்று இந்திய தேசமெங்கும் இறைத் தொண்டாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் முத்தாய்ப்பான முதல் பங்குத்தலம்:
கிறிஸ்துவை அறியாத மக்கள் நிறைந்த வாடிப்பட்டி பகுதியில், நற்செய்திப் பணியாற்ற உற்சாகமாய் முனைந்தனர் இறைவார்த்தை சபையினர். அருள்பணியாளர்கள் அந்தோணிசாமி SVD, விஜய் அமல்ராஜ் SVD, ஆகியோரின் கூட்டு முயற்சியாலும், கடும் உழைப்பாலும் 10-10-1993 ஆம் நாளன்று மலர்ந்தது தான் வாடிப்பட்டிப் பங்குத்தலம்.
தமிழகத்தில் இறைவார்த்தை (SVD) சபையினருக்கு வழங்கப்பெற்ற முதல் பங்குத்தலமான வாடிப்பட்டி பங்கின் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற தந்தை விஜய் அமல்ராஜ் அவர்களின் சீரிய முயற்சியால், புனித ஆரோக்கிய அன்னைக்குச் சிறந்ததோர் ஆலயம் 1999ஆம் ஆண்டு சூன் திங்கள் ஆறாம் நாள் கட்டி முடிக்கப்பெற்றது. திருத்தலத்தைப் புனிதப்படுத்த வந்த அன்றைய மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு டாக்டர் ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்கள், "இந்த ஆலயம் நாள்தோறும் மக்கள் தேடிவரும் திருத்தலமாகும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பேராயர் பெருமகனார் தம் அருள்வாக்கு உண்மையாயிற்று.
இத்திருத்தலத்தின் புதிய பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருள்தந்தை. மேரிஜான் SVD அவர்கள் செபித்துக் கொண்டிருக்கும் வேளையில், இத்திருத்தலம் மக்கள் திரண்டு வரும் ஆறுதலின் கூடாரமாக விளங்கப்போவதை இறைக் காட்சியாகக் கண்டார்.
வேம்பத்தூரைச் சார்ந்த 67 வயதுடைய கனகராஜ் என்ற இந்து மதத் துறவிக்கு (சாது) ஆரோக்கிய அன்னை காட்சி தந்து, 'வாடிமாநகர் திருத்தலத்திற்குச் சென்று வா' என்று கூற 2000ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை திருத்தலத்திற்கு வந்தார். திருத்தலப் பங்குத்தந்தை அத்துறவியை, அன்னையின் ஆலயத்திற்கு அழைத்துக் கொண்டு, திருத்தலப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, இயேசு ஆண்டவருக்கு தபோர் மலையில் ஒளிப்பிழம்பாக இறைவன் காட்சி தந்ததுபோல், வானினின்று திவ்விய நற்கருணை பேழைக்குள் ஊடுருவியதைக் காட்சியாகப் பார்த்துக் கொண்டே வந்தார். பின்னர் திருத்தலத்திற்குள் சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து செபித்த பின், அங்குள்ள உயிர்த்த ஆண்டவரின் சுரூபத்தைப் பார்த்து "இவர் தான் உண்மையான தெய்வம்; உலக இரட்சகர்"; 2001 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து இத்திருத்தலம் உலகப்புகழ் பெற்ற இடமாக மாறும் என்று தீர்க்கதரிசனமாகச் சொன்னார். பீடத்தின் வலப்புறத்திலுள்ள ஆரோக்கிய அன்னையின் சுரூபத்தைப் பார்த்து இந்த அன்னை தனக்குக் காட்சி தந்ததாகவும், இடப்புறத்தில் வீற்றிருக்கும் புனித சூசையப்பர் சுரூபத்தைப் பார்த்து இவரையும் காட்சியில் கண்டதாகக் கூறினார். இதனை நேரில் கண்ட பங்குத்தந்தை அருட்பணி. மேரிஜான் SVD அவர்கள், இத்திருத்தலத்தில் இறையாற்றல் பொங்கி வருவதை எதிர்நோக்கியவராய்த் தம் சீரிய செபத்தாலும், கடும் உழைப்பாலும் அன்னையின் கருணையும், புகழும் தென்னகமெங்கும் பரவச்செய்தார். எட்டுத்திக்கினின்றும் திரண்டு வந்த மக்கள் இத்திருத்தலப் பேராற்றலைச் சென்ற இடங்களில் எல்லாம் எடுத்துக் கூறினர்.
அருட்பணி. மேரி ஜான் SVD அவர்களைத் தொடர்ந்து பங்குத்தந்தையாக அருள்பணி. பிளேஸ் SVD அவர்களும் (2010 - 2015), அருள்பணி. A. ஜோசப் SVD (2015 - 2016), அருள்பணி. Y. ஆரோக்கியதாஸ் SVD (2016 - 2022), தற்போது அருட்பணி. S. வளன் SVD (2022 முதல்…) அவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
திருத்தல அமைவிடமும் பொலிவும்:
முத்தும், முத்தமிழும் செழித்தோங்கிய பாண்டிய நாட்டிலே, வைகை நதி ஊடறுக்க, மாட கோபுரங்கள் செறிந்திருக்க, வரலாற்றுத் தடயங்கள் வாடிப் போகாமல் விளங்கும் மதுரை மாநகரிலிருந்து, திப்புசுல்தான் கோட்டை கட்டி ஆண்ட திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 27-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் வாடிமாநகரில் (வாடிப்பட்டி), அன்பின் மாட்சியாய், ஆற்றலின் அரசியாய் வீற்றிருக்கும், வற்றாத வரம் தரும் ஆரோக்கிய அன்னை, போக்கிடமிழந்து புலம்பித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் அளித்திடும் புகலிடமாய்த் திகழ்கின்றாள். "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்றுரைத்தவாறு இருகரம் விரித்தவராய், வாஞ்சையோடு
வரவேற்பவராய் இத்திருத்தலத்தில் மாட்சிமையோடு வீற்றிருக்கிறார் அருள்நாதர் இயேசு.
இத்திருத்தலம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, இறை பிரசன்னம் பொங்கி வழியும் இடமாக பல கோடி மக்களுக்கு ஆறுதல் தரும் இடமாகவும் மாறி உள்ளது. நலம் தரும் இயேசுவின் அருமருந்து வற்றாத வரம் தரும் வாடிமாநகர் ஆரோக்கிய அன்னைத் திருத்தலம் சிறப்புற, திலகமிட்டாற்போல் அமைந்தது திருத்தலத்தில் பொங்கிப் பீறிட்டு வரும் அற்புத நீருற்று. தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் என்ற எரேமியாஸ் இறைவாக்கினர் கண்ட காட்சியைப் போல, இத்திருத்தலப் பீடத்தின் வலப்புறத்தில் அகமகிழ்ந்து வீற்றிருக்கும் புனித ஆரோக்கிய அன்னையின் காலடியிலிருந்து, வற்றாத ஜீவ ஊற்று 2001ஆம் ஆண்டு அன்னையின் பிறந்த நாளான செப்டம்பர் 8ஆம் நாளன்று இரவு பொங்கி வரத் தொடங்கியது. 'வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன்' என்ற அருள்நாதர் இயேசு இந்நீருற்றை மருந்தாக, மாமருந்தாக, அருமருந்தாக ஆசீர்வதித்தார். இதனைப் பருகும் இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரக்கூடியதாக, தீராத நோய்களைத் தீர்க்கக்கூடியதாக இயேசுவின் அருமருந்து அமைந்துள்ளது.
அன்னையின் அருளால் பிணி போக்கும் இவ்வருமருந்தானது, பாக்டீரியா கிருமிகள் இல்லாதது என்று விஞ்ஞானப் பூர்வமாய் ஆராயந்து சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இவ்வருமருந்தை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானி டாக்டர் அருணாதேவி அவர்கள், பேரியம் என்ற அரியதொரு உப்பானது இவ்வருமருந்தில் கலந்துள்ளதாகவும், அதனால் அதைத் தேய்க்கும் அனைவருக்கும் தோல் வியாதிகள் சரியாகி விடுகின்றன என்றும் சான்றுரைத்துள்ளார்கள். இந்த மகத்துவம் மிக்க இயேசுவின் அருமருந்தானது ஒவ்வொரு
திருவழிபாட்டு நிகழ்விலும் மாட்சிமை படுத்தப்படுகின்றது. இயேசுவின் அருமருந்து நலம் தரும் மருந்து, பல இலட்சக்கணக்கான மக்கள் பாட்டில்களிலும், கேன்களிலும் இரவு பகல் பார்க்காமல் எடுத்துச் செல்வது திருத்தலத்தின் சிறப்பும் கண்கொள்ளா காட்சியும் ஆகும்.
கொடி மரம் - 2011:
திருத்தலத்திற்கு அழகூட்டும் வகையில் திருத்தல கொடிமரம் இருக்கிறது. 29-08-2011 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு. டாக்டர். பீட்டர் பெர்னாண்டோ D.D.Ph.D, அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் மதங்களைக் கடந்து கொடிமரத்தை சுற்றி, பொருத்தனை செய்து ஜெபித்து சாட்சிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
திருத்தல நுழைவு வாயில்:
சுமை சுமந்து சோர்ந்து இந்த திருத்தலத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் வரவேற்கும் விதமாகவும், ஆறுதல் தரும் விதமாகவும், மிகவும் பிரம்மாண்டமாக பக்தர்களை வரவேற்கிறது 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வாடிமாநகர் திருத்தல நுழைவு வாயில்.
சிலுவைப் பாதை நிலையங்கள்:
திருத்தலத்திற்கு வருகை தரும் திருப்பயணிகளுக்கு, பயனளிக்கும் வகையில் இயேசுவின் பாடுகளை பற்றி தியானிக்கும் வகையில், மிக அழகுற 14 - சிலுவைப் பாதை நிலைகள் 26-03-2017 அன்று அருட்பணி. அந்தோணி ஜோசப், SVD (மறை மாநில தலைவர்) அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் சிலுவைப் பாதை செய்து, தியானித்து இறையருளை பெறுகின்றனர்.
நற்கருணை ஆலயம்:
திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகளுக்கு மன அமைதியும், நிம்மதியும், கொடுக்கின்ற வகையிலே நற்கருணை சிற்றாலயம் 08.09.2018 அன்று புதுப்பிக்கப்பட்டது. எல்லா மக்களும் ஆறுதல் தேடும் இடமாக இன்றும் நற்கருணை ஆலயம் இருந்து கொண்டிருக்கிறது.
திருத்தலத் திருவழிபாட்டு நிகழ்வுகள்:
வாடிமாநகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மக்களால் போற்றப்படுவதற்கு முக்கிய காரணம், இத்திருத்தலத் தந்தையர்களால் பேணிக் காக்கப்படும் வழிபாட்டு முறைகள்தான் என்றால் மிகையாகாது. இத்திருத்தலத்தில் நடந்தேறும் ஒவ்வொரு வழிபாட்டு நிகழ்வும், திருப்பலிக் கொண்டாட்டம், நற்கருணை நாதரோடு உறவாடல், இயேசுவின் அருமருந்தால் குணமளிக்கும் வழிபாடு ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
திருப்பலி:
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் நற்கருணை ஆண்டாக அறிவிக்கப்பட்டு அகிலமெங்கும் நற்கருணை நாதர் மகிமைப்படுத்தப்பட்டு போற்றப்படுகிறார். வாடிமாநகர் ஆரோக்கிய அன்னைத் திருத்தலத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆலயம் புனிதப்படுத்தப்பட்ட நாள் முதல், நற்கருணை ஆராதனை வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. நற்கருணை வடிவில் நன்மைகளின் நாயகனாய் வீற்றிருக்கும் அருள்நாதர் இயேசுவை நோக்கிக் கண்ணீரோடு செபிக்க அருள்தந்தையர்கள் அறைகூவல் விடுக்கின்றனர். 'அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்' (தி.பா. 62 😎 என்ற மறைவார்த்தைகள் இத்திருத்தல அருள் தந்தையர்களால் அழுத்தமாய் மக்கள் உள்ளங்களில் விதைக்கப்பட, உடனே, மக்கள் இறைவனை நோக்கிச் செபிக்கத் தொடங்கி விடுகின்றனர். மக்களின் கருத்துக்களும், உணர்ச்சிகளும், கனவுகளும், விருப்பங்களும், வேதனைகளும் நற்கருணை நாதரோடு பகிரப்பட, சித்தாந்த கண்ணீர் சிந்தப்பட, கல்லான இதயங்கள் குமுறியழ, கருணை தேவன் கடைக்கண் நோக்குகிறார். தேடி வந்த தெய்வமாய், நற்கருணை நாதர் மக்களை நாடி வந்து ஆசீர் வழங்க, அவரைப் பார்த்த யாவரும் மட்டில்லா மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் பெறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இவ்வேளையில் ஆயிரமாயிரம் மக்களின் விண்ணப்பங்கள் நற்கருணை நாதரால் தொடப்படுகிறது. 'ஆண்டவர் நமக்குத் தொலைவில் இல்லை. அருகில் இருக்கிறார் கடவுள் நம்மோடு' (மத். 2:23) அவர் நம்மைப் பற்றி அக்கறை இல்லாதவர் அல்லர். "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை” (யோசுவா) "இயேசுவே தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” (மாற்கு 10:48) இருவிழி இழந்த பர்த்திமேயுவின் நம்பிக்கை நிறைந்த பெருங்குரல் அது. அவன் இயேசுவால் பார்வை பெற்றான்.
'ஆண்டவரே, காப்பாற்றும் சாகப் போகிறோம் ' (மத். 8:25) அடித்த புயலுக்கு நடுவே வெடித்த சீடரின் அபயக்குரல் இது. இயேசுவால் கடல் அமைதியானது. இயேசுவால் எல்லாம் முடியுமன்றோ! இத்திருத்தலத்தில் பெருங்குரலெடுத்துத் தம்மைக் கூவியழைப்போர்க்குப் பெருமகன் இயேசு செவிகொடுத்து உதவுவதை, அருள்பொழிந்து நலமும், மகிழ்வும், புத்துயிரும் நல்குவதை மக்கள் உய்த்துணர்கின்றனர்.
குணமளிக்கும் வழிபாடு:
ஒவ்வொரு திருப்பலியின் நிறைவிலும் குணமளிக்கும் வழிபாடு நடைபெறுகிறது. வாடிமாநகர் ஆரோக்கிய அன்னைத் திருத்தலத்தில் பொங்கிப் பீறிட்ட இயேசுவின் அருமருந்தானது, அருள்தந்தையர்களால் மக்களின் மீது ஊற்றப்படும்போது எண்ணற்றோர் தம்முள் புதியதோர் சக்தி பிறப்பதை உணர்கின்றனர். இயேசுவின் அருமருந்தை தம் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று, பற்றுறுதியோடு பருகிய மக்கள் உய்த்துணர்ந்த அருளடையாளங்களை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சாட்சியாக நன்றியோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒப்புரவு அருட்சாதனம்:
மக்களுக்கு ஆறுதல், ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. தினமும் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒப்புரவு அருட்சாதனம் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் கேட்கப்படுகிறது.
திருமண தகவல் மையம்:
திருமண வரன் தேடுவோருக்கு திருமணத் தகவல் மையம் திருத்தலத்தில் துவங்கப்பட்டு, பக்தர்கள் பயன்பெற்று அன்னையின் அருளை அனுபவித்து வருகிறார்கள்.
குழந்தை வரம்:
குழந்தை வரத்திற்காக பொருத்தனை செய்து செபிப்பவர்கள், மணலில் முழந்தால் படியிட்டு செபிக்க மணல் பாதை அமைக்கப்பட்டு, குழந்தை வரம் பெற்று, சாட்சிகளாக மாறி செல்கிறார்கள். சாட்சிய வாழ்வு நன்றி சொல்கின்ற மனம் ஆன்மீக வாழ்வுக்கும், அன்றாட உலக வாழ்வுக்கும் அடிப்படையான ஒன்றாகும். நன்றி மறவாமை என்பது மகிழ்ச்சிக்கு வழி, துன்புறுத்தும் மனச்சோர்வுக்கு மருந்து. வாடிமாநகர் ஆரோக்கிய அன்னைத் திருத்தலத்தை நாடி வந்த இறை அன்பர்களுக்காக, அன்னை பரிந்துரைக்க, ஆண்டவர் செவிமடுக்க, பெற்ற பெருவளத்தை சாட்சியமாக மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அப்பகிர்வின் மூலமாக, இரந்து மன்றாடும் பலருக்குள்ளும் இறை நம்பிக்கை ஆழப்படுகிறது.
இத்திருத்தலத்தை நாடி வந்து ஆரோக்கிய அன்னையிடமும், அருள்நாதர் இயேசுவிடமும் கண்ணீரோடு மன்றாடி இயேசுவின் அருமருந்தை நம்பிக்கையோடு பருகியவர்கள் எய்ட்ஸ், கொடிய மஞ்சள் காமாலை, இதய அடைப்புகள், இதயத்திலுள்ள ஓட்டைகள், புற்றுநோய் கட்டிகள், மகப்பேறின்மை, ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, வலிப்புநோய், சிறுநீரகக் கோளாறுகள், சொரியாசிஸ், தோல் சம்மந்தமான நோய்கள், மனநோய், மூலநோய், விபத்தில் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்தோர், அல்சர் உள்ளிட்ட கொடிய வியாதிகளாலும், பேய் பிசாசுகளின் தொல்லைகள், குடிப்பழக்கம் போன்ற தீமைகளிலிருந்து விடுதலையும், நற்சுகமும் அடைந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் சாட்சியத்தினை எழுத்துப் பூர்வமாகவும், ஆயிரமாயிரம் மக்களுக்கு முன்பாக மருத்துவ அறிக்கைகளோடும் சான்று பகர்ந்துள்ளனர்.
இவ்வாறாக கடந்த 24 ஆண்டுகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் திருத்தலத்தில் மக்கள் முன்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் இத்திருத்தலத்திற்கு வந்து மனதுருகி மன்றாடிய எண்ணற்றோர் தங்களின் கடன் தொல்லை, நிலத்தகராறு, பொய்வழக்கு ஆகியவற்றிலிருந்து விடுதலையும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தேர்வில் வெற்றி, வியாபாரத்தில் முன்னேற்றம், எதிர்பாராத பண உதவிகள், விவசாயம் செழித்து விளைச்சல் பெருகிட, மரம், செடி, கொடிகள் தழைத்தோங்க, படித்து முடித்தோர்க்கு வேலை வாய்ப்பு....... இப்படியாய் அன்னையின் வரம் பெற்றோர் ஏராளம். திருத்தலத்தின் உள்ளேயும், திருத்தல வளாகத்திலும் முழு அமைதி காக்கப்படவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இத்திருத்தலம் ஒரு புனிதமான இடம். எனவே, இதை சுற்றுலா மையமாகவோ, பொழுதுபோக்கு இடமாகவோ, வேடிக்கை விளையாட்டு தளமாகவோ மாற்றாமல், உயிருள்ள விசுவாசத்தோடு செபித்து அருள் ஆசீரையும், அற்புதங்களையும் பெற்றுச் செல்ல இறையன்பர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
திருவிழா காலங்களில் நடைபெறும் தேர்ப்பவனியில் வானவேடிக்கை இல்லாமல், இறைவார்த்தை, ஜெபமாலை, அன்னையின் பக்திப் பாடல்கள் மட்டுமே பவனியில் இடம் பெறும். இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நான்கு திருப்பலிகளும், மற்ற எல்லா நாட்களிலும் மூன்று திருப்பலிகளும், தேவைப்படுமாயின் சிறப்புத் திருப்பலிகளும், ஒவ்வொரு திருப்பலியைத் தொடர்ந்து குணமளிக்கும் வழிபாடும் நடைபெற்று வருகிறது.
பாசத்துடன்: அருட்பணி. S. வளன் SVD திருத்தல அதிபர், பங்குத்தந்தை.
சாட்சியங்கள்:
1. நான் சாந்தி, புதாயக்குடி. வயது 27. எனக்குத் தீராத வயற்றுவலி மூன்று வருடங்களாக இருந்தது. எனவே மாதாவிடம் வந்து ஜெபித்து உருக்கமாக வேண்டினேன். அருமருந்தைக் குடித்து பூரண சுகம் பெற்றேன். என்னுடைய திருமணம் விரைவில் நடைபெற வேண்டுமென வேண்டினேன். அதன்படியே நல்ல வாழ்க்கைத்துணை கிடைத்தது. இத்தகைய அற்புதச் செயல்களைச் செய்த அன்னைக்கு என் கோடான கோடி நன்றி.
2. இன்னாசியம்மாள், உண்டார்பட்டி, திண்டுக்கல். என் மகள் பெயர் சாந்திமேரி. திருமணம் முடிந்து 6 மாதம் கழித்து வீட்டில் பிரச்சினை, வீட்டில் நிம்மதி இல்லை. செய்வினைக் கோளாறு. செய்வினையால் என்மகள் வயிற்றில் புண் ஏற்பட்டு வாய்வு பிரச்சினையும் இருந்தது. சாப்பிட முடியாமல் இருந்தாள். மருந்து சாப்பிட்டும் பயனில்லை. வாடிமாநகர் ஆரோக்கிய அன்னையிடம் செபம் செய்து இயேசுவின் அருமருந்தைக் குடித்த பிறகு செய்வினையும் இல்லை. வீட்டில் பிரச்சினையும் இல்லை. இயேசுவுக்குக் கோடான கோடி நன்றி.
3. சூசை மாணிக்கம், புதூர் மதுரை. கார் விபத்து ஏற்பட்டு என் கணவனுக்கு தலையில் பலத்த அடி. முதலில் ஆபரேசன் செய்து தைக்கும் போது தையல் சரியில்லாமல் சீழ் வைத்துவிட்டது. உடனே வாடிப்பட்டி கோயிலுக்கு நானும், என் கணவனும் வந்து மாதாமுன் செபித்தோம். மாதாவின் அருமருந்தை என் கணவனுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு தலையிலும் நம்பிக்கையோடு தடவினேன். அதே வாரத்தில் இரண்டாவது ஆபரேசனுக்காக போனபோது மண்டை ஓட்டை உடைத்து பார்த்தபோது எதுவுமே இல்லை. உடனே மாதாவுக்கு வந்து நன்றி செலுத்தினேன்.
4. P காந்தி, மணியாரம்பட்டி, திருச்சி. எனக்கு வயிற்றில் கேன்சர்கட்டி வந்துவிட்டது என்று ஆஸ்பத்திரியில் ரிப்போர்ட் கொடுத்து விட்டார்கள். உடம்பில் 25 முறை கரண்ட் வைத்தார்கள். எதற்கும் குணம் கிடைக்கவில்லை. பின் இரண்டு வாரம் வாடிமாநகர் கோயிலுக்கு வந்து ஜெபம் செய்து இயேசுவின் அருமருந்தைக் குடித்து, கண்ணீரோடு ஜெபித்தேன். பின் டாக்டரிடம் சென்று பார்த்த போது கேன்சர் இல்லை என்று சொல்லி விட்டார்கள். மாதாவுக்கு நன்றி.
5. பொன்னுசாமி, திருப்பத்தூர், சிவகங்கை. எனக்குச் சிறுநீரகத்தில் புற்று நோய் வந்து பல ஆஸ்பத்திரிகளில் காண்பித்தும் சரியாகவில்லை. மதுரை GH இல் காண்பித்த போது புற்றுநோய் முற்றி விட்டது. ஆகவே இனிமேல் ஆபரேசன் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். அந்தச் சமயம் என் நண்பர் மூலம் வாடிமாநகர் ஆரோக்கிய அன்னையின் அற்புதங்களைக் கேள்விப்பட்டு, வாடிமாநகர் ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தில் இயேசுவின் அருமருந்தைக் குடித்தேன். இயேசுவிடம் ஜெபித்தேன். இப்பொழுது சுகமாக இருக்கின்றேன்.
6. P. கில்டாமேரி, அந்தோணியார்பட்டி, திண்டுக்கல். எனக்கு வயது 11. சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலி வந்தது. என்னால் சாப்பிட முடியாமல், எழுந்து உட்கார முடியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் என் அக்கா ஜான்ஸிராணி (15) வாடிப்பட்டி கோயிலில் வாங்கி வந்த இயேசுவின் அருமருந்தை என்னிடம் குடிக்கச் சொல்லிக் கொடுத்தாள். நாங்கள் அடிக்கடி வாடிப்பட்டிக் கோயிலுக்குச் சென்று ஜெபிப்போம். அப்போது கொண்டு வந்த அருமருந்தை ஜெபித்துக் கொண்டே தினமும் வயிற்றில் தடவிக் கொண்டும், குடித்துக் கொண்டும் வந்தேன். எனக்கு வயிற்றுவலி சரியானால் சாட்சி சொல்வதாக வீட்டில் இருந்து கொண்டே ஜெபித்துக் கொண்டேன். மூன்றே நாட்களில் எனது வயிற்று வலியை அருமருந்து தீர்த்து வைத்தது. அந்த அதிசயத்தைச் செய்த இயேசுவுக்கு நன்றி சொல்லி சாட்சி சொல்கிறேன்.
7. லதா, ரெங்கப்பனூர், திண்டுக்கல். நான் 3 மாதமாக கால் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். திண்டுக்கல் மாவட்டத்தில் நான் பார்க்காத மருத்துவமனை இல்லை. நிறைய ரூபாய் செலவு செய்தும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகாமல், என் குழந்தையைக் கூட தூக்க முடியாமல் வருந்தினேன். என் அன்னையின் சொல்படி, இத்திருத்தலம் வந்து மாதாவிடம் வேண்டிக்கொண்டு, அருமருந்து சாப்பிட்டு, என் கால் குணமாகி, என் வலி மறைந்து, இப்போது என்னால் அனைத்தும் செய்ய முடிந்தவளாகி விட்டேன்.
8. எஸ்தர் மேரி, மைக்கேல்பட்டி, தஞ்சாவூர். என் மகள் செல்வி கிரிஜா தேவிக்குப் பல வருடங்களாக வரன் கிடைக்காததால் எனக்கு வேதனையாக இருந்தது. இச்சூழலில் நான் வாடிமாநகர் கோயிலுக்கு வந்து தாயிடம் வேண்டினேன். தாயே! எங்கள் குடும்பத் தகுதிக்கேற்ற வரன் கிடைக்க வேண்டும் என்றும், என்மகள் திருமணம் நல்லபடி முடிந்தால் நான் இங்கு சாட்சி சொல்வேன் என்றும் வேண்டினேன். நான் நினைத்தபடி என் மகளுக்குத் திருமணம் நன்கு முடிந்தது. நல்ல வரன் அமைந்தது. இதற்குக் காரணம் வாடிமாநகர் தாயின் அருள்தான் என்றும் கூறுகிறேன்.
9. ஆரோக்கியராஜ், பொன்மலை - திருச்சி. நான் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்தேன். என் நண்பன் ஜெயசீலன் கடந்த இரு வாரங்களாக என்னை வாடிமாநகருக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. (09-07-05) அன்று நான் வாடிமாநகர் மாதாவிடம் செல்வேன் என்று கூறிவிட்டு எனது வேலை விசயமாக அதிகாரிகளைப் பார்க்கச் சென்றேன். அப்போது எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைத்தது. அதுதான் என் கையை விட்டுப் போன இரயில்வே வேலை. அடுத்த வாரம் வந்து உமது கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். நான் வாடிமாநகருக்கு வந்த மறுவாரமே வேலைக்குச் சென்றுவிட்டேன். என் நண்பர் மூலமாக வாடிமாநகர் மாதா எனக்கு உதவி செய்தார். அதற்காக நன்றி.
10. அமலலோற்பவம், கடியபட்டணம், கன்னியாகுமரி. என் மகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன் நான் இங்கு வந்து வேண்டி இயேசுவின் அருமருந்தைக் கொண்டு சென்று என் மகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன். எனவே தேர்வில் 1022 மதிப் பெண்கள் பெற்றாள். அதுமட்டுமல்லாமல் சிறிது காலத்திலேயே நல்ல வேலையும் கிடைத்தது. மாதாவின் அருளால் என் மகளுக்கு நல்ல வேலை கிடைத்ததற்காக நன்றிகள் பல.
11. M. மேரி, நாகர்கோவில். எனக்கு இரண்டு முறை வலிப்பு நோய் வந்தது. மற்றும் மூல நோயும் இருந்தது. நான் மாதாவின் திருத்தலத்திற்கு வந்து செபம் செய்துவிட்டுப் போனேன். மீண்டும் ஜூலை முதல் வாரம் காய்ச்சலோடு வந்து செபம் செய்துவிட்டுப் போனேன். குணமானது. 23-7-05 அன்று காலையில் பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மிகவும் களைப்பாக இருந்தது. எனவே இந்த வாரம் வாடிப்பட்டிக்குப் போக வேண்டாம் என்று நினைத்து உறங்கிக் கொண்டிருந்தேன். மாதா கனவில் உயிரோடு கையை அசைத்து தலையை அசைத்து கண்ணீர் வடித்தார்கள். கண் விழித்ததும் உடனே வாடிப்பட்டிக்குப் புறப்பட்டு வந்து சாட்சி கூறுகிறேன்.
12. S. ஜெர்த்ரூத் லோபஸ், கோடிமுனை, கன்னியாகுமரி. கடந்த ஜூன் மாதம் இடுப்பு வலியால் துடித்தேன். இடுப்பில் தேங்காய் அளவில் ஒரு பெரிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று கூறினர். ஆகவே நான் தினமும் காலையில் இயேசுவின் அருமருந்தை எடுத்துக் குடித்தேன். மேலும் தினமும் மாதாவிடம் வேண்டினேன், அதன்படி இப்போது மாதாவின் அருளால் நான் நன்றாக வாழ்கிறேன்.
13. J. மேரி, கீழமுட்டம், கன்னியாகுமரி. 2004, டிசம்பர் 26ஆம் நாள் சுனாமி நேரத்தில், எங்கள் பகுதியிலும் சுனாமி தாக்கியது. அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டோம். 9 வயதான என் மகனை அலை அடித்துக் கொண்டு சென்ற போது, அவன் வாடிமாநகர் மாதாவை நோக்கி வேண்டிக் கொண்டே சென்ற போது வழியில் உள்ள ஒரு வேப்பமரத்தைப் பிடித்துக் கொண்டான். பின் மிகவும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான். என் மகனை மீட்டுக் கொடுத்த அன்னைக்குக் கோடான கோடி நன்றிகள்.
14. கீதா ராணி, திண்டுக்கல். எனக்கு சொரியாசிஸ் வியாதியினால் மிகவும் கஷ்டப்பட்டேன். வாடிமாநகர் அன்னையிடம் ஜெபம் செய்து இயேசுவின் அருமருந்தைத் தடவினேன். இப்பொழுது பரிபூரணமாக உடல் நலம் பெற்றேன். இயேசுவுக்குப் புகழ், மரியே வாழ்க !
15. ஆரோக்கிய மேரி, கீரனூர். எனது மாமியாவிற்கு வண்டு கடித்து புண் சரியாகாமல் இருந்து. பின் வாடிமாநகரில் அன்னையிடம் ஜெபம் செய்து இயேசுவின் அருமருந்தைத் தடவினேன் இப்பொழுது புண் சரியாகிவிட்டது. மாதாவிற்கு கோடான கோடி நன்றி.
16. அருண், மயிலாடுதுறை. எனக்கு விபத்து ஏற்பட்டு தலையில் அடிப்பட்டது அதில் ஞாபக மறதி மற்றும் பேச முடியாமலும் கஷ்டப்பட்டேன். பிறகு வாடிமாநகர் வந்து இயேசுவின் அருமருந்தை குடித்தும் தடவியும் வந்தேன். இப்பொழுது பரிபூரணமாக குணமடைந்தேன். மாதாவிற்கு நன்றி.
17. சசிகலா, சென்னை.
என் மகளுக்கு வலிப்பு நோய் இருந்தது. பிறகு வாடிமாநகர் அன்னையிடம் வந்து வேண்டி, இயேசுவின் அருமருந்தை குடிக்கக் கொடுத்தோம். இப்பொழுது வலிப்பு நோய் முற்றிலுமாக குணமானது. இயேசுவுக்குப் புகழ்! மரியே வாழ்க!
18. பூமொழியாள், பாக்கியநாதபுரம், மதுரை. எனக்கு கிட்னியில் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். பிறகு வாடி மாநகர் அன்னையை நோக்கி ஜெபம் செய்து இயேசுவின் அருமருந்தை குடித்தேன் இப்பொழுது பரிபூரணமாக நல்ல உடல் நலம் பெற்றேன் மரியே வாழ்க!
19. சந்திரமோகன், ஒண்டிபுதூர் - கோவை. எங்களுக்கு 15 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அன்னையிடம் வந்து வேண்டினோம். இப்பொழுது இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்தது இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!
20. ஜெயராஜ் - பரமக்குடி. எனக்கு டிபி நோய், சர்க்கரை நோய் இருந்து வந்தது. வாடி மாநகர் அன்னையிடம் வந்து ஜெபம் செய்து, இயேசுவின் அருமருந்து குடித்தேன். இப்பொழுது அனைத்து நோய்களும் சரி ஆகிவிட்டது. இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!
21. ரசிகா, இராமநாதபுரம். எனது மகளுக்கு 11 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. வாடிமாநகர் அன்னையிடம் வேண்டினோம். இப்பொழுது அழகான குழந்தையை கொடுத்த மாதாவிற்கு கோடான கோடி நன்றி!
22. மேக்ஸின் - கும்பகோணம். எனது கணவருக்கு நுரையீரல் பாதிப்பினால் மிகவும் கஷ்டப்பட்டார். பிறகு வாடிமாநகர் அன்னையிடம் வந்து ஜெபம் செய்து இயேசுவின் அருமருந்தை குடிக்கக் கொடுத்தோம். இப்பொழுது பரிபூரணமாக குணமடைந்தார். இயேசுவுக்குப் புகழ், மரியே வாழ்க !
23. ஜெசி பிரித்தா - தஞ்சாவூர். என் பேத்தி கார் விபத்தில் பலத்த அடிபட்டு சுய நினைவின்றி இருந்தாள். பிறகு வாடிமாநகர் அன்னையிடம் வந்து கண்ணீரோடு ஜெபம் செய்தோம், உயிர் கொடுத்து சுய நினைவை கொடுத்த மாதாவிற்கு கோடான கோடி நன்றி.
24. ராஜி பார்த்தசாரதி - மூலனுர். எனக்கு 15 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன். வாடிமாநகர் அன்னையிடம் வந்து வேண்டினேன். இப்பொழுது அழகான குழந்தையை கொடுத்த மாதாவுக்கு கோடான கோடி நன்றி.
25. அந்தோணியம்மாள், தரங்கம்பாடி. என் மகன் பனைமரத்தில் இருந்து விழுந்ததில், முதுகு மற்றும் எலும்புகள் ஒடிந்து நடக்க முடியாமல் வேதனைப்பட்டான். அதனால் வாடிமாநகர் அன்னையிடம் ஜெபம் செய்தேன். இப்போழுது பரிபூரணமாக குணமடையச் செய்த மாதாவிற்கு கோடான கோடி நன்றி.
இவ்வாறு அன்னையின் பரிந்துரையால், நடந்த புதுமைகள் ஏராளம்!! ஏராளம்!!! அவற்றையெல்லாம் எழுதினால் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே செல்லலாம்.
திருத்தல பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இளையோர் இயக்கம்
4. பாலர் சபை
பங்கில் உள்ள பள்ளிகள் & மருத்துவமனை:
1. புனித ஃபுஷ்கோஸ் உயர்நிலைப்பள்ளி
2. புனித சார்லஸ் மழழையர் பள்ளி
3.புனித சார்லஸ் துவக்கப்பள்ளி
4. புனித சார்லஸ் நடுநிலைப்பள்ளி
5. நசரேன் மழழையர் பள்ளி
6. ஆர்.சி துவக்கப்பள்ளி
7. புனித அருளப்பர் மருத்துவமனை
இல்லங்கள்:
1. அருளகம் இல்லம் ஃபஸ்கோஸ் பள்ளி (திருமுழுக்கு யோவான் அருட் சகோதரிகள் )
2. சாந்தி சதன் புனித அருளப்பர் மருத்துவமனை (திருமுழுக்கு யோவான் அரட்சகோதரிகள்)
3. கருணை இல்ல முதியோர் இல்லம் (சமாரிட்டன் அருட்சகோதரிகள்)
4. டான் இல்லம் (அலோசியஸ் கொன்சாகா அருட்சகோதரிகள்)
5. அலோசியஸ் கொன்சாகா மறை மாநில தலைமை (அலோசியஸ் கொன்சாகா அருட்சகோதரிகள்)
6. புஷ்பகம் இல்லம் (திருமுழுக்கு யோவான் அருட்சகோதரிகள்)
7. பல்லோட்டியன் இல்லம் (பல்லோட்டியன் அருட்சகோதரிகள்)
8. புனித சார்லஸ் பள்ளி கல்வி நிறுவனங்கள் (திரு இருதய அருட்சகோதரர்கள்)
9. புனித அர்னால்டு இல்லம் (திருத்தல இறைவார்த்தை சபை குருக்கள்)
10. இறைவாக்கு தியான மையம் (இறைவார்த்தை சபை குருக்கள்)
11. அமைதியகம் குருக்கள் இல்லம் (இறைவார்த்தை சபை குருக்கள்)
தங்குமிடங்கள்:
1. திருப்பயணிகள் தங்குவதற்கு அறைகள்
2. திருப்பயணிகள் தங்கும் கூடாரங்கள்.
இத்திருத்தலமானது:
மனத்துயர் கொண்டோருக்கு ஆறுதல் தரும் புகலிடம். ஆறுதல் தேடுவோருக்கு அடைக்கலக் கோட்டை. உடல், உள்ளம், ஆன்ம நோய் நீக்கும் மருத்துவமனை. தீயோரைத் திருத்தும் திருத்தலம். விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் ஊன்றுகோல். இறை உறவில் ஒன்றிணைக்கும் பாலம். சுமை சுமந்து சோர்ந்தோருக்கு சுமை தாங்கி. தீய சக்திகளை சுட்டெரிக்கும் தீச்சூளை. பேய்களை ஓடச் செய்யும் கேடயம். இறை அன்பு சுரக்கச் செய்யும் இல்லிடம்...
இத்தனை அருட்பொலிவுகளும் நிறைந்த நம் தாயின் திருத்தலத்தில், மனம் உருகி கண்ணீர் வடித்து, மக்கள் தாயிடம் மன்றாடுகிற போது, தாயின் பரிந்துரையால் இறைமகன் இயேசு முழு மனித மீட்பு அளிக்கிறார். அதனால் தான் இத்திருத்தலத்தைத் தேடி வரும் தம் பிள்ளைகளின் வேண்டுதல்கள் உடனுக்குடன் கேட்கப்பட்டு, சாட்சிகளாக மாறுகிறார்கள்.
சிந்திப்போம்... "இறந்து உயிர்த்த இயேசு இறையாட்சியைப் பற்றி கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்" (திதூ 1:3) இறையருள் பெருவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார் (2 கொரி 4:15) 'ஆண்டவரே நீர் எங்கே தங்கி இருக்கிறீர்?' 'வந்து பாருங்கள்' ஆம் அன்பர்களே! இம்மகிமை நிறைந்த வற்றாத வரம் தரும் வாடிமாநகர் திருத்தலம் வாருங்கள். இயேசு தரும் மீட்பை பெற்றுக் கொள்ள மட்டுமல்ல, "இயேசுவை மீட்பர்" என்பதை விசுவசிக்க மட்டுமல்ல, 'இயேசுவே என் மீட்பு' அவரை நான் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு திருத்தலம் வாருங்கள். 'ஆண்டவர் எத்துணை மதுரமாய் இருக்கிறார்' என்று சுவைத்து, சாட்சிகளாகவும் சீடர்களாகவும் வாழுங்கள்…
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. S. வளன், SVD அவர்கள்.