புனித பரலோக அன்னை ஆலயம்
இடம்: மரியதாய்புரம், வி.கே புதூர் தாலுகா, வாடியூர் அஞ்சல், 627861
மாவட்டம்: தென்காசி
மறைமாவட்டம்: பாளையங்கோட்டை
மறைவட்டம்: தென்காசி
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், வாடியூர்
பங்குதந்தை அருள்பணி. F. லியோ ஜெரால்டு
குடும்பங்கள்: 400
அன்பியங்கள்: 12
ஞாயிறு திருப்பலி காலை 10:30 மணி
திங்கள், வியாழன் திருப்பலி மாலை 07:00 மணி
செவ்வாய், புதன், சனி திருப்பலி காலை 05:30 மணி
வெள்ளி திருப்பலி மாலை 07:15 மணி
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 14,15 தேதிகளில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தேர்பவனி, கும்பிடு சேவை. 16ம் தேதி கொடியிறக்கம்
மே மாதம் கடைசி வெள்ளி லூர்து அன்னை கெபி திருவிழா.
சனி, ஞாயிறு பரலோக அன்னை நவநாள் திருவிழா
(திருப்பலி, தேர்ப்பவனி நடைபெறும்)
செப்டம்பர் 8-ம் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா.
நவம்பர் மாதத்தில் புனித செபஸ்தியார் திருவிழா. திருப்பலி, தேர்பவனியுடன் விழா நிறைவு பெறும்.
புனித லூர்து அன்னை அற்புத கெபியில் மாதத்தின் கடைசி சனிக்கிழமை திருப்பலி, குணமளிக்கும் நற்செய்திக் கூட்டம்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. N. ஜேம்ஸ் நிக்கோலாஸ் (late), பாளை மறைமாவட்டம்
2. அருட்பணி. A. ஜெயபாலன், பாளை மறைமாவட்டம்
3. அருட்பணி. S. அந்தோணி சவரிமுத்து (late), தூத்துக்குடி மறை மாவட்டம்
4. அருட்பணி. L. செல்வராஜ்,
பாளை மறைமாவட்டம்
5. அருட்பணி. அன்னராஜ், SJ
6. அருட்பணி. சாலமோன், C.R
7. அருட்பணி. சாலமோன், குவனெலியன் சபை
8. அருட்பணி. அந்தோணி முத்து, OCD
9. அருட்பணி. மரிய ஆல்வின் ராஜா, SJ
அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. A. லீமா ரோஸ், FSM
2. அருட்சகோதரி. D. சீமோன் ராயம்மாள் (எ) ஜீவா, திருச்சிலுவை சபை
வழித்தடம்: தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து சுரண்டை வந்து, சுரண்டையில் இருந்து 7கி.மீ தொலைவில் மரியதாய்புரம் அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/YKGzKu
வரலாறு:
பதினெட்டாம் நூற்றாண்டில் முன்னோர்கள் எட்டு கிறிஸ்துவ குடும்பங்களாக மரியதாய்புரம் மண்ணில் குடியேறி; பனையேறும் தொழில், விவசாயத் தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.
அன்று வெறும் எட்டு குடும்பங்களாக மட்டும் இருந்த ஊர் இன்று, நானூறு குடும்பங்களாக வளர்ச்சிப் பெற்று சுமார் 1500 கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களாய் உயர்ந்து இருப்பது, புனித மரியன்னை இந்த ஊருக்கு அளித்த அருளும் வரமுமாகும்.
அன்று பதினெட்டாம் நூற்றாண்டில் வாடியூர், மரியதாய்புரம், ஆனைகுளம், கருவந்தா, ராஜகோபாலப்பேரி ஆகிய ஊர்களில் உள்ள கிறிஸ்துவ மக்கள்; வாடியூரில் புனித திருமுழுக்கு யோவான் பெயரில் கட்டப்படிருந்த கல்- மண்டபத்தில் கூடி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
அதன் பின்பு 1913-ம் ஆண்டு வாடியூரில் கல் மண்டபத்தை சேர்த்து பெரிய கோயிலாக கட்டியெழுப்பி ஒன்றாய் வழிபட்டு வந்துள்ளனர்.
மரியதாய்புரத்தில் ஆலயம்:
அதன் பின்பு 1915-ல் மரியதாய்புரம் ஊரில் தற்போது உள்ள ஆலயத்தின் வடகிழக்கு பகுதியில் ஓலைக்குடிசை அமைத்து, புனித பரலோக அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
அக்காலத்தில் சேர்ந்தமரம் பங்கில் இருந்த அருட்பணி. இவானா, சே.ச. அவர்களால் இந்த ஓலக்குடிசைக் கோயில் கட்டப்பட்டிருக்கின்றது.
1917 ஆம் ஆண்டு ஓலைக்குடிசை ஆலயம் சற்று பெரியதாக கட்டப்பட்டது.
1920 ஆம் ஆண்டு முதல் சேர்ந்தமரம் பங்கின் கிளைப்பங்காக மரியதாய்புரம் ஆனது.
1917-ம் ஆண்டு ஓலைக்குடிசை ஆலயத்தை மாற்றி, சற்று பெரிய ஆலயமாக கட்டியுள்ளார்கள்.
1935-ல் அருட்பணி. இவானா, சே.ச சுவாமி காலத்திலேயே மரியதாய்புரத்தில் R.C. தொடக்கப்பள்ளியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மரியதாய்புரமானது 05-05-1946 அன்று முதல், ஊத்துமலை பங்கின் கிளைப் பங்காக ஆனது.
1951-ல் அருட்பணி. மனுவேல் அடிகளார் அவர்களால் ஆலயத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. பின்பு 1956-ல் அருட்பணி. T. A. சூசை அடிகளார் அவர்களால் ஓலைக்குடிசை ஆலயத்தை மாற்றி, கான்கிரீட் ஆலயமாக மாற்றப்பட்டது.
1963-ம் ஆண்டு மருதாய்புரம் என்ற ஊரின் பெயரை, மரியன்னையின் நினைவாக "மரியதாய்புரம்" என அரசு ஏடுகளில் மாற்றம் செய்யப்பட்டது.
பின்பு 1975-ல் அருட்பணி. ஜெயபாலன் அடிகளார் காலத்தில் ஆலயத்திற்கு அழகான கோபுரமும், மொசைக் தளமும் போடப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு அருட்பணி. ஜோசப்ராஜ் அவர்களால் அருட்சகோதரிகள் இல்லம் (HOLY CROSS CONVENT) கொண்டு வரப்பட்டது. இந்த அருட்சகோதரிகள் வருகைக்குப் பின்னர் இந்த ஊர் கல்வியின் தரத்தில் மிகமிக வளர்ச்சி பெற்று விளங்கியது. இன்றும் தரத்தில் சிறந்ததாய் திகழ்கிறது.
1992-ம் ஆண்டு அருட்பணி. ஜோசப்ராஜ் அடிகளார் அவர்களாலே புனித லூக்கா மருத்துவனையும் கொண்டு வரப்பட்டது. இம் மருத்துவமனையால் இன்றும் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
மரியதாய்புரமானது, ஊத்துமலை பங்கிலிருந்து பிரிந்து, 25-04-1992 அன்று முதல் சுரண்டை பங்கின் கிளைப் பங்காக ஆனது.
1995-ம் ஆண்டில் அருட்பணி. ஆரோக்கியசாமி அவர்களின்
முயற்சியால் பள்ளியானது, R.C. நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.
10-07-1995 மற்றும் 30-12-2018 ஆகிய ஆண்டுகளில் புதிய பள்ளி கட்டிடம் நன்கொடையாளர் நிதியுதவியுடன் கட்டப்பட்டது.
அருட்பணி. சகாய சின்னப்பன் அவர்களால் நமது மறை மாவட்ட ஆயர் மேதகு, ஜூடு பால்ராஜ் D.D., தலைமையில் புதிய ஆலயம் கட்டுவதற்கு 08-08-2005 அன்று அடிக்கல் நாட்டப்பட்டடது.
21.05.2006 அன்று வாடியூர் பங்காக உருவானது. அன்று முதல் மரியதாய்புரம் ஆலயம், வாடியூரின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. L. அலாய்சியஸ் துரைராஜ் அவர்கள் பொறுப்பேற்றார்கள். புதிய ஆலயம் கட்டுவது குறித்த செயல்கள் தடைபட்டுக்கொண்டே சென்ற சமயம், இவரது தைரியமான முயற்சியால்
அன்னையின் ஆசீரோடு புதிய ஆலயப்பணி தொடங்கப்பட்டது. 27-07-2006-ல் இக்கோவில் தளம் அஸ்திவாரம் தொடங்கப்பட்டு இரவு, பகல் பாராமல் ஆலயப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
அருட்தந்தை அவர்களும் தனது கடின உழைப்பையும், நேரத்தையும் இந்த பணிக்காக அளவில்லாமல் தியாகம் செய்தார்கள் என்பதை மறக்க முடியாது. ஆனால் தந்தையின் காலத்திலேயே ஆலய பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை.
இவருக்கு அடுத்ததாக அருட்பணி. அருள் அரசு அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள். பாதியில் நின்ற ஆலயப் பணிகளை இவரும் தடையில்லாது தனது கடின முயற்சியால், ஊர் மக்களின் கடின உழைப்புடனும், ஆதரவுடனும் மற்றும் பல நன்கொடையாளர்களின் உதவியுடனும்,
கட்டிமுடித்து, 08.09.2009 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
27-02-2022 அன்று அருட்பணி. S.L. ஸ்டீபன் அவர்களால் புனித லூர்து அன்னை கெபிக்கு கெபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் அளவில்லாத ஒத்துழைப்பாலும், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களின் தாராள நன்கொடைகளாலும் திருப்பணிகள் நிறைவு பெற்று, 26.05.2023 அன்று மேதகு ஆயர். அந்தோணிசாமி ஆண்டகை
(பாளை மறை மாவட்டம்) அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. புதிய வெண்கல கொடிமரம்
மண்ணின் நன்கொடையாளரின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டு, 26.05.2023 அன்று ஆயர். அந்தோணிசாமி ஆண்டகை அவர்களாலே மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. லியோ ஜெரால்டு அவர்கள் சிறப்பான வழிகாட்டலில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது மரியதாய்புரம் இறைசமூகம்.
அன்பியங்களும் அவற்றின் பெயர்களும்:
1. செக்கரியா
2. யோபு
3. மீக்கா
4. ரூத்து
5. எலிசா
6. சாமுவேல்
7. தானியேல்
8. தாவீது
9. எஸ்ரா
10. எசாயா
11. அன்னை தெரசா
12. சாலமோன்
13. ஆமோஸ்
14. எஸ்தர்
ஆலய பங்கேற்பு அமைப்புகள்:
1. புனித வின்சென்ட் தே பவுல் சபை
2. திருச்சிலுவை தோழிகள் சபை
3. புனித பரலோக அனையின் வேளாங்கண்ணி பாதயாத்திரை குழு
4. புனித கத்தோலிக்க புது வாழ்வு இயக்கம்
5. புனித பரலோக அன்னை இளைஞர் சபை
6. புனித காமராஜர் இளைஞர் சபை
7. புனித பரலோக அன்னையின் பாடகற் குழு
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. லியோ ஜெரால்டு அவர்களின் வழிகாட்டலில், ஆலய உறுப்பினர் திரு. M. ஜெகன் அவர்கள்.