புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்
இடம்: சவேரியார் பாளையம் (சவரிபாளையம்), 641028
மாவட்டம்: கோயம்புத்தூர்
மறைமாவட்டம்: கோயம்புத்தூர்
மறைவட்டம்: கோயம்புத்தூர்
நிலை: பங்குத்தளம்
குடும்பங்கள்: 1500+
அன்பியங்கள்: 83
பங்குத்தந்தை அருட்பணி. P. மரிய ஜோசப்
உதவி பங்குத்தந்தை அருட்பணி. நல்ல ஜேக்கப் தாஸ்
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, 07:30 மணி, 09:30 மணி மற்றும் மாலை 05:30 மணி
நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி மற்றும் மாலை 06:00 மணி
புதன் மாலை 06:00 மணி புனித சவேரியார் நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் புதன் காலை 10:00 மணி முதல் நண்பகல் 01:00 மணி வரை புனித சவேரியார் நவநாள், திருப்பலி, நற்கருணை ஆராதனை
திருவிழா: டிசம்பர் மாதம் 03-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
13 அருட்பணியாளர்களையும், 1 அருட்சகோதரரையும், பல அருட்சகோதரிகளையும் மறைப்பரப்புப் பணிக்காக தந்துள்ளது சவேரியார் பாளையம் இறைசமூகம்.
வழித்தடம்: கோயம்புத்தூர் -சுங்கம் -புலியகுளம் -சவரிபாளையம்
Location Map: St. Francis Xavier's Church 0422 257 2854
https://maps.app.goo.gl/myCzBqG4LRM85KmPA
வரலாறு:
தோற்றம்:
மங்கா புனிதமிகு புகழ் கொண்ட மறைந்தும் மறையாத புனித உடல் கண்ட புனித சவேரியாரின் பாதுகாவலில் கி.பி. 1650-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பங்கு கோவை மறை மாவட்டத்தில் அமைந்துள்ள சவேரியார் பாளையம் (சௌரிபாளையம்) பங்கு.
இங்கு வாழும் கிறித்தவர்கள் பூர்வீகக் கிறிஸ்தவர்களாவர். இங்கு வாழ்வோரின் முன்னோர்கள் புனித சவேரியரால் திருமுழுக்கப் பெற்றவர்கள் என பாரம்பரியம் கூறுகிறது. குறிப்பாக மேற்கு கடற்கரையில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள், திப்பு சுல்தான் பாலக்காடு நோக்கிப் படை கொண்டு வந்தபொழுது கி.பி. 1784-ம் ஆண்டில் இங்கிருந்த சில கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் எனத் தெரிகிறது.
ஆலயம்:
கி.பி. 1650-ஆம் ஆண்டிலேயே இங்கு ஒரு சிறுகோவில் இருந்ததாகத் தெரிய வருகிறது. கி.பி. 1845-ஆம் ஆண்டு மறுபடியும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. கி.பி. 1890-ஆம் ஆண்டு தனிப்பங்காக உதயமாகியது. அப்போதிருந்த புதிய ஆலயமானது கி.பி. 1898-ஆம் ஆண்டு தவத்திரு கெர்ப்பியோன் அடிகளாரால் கட்டப்பட்டது.
ஆலயமணி:
கி.பி. 1905-ஆம் ஆண்டு ஆலயத்தின் மணி கோபுரம், தவத்திரு இஞ்ஞாசிநாதரால் கட்டப்பட்டதாகும். தவத்திரு. கெர்ப்பியோன் அடிகளாரின் குடும்பத்தினரால் ஆலயமணியானது வழங்கப்பட்டது. கி.பி. 1898-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம், கி.பி. 1963-ம் ஆண்டு தவத்திரு ஆ. இருதயம் சுவாமிகளால் விரிவாக்கம் செய்யப்பட்டது.
புதிய ஆலயம்:
ஆலயம் கட்டுவதற்கு அருட்பணி. ஹையசிந்த் அவர்களின் பணிக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நிதிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணி. ஆரோக்கிய சாமி அவர்களால் நிதி சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2016 ஆம் ஆண்டு முதல் இறையருள் வேண்டி ஜெபிக்கத் தொடங்கி, தற்போதைய அழகிய ஆலயமானது அருட்பணி. ஜெகன் ஆன்டனி அவர்களின் வழிகாட்டலில், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, சவேரியார் பாளையம் இறைமக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் தாராளமான நிதிபங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்டு, 15.08.2022 அன்று கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு லெ. தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
திருத்தந்தையின் தூதர் வருகை:
வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்திற்கு, திருத்தந்தையின் இந்திய மற்றும் நேபாளத்தின் தூதரான பேராயர் லெயோ பொல்தோ ஜிரெல்லி அவர்கள் 03.10.2022 அன்று வருகை புரிந்தார்.
மறைமாவட்ட முதல் குருவானவர்:
கோவை மறை மாவட்டத்தின் முதல் குருவானர் அருட்தந்தை அருளப்பன் என ஓர் செவி வழிச் செய்தி உண்டு. இவர் கி.பி.1849-ம் ஆண்டு, கோவை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு தே பிரிசில்லாக் ஆண்டகையால் முதல்நிலைப்பட்டம் பெற்று கி.பி. 1857-ல் மேதகு ஆயர் காட்லி அவர்களால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் எனவும், இவர் கோவையைச் சார்ந்தவர் என்றும், அன்று கோவை மறைத்தளம் என்றால் செளரிபாளையம் தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைமாவட்டம் தந்த முதல் ஆயர் கோவை மறைமாவட்டத்தின் முதல் தமிழ் ஆயர் மேதகு உபகார சுவாமிகளாவார். இவர் பாண்டிச்சேரி -கடலூர் உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த சீரிய எதிர்நோக்கு கொண்டவர் கி.பி.1940-ம் ஆண்டு ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டார்.
அவரது மறைவுக்குப் பின் கோவை மறைமாவட்டத்திலிருந்து உதித்திட்ட முதல் ஆயர் மேதகு. சவரிமுத்து அடிகளார் ஆவார். சௌரிபாளையம் பங்கில் அவர் பங்கு தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுதுதான் அவர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1950 ஆண்டு ஏப்ரல் இருபத்து ஆறாம் நாள் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும் ஒருவருடம் இப்பங்கிலேயே பணியாற்றினார்.
கல்விப் பணியின் முன்னோடியான பங்கு:
கல்வியினை இந்தியாவில் அதிகம் விதைத்தவர்கள் கிறிஸ்தவர்கள். அதிலும் சிறப்பாக கோவையில் கல்விப் பணிக்கு வித்திட்ட பங்கு சவேரியார்பாளையம் பங்கு.
கி.பி. 1946ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1949-ம் ஆண்டுகளில் ஆரம்பப் பள்ளிக்கு இடவசதி செய்து கொடுத்தவர் கல்விக்கு வித்திட்டவர் தவத்திரு. S. மரிய ஜோசப் அடிகளாராவார்.
கி.பி. 1951-1955-ம் ஆண்டு ஆண்கள் ஆரம்பப் பள்ளிக்கு இடவசதி ஏற்படுத்தி, விரிவாக்கம் செய்தவர் தவத்திரு. M. சிங்கராயர் அடிகளாராவார்.
அதனைத் தொடர்ந்து, கி.பி. 1955-1959-ம் ஆண்டில் தவத்திரு. G.M. குழந்தைசாமி அடிகளாரால் ஆண்கள் உயர்தர ஆரம்பப்பள்ளி மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கி.பி.1892-ம் ஆண்டிலிருந்து ஒரு ஆரம்பப்பள்ளி இங்கு இருந்து வந்தது. பங்கின் பாதுகாவலர் புனித சவேரியாரின் பெயர் அப்பள்ளிக்கு சூட்டப்பட்டிருந்தது. தற்பொழுது புனித சூசையப்பரின் பெயரால் இப்பள்ளி அழைக்கப்படுகிறது.
புனித பிலோமினாள் பெண்கள் ஆரம்பப்பள்ளி 1964-ம் ஆண்டு புனித காணிக்கை அன்னை கன்னியர் பொறுப்பிலிருந்த இப்பெண்கள் பள்ளி, கி.பி.1964-ம் ஆண்டு புனித பிலோமினாள் பெயரில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.
இவ்வாறு கல்வியறிவுடன், ஆன்மீக எழுச்சிப் பணியினையும் கல்விப் பணியோடு இணைந்த நற்செய்திப் பணியினையும், திறம்பட ஆற்றி அறிவினையும், இறைவனின் அருளினையும் கோவை மாநகருக்கு வழங்கி வரும் சிறப்பினைப் பெற்றது இப்பங்காகும்.
அருட்தந்தையர்கள்:
ஆன்மீகத் தென்றல் தவழும் இப்பங்கில் பூத்து மணம் வீசிய, மணம் கமழ்ந்திடும் அருட்தந்தையர்கள் பதின்மூன்று பேர். இவர்கள் அனைவருமே கோவை மறை மாவட்டத்திற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இவர்களில் நான்கு குருக்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். ஏனைய அருட்தந்தையர்கள் கோவை மறைமாவட்டத்தில் சிறப்புமிகு அருட்பணியாற்றி வருகின்றார்கள். திருத்தொண்டர் ஒருவர் நல்லாயன் குருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கின்றார்.
வரலாற்று சிறப்பு:
இன்றைய ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சத்தியமங்கலம் பகுதியில், கணுவுக்கரை என்ற பகுதியினைத் தலைமை இடமாகக் கொண்டு சவரிபாளையம் உள்ளிட்ட பல ஊர்கள் இதன் கிளைப்பங்காகக் கொண்டு இயங்கி வந்துள்ளது. இருப்பினும் சவரிபாளையமே பங்கு தந்தையர்கள் தங்கும் பங்காக சிறந்து விளங்கியுள்ளது. அத்தகைய சிறப்புப் பெற்ற பழைமையினை தாங்கி, கோவை மறைமாவட்டத்தில், குறிப்பாக கோவை மாநகரில் பல பங்குகளைப் பிரசவித்த தாயாம் சவரிபாளையம் பங்கின் புகழ், விண்முட்டும் உயர்ந்து நிற்கும் புதிய ஆலய கோபுரம் போல் நிலை புகழ் கொண்டு நிமிர்ந்து நிற்கும்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை (ஆண்கள்/ பெண்கள்)
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. கத்தோலிக்க சங்கம்
4. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
5. கத்தோலிக்க தேவாங்க சங்கம்
6. புனித சவேரியார் நல்லடக்க நற்பணி குழு
7. பாடகற்குழு
8. பீடச்சிறார்
9. பங்குப் பேரவை
10. மறைக்கல்வி
11. திட்டக்குழு
12. நிதிக்குழு
பங்கின் பள்ளிக்கூடங்கள்:
1. தூய சூசை நடுநிலைப் பள்ளி
2. புனித பிலோமினாள் உயர் நிலைப்பள்ளி
3. புனித பிலோமினாள் மெட்ரிகுலேஷன் பள்ளி
பங்கின் கெபிகள்:
1. அன்னை வேளாங்கண்ணி கெபி
2. புனித லூர்து மாதா கெபி
3. புனித பாத்திமா மாதா கெபி
பங்கில் பணியாற்றிவரும் சகோதரிகள்:
1. காணிக்கை மாதா சபை சகோதரிகள்
2. புனித ஜோசப் கொத்தலங்கோ சபை சகோதரிகள்
நூலகம்:
புனித சவேரியார் உறவு இல்லம்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
(1858 முதல் 1881 வரை கோயமுத்தூர் ஆலயத்திலிருந்து குருக்கள் சவுரிபாளையத்தை கவனித்து வந்தனர். பிறகு சவுரிபாளையம் தனிப்பங்காக மாற்றப் பட்டது.)
சவுரிபாளையம் தனிப்பங்காக ஆனபின்னர் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. சங். ரிச்சர்ட் (1882-1884)
2. அருட்பணி. பெத்தித் (1887-1888)
3. அருட்பணி. மரிய சின்னப்பர் (1888-1890)
4. அருட்பணி. மரியமுடியப்பநாதர் (1890-1894)
5. அருட்பணி. புவாஞ்சோ (1894-1895)
6. அருட்பணி. மரியமுடியப்ப நாதர் (1895-1902)
7. அருட்பணி. இஞ்ஞாசி நாதர் (1902-1907)
8. அருட்பணி. மரிய லூயிஸ் (1907-1908)
9. அருட்பணி. M. S. மைக்கிள் நாதர் (1908-1920)
10. அருட்பணி. L புலாஞ்சேர் (1920-1921)
11. அருட்பணி. லாஸ்லே (1921-1922)
12. அருட்பணி. ரத்னநாதர் (1922-1929)
13. அருட்பணி. கோலோர் (1929-1930)
14. அருட்பணி. பரோன் (1930-1932)
15. அருட்பணி. சின்னப்பநாதர் (1932-1935)
16. அருட்பணி. குருசாமி நாதர் (1935-1946)
17. அருட்பணி. மரிய ஜோசப் (1946-1949)
18. அருட்பணி. சவரிமுத்துநாதர் (1949-1951)
19. அருட்பணி. M. M. சிங்கராயர் (1951-1955)
20. அருட்பணி. G. M. குழந்தைசாமி (1955-1959)
21. அருட்பணி. S. ஜோசப் பிரகாசம் (1959-1961)
22. அருட்பணி. M. இருதயம் (1961-1964)
23. அருட்பணி. E. A. சின்னப்பன் (1964-1965)
24. அருட்பணி. S. ஜோசப் (1965-1972)
25. அருட்பணி. A. லாசர் அற்புதம் (1972-1977)
26. அருட்பணி. M. குருசாமி (1977-1980)
27. அருட்பணி. M. தாமஸ் (1980-1986)
28. அருட்பணி. மதலைமுத்து (1986-1991)
29. அருட்பணி. லூயிஸ் (1991-1999)
30. அருட்பணி. ஜோசப் டேவிட் (1999-2002)
31. அருட்பணி. ஜேக்கப் (2002-2005)
32. அருட்பணி. எட்வர்ட் (2005-2008)
33. அருட்பணி. பயஸ் சவரிமுத்து (2008-2009)
34. அருட்பணி. ஹையசிந்த் (2009-2014)
35. அருட்பணி. ஆரோக்கியசாமி (2014-2016)
36. அருட்பணி. ஜெகன் ஆன்டனி (2016-2022)
37. அருட்பணி. P. மரியஜோசப் (2022....)
ஆலய வரலாறு மற்றும் தகவல்கள்: ஆலய அர்ச்சிப்பு விழா மலர்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய செயலர் திரு. கிறிஸ்டோபர் அவர்கள்.