934 தூய சகாய அன்னை ஆலயம், ஒன்னல்வாடி

   


தூய சகாய அன்னை ஆலயம்

இடம் : ஒன்னல்வாடி

மாவட்டம் : கிருஷ்ணகிரி

மறை மாவட்டம் : தருமபுரி

மறைவட்டம் : ஓசூர்

நிலை : பங்குதளம் 

கிளைப்பங்கு: புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சென்னத்தூர்

பங்குத்தந்தை: அருள்பணி. C. லாசர் 

குடும்பங்கள் : 100

அன்பியங்கள் : 5

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு காலை 08:45 மணி 

வார நாட்களில் மாலை 06:45 மணி

செவ்வாய் மாலை புனித அந்தோனியார் நவநாள், திருப்பலி

சனி மாலை சகாய மாதா நவநாள், திருப்பலி

பங்குத் திருவிழா : ஜூன் 27ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. Sr. பிரிசில்லா, AMS

2. Sr. சுமிதா (சென்னத்தூர்)

3. Sr. பாத்திமா

Map : https://maps.app.goo.gl/Rd7q2d5DSUgmNCoW8

வழித்தடம் : ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில், ஓசூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

ஒன்னல்வாடி, சென்னத்தூர் ஆகிய ஊர்களில் வாழும் கிறிஸ்தவர்களின் வரலாறு பழைமையான ஒன்றாகும். மைசூர் மறைமாவட்டத்தோடு இப்பகுதிகள் 1850-1930 வரை இருந்ததால், இவ்வூர்களைப் பற்றிய விவரங்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் 1800களில் மத்திகிரி பதிவேடுகளில் இவ்வூர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

சேலம் மேற்றிராசன சரித்திர சுருக்கம் என்ற நூலில் இரு இடங்களில் ஒன்னல்வாடி ஊர்ப்பெயர் உள்ளது. எடப்பள்ளியில் ஒரு மேட்டின் மேல் கட்டப்பட்ட செபக்கூடத்தில் அருட்பணியாளர் தனிமையாகத் தங்கியிருந்தார் என்று இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சின்னட்டி, ஒன்னல்வாடி கிராமங்களில் கிறிஸ்தவர்கள் மட்டும் அருட்பணியாளரிடம் வந்தனர். திப்புசுல்தான் காலத்தில் நம் மதத்தை மறுதலித்தவர்களும், அவர்களுடைய சந்ததியினரும் இக்கிராமங்களுக்கு அண்மையில் இருந்தனர் (பக். 133) என்றும் குறிப்புகள் உள்ளன. எடப்பள்ளி என்பது கெலமங்கலத்திலிருந்து, தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. ஏறக்குறைய தேன்கனிக்கோட்டையில் இருந்து 3 கி.மீ தொலைவில் இது உள்ளது. இன்று சாலையோரத்தில் சிலுவை குறியீடு உள்ள ஒரு கல் மட்டுமே அவ்விடத்தில் உள்ளது. மற்ற சுவடுகள் ஏதும் இல்லை.

எடப்பள்ளி, களிநாயக்கனஹள்ளி, எளயூர் முதலிய குக்கிரமங்கள், 1890க்கு முன்னரே மறைந்துவிட்டன. ஆனால் ஒன்னல்வாடி, சென்னத்தூர் முதலிய இடங்களில், கிறிஸ்தவர்கள் அதிகரித்தனர் (பக்.152). சென்னத்தூர் கிறிஸ்தவர்களுக்கும், எடப்பள்ளி கிறிஸ்தவர்களுக்கும் திருமண உறவு இருந்ததை மதகொண்டபள்ளி திருமணப் பதிவேடு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

1979ஆம் ஆண்டு வரை மத்திகிரியின் கிளைப்பங்குகளாக ஒன்னல்வாடி, சென்னத்தூர் ஆகிய ஊர்கள் இருந்தன. 1979ஆம் ஆண்டுக்குப்பின் ஓசூர் புதிய பங்காக உருவாக்கப்பட்டபோது, இவை ஓசூர் பங்கின் கிளைப்பங்காயின. ஓசூரின் முதல் பங்குதந்தையாக இருந்த அருள்பணி. ஜோசப் அடிகளாரின் முயற்சியால், ஒன்னல்வாடியில் 5-11-1979 அன்று 0.50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அந்நிலத்தில் அருள்தந்தை மரியசூசை அடிகளாரின் முயற்சியால் புனிதர் அந்தோனியார் பெயரில் ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அன்றைய சேலம் ஆயர் அவர்களால் 02-08-1990 அன்று, புனிதப்படுத்தப்பட்டது. 

அருள்தந்தை. ஹென்றி ஜார்ஜ் அடிகளார் ஓசூர் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில், பங்குதந்தை இல்லம் கட்டப்பட்டு 30-08-2002 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில் ஒன்னல்வாடி புதிய பங்காக தருமபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் அறிவிக்கப்பட்டது. முதல் பங்குதந்தையாக அருள்பணி. அருள்ராஜ் அடிகளார் நியமிக்கப்பட்டார்.

பங்குத்தந்தை அருள்பணி. தோம்னிக் ராஜா காலகட்டத்தில் புனித அந்தோனியார் ஆலயமாக இருந்த ஒன்னல்வாடி பங்கு ஆலயம், தூய சகாய மாதா ஆலயமாக பெயர் மாற்றப்பட்டது. தற்போதும் புனித அந்தோனியார் சிறப்பு திருப்பலியும், திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னத்தூர் கிராமத்தில் இருந்த பழைய கோவிலுக்கு பதிலாக புதிய ஆலயம் ஒன்று அருள்பணி. தோமினிக் ராஜா அடிகளாரின் பணிக்காலத்தில் கட்ட துவங்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 26-9-2010 அன்று அருள்பணி. மரியப்பன் காலகட்டத்தில் புனிதப்படுத்தப்பட்டது. 

புனித அகுஸ்தினார் சபை கன்னியர்கள் ஒன்னல்வாடியில் தங்களது இல்லத்தை 1996ஆம் ஆண்டு அமைத்தனர். ஆங்கிலப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகின்றனர்

2007ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்டோரின் சபை சகோதரிகள் சென்னத்தூரில் தங்கள் இல்லத்தை அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

சென்னத்தூருக்கு அருகில் சீயோன்மலை தியான மையம் 7-11-2013 முதல் இயங்கி வருகிறது. புனித ஆரோக்கிய மாதா முதியோர் இல்லமும் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. சீயோன் மலையில் தியானங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அப்பகுதி கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீகப் பணி செய்யப்பட்டு வருகிறது. அதன் தற்போதைய இயக்குநராக அருள்பணி. M. இருதயராஜ் செயல்படுகிறார். இம் மையத்தில்தான் தமிழக ஆயர்  பேரவையின் கூட்டம், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. (கட்டுரை: அருள்பணி. A. சூசைராஜ்)

பங்கில் உள்ள பள்ளிக்கூடம்:

St. Augustine Matric Hr. Sec. School

கன்னியர்கள் சபை:

1. St. Augustine Congregation 

2. Sisters of the Destitute (சென்னதூர்)

பங்கில் உள்ள சபைகள் / இயக்கங்கள் :

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை

2. மரியாயின் சேனை

3. பீடச் சிறுவர்கள் இயக்கம்

4. இளைஞர், இளம் பெண்கள் இயக்கம்

பங்கில் உள்ள கெபி: 

புனித அந்தோனியார் கெபி

பங்கில் பணியாற்றிய பங்குத் தந்தையர்கள் பட்டியல்:

1. அருள்பணி. R. அருள்ராஜ் (2002 -2004)

2. அருள்பணி. R. தோமினிக் ராஜா (2004 -2008)

3. அருள்பணி. C. மரியப்பன் (2008 -2012)

4. அருள்பணி. A. தாமஸ் (2012 -2017)

5. அருள்பணி. P. லூர்துசாமி (2017 -2021)

6. அருள்பணி. C. லாசர் (2021 முதல்..)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. லாசர் அவர்கள்.

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்பணி. மோசஸ் மற்றும் திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி ஆகியோர்.