புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: தெற்கு தெரு, நாலாங்குறிச்சி
மாவட்டம்: தென்காசி
மறைமாவட்டம்: பாளையங்கோட்டை
மறைவட்டம்: தென்காசி
நிலை: கிளைப்பங்கு
பங்கு: உலக மீட்பர் ஆலயம், ஆலங்குளம்
பங்குத்தந்தை அருட்பணி. S. M. அருள்ராஜ்
குடும்பங்கள்: 80
அன்பியங்கள்: 3
புதன் மாலை 07:30 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் புதன் மாலை 07:30 மணி திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆராதனை
திருவிழா: ஜனவரி மாதத்தில் கடைசி சனி, ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. சார்லஸ் ராஜன்
வழித்தடம்: திருநெல்வேலி -தென்காசி சாலையில் மாறாந்தை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 1கி.மீ தொலைவு சென்றால் நாலாங்குறிச்சி வந்தடையலாம்
Location map: https://g.co/kgs/v16byJ
வரலாறு:
நாலாங்குறிச்சி ஊரில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், திருவிழா காலத்தில் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக மக்கள் மனம் வெதும்பி காணப்பட்டனர். அந்த காலத்தில் இவ்வூரில் அன்னாள் என்னும் பெயர் கொண்ட ஒரு கிறிஸ்தவ பெண்ணும் வாழ்ந்து வந்தார். இப்பெண்மணியின் வழிகாட்டலில் ஊரில் உள்ள மக்கள் கிறிஸ்தவம் தழுவ சம்மதம் கொண்டு, பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயம் சென்று திருமுழுக்குப் பெற்று, அங்கிருந்து புனித சூசையப்பர் சுரூபத்தையும் பெற்றுக் கொண்டு, தற்போது மக்கள் வசிக்கும் ஊரின் கீழ்ப்பகுதியில் ஓலைக் குடிசை அமைத்து, அதில் சுரூபத்தை வைத்து இறைவனை வழிபட்டு, சூசையப்பர் பட்டணம் என்று ஊருக்கு பெயரும் சூட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.
பனைத்தொழிலை முக்கிய தொழிலாகக் கொண்டு வாழ்ந்த இம்மக்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இன்னல்கள் பல அனுபவித்து வந்தனர். ஒருமுறை ஊரில் உள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட போது, புனித சூசையப்பர் இம்மக்களை எவ்வித பாதிப்பும் ஏற்படாது பாதுகாத்தார். இந்தத் தீயில் ஆலயம் கருகிய போதும், மரத்தால் ஆன புனித சூசையப்பர் சுரூபமானது, எந்த வித பாதிப்பும் அடையாத நிலையில் அதனை எடுத்து வந்து, தற்போது செயல்பட்டு வருகிற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பின்புறமாக ஆலயம் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த சுரூபமானது இன்றளவும் உள்ளது.
பின்னர் மக்கள் அனைவரும் புலம் பெயர்ந்து ஊரின் வடக்குப் பகுதியில் வாழ்ந்தனர். இவ்வேளையில் வாந்தி, பேதி போன்ற தொற்று நோய்கள் காரணமாக உயிர் இழப்புகள் ஏற்பட்டதால், ஊருக்கு தென்புறம் குடியிருப்பை மாற்றிக் கொண்டனர். வீரவநல்லூர் பங்கின் கிளைப் பங்காக நாலாங்குறிச்சி செயல்பட்டு வந்த வேளையில், 1925 ஆம் ஆண்டில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. குத்தூரியர் சே.ச அவர்கள் மாட்டு வண்டியில் வந்து திருப்பலி நிறைவேற்றி விட்டு, இங்கு தங்கி செல்வது வழக்கம். ஓலைக் குடிசை ஆலயமானது ஓட்டுக்கூரை ஆலயமாக மாற்றம் பெற்றது. அப்போது திருமதி. மரிய பொன்னாச்சி அம்மாள் என்ற பெண்மணி உபதேசியாராக செயல்பட்டு வந்தார்.
1931 ஆம் ஆண்டில் சிங்கம்பாறை தனிப் பங்காக உருவானது. அதன் பின்னர் நாலாங்குறிச்சி ஆலயம் சிங்கம்பாறையின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
சிங்கம்பாறை பங்குத்தந்தை அருட்பணி. ம. அருள் அம்புரோஸ் அவர்களின் முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன், தற்போதைய புதிய ஆலயம் 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் தனிப் பங்காக உருவான போது, நாலாங்குறிச்சி ஆலயமானது ஆலங்குளத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
ஆலங்குளம் பங்குப்பணியாளர்களின் வழிகாட்டலில் ஆன்மீகப் பாதையில் சிறப்புற பயணித்து வருகிறது நாலாங்குறிச்சி இறைசமூகம்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:
பங்குத்தந்தை அருட்பணி. S. M. அருள்ராஜ் அவர்களின் மேற்பார்வையில், நாலாங்குறிச்சி ஆலய உறுப்பினர் பாஸ்டினா பாஸ்கர் ஆசிரியை, மற்றும் ஆலங்குளம் பங்கின் திரு. மேத்யூராஜன் பாபு & திரு. மைக்கேல் ராஜ் ஆகியோர்.