947 புனித பாத்திமா மாதா அருட்தலம், கோடம்பாக்கம்

      


புனித பாத்திமா அன்னை அருட்தலம்

இடம்: கோடம்பாக்கம், சென்னை, 600024

மாவட்டம்: சென்னை

மறைமாவட்டம்: சென்னை மயிலை உயர் மறைமாவட்டம்:

மறைவட்டம்: திருமுழுக்கு யோவான் (முகப்பேறு)

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், வரதராஜபேட்டை

2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தாஸ்புரம்

3. கெத்செமனேநாதர் ஆலயம், நாராயணபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. S. இக்னேசியஸ் தாமஸ்

உதவி பங்குத்தந்தை அருட்பணி. B. R. கிறிஸ்டி பால்

குடும்பங்கள்: 2000

அன்பியங்கள்: 50

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி 

காலை 06:00 மணி (தமிழ்) 

காலை 07:30 மணி (தமிழ்) 

காலை 11:00 மணி (தமிழ்)

மாலை 06:30 மணி (தமிழ்)

காலை 09:15 மணி & மாலை 05:00 மணி திருப்பலி (ஆங்கிலம்)

திங்கள் -சனி காலை 06:00 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி

மாலை 06:00 மணி செபமாலை, திருப்பலி

முதல் புதன் மாலை 06:00 மணி செபமாலை, புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி மற்றும் தேர்பவனி

முதல் வியாழன் மாலை 06:00 மணி செபமாலை, குழந்தை இயேசு நவநாள் திருப்பலி, குழந்தைகளுக்கு சிறப்பு ஆசீர் மற்றும் தேர்பவனி

முதல் வெள்ளி மாலை 06:00 மணி செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை

முதல் சனி மாலை 06:00 மணி மாதா கெபியில்: செபமாலை, நவநாள் திருப்பலி, மாதா தேர்பவனி, திருஎண்ணெய் பூசுதல், பாத்திமா பக்தர்களுக்கு சிறப்பு செபமும் ஆசீர்வாதமும்

திருவிழா: அக்டோபர் மாதம் 13-ம் தேதி 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. யூக்கரிஸ்ட்

2. அருட்பணி.‌ ரூபஸ், SJ 

Location map: Our Lady of Fatima Church

https://maps.app.goo.gl/4Rar18QKAHDHt7Ux7

வரலாறு:

கி.பி 1940-1945 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கோடம்பாக்கம் பகுதி நெல்வயல்களும், தோட்டங்களும் நிறைந்த நிலவெளியாக இருந்தது. அந்நாட்களில் "மதராஸ்" என்று வழங்கப்பட்ட சென்னை நகரம், கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி விரிவடைய ஆரம்பித்திருந்த காலம். வயல்வெளிகளும், தோட்டங்களும் சமன் செய்யப்பட்டு, ஆங்காங்கே சில இடங்களில் தெருக்களும், அவற்றில் சிற்சில தொடர்வீடுகளும், ஓரிரு இடங்களில் பெரிய தனிவீடுகளும் எழும்ப ஆரம்பித்திருந்தன.

அந்த சமயத்தில் கோடம்பாக்கம் பகுதியில் கத்தோலிக்கக் குடும்பங்கள் மிக் குறைந்த அளவிலே இருந்தனர். அவர்கள் திருப்பலியில் பங்கு பெறவும், மற்ற ஆன்மீகத் தேவைகளுக்கும் இலயோலா கல்லூரி ஆலயத்திற்கோ அல்லது நுங்கம்பாக்கத்திலுள்ள புனித தெரசா ஆலயத்திற்கோ சென்றார்கள். கிறிஸ்து பிறப்பு விழா சமயத்தில் எல்லோரும் ஒன்று கூடி, இலயோலா கல்லூரி ஆலயத்திற்கு நள்ளிரவு திருப்பலிக்கு நடைபயணமாக நடந்து செல்வார்கள். திருவழிபாடு முடிந்த பின்னர், அதிகாலை இரண்டு மணியளவில் எல்லாரும் ஒன்றாக "கிறிஸ்துமஸ் கீதங்கள்" பாடிக்கொண்டு திரும்பி வருவார்கள்.

அந்த நாட்களில், அருள்தந்தை பீட்டர் என்பவர் கோடம்பாக்கத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் கூடிய ஒரு வீட்டை துவக்கப் பள்ளிக்காக வாடகைக்கு எடுத்தார். வாகனங்கள் நிறுத்தும் இடத்தை வழிபாட்டுக்கென ஒரு சிறிய ஆலயமாகப் பயன்படுத்தினார். ஞாயிறு மற்றும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கோடம்பாக்கத்திலிருந்த சுமார் இருபது குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இலயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த குருக்கள் வந்து திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்தார்கள்.

1946-ஆம் ஆண்டு அன்றைய சென்னை -மயிலை ஆயர் மேதகு மா. கொரைரா அவர்கள், நான்கு ஏக்கர் நிலத்தை ரூபாய் 59,400-க்கு ஆலயத்திற்கென வாங்கினார்கள். கோடம்பாக்கத்தில் வாழ்ந்த கத்தோலிக்கர்களின் மாபெரும் முயற்சியால் நிதி திரட்டப்பட்டு, மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்ட சிறிய ஆலயம் ஒன்று அந்த நிலத்தில் எழுப்பப்பட்டது. இந்த ஆலயம் நுங்கம்பாக்கம் புனித தெரேசா ஆலய பங்கோடு இணைக்கப்பட்டு, அந்தப் பங்குத்தந்தையின் நிர்வாகத்தில் சுமார் பத்து ஆண்டுகளாக கோடம்பாக்கம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. 

கோடம்பாக்கம் பகுதியைச் சுற்றிலும் புலியூர்புரம், காமராசர் காலனி, யுனைடெட் இந்தியா காலனி, ட்ரஸ்ட்புரம், வரதராஜபேட்டை, சுபேதார் தோட்டம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் குடியேற ஆரம்பித்த போது, கத்தோலிக்க குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது.

இந்த காலகட்டத்தில், ஆன்மீகத் திருப்பயணமாக உலகெங்கும் வலம் வந்துகொண்டிருந்த, தூய பாத்திமா அன்னையின் திருச்சுரூபம் 1950-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தது. அந்த ஆண்டின் பெப்ரவரி 12 ஆம் நாள் அன்னையின் திருச்சுரூபம் இராயப்பேட்டை ஆலயத்திலிருந்து, அலங்கார வாகனத்தில் கோடம்பாக்கத்திற்கு ஆடம்பர பவனியாக கொண்டுவரப்பட்டது. சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட கிறிஸ்தவர்களும் மற்றும் பிற மதத்தினரும் அன்னையின் திருச்சுரூபத்திற்கு உற்சாக வரவேற்பும், மரியாதையும் செலுத்தினார்கள். மிக கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, அப்போதைய மயிலை ஆயர் மேதகு கொரைரா அவர்கள், "கோடம்பாக்கத்தில் பாத்திமா அன்னையின் பெயரில் ஒரு பெரிய ஆலயம் எழுப்ப வேண்டும்" என்ற தனது ஆவலை தெரிவித்ததோடு, அதற்கு அடையாளமாக எளிய முறையில் அடிக்கல்லை மந்திரித்து, ஆலயம் கட்டுவதற்கான முயற்சிக்கு வித்திட்டார்கள்.

1951-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாளன்று நுங்கம்பாக்கம் புனித தெரேசா ஆலய பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, கோடம்பாக்கம் என்ற தனியொரு பங்கு அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள்

ஆலயம் கட்டுவதற்கு திருச்சபை அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆயர் மேதகு கொரைரா அவர்களால் 12.02.1950-ல் மந்திரிக்கப்பட்ட அடிக்கல், துணை ஆயர் மேதகு பிரான்சிஸ் கர்வாலோ அவர்களால் புதிய ஆலயக் கட்டடத்தின் ஆரம்ப அடையாளமாக 1956-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் நாளன்று மந்திரிக்கப்பட்டது. வான் நோக்கி உயர்ந்த கோபுரத்துடன் கட்டி எழுப்பப்பட்ட‌இந்த அழகிய புதிய ஆலயம், இறைமக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்ற தயாரான நிலையில், 1956-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் பேராயர் மேதகு டாக்டர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, பாத்திமா அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டு, திருவழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

1956-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட குருக்களால் வழிநடத்தப்பட்ட பாத்திமா அன்னை ஆலயமும், பங்கும் "1972-ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டு கால குத்தகை" (Lease) அடிப்படையில் இயேசு சபை குருக்களிடம் கொடுக்கப்பட்டது. இயேசு சபை நிர்வாக அமைப்பின் கீழ் முதல் பங்கு குருவாக அருட்தந்தை J.S. ஜெயபதி அவர்கள் 02.07.1972 அன்று பொறுப்பேற்றார். 1972-ஆம் ஆண்டு "இலயோலா உயர்நிலை பள்ளி" அருட்தந்தை ஜெயபதி அவர்களால் ஆலய வளாகத்தினுள்ளேயே தொடங்கப்பட்டது. பதினாறு ஆண்டு காலமாக இயேசு சபை குருக்களின் கண்காணிப்பில் பல வகையிலும் சிறப்பான வளர்ச்சியைக் கண்ட பாத்திமா அன்னை ஆலயமும், பங்கும், இலயோலா பள்ளியும், 1988-ஆம் ஆண்டு மீண்டும் சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

1988-ஆம் ஆண்டு பங்குகுருவாக பொறுப்பேற்ற அருட்தந்தை M. S. அற்புதசாமி அவர்கள் இலயோலா உயர்நிலைப் பள்ளியை, மேனிலைப் பள்ளியாக உயர்த்தினார். மேலும் ஆலயத்தினுள் இறைமக்கள் அமர்வதற்கு ஏற்றவகையில் மரத்தாலாகிய நேர்த்தியான இருக்கைகள் அமைக்கப்பட்டன. கடந்த  ஆண்டுகளில் மறைமாவட்ட குருக்களின் பராமரிப்பில் பாத்திமா அன்னை ஆலயம் பல மேம்பாட்டு பணிகளைக் கண்டு பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது.

1997-ஆம் ஆண்டில் சிறிய அளவில் புனரமைப்புத் திருப்பணிகள் நடத்தப்பட்டு, ஆலயத்தின் உட்புற சுவர்களும், திருப்பீடமும், அதன் பின்புறச்‌ சுவரும் செப்பனிடப்பட்டு, சீர்திருத்தப்பட்டன. 

2003-ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் 6-ஆம் நாள் திருநற்கருணை சிற்றாலயம் அர்ச்சிக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 12- ஆம் நாள் லூர்து அன்னையின் பழைய கெபி புதுப்பிக்கப்பட்டு, எழில்மிகு புதிய கெபி அர்ப்பணிக்கப்பட்டது. 

2006-ஆம் ஆண்டில் ஆலயத்தின் உட்புறமும், தரைதளமும், திருப்பீடமும் புனரமைக்கப்பட்டு அழகு பெற்றன. 

2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் நாளன்று புதிய குருக்கள் இல்லம் திறந்து வைக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் ஆலய வளாகத்தின் வெளிவாயிலின் அருகே, பாத்திமா அன்னையின் திருவுருவப் படம், மரியன்னையின் சுரூபம், இயேசுவின் திருஇருதய சுரூபம் இவற்றைத் தாங்கிய மூன்றுநிலை கோபுரம் அப்போதைய பேராயர் மேதகு A. M. சின்னப்பா அவர்களால் மந்திரிக்கப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்டது.

1999-ஆம் ஆண்டில் "அன்பிய அமைப்புகள்" குறித்த சிந்தனை பங்கில் அறிமுகம் செய்யப்பட்டு, அன்பியங்கள் உருவாக்கப்பட்டன. இன்று பங்கில் 50 அன்பியங்கள், பன்னிரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பங்கிலுள்ள இரண்டாயிரம் குடும்பங்களோடு பக்தியிலும், திருவழிபாட்டு நிகழ்வுகளிலும், சமூக சேவையிலும் சிறந்து விளங்குகின்ற கோடம்பாக்கம் பாத்திமா அன்னை ஆலயம், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது.

ஆலயம் அர்ச்சிக்கப்பட்ட அறுபதாவது ஆண்டு நிறைவை வைரவிழாவாகக் கொண்டாடி இறைவனுக்கு நன்றி சொல்லுகின்ற 2016-ஆம் ஆண்டில், பெரிய அளவிலான புனரமைப்புத் திருப்பணிகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டு, இறைவனின் அருட்துணையோடு, 2017-ஆம் ஆண்டில் புனரமைப்புத் திருப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, புதிய பொலிவும், புதிய வடிவும் கொண்ட மகத்தான ஆலயமாக, தூய பாத்திமா அன்னை ஆலயம் திகழ்கிறது.

பங்கில் உள்ள கெபிகள்:

1. தூய பாத்திமா மாதா கெபி

2. தூய லூர்து மாதா கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப்பேரவை

2. அன்பியங்கள்

3. மரியாயின் சேனை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. தமிழ், ஆங்கில பாடகற் குழுக்கள்

6. பர்த்திமேயுவின் நண்பர்கள்

7. பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் மூன்றாம் சபை

8. இளைஞர் குழுக்கள்

9. பீடச்சீடர்கள் குழு

10. மறைக்கல்வி குழுமம்

11. சிறைச்சாலைப் பணிக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்தந்தை. ஜோசப் தம்பி (1951July -1953April)

2. அருட்தந்தை. டி. பாலைய்யா (1953May -1954 June)

3. அருட்தந்தை. பி.டீ. ஷா (1954July -1956Oct)

4. அருட்தந்தை. இருதயசாமி (1956 Nov -1963March)

5. அருட்தந்தை. A.J. பிரான்சிஸ் (1963April -1964July)

6. அருட்தந்தை. S. இருதயசாமி (1964 Aug -1967March)

7. அருட்தந்தை. இருதயதாஸ் ராஜூலு (1967 April -1972June)

8. அருட்தந்தை. J.S. ஜெயபதி, சே.ச., தாளாளர் (1972 July -1983Aug)

9. அருட்தந்தை. M.S. சவரிராஜ், சே.ச. (1983 Sep -1985Apr)

10. அருட்தந்தை. M. ஆரோக்கியசாமி, சே.ச. (1985 May -1987June)

11. அருட்தந்தை. V.S. இராஜூ, சே.ச. (1987 July -1988May)

12. அருட்தந்தை. M.S. அற்புதசாமி (1988 June -1995May)

13. அருட்தந்தை. ஆபிரகாம் கோட்டுப்பரம்பில் (1995 June -1998May)

14. அருட்தந்தை. பிலிப் மனத்தாரா (1998 June -1999May)

15. அருட்தந்தை. ஆபிரகாம் கோட்டுப்பரம்பில் (1999 June -2002May)

16. அருட்தந்தை. C.C. அம்புரோஸ் (2002 June -2009May)

17. அருட்தந்தை. F.J.X. யூக்கரிஸ்ட் (2009 June -2014May)

18. அருட்தந்தை. J. எட்வர்ட் செல்வராஜ் (2014-2019)

19. அருட்தந்தை. S. இக்னேசியஸ் தாமஸ் (2019---)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. இக்னேசியஸ் தாமஸ் அவர்கள்.

புகைப்படங்கள்: திரு. லியோ திருவெற்றியூர்.