952 அற்புத குழந்தை இயேசு ஆலயம், உகார்தேநகர் கொடைக்கானல்

       


அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம்: உகார்தேநகர், செண்பகனூர் அஞ்சல், கொடைக்கானல், 624101

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: கொடைக்கானல்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், உட்காட்

2. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், சீனிவாசபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. வே. பாப்புராஜ்

கைப்பேசி எண்: +91 90951 72231

குடும்பங்கள்: 450

அன்பியங்கள்: 21 (பங்கு 10, தூய ஆரோக்கிய மாதா ஆலயம் 11)

திருவழிபாட்டு நேரங்கள்:

குழந்தை இயேசு ஆலயம்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:30 மணி

வியாழன் காலை 06:30 மணி திருப்பலி, தொடர்ந்து 11:15 மணி வரை நற்கருணை ஆசீர். 11:15 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி, திருத்தேர்பவனி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் நாள் காலை 06:30 மணி நற்கருணை ஆசீரோடு புதிய மாதத்தை ஒப்புக்கொடுக்கும் சிறப்பு திருப்பலி

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்:

ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி மற்றும் மாலை 06:00 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:00 மணி

மாதத்தின் முதல் நாள் மாலை நற்கருணை ஆசீரோடு புதிய மாதத்தை ஒப்புக்கொடுக்கும் சிறப்பு திருப்பலி

திருவிழா: 

குழந்தை இயேசு திருத்தலம்: ஜனவரி 5 முதல் 15 வரை 

தூய ஆரோக்கிய மாதா ஆலயம்: ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 08 வரை

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்: செப்டம்பர் 27,28,29

மண்ணின் இறையழைத்தல்கள்.

அருட்பணியாளர்கள்.

1. அருட்பணி. ஜேசுதாசன், CssR

2. அருட்பணி. ஜீஸஸ் டயஸ், OMI

3. அருட்பணி. பால்ராஜ், MMI

4. அருட்பணி. விக்டர், SJ (ஜாம்ஷெட்பூர்)

6. அருட் பணி. தயாளன், Sj‌ (Delhi Province)

7. அருட் பணி. டோம்னிக் பீட்டர் (Patna Diocese )

அருட்சகோதரிகள்:

1. சகோ. பாத்திமா ராணி, OCD

2. சகோ. மேரி ஜோசப், OCD 

3. சகோ. தெரேசா, OCD

4. சகோ. சலேத்ராணி, Little sisters of poor

5. சகோ. அற்புத சகாயமேரி, SAT

6. சகோ. சூசை மேரி, காணிக்கை மாதா சபை

7. சகோ. ராணி, காணிக்கை மாதா சபை

8. சகோ. மாலா, OSM

9. சகோ. அமலா, ICM

10. சகோ. ஆரோக்கிய ஷீலா, ICM

11. சகோ. சூசைமேரி, Hand maid of the poor

12. சகோ. மரிய பாத்திமா ராணி, Poor Hand maids of Jesus and Mary

13. சகோ. ஆக்னஸ் மேரி, SMSM.

வழித்தடம்: வத்தலக்குண்டு -கொடைக்கானல் வழித்தடத்தில் செண்பகனூர் நிறுத்தம்.

Location map: https://g.co/kgs/Q4Dpqzs

உகார்தேநகர் பங்கு வரலாறு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் எட்டாவது பங்குத்தளமாக, முறையே சென்பகனூர் மற்றும் மூஞ்சிக்கல் பங்குகளிலிருந்து, 30.08.2009 அன்று பிரிக்கப்பட்டதுதான் உகார்தே நகர் பங்கு. மலைப்பகுதியில் குழந்தை இயேசு திருத்தலம் ஏதும் இல்லாத காரணத்தினால் முதன் முறையாக இப்பங்குத்தளமானது குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பங்கு ஆலயம் கட்டப்படாத நிலையில், கிளைப்பகுதி ஆலயங்களான உட்காட் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும், கார்மேல்புரம் கார்மேல் கன்னியர் இல்ல சிற்றாலயத்திலுமே வழிபாடுகள் நடைபெற்று வந்தன. சீனிவாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் சிற்றாலயமும் இதன் கிளைக்கிராமம் ஆகும். இவ்வாறு சீனிவாசபுரம், அனந்தகிரி 7ஆவது தெரு, உட்காட், உகார்தே நகர், கார்மேல்புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இப்பங்குத்தளத்தில் ஏறக்குறைய 450 கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்கிறார்கள்.

ஆலயம் உருவான வரலாறு:

உகார்தே நகர் :

1972ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து பணி செய்ய கொடைக்கானல் பகுதிக்கு வந்த சேசுசபைக் குருவானவர் அருட்பணி. எமிலி உகார்தே. இவர் மக்கள் மீது கொண்ட அன்பினாலும் ஆர்வத்தினாலும் பொதுமக்கள் முன்னேற்ற சங்கம் அமைத்தார். அதன் வழியாக மக்கள் குடியிருப்பதற்காக 1973- ஆம் ஆண்டு, திருஇருதயக் கல்லூரிக்கு சொந்தமான 7.97 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை விலை கொடுத்து வாங்கி, நிலங்களை பிரித்துக் கொடுத்ததுடன் 130 பேருக்கு வீடு கட்டி கொடுத்தார். அவரின் நினைவாகவே இப்பகுதி "உகார்தே நகர்" என்னும் பெயர் பெற்றுள்ளது.

உகார்தே நகரின் தற்தாலிக பங்காலயமாகத் திகழ்ந்த உட்காட் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் முன்புறமாக செட் அமைத்து, மக்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பங்கு உருவான அந்த நாட்களில் உட்காட் பகுதியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயமே பங்கு ஆலயமாக இருந்தது. கடும் குளிரில் நடக்கும் இரவுத் திருப்பலிகள், நற்செய்தி பெருவிழா போன்ற வழிபாடுகளில் கலந்து கொள்ள வரும் மக்களுக்கு போதுமான இடவசதி இருக்கவில்லை. அதிக குளிரிலும், குழந்தைகளை வைத்திருப்போரும்,

முதியவர்களும் வெளியில் அமரும் நிலைதான் இருந்தது. அப்போது எப்படியாவது இடவசதியோடு ஒரு பங்கு ஆலயம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அது மிக அவசியமாகவும் இருந்தது. 

மக்களின் தேவையையும், விருப்பத்தையும் அறிந்து இயேசு சபை அருட்தந்தையர், அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் 53 சென்ட் நிலம் ஆலயம் கட்டுவதற்காக கொடுத்தார்கள். ஆனால் உட்காட்டில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தையே பெரிதாக கட்டிவிடலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்தனர். இயேசு சபையினரோ ஆலயம் கட்டுவதற்கென்று கொடுத்த இடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் மக்களின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும், எந்த இடத்தில் ஆலயம் கட்ட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பி, ஒருநாள் கார்மேல் அன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகையில், புதிய ஆலயம் கட்டப்பட வேண்டிய இடத்திற்கு அருகில் ஏழு வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியரை ஒப்புகொடுத்து, அவர்களுக்கு கடவுள் குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிட்டால் பங்கு ஆலயம்

இயேசு சபை அருட்தந்தையர்கள் கொடுத்த இடத்தில் கட்டுவதையே கடவுள் விரும்புகிறார் என்று அறிந்து கொள்ளலாம், இதுவே கடவுளின் திரு உள்ளத்தை அறிந்துகொள்ள வெளிப்பாடு என்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. பிறகு ஆலயப் பணிகளை பற்றிப் பேச அன்பியங்களை சந்தித்துக் கொண்டிருந்த நாட்களில், கடவுளிடம் வேண்டிக்கொண்ட அந்த தம்பதியினர் அந்நாளில்தான் வீட்டிற்கு அவர்கள் சென்ற போது, குழந்தை பாக்கியம் அடைந்துள்ளதை மருத்துவர் உறுதி செய்துள்ளார் என்று கூறினார்கள். அந்த செய்தி அனைவருக்கும் வியப்பாக இருந்தது. பின்னர், கடவுள் விரும்பிய அதே இடத்தில் மறைந்த பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அந்த நாளில் இருந்து ஆலயப்பணிக்காக நற்கருணை ஆராதனையும், திருப்பலியும் ஒவ்வொருநாளும் நிறைவேற்றப்பட்டது. பங்கில் ஏற்குறைய 15 நபர்கள் மட்டுமே அரசு ஊழியர்கள். மற்ற அனைவருமே கூலி வேலை செய்கிறார்கள். இந்த நிலையில் ஆரம்பத்தில் ஆலயப் பணிக்காக ஒவ்வொரு குடும்பமும் தலா 1000 ரூபாய் மட்டுமே தரமுடியும் என்று கூறியிருந்தார்கள். ஆலயப்பணி துவங்கும் முன், கையில் பணமே இல்லாத நிலையில், ஆலய அடிக்கல் நாட்டும் நாளுக்கு முன்பாக தொடர்ந்து இரவும் பகலுமாக 100-மணி நேர நற்கருணை ஆராதனை ஒழுங்கு செய்து, அந்த ஆராதனையின் வழியாக ஆலயத்திற்கான எல்லா தேவைகளையும் விண்ணப்பமாக ஆண்டவரிடம் வைக்கப்பட்டது.

அந்த ஆராதனையில் 100-வது மணி நேரத்தில் நற்கருணை ஆண்டவரின் இறைபிரசன்னத்தில் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த நாளில் பங்கில் உள்ள அனைவரும் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை உற்சாகத்துடன் கொடுத்தார்கள். ஆலயமும் வளர்ந்தது. அதோடு ஆலய கட்டுமானப் பணிக்காக பல பெரியவர்களும், ஆலயத்தைப் பற்றி அறிந்தவர்களும், வெளியூரில் வசிப்பவர்களும், சில மீனவர்களும் பொருளாதார தேவைகளுக்காக உதவி செய்தார்கள். மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்கள் பணிப் பொறுப்பை ஏற்றவுடன் தாராள பொருளுதவியை செய்தார்கள். இவற்றோடு நம்பிக்கை நிறைந்த ஜெபத்தாலும், ஆலயம் உயரே எழும்பியது. ஆலயம் கட்டிக் கொண்டிருக்கும்போதே இந்த ஆலயத்தில் வந்து வேண்டுபவர்களுக்கு பல அற்புதங்கள் நடந்தன. அதனால் ஆலயப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

இவ்வாறு நற்கருணை ஆண்டவரின் மாட்சியாலும், தூய ஆரோக்கிய அன்னையின் அருளாலும் மகிமையாய் உருவானதுதான் அற்புத குழந்தை இயேசு ஆலயம். எனவே இது பல தலைமுறையினருக்கும் சாட்சியாக அமையும் வண்ணம், நற்கருணை மகிமை விளங்குவதாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். இந்த ஆலயத்தின் ஒவ்வொரு நிகழ்வும் நற்கருணை ஆண்டவரின் திருப்பிரசன்னத்திலே நிகழ்ந்தது என்பதை உணர்த்த ஆலயத்தின் நுழைவுவாயிலில் இரண்டு கதவுகளிலும், அப்ப ரச கிண்ண உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலயத்திற்குள் நுழைந்த உடனே ஆலயம் முழுவதும் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தால் நிரம்பி இருப்பதை அனைவரும் உணரும் வகையில், திவ்விய நற்கருணையிலே வீற்றிருந்து அற்புத குழந்தை இயேசு நம்மை அழைப்பதுபோலும், பீடம் நற்கருணையின் வடிவிலே அமைக்கப்பட்டுள்ளது.

சாலமோன் அரசர் அன்று எருசலேம் ஆலயத்தை 7 ஆண்டுகளில் கட்டி முடித்தார். இந்தமாட்சிமிகு புதிய எருசலேமாம் அற்புத குழந்தை இயேசு ஆலயம் சரியாக 3 ஆண்டுகள் 7 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் அடையாளமாக புதிதாக அர்ச்சிக்கப்பட்ட அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் 14.4.2016 அன்று அதே நாளில் சரியாக பிற்பகல் 3மணிக்கு துவங்கி 17.4.2016 அன்று இரவு 7மணி வரையிலும் 100 மணி நேர நற்கருணை ஆராதனை வைத்து, வழிநடத்திய இறைவனுக்கு நன்றி செலுத்தப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்காக உதவி செய்தவர்களுக்காவும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மூன்று திருப்பலிகளும் (நவநாள் திருப்பலி), முழுநேர நற்கருணை ஆராதனையும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் இறை பிரசன்னமும், அற்புதங்களும், அதிசயங்களும் இந்நாள் வரையிலும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

உகார்தே நகரில் அன்னை மரியாள்  குழந்தை இயேசுவுடன் காட்சியளித்த நிகழ்வு:

12-12-2016 அன்று பன்னீர்செல்வம் என்பவருக்கு மாதா காட்சியளித்தார். அவர் தனது வண்டியில் மண்ணை ஏற்றி கொட்டுவதற்காக சென்று கொண்டிருந்த வேளையில், அவரது வண்டிக்கு பின்புறத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் அழகான குழந்தையை வைத்துக் கொண்டு குழந்தை இயேசு ஆலயத்தை பார்த்து கொண்டிருந்தார். அந்தப் பெண் மெழுகுசிலையைப் போலவும், அவரது முகம் பிரகாசமாகவும், நீலவண்ண ஆடை உடுத்தியிருப்பதையும் கண்டார்.

இதன்பிறகு 51 நாட்களுக்குப் பிறகு 31-01-2017 அன்று இரவு 9.00  மணிக்கு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த இந்து சகோதரர் சக்திவேல் என்பவருக்கு, அன்னையானவர் இரண்டாம் காட்சியை அருளியுள்ளார். அவர் இரவு கடைக்கு செல்லும்பொழுது சாலையின் இடது புறத்தில் ஒரு மாபெரும் ஒளியைக் கண்டார். அந்த ஒளியில் ஒரு பெண் கையில் குழந்தையை வைத்திருப்பதை கண்டார். அந்தக் குழந்தை மிகவும் மகிழ்ச்சியோடு சிரித்த முகத்துடன் இருந்திருக்கிறது. அந்த அன்னை எளிமையான முகத்தோடு பிரகாசித்திருக்கிறார். 

இவ்வாறு அன்னை இரண்டு முறை காட்சியளித்துள்ளார். அன்னை காட்சியளித்த இந்த இடத்தில் ஜெபித்து வரும் அநேகருக்கும் இன்று வரை அற்புதங்கள் மற்றும் அதியசங்களும் நடந்து வருகின்றது.

சாட்சிகள்:

1. ஜோசப் கௌதம் -சரண்யா ஆகிய எங்களுக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் முடிந்த நிலையிலும் குழந்தை பாக்கியம் தாமதித்தது. 21.3.2022 அன்று  அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் குழந்தைக்காக வேண்டினோம். இயேசு அடுத்த மாதத்தில் அற்புதம் செய்தார் எங்களுக்கு 2 .1 . 2023ல் J. சாண்ரா ஜோஸ்னா என்ற அழகான பெண் குழந்தையை கொடுத்தார். அற்புத குழந்தை இயேசுவுக்கு மதிமை உண்டாவதாக.

2. பெண்ணின் கால் நலம் பெறல்:

மாதா அம்மா... நான் கடந்த 3 வருடங்களாக எனது இரண்டு கால்கள் உடைந்து ரொம்ப வேதனையாக இருந்தேன். என்னால் நடக்க முடியுமா என்ற வேதனையில் இருந்தேன்.

மாதா அம்மாவிடம் மிகவும் மனம் வருந்தி வேண்டிக் கொண்டேன். அதன்படி 'மாதா'அம்மா எனது வேண்டுதலை நிறைவேற்றி, என் கால்கள் வலி  இல்லாமல்,  எவருடைய துணையும் இல்லாமல் மாதா அம்மாவின் துணையால் நல்ல முறையில் நடக்கிறேன். மாதாவிற்கு கோடானுக்கோடி நன்றி.

3. திண்டுக்கல் டவுன் நெட்டுத்தெருவை சேர்ந்த M. சார்லஸ் ஆல்பர்ட் ஆகிய எனக்கு, திருமணம் நடைபெற வேண்டி கொடைக்கானல் வட்டம் செண்பகனூர் பகுதியில் இருக்கும் குழந்தை இயேசு ஆலயத்தில் வேண்டியிருந்த நிலையில், திண்டுக்கல் டவுன் மேட்டுப்பாட்டியை சேர்ந்த A. மேக்தலின் சுகன்யா அவர்களுடன் எனக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெற்றதற்காக நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

புதுமைகள்:

கொடைக்கானல் மலையின் முதல் குழந்தை இயேசு ஆலயம் உகார்தே நகர் ஆலயம் ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கவலையுடன் வாழ்ந்த பல தம்பதியர் இங்கு வந்து குழந்தை இயேசுவிடம் ஜெபிக்க, குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு, அற்புத குழந்தை இயேசு உயிர் கொடுத்து வாழ்வித்தார். நோய் நொடிகளால் வாடிய பல குழந்தைகள், நலம் பெற்றனர். இதுபோன்ற பல்வேறு புதுமைகள் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் நாள்தோறும் நடந்து வருவதால், கொடைக்கானல் வரும் பலரும் இவ்வாலயம் நாடி வருகின்றனர்.‌ இவர்களுக்காக நாள்தோறும் காலை 06:00 மணி முதல் இரவு 07:00 மணி வரைக்கும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.

பங்கில் செயல்படும் அமைப்புகள்:

1. பங்கு அருள்பணி பேரவை

2. திருவழிபாட்டுக் குழு

3. பாடகற் குழு

4. மாதா சபை

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. பீடப் பூக்கள்

7. ஞாயிறு மறைக்கல்வி மன்றம் (இயேசுவின் கண்மணி)

8. மறைகல்வி ஆசிரியர் குழு

9. இளம் கிறித்தவ மாணவர் இயக்கம்

10. இளைஞர் இயக்கம்

11. நற்செய்தி பணியாளர்கள்

12. ஆசிரியர்/அரசு ஊழியர் அமைப்பு

13. குழந்தை இயேசு பணிக்குழு

துறவற சபைகள்:

1. மரியின் ஊழியர் சபை, உகார்தேநகர்

2. அமல மரி புதல்வியர் இல்லம், உகார்தேநகர்

3. கார்மேல் அருட்சகோதரிகள் இல்லம், கார்மேல்புரம்

4. அமலவைக் கன்னியர் இல்லம், கார்மேல்புரம்

5. லூயிஸ் கொன்சாகா இல்லம், கார்மேல்புரம்

6. சேசு சபையினர், திரு இருதயக் கல்லூரி, செண்பகனூர்

பங்கின் பகுதிகள்:

1. உகார்தேநகர்

2. கார்மேல்புரம்

3. உட்காடு

4. சீனிவாசபுரம்

5. ஆனந்தகிரி 7வது தெரு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. A. அந்தோணிசாமி (2009-2011)

2. அருட்பணி. இஞ்ஞாசி அற்புதராஜ் (2011-2017)

3. அருட்பணி. எட்வின் சகாயராஜ் (2017-2018)

4. அருட்பணி. பீட்டர் சகாயராஜ் (2018-2023)

5. அருட்பணி. V. பாப்புராஜ் (2023----)

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள அற்புதங்கள் நிறைந்த அற்புத குழந்தை இயேசுவின் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ V. பாப்புராஜ் அவர்கள்.

தகவல்கள் ஆதாரம்:

1. குழந்தை இயேசு நவநாள் புத்தகம்.

2. குடும்ப கையேடு.

3. காட்சி கொடுத்த குருசடியில் உள்ள பிளக்ஸ்.

4. சாட்சி உள்ள படங்கள்.