இடம்: திருவில்லிபுத்தூர்
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: திருவில்லிபுத்தூர்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், சந்தைப்பேட்டை
2. புனித சவேரியார் ஆலயம், சீனியாபுரம்
3. புனித செபஸ்தியார் ஆலயம், ரைட்டன்பட்டி
4. குழந்தை இயேசு ஆலயம், மாதாநகர்
5. புனித லூர்து அன்னை ஆலயம், மம்சாபுரம்
6. புனித அமலோற்பவ அன்னை ஆலயம், மம்சாபுரம் கீளூர்
7. புனித வனத்து சின்னப்பர் திருத்தலம், திருவண்ணாமலை
8. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், இந்திராநகர்
9. புனித வளனார் ஆலயம், பாட்டகுளம்
10. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மொட்டமலை
11. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கொத்தன்குளம்
12. செங்குளம்
13. இடையன்குளம்
14. செந்நெல்குளம்
15. மல்லி
16. கீழப்பட்டி
17. கொளூர்பட்டி
18. அல்போன்சா மண்டலம்
பங்குத்தந்தை & வட்டார அதிபர்: அருள்பணி. ச. சந்தன சகாயம்
தொடர்புக்கு: +91 93630 95671
உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. அ. செல்வநாயகம், SDM
குடும்பங்கள்: 1530 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள்: 51
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி: காலை 08:15 மணி
நாள்தோறும் திருப்பலி: மாலை 06:30 மணி
சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள்:
மாதத்தின் முதல் ஞாயிறு காலை 08:15 மணி மறைக்கல்வி மாணவர்களுக்கான திருப்பலி
முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி ஐம்பது வயது கடந்தவர்களுக்கான சிறப்பு திருப்பலி
மாதத்தின் மூன்றாவது ஞாயிறு மாலை 05:00 மணிக்கு மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு திருப்பலி
வெள்ளி காலை 11:00 மணி இயேசுவின் திருஇருதய குணமளிக்கும் மகிமை வழிபாடு.
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி நற்கருணை ஆசீர் திருப்பலி
மாதத்தின் முதல் சனிக்கிழமை சப்பரபவனி. தொடர்ந்து கெபியில் திருப்பலி.
ஒவ்வொரு நாளும் பிற்பகல் 03:00 மணி திருஇருதய ஆண்டவரின் செபமாலை மற்றும் சிறப்பு செபம் நடைபெறும்.
திருவிழா: ஜூன் 11 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்
திருவில்லிபுத்தூர் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. மைக்கேல் ராஜ்
2. அருட்பணி. இருதயராஜ்
3. அருட்பணி. ஜாண் பிரிட்டோ (late)
4. அருட்பணி. இளங்கோவன் அற்புதராஜ்
5. அருட்பணி. சந்தியாகப்பன்
6. அருட்பணி. மைக்கேல் சேவியர், SJ
7. அருட்பணி. ஜஸ்டின்
8. அருட்பணி. ஆரோன்
9. அருட்பணி. பொன் ரூபன், SJ
10. அருட்பணி. புதுமை சவரி, ரோம்
11. அருட்பணி. சத்தியராஜ், ரோம்
மற்றும் பல அருட்சகோதரிகள்
வழித்தடம்: திருநெல்வேலி -இராஜபாளையம் - (திருவில்லிபுத்தூர்)
ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரை -திருமங்கலம் -கல்லுப்பட்டி -கிருஷ்ணன்கோவில் -ஸ்ரீவில்லிபுத்தூர்
இரயில்: மதுரை -திருமங்கலம் -சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர்.
இரயில்: நாகர்கோவிலில் -இராஜபாளையம் -ஸ்ரீவில்லிபுத்தூர்
Location map:
பங்கு வரலாறு:
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வானளாவ உயர்ந்த கோபுரங்களோடு வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்த நகரமாகத் திகழ்வது திருவில்லிபுத்தூர். மிகப்பழைமை வாய்ந்த கிறிஸ்தவ வரலாற்றைக் கொண்டது திருவில்லிபுத்தூர். இங்கு 1645-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக மூத்தவர்களின் வாய்மொழி வரலாறாகக் கூறப்படுகிறது. அதற்கான வரலாற்று மூலம் சந்தைப்பேட்டைக் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்வெட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
1746-ஆம் ஆண்டு இயேசு சபை குறிப்புகளின்படி திருமலை நாயக்க மன்னர்களின் படைகளில் சிப்பாய்களாக பணியாற்றிய கிறிஸ்தவ மக்களுக்கு, 1736-ஆம் ஆண்டு அம்மன்னர் அன்பளிப்பாக நிலம் வழங்கியுள்ளனர். இந்நிலங்களில் பெரும்பகுதியை இழந்துவிட்ட இம்மக்களின் மீதமுள்ள நிலப்பரப்பே இன்றைய சீனியாபுரமாகும்.
தொடக்கத்தில், திருவில்லிபுத்தூர் கத்தோலிக்கச் திருச்சபையானது காமநாயக்கன்பட்டி இயேசு சபை மறைபரப்பு மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1875-ஆம் ஆண்டு வத்திராயிருப்பு புதுப்பட்டியை (வ.புதுப்பட்டி) மறைபரப்பு மையமாக மாற்றிய பின்பு, இப்பகுதி அருட்பணி. திரிங்கால் சே.ச. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் கத்தோலிக்கத் திருச்சபையும் அருட்பணி. திரிங்கால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அவருடைய உதவிப் பங்குத்தந்தையர்களும், திருவில்லிபுத்தூரில் தங்கியிருந்தும், மாட்டுவண்டியில் பயணம் செய்தும் மறைப்பணியாற்றினர்.
அருட்பணி. திரிங்கால் அவர்களின் மறைவுக்குப் பின்னர் 1892-ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் தனிப்பங்காகப் பிரிந்தது. அருட்பணி. பெர்தியு சே.ச., அருட்பணி. தாலன் சே.ச., அருட்பணி வி.பி. ஜெகன்நாதர் சே.ச. ஆகியோரின் வழிகாட்டுதலில் பங்குப்பணிகள் நடைபெற்றன. இப்பங்கு இன்று இருக்கும் சாத்தூர், சிவகாசி, கழுகுமலை, இளையரசனேந்தல், சுந்தரநாச்சியார்புரம் (1910-இல் தனிப்பங்காக), திருமங்கலம் போன்ற பல பங்குகளுக்குத் தாய்ப்பங்காகும்.
அருட்தந்தையர்கள் எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லா அக்காலத்தில் இங்கிருந்து மாட்டு வண்டியிலும், குதிரை வண்டியிலும் பல்வேறு இடங்களுக்குச் சென்று மறைப்பணியாற்றி வந்தனர். தற்போதுள்ள ஆலயம் கட்டப்படுவதற்கு முன் ஊரணிப்பட்டி சாலியர் நடுத்தெருவில் இயேசுவின் திருஇருதய ஆலயம் கட்டப்பட்டு, கத்தோலிக்க மக்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர்.
1906-ஆம் ஆண்டு அருட்பணி. மாகே, சே.ச. அவர்கள் திருவில்லிபுத்தூர் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அருட்பணி. மாகே, சே.ச. அவர்கள் சிறந்த நிர்வாகத் திறனையும், கடின உழைப்பையும் நல்கி ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பங்கு முழுமைக்கும் வழங்கினார். தனது 13 ஆண்டுகாலப் பங்குப்பணியில் தற்போது நாம் காணும் பிரம்மாண்டமான ஆலயக் கட்டுமான பணியைத் தொடங்கினார். ஆலயத்தின் வரைபடம் சிலுவை வடிவமாக இருப்பினும், ஆலயத்தின் முன்பகுதியிலிருந்து பீடம் வரையிலும் மற்றும் இரண்டு கோபுரத்தை மணிக்கூண்டு மட்டம் வரையிலும் சுண்ணாம்புச் சாந்துடன் கடுக்காய், கருப்பட்டி, பதநீர் ஆகியவற்றை ஊறவைத்துக் கட்டப்பட்டது. பங்குத்தந்தை தங்குவதற்கான மூன்று அறைகளைக் கொண்ட பங்களாவின் தரைத்தளத்தைக் கட்டிமுடித்தார். 22 பள்ளிகளை பல முக்கிய கிராமங்களில் நிறுவினார். மேலும் 1911 ஆம் ஆண்டு ICM அருட்சகோதரிகளை அழைத்து வந்து கன்னியர் இல்லத்தை நிறுவினார். அருட்சகோதரிகள் இவருடைய பணிக்காலத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, முதியோர் இல்லம் ஆகியவற்றை நிறுவினர்.
13 ஆண்டுகால அயராத பணிகளுக்குப் பின் 1919-இல் அருட்பணி. மாகே, சே.ச.அவர்கள் பணிமாற்றம் பெற்றார். பின்னர் அருட்பணி. மொரேயர், சே.ச. பொறுப்பேற்று முழுமையாய் நிறைவுபெறாமல் இருந்த இரண்டு கோபுரங்களைக் கட்டி, ஆலயப் பணிகளை நிறைவு செய்ததோடு குடிசையாக இருந்த பள்ளிகளை ஓட்டுக் கட்டிடமாக மாற்றினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் வ.புதுப்பட்டி தனிப்பங்குத் தளமாகப் பிரிக்கப்பட்டபோது, அதன் முதல் பங்குத்தந்தையாக 1928-இல் பொறுப்பேற்றார்.
1938-ஆம் ஆண்டில் அருட்பணி. ஜாலி சே.ச. அவர்கள் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று, பெண் குழந்தைகளின் கல்விக்காக ICM அருட்சகோதரிகள் பள்ளிகளை நிறுவிப் பணியாற்றும் நோக்குடன், கூனங்குளத்தில் இருந்த குருசடியோடு இருந்த நிலத்தை ரூபாய் 5000-க்குக் கொடுத்தார். 03.12.1940-இல் சிலுவை வடிவிலான ஆலயத்திற்கு அடித்தளமிட்டு ஆலய விரிவாக்கமும், பங்குத்தந்தை இல்லத்தின் மேல்தளமும் இவரது காலத்தில் நிறைவுபெற்றன.
1950 ஆம் ஆண்டு அருட்பணி. மனுவேல் சே.ச. அவர்கள் பொறுப்பேற்று, 08.12.1953 முதல் 12.12.1954 முடிய புனித லூர்து மாதாவின் கெபியை மக்களின் உழைப்பினால் கட்டிமுடித்தார். இவரது காலத்தில் ஆலய வளாகத்தின் முன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மக்களின் நலன்கருதி சிவகாசி தனிப்பங்காகப் பிரிக்கப்பட்டது. இவருக்குப் பின் அருட்தந்தை பீட்டர் மொந்தோ அவர்கள் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்கள். அருட்தந்தை ஜாலி அவர்கள் அமைத்த சிலுவை வடிவிற்கான ஆலய அடித்தள மட்டத்திலிருந்து, பங்கு மக்களின் உடல் உழைப்பால் இன்று இருக்கிற வடிவத்தில் திருஇருதய ஆண்டவர் ஆலயம், அருட்தந்தை பீட்டர் மொந்தோ அவர்களால் கட்டிமுடிக்கப்பட்டது. ஆலயத்தின் தெற்குப்புறம் ஓடையோரம் சுற்றுச்சுவருக்கான அடித்தளமிட்டு ஆலயம் பேணி பாதுகாக்கப்பட்டது.
1968-ஆம் ஆண்டிலிருந்து மறைமாவட்டக் குருக்கள் பங்கு நிர்வாகத்தை வழிநடத்த ஆரம்பித்தனர். திருவில்லிபுத்தூர் பங்கு மறைவட்ட மையமாக மாற்றப்பட்டு, அருட்பணி. மரிய சூசை அவர்கள் பங்கின் முதல் மறைமாவட்ட குருவாகப் பொறுப்பேற்று பங்குப் பணியாளராகவும், முதல் மறைவட்ட அதிபராகவும் 3 ஆண்டுகள் பணி செய்தார். பின்பு 1971 முதல் 1976 வரை அருட்தந்தை மரியதாஸ் அவர்கள் மறைவட்ட அதிபராகவும் பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார்.
1976-ஆம் ஆண்டு அருட்பணி. மணலா அவர்கள் பொறுப்பேற்று 1984 வரை பங்கின் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளை முன்னெடுத்தார்கள். 1977-இல் ஆலங்குளத்தில் ஆலயமும், இராசபாளையத்தில் சகாய அன்னை ஆலயமும், பங்குத்தந்தை இல்லமும் (1978-79), திருவில்லிபுத்தூர் பங்கின் வளர்ச்சிக்காக 15 கடைகளும், கனரா வங்கி கட்டடமும் (1983-84) கட்டப்பட்டன. மம்சாபுரத்தில் ஆலயமும், இந்திரா நகருக்குப் பங்குத்தந்தை பெயரில் இடம் வாங்கிச் சிற்றாலயமும், பாட்டக்குளம் ஆலயம் சீரமைக்கும் பணியும், ஆலய வண்ணம் பூசுதல் பணியும் இவரது காலத்தில் நடைபெற்றன.
1984 முதல் 1987 வரை அருட்பணி. அருள்ராயன் அவர்கள் பங்குத்தந்தையாகவும், வட்டார அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் வட்டார மையமானது மாவட்ட மையமான விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்பணி. ஜெரோம் எரோனிமுஸ் 1988-1989 வரை பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். 1989-இல் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்பணி. மரிய திரவியம் 1989 டிசம்பர் 26-இல் காலமானார்.
1990 ஜனவரி முதல் அருட்பணி. V.M. இருதயம் அவர்கள் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். பங்கு ஆலய வண்ணம் தீட்டல் மற்றும் கொத்தன்குளத்தில் புதிய ஆலய கட்டுமானப்பணி ஆகிய பணிகளை மேற்கொண்டார்.
அருட்பணி. பீட்டர் சகாயராஜ் அவர்களால் எல்லாக் கிளைப்பகுதிகளிலும் திருப்பலி, தூய வனத்துச் சின்னப்பர் சிற்றாலயத்தில் முதல் வெள்ளி திருப்பலி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. சிவகாசி சாலையில் உள்ள வணிக வளாகம் மதுரை உயர்மறைமாவட்டத்தால் இவரது காலத்தில் கட்டப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் பங்கு ஆலயத்தைச் சுற்றிலும் கற்கள் பதித்தல், ஆலயம் வண்ணம் பூசுதல் மற்றும் ஆலயத்தின் தளம் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்றன.
அருட்பணி. A. அமல்ராஜ் 2001 முதல் 2003 வரை பங்குத் தந்தையாக பணியாற்றினார். அருட்பணி. R. அமல்ராஜ் அவர்கள் 2003-ஆம் ஆண்டு முதல் 2006 வரை பணியாற்றினார். இவர் புதிய நற்கருணைப் பேழையை நிறுவி, ஒலி அமைப்பையும் மாற்றிச் சரிசெய்தார்.
2006-ஆம் ஆண்டு மீண்டும் திருவில்லிபுத்தூர் மறைவட்ட மையமாக மாறியது. அருட்பணி. அந்தோணி ஜான் கென்னடி மறைவட்ட அதிபராகப் பொறுப்பேற்றார். இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியான மொட்டமலையில் புனித மடுமாதாவுக்கான ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 7.10.2007 அன்று பேரருட்பணி. V. ஜோசப் செல்வராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மாதாநகர் அற்புத குழந்தை இயேசு ஆலயப் பணிகள் நிறைவுபெற்றுத் திறக்கப்பட்டது. R.C தொடக்கப்பள்ளியின் ஓட்டு மேற்கூரையை மாற்றி, கான்கிரீட் தளமாகமாக்கினார். பங்கு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செபிக்க மாதத்தின் முதல் ஞாயிறு திருப்பலி, பங்கு ஆலயத்தில் மட்டும் நடைபெறும் என்ற புதிய முறையை நடைமுறைப்படுதினார். புனித வனத்துச் சின்னப்பர் சிற்றாலயத்தின் பிற்பகுதி விரிவாக்கம் இவரது காலத்தில் தொடங்கப்பட்டது.
2007-இல் பொறுப்பேற்ற அருட்தந்தை ஜோசப் செல்வராஜ் பணிக்காலத்தில் மம்சாபுரம் மேலூரில் ஆலயம் கட்டப்பட்டு, 31.05.2008-இல் அர்ச்சிக்கப்பட்டது.
2008-ஆம் ஆண்டு அருட்பணி. சேவியர்ராஜ் பங்குப் பணியாளராகவும் மறைவட்ட அதிபராகவும் பொறுப்பேற்று, பங்கு ஆலயத்தின் தளத்தை மார்பிள் தளமாக மாற்றி ஆலயத்திற்கு வண்ணம் பூசினார். பங்குப் பேரவையையும் அன்பியத்தையும் ஏற்படுத்தினார். இந்திராநகர் ஆலயக் கட்டுமானப் பணிக்கான அடித்தளமிட்டார். பள்ளிக்கான விளையாடு மைதானம் வாங்கி 2009-ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், 2012-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தினார்.
பேரருட்பணி. ஜோசப் செல்வராஜ் முதன்மைக்குரு அவர்கள் 2008-ஆம் ஆண்டு பொறுப்புத் தந்தையாகப் பணியாற்றியபோது கொண்டுவரப்பட்ட, மேல்நிலைப்பள்ளியின் கட்டுமானப் பணித்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தின் மூலம் (Project Work) அருட்பணி. சேவியர்ராஜ் காலத்தில் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றது. MMMF நிறுவனத்தின் துணைத்தலைவர் அருட்பணி. ஜான் செல்வமனோகர் அவர்கள் MMMF நிறுவனத்தின் வழியாக 11.08.2010-ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டடிடம் கட்டப்பட்டது. பங்கின் வளர்ச்சிக்காக உள்ள வணிக வளாகத்தை மறுசீரமைப்புச் செய்து வணிக வளாகத்தின் முதல்தளமும் கட்டிமுடிக்கப்பட்டது. தனிநபரின் உடைமையாய் இருந்த வனத்துச் சின்னப்பர் குருசடி, பங்கு நிர்வாகத்தின்கீழ்க் கொண்டுவரப்பட்டது.
சீனியாபுரத்தில் புனித சவேரியார் ஆலயமானது இறைமக்களின் உதவியோடு ஊர்நிர்வாகத்தால் 02.12.2011-இல் கட்டிமுடிக்கப்பட்டது. தூய பவுல் நற்செய்திப் பணிக்குழுவால் 2011 -ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையில் முழு இரவு தியானம் நடத்தப்பட்டு வருகிறது.
17.06.2013-இல் ஆண்டு அருட்பணி. அந்தோணிராஜ் பங்குப் பணியாளராகவும் மறைவட்ட அதிபராகவும் பொறுப்பேற்றார். 2013-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மறைக்கல்வி மாணவ மாணவியருக்குச் சிறப்புத் திருப்பலி தொடங்கப்பட்டது. மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மம்சாபுரம் மேலூரில் மக்களின் தேவையைக் கருதி திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அருட்பணி சேவியர்ராஜ் அவர்களால் புதுப்பிக்கப்பட்ட மம்சாபுரம் கீழூர் ஆலயம் 04.8.2013-இல் மந்திரிக்கப்பட்டது. அரசு அறிவுறுத்தலுக்கு ஏற்ப பங்கு ஆலய வளாகத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டது. 2013 முதல் 2018 வரை கீழ்க்கண்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
15.01.2014 புனித வனத்துச் சின்னப்பர் கோவில் விரிவாக்கமும் அர்ச்சித்தல்.
20.07.2014 புனித வளனார் அரங்கம் (Stage) அர்ச்சித்தல்.
10.08.2014 கல்வி மற்றும் மருத்துவ நிதி அர்ச்சித்தல்.
08.09.2014 பங்கு ஆவணங்கள் கணினிமயப்படுத்தல்.
24.12.2014 திருப்பண்ட அறை (Sacristy) புதுப்பித்து அர்ச்சித்தல்.
04.04.2015 ஆலய வளாகத்தில் மின்விளக்குகளுடன் கம்பம் நிறுவுதல்.
26.07.2015 பாட்டக்குளம் - புனித ஜோசப் ஆர்.சி நடுநிலைப்பள்ளி அர்ச்சித்தல்.
22.11.2015 பணியாளர்கள் பங்கு அலுவலகம் அர்ச்சித்தல்.
22.11.2015 பங்கு மக்களுக்கான கழிப்பறை வசதி அமைக்கப்பட்டது.
22.11.2015 புதிய குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது.
24.12.2015 புனித லூர்து மாதா கெபி அர்ச்சித்தல்.
10.07.2016 திருஇருதய தியான மையம் அர்ச்சித்தல்.
23.06.2017 கல் கொடிமரம் அர்ச்சித்தல்.
02.07.2017 ஆலயத்தின் எழில்மிகு நுழைவு வாயில் அர்ச்சித்தல்.
02.12.2017 பாட்டக்குளம் புனித வளனார் ஆலயம் அர்ச்சித்தல்.
2018 கொத்தன்குளம் புனித லூர்து அன்னை ஆலயம் அர்ச்சித்தல்.
2018 பங்கு ஆலயத் திருப்பீடம் அர்ச்சித்தல்.
2013-2014-ஆம் கல்வி ஆண்டில் புனித ஜோசப் ஆர்.சி. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 26.07.2015-இல் மறைமாவட்ட நிதியுதவியால் பாட்டக்குளத்தில் கட்டப்பட்ட ஆர்.சி. நடுநிலைப்பள்ளி போராயர் அர்ச்சித்து, புனித ஜோசப் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியின் மேல்தளத்தில் மறைமாவட்ட நிதியுதவியால் தளவோடு பதித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளியின் உள்கட்டமைப்பு பணிகள் (கழிப்பறை அமைத்தல், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், மாணவர்களுக்கான இருக்கை வசதிகள், தண்ணீர் வசதி) மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வும், சீரமைத்தல் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
அருட்பணி. அல்வரஸ் செபாஸ்டின் பணிக்காலகட்டத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக துன்புற்றிருந்த மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டு, ஒலி அமைப்புகள் சீரமைக்கப்பட்டது. மக்களின் ஒத்துழைப்புடன் வனத்து சின்னப்பர் சிற்றாலய பீடம் புதுப்பிக்கப்பட்டு, சிற்றாலய கெபியும் புதுப்பிக்கப்பட்டது. இத்துடன் சிற்றாலய உணவு அறை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்திராநகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. பள்ளிக்கூடம் தொடர்ந்து 4 கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்றது. பங்குதந்தை இல்லம், உதவி பங்குதந்தை அறை ஆகியன புதுப்பிக்கப்பட்டது.
தற்போது பங்குத்தந்தையாக மற்றும் வட்டார அதிபராக பணியாற்றி வருகிற அருட்பணி. சந்தன சகாயம் அவர்களின் முயற்சியால், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பங்கினை திருத்தலமாக வளர உழைத்து வருகிறார். மேலும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயத்தை புதுப்பித்து, ஆலயத்தை சுற்றிலும் அலங்கார கற்கள் பதித்து அழகுபடுத்தியுள்ளார்.
மேலும் அருட்பணி. சந்தன சகாயம் அவர்களின் ஆன்மீகப் பணிகள்:
1. பங்கில் 88 பீடப் பணியாளர்களை ஏற்படுத்தி, ஒவ்வொருவருக்கும் புதிய பீட பணியாளர்கள் உடைகள் தைத்து கொடுத்து உற்சாகப் படுத்தப்பட்டது.
2. வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் குணமளிக்கும் மகிமை வழிபாடு காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
3. வருடத்தின் எல்லா நாட்களிலும் மாலை 3 மணிக்கு திரு இருதய ஆண்டவரின் திரு செபம் பங்கு ஆலயத்தில் நடைபெறுகிறது.
4. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 50 வயதுக்கு மேற்பட்ட மக்கள் எல்லாருக்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பங்கின் சார்பாக பெரியவர் பங்கேற்று ஆசீர்வாதம் பெற்றுச் செல்லவும், அவர்கள் வந்து போக உதவியாக ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
5. மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணிக்கு 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலி முடிந்தவுடன் குழந்தைகளுக்கு திரு இருதய ஆண்டவரின் சுருபங்கள் மந்திரிக்கப்பட்டு கழுத்தில் அணிவிக்கப்படுகிறது.
6. மாதத்தின் இறுதி நாட்களில் அந்தந்த மாதங்களில் இறந்த ஆன்மாகளின் வீடுகளில் ஆறுதல் செபம் சொல்லி வீடுகள் சந்திப்பு.
7. மாதத்தின் முதல் ஞாயிறன்று மறைக்கல்வி மாணவர்களுக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
8. முதல் முறையாக திருவில்லிபுத்தூர் மகிமை நிறைந்த இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் இயேசுவின் பாஸ்கா நிகழ்வுகள் நடைபெறுகிறது.
9. திரு இருதய ஆண்டவரின் குணமளிக்கும் மகிமை எண்ணெய் மக்கள் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது.
10. திரு இருதய மகிமை எண்ணெய் மூலம் குணமடைந்து சாட்சியங்கள் அடங்கிய அருள் காட்சியகம் அமைக்கப்பட்டு பேராயர். அந்தோணி பாப்புசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
11. திருஇருதய மகிமை குழு ஆரம்பிக்கப்பட்டது.
12. ஆலயத்தில் தீர்த்த தொட்டிகள் மற்றும் பாவசங்கீர்த்தன தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கெபி & சிற்றாலயம்:
1. தூய லூர்து மாதா கெபி
2. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள, புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயம்.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. பீடப்பணியாளர்கள்
4. புனித பவுல் நற்செய்திக் குழு
5. மறைக்கல்வி
6. திரு இருதய மகிமை வழிபாட்டுக் குழு
7. திரு இருதய ஜெபக்குழு
ICM sisters Convent: கல்விப்பணி செய்து வருகின்றனர்.
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:
1. St Joseph Nursery school,
2. St. Joseph Primary school
3. St Joseph Higher secondary school
4. RC Middle school, Pattakulam
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. Fr. மாகே, SJ (1906-1919)
2. Fr. மொரையர், SJ (1919-1926)
3. Fr. சாரோன், SJ (1926-1931)
4. Fr. ஆதிரையன், SJ (1931-1938)
5. Fr. ஏ.எம். ஜாலி, SJ (1938-1944)
6. Fr. அர்னால்டு, SJ (1944-1946)
7. Fr. அல்லார்டு, SJ (1946-1950)
8. Fr. S. மனுவேல், SJ (1950-1955)
9. Fr. பீட்டர் மொந்தோ, SJ (1955-1968)
10. Fr. மரியசூசை (1968-1971)
11. Fr. மரியதாஸ் (1971-1976)
12. Fr. ஜேக்கப் மணலா (1976-1984)
13. Fr. அருள்ராயன் (1984-1988)
14. Fr. ஜெரோம் எரோனிமுஸ் (1988-1989)
15. Fr. மரிய திரவியம் (1989Jun -1989Dec26)
16. Fr. V.M. இருதயம் (1990-1995)
17. Fr. பீட்டர் சகாயராஜ் (1995-2001)
18. Fr. அ. அமல்ராஜ் (2001-2003)
19. Fr. R. அமல்ராஜ் (2003-2006)
20. Fr. அந்தோணி ஜான் கென்னடி (2006-2007)
21. Fr. ஜோசப் செல்வராஜ் (2007-2008)
22. Fr. சேவியர்ராஜ் (2008-2013)
23. Fr. G. அந்தோணிராஜ் (2013-2018)
24. Fr. அல்வரஸ் செபாஸ்டின் (2018-2022)
25. Fr. ச. சந்தன சகாயம் (2022--)
தென்தமிழகத்தில் நூற்றாண்டை கடந்து, பல அற்புதங்களையும், புதுமைகளையும் செய்து வரும் திருவில்லிபுத்தூர் மகிமை நிறைந்த திரு இருதய ஆண்டவர் ஆலயம் வாருங்கள்.. திரு இருதய ஆண்டவரின் அன்பில் நிலைத்திருங்கள்..
தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. ச. சந்தன சகாயம் அவர்கள்.
ஆலய வரலாறு: பங்கின் கையேடு