963 புனித பெரியநாயகி மாதா திருத்தலம், பெரியபாளையம்

    


புனித பெரியநாயகி மாதா திருத்தலம்

இடம்: பெரியபாளையம்

முகவரி: மாதா கோயில் தெரு, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், 601102 

மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: மீஞ்சூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித சகாய மாதா ஆலயம், கன்னிகைப்பேர்

பங்குத்தந்தை அருட்பணி. N. சேகர்

குடும்பங்கள்: 69

அன்பியங்கள்: 4

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

புதன், வெள்ளி, சனி மாலை 06:30 மணி -  திருப்பலி

திங்கள், செவ்வாய், வியாழன் காலை 06:30 மணி - திருப்பலி 

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி ஜெபமாலை, 06:30 மணி திருப்பலி, தேர்பவனி

திருவிழா: ஆகஸ்ட் 11 முதல் 15 வரை

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரர். ஜெரோம், SJ

வழித்தடம்: ரெட்ஹில்ஸ் -தாமரைப்பாக்கம் கூட்ரோடு -கன்னிகைப்பேர் -பெரியபாளையம்

Location map: Periyanayagi Madha Church

https://maps.app.goo.gl/rkVvB6HNWFsTgNHv5

திருத்தல வரலாறு

1642-ம் ஆண்டு ஃபிரெஞ்சு மறை போதகர்கள் சென்னைக்கு வந்தார்கள். இதற்குப்பிறகு பெரியபாளையத்தில் இருந்த பழைய ஆலயம் கட்டப்பட்டது. 

1822-ம் ஆண்டிலேயே அருள்பணி. கிரகோரி மேரிடிவோனோ என்னும் குருவானவரின் காலத்தில், அன்னை பெரியநாயகியின் திருவிழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு, ஏராளமானோர் கலந்து கொண்டதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. 

1906-ம் ஆண்டு கடுமையான இடியால் தாக்கப்பட்டு ஆலயம் பழுதடைந்தது. ஆனால் அன்னையின் சுரூபம் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது. 1911-ம் ஆண்டில் இருந்து 1965-ம் ஆண்டுவரை குருக்கள் பற்றாக்குறையின் காரணமாக பெரியபாளையத்திற்கு, ரோசாநகர் பங்கிலிருந்து குருக்கள் வந்து திருப்பலி நிகழ்த்தி ஆலயம் நிகழ்த்தி வந்தார்கள். 1966-ம் ஆண்டில் பெரியபாளையம் தனி பங்காக செயல்படத் துவங்கியது. 

1912-ல் திருச்சியில் பிரகாசியம்மாள் என்ற ஓர் அன்னையின் பக்தை வாழ்ந்து வந்தாள். அவளது கழுத்திற்கு முன்புறம் தொண்டையில் ஒரு கட்டி கிளம்பியது. உயிரே போய் விடும் அளவிற்கு வலி..! உண்ணக்கூட இயலாமல் பெரும்பாடுபட்டாள். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று, ஏராளமான மருந்துகள் எடுத்துக் கொண்ட பிறகும் நோய் குணமாகவில்லை. அவளால் மூச்சு விடக்கூட கடினமாக இருந்தது. இறுதியாக சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு ஓடிவந்தாள். பெர்னான்டஸ் எனும் மருத்துவரிடம் சென்றாள். அவளது கட்டியை பரிசோதித்த டாக்டர், "அம்மா! இந்த கட்டி நரம்போடு பின்னிப் பிணைந்து வளர்ந்து விட்டிருக்கிறது. எனவே அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும்" என்று கைவிரித்து விட்டார்.

நம்பிக்கையிழந்த நிலையில் அவள், பெரியபாளையத்தில் அமைந்திருக்கும் பெரியநாயகி அன்னையைப் பற்றி கேள்விப்பட்டு, தேடி வந்தாள். வல்லமை மிக்க அந்த தாயின் பாதத்தில் அமர்ந்து, தனது நோய் குணமாக வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதாள். ஒரு வாரமாக அன்னையின் ஆலயத்திலேயே தங்கி, "அம்மா, தாயே என்னை சுகப்படுத்தும்வரை நான் உன் பாதத்தை விட்டு அகலமாட்டேன்" என்று சொல்லி அழுது ஜெபித்துக் கொண்டேயிருந்தாள்.

அன்னையின் அற்புதம் வெளிப்பட்டது. ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு அருள்புரியும் அன்னையின் கடைக்கண் பார்வை அவள் மேலும் பட்டது. கட்டி மாயமாய் மறைந்து, இருக்கிற இடம் இடம் தெரியாமல் போயிற்று. அன்னையின் புகழை பாடிக்கொண்டே மகிழ்ச்சியோடு தன் ஊருக்குப் புறப்பட்டாள் பிரகாசியம்மாள். அன்றுமுதல் இன்றுவரை எண்ணிலடங்கா மக்கள் பெரியபாளையத்தில் வீற்றிருக்கும் பெரியநாயகி அன்னையின் திருவடியில் தாங்கள் வைக்கும் மன்றாட்டுகளும், வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு, பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

எல்லா மதத்தினருக்கும் சமய பேதமின்றி, எந்த வித்தியாசமும் பார்க்காமல் அன்னை அருள்புரிந்து கொண்டிருப்பது இந்த இடத்தின் சிறப்பு அம்சமாகும். கிறிஸ்தவர்களை விட அதிகமாக இங்கு அன்னையை தரிசிக்க வருகின்ற இந்து சமய சகோதர சகோதரிகளே இதற்கு சாட்சி.

ஒவ்வொரு ஆண்டும் அன்னையின் தேர்த்திருவிழா ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பெரியபாளையத்தின் வீதிகளில் அன்னை வலம்வரும் காட்சியைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அவ்வமயம் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கில் எல்லா சமயத்தினரும் நின்று அன்னையை தரிசிக்கிறார்கள். மாலைகள் சாற்றுவதும், மெழுகுவர்த்திகள் ஏந்தி காணிக்கை அளிப்பதும், பூக்களை தூவி வணங்குவதும் கண்கொள்ளா காட்சிகளாகும். அன்னையின் திருவிழாவில் கல கலந்துகொண்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சென்னையிலிருந்தும், இன்னும் சுற்றுப்புறத்திலிருக்கிற கவரப்பேட்டை, கிண்டி, ஊத்துக்கோட்டை, காட்டூர், மீஞ்சூர், ஆரணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, மணலி, காரனோடை, சோழவரம், ரெட்ஹில்ஸ், புழல் போன்ற ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொள்கின்றனர். 

வெளிநாட்டு மறைபோதகர்களால் பெரியபாளையத்தில் முதன்முதலாக கட்டப்பட்டிருந்த பெரியநாயகி மாதாவின் ஆலயம் 1906-ம் ஆண்டு கடுமையான இடியால் தாக்கப்பட்டு பழுதடைந்தது. ஆனால் அன்னையின் சொரூபம் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மேல் விழவிருந்த இடியை, தன்மேல் தாங்கி காப்பாற்றிய இந்த அற்புத நிகழ்வை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 1966-ம் ஆண்டில் சிமெண்ட் ஒடு போடப்பட்ட ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டு பெரியபாளையம் தனி பங்காக செயல்படத் துவங்கியது.

40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் பழுதடைந்தாலும், இடம் போதாததாலும் புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் பயனாக 06.12.2003 அன்று பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 11.02.2004 அன்று துணை ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களது ஆசீர்வாதத்தோடு கட்டிடப்பணி தொடங்கியது.

முதல் ஆலயம் உடைந்த நிகழ்வின் நூறாவது ஆண்டில் (1906 -2006) அன்னைக்கு புதியதொரு எழில்மிகு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, மேதகு ஆயர் A. M. சின்னப்பா ச.ச அவர்கள் 16.12.2006 அன்று புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.

பங்குத் தந்தையர்களும் பணிகளும்:

1. அருள்பணி. ஜார்ஜ் பாலக்காட்டுக்குன்னல் (1966-1986)

சிறப்புப் பணிகள் : ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், பள்ளிகள் துவக்கம், பழைய ஆலயம் கட்டப்பட்டது. கன்னியர் இல்லங்கள் கட்டப்பட்டன.

2. அருள்பணி. M. அருள்ராஜ் (1986-1988)

சிறப்புப் பணிகள் : விவிலிய நற்செய்திப்பணி, ஊத்துக்கோட்டை ஆலய கட்டிடப்பணி துவக்கம். கன்னிகைப்பேர் கெபி மற்றும் ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டது.

3. அருள்பணி. E. அருளப்பா (1988-1995)

சிறப்புப் பணிகள் : ஊத்துக்கோட்டை ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பள்ளிக்கும்., கன்னியர் இல்லத்திற்கும் நிலம் வாங்கப்பட்டது. பெரியபாளையத்திலும், ஊத்துக்கோட்டையிலும் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஜூலியா மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. கன்னிகைப்பேரில் பொது குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

4. அருள்பணி. ஜான் ஆன்ரு (1995-2002)

சிறப்புப் பணிகள் : ஊத்துக்கோட்டை பள்ளிக்கட்டிடம் விரிவாக்கப்பட்டு, மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. பெரியபாளையத்தில் மில்லினியம் மாதா டவர் கட்டப்பட்டது. கன்னிகைப்பேர் ஆலயம் கட்டப்பட்டது. ஊத்துக்கோட்டை தனி பங்காக பிரிக்கப்பட்டது. பள்ளி, ஆலய மதில் சுவர்கள் கட்டப்பட்டன.

5. அருள்பணி. ஜோசப் ஜெயக்குமார் (2002-2007)

சிறப்புப் பணிகள் : பள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது. பள்ளியில் வகுப்புகள் உயர்த்தப்பட்டன. பெரியநாயகி அன்னைக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டது.

6. அருள்பணி. உபால்டஸ் சுந்தர் (2007-2014)

சிறப்புப் பணிகள்: பள்ளி மெட்ரிக் பள்ளியாக உயர்த்தப்பட்டது. கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டன. புதிய ஆலயம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது.

7. அருள்பணி. காணிக்கைராஜ். S (2014-2019)

சிறப்புப் பணிகள்: பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

8. அருள்பணி. அருள்ராஜ் D. (2019-2022)

சிறப்புப் பணிகள் : கோவிட் காலத்தில் தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு, பள்ளியும், பங்கும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது.

9. அருள்பணி. சார்லஸ் டேவிட் இம்மானுவேல் -பொறுப்பு (2022-2023)

இக்கட்டான சூழ்நிலையில் இப்பங்கினையும், பள்ளிக்கூடத்தையும் சிறப்புற வழிநடத்தினார்.

10. அருள்பணி. N. சேகர் (2023----)

28.05.2023 அன்று முதல் பங்கின் பொறுப்பேற்று, ஆன்மீகப் பாதையில் சிறப்புற வழிநடத்தி வருகின்றார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை, அமாவாசை ஜெபம் நடைபெறுகிறது.

பங்கில் உள்ள துறவற இல்லங்கள்:

ஜெபமாலை அன்னை அருட்சகோதரிகள் 

(Rosarian Sisters) மற்றும் SCSM அருட்சகோதரிகள்

பங்கின் பள்ளிக்கூடம்:

St. Joseph's Matriculation School 

பங்கின் கெபிகள்..

தூய ஆரோக்கிய மாதா கெபி, பசார்

தூய ஆரோக்கிய மாதா கெபி, பெரிய பாளையம்

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை

இளைஞர் இயக்கம்

பீடச்சிறார்

பாடகற்குழு

மறைக்கல்வி.

கண்ணீர், கவலை, நோய்கள், கடன்தொல்லை என வருத்தத்தில் ஆழ்ந்திருப்போரே... வாருங்கள் பெரியபாளையம் நோக்கி... பெரிய பெரிய அற்புதங்களால் உங்கள் வாழ்வை மலரச் செய்வார் தூய பெரியநாயகி மாதா..

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. சேகர் அவர்கள்.

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரித்து கொடுத்தவர்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில், ஆலய உறுப்பினர் விஷ்வா அவர்கள்.