புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: பெருஞ்சாணி
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: திரித்துவபுரம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு
பங்குதந்தை அருட்பணி. சேவியர் ராஜ்
குடும்பங்கள்: 20
அன்பியம்: 1
ஞாயிறு திருப்பலி காலை 11:00 மணி
திருவிழா: ஜூன் மாதம் 13 -ம் தேதியை ஒட்டிய சனி, ஞாயிறு
மண்ணின் இறையழைத்தல்:
அருட்சகோதரி. ஜெனிஷா, பிறரன்பு சபை
வழித்தடம்: மார்த்தாண்டம் -குலசேகரம் -காவல் ஸ்தலம் -அரசமூடு -பொன்மனை -பெருஞ்சாணி (புத்தன் டாம்)
வரலாறு:
பங்கின் தோற்றம்:
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு குலசேகரம், பல்லோட்டின் சபை (SAC) குருக்களால் பெருஞ்சாணி வேளாக்கோடு பகுதியில் ஒரு பாறையின் மீது இறைவழிபாடு நடத்தப்பட்டது. அதில் மிகவும் முக்கிய பங்காற்றியவர்கள் அருட்தந்தை. சத்தியநேசன் அடிகளார் மற்றும் அருட்தந்தை லூர்து ராஜ் அடிகளார் என்பவர்களாவர். அவர்கள் இருவரும் இணைந்து இதை ஒரு பங்காக மாற்ற வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொண்டனர். அந்த முயற்சியின் பயனாக 1996ம் ஆண்டு ஆலயம் கட்டுவதற்காக 10 சென்ட் நிலம், அருட்தந்தை. சத்தியநேசன் அடிகளார் பெயரில் வாங்கப்பட்டு, அருட்தந்தை. லூர்து ராஜ் அடிகளாரால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அருட்தந்தை. லூர்து ராஜ் அடிகளார், அருட்தந்தை. சத்தியநேசன் அடிகளார், பிறரன்பு சபை அருட்சகோதரி. மங்கள மேரி ஆகியோர் அரும்பாடுபட்டு ஆலயத்தின் அடித்தளம் அமைத்தார்கள். நிதிப்பற்றாக்குறையின் காரணமாக ஆலயத்தின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் போடப்பட்டது. முதல் திருப்பலி அருட்தந்தை. லூர்துராஜ் அடிகளாரால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
பங்கு உறுப்பினர்கள்:
ஆலயம் தொடங்கப்பட்ட போது பங்கு உறுப்பினர்களாக ஏழு குடும்பங்கள் இருந்தன. இன்று பங்கு உறுப்பினர்களாக 20 குடும்பங்கள் உள்ளன.
பங்கின் வளர்ச்சி :
குலசேகரம் பல்லோட்டின் சபை குருக்களால் மாதம் ஒரு திருப்பலி நடைபபெற்று வந்தது. ஆலயத்திற்கான அனுமதி கோரி, அது வழங்கப்படாமல், மேரி குயின் பாலர் பள்ளி என்ற பெயரில் சமூக சேவை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இறைவழிபாடும், பாலர் பள்ளியும் நடைப்பெற்று வந்தது.
2004-ஆம் ஆண்டு அருட்தந்தை சூசையன் அடிகளாரால் பங்கு பாதுகாவலராக தூய அந்தோணியார் அறிவிக்கப்பட்டு, புனிதரின் திரு சுரூபம் ஆலயத்தில் வைத்து அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின் மாதத்திற்கு இரண்டு திருப்பலி சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்தது.
ஆலய மேற்கூரை பழுதடைந்ததைக் கண்டு. 2007-ம் ஆண்டு அருட்தந்தை இருதய பால்ராஜ் அடிகளார் பண உதவி அளித்தார்கள். மேலும் பங்கு மக்களின் நன்கொடையும், உடல் ஒத்துழைப்பையும் கொண்டு, மேற்கூரை காங்கிரீட் கூரையாக மாற்றப்பட்டது.
2008-ம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் இவ்வாலயத்திற்கு வருகை தந்தபோது, பங்கின் தேவைகளை எடுத்துக் கூற, மேதகு ஆயர் அவர்களின் உயர்ந்த உள்ளம் பங்கின் தேவைகளுக்கு விடையளித்தது. அருட்தந்தை. கிறிஸ்டோபர் அடிகளாரின் முயற்சியாலும், மேதகு ஆயர் வழங்கிய நிதி உதவியாலும், பங்கு மக்களின் நன்கொடைகள் மற்றும் உடல் உழைப்பாலும் ஆலய பணிகள் முழுமைப் பெற்றது.
அருட்தந்தை. கிறிஸ்டோபர் அடிகளாரின் இணையற்ற இறைப்பணியால் 2010-ஆம் ஆண்டு முதன் முதலாக பங்கு நிர்வாகிகளை நிர்வாகித்தல், கிறிஸ்மஸ் பஜனை, விடுமுறை விவிலிய பள்ளி போன்ற அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. பங்கு மக்களின் பரிந்துரைப்படி சனிக்கிழமை நடைப்பெற்று வந்த திருப்பலியை ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றித் தந்தார்கள். அன்று முதல் மூன்று குடும்பங்கள் வீதம் வாரந்தோறும் திருப்பலியை சிறப்பித்து கொண்டிருக்கின்றனர்.
ஆலய அனுமதிக்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்ததால், செயல்பட்டு வந்த பாலர்பள்ளி 2011-ம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது.
மேலும் பல்லோட்டின் சபை குருக்களால் பங்கில் உள்ள ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவி, வீடு கட்டுவதற்கான உதவித் தொகை போன்ற பல உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் அருட்தந்தை. மோசஸ் அடிகளார் சிறப்பாக இறைப்பணியாற்றி, 01.01.2012 முதல் ஈஞ்சக்கோடு பங்கின் கிளைப் பங்காக பெருஞ்சாணி பங்கை அறிவித்து அர்ப்பணித்தார்கள். முதல் பங்குதந்தையாக அருட்தந்தை
மைக்கேல் ராஜ் அடிகளார் பணியாற்றினார்கள். அவர்களின் முழு ஈடுபாட்டான பணியால் பங்கின் குடும்பவிழா, அன்பியம், மறைக்கல்வி போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டன. ஆலய அனுமதிக்காக முழு முயற்சியோடு செயலாற்றினார்கள். ஈஞ்சக்கோடு பங்கு இறைமக்களும் பெருஞ்சாணி பங்கின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயலாற்றி வருகின்றார்கள். தொடர்ந்து அருட்தந்தை. ஆன்ட்ரூ அடிகளார் மற்றும் ஈஞ்சக்கோடு பிறரன்பு சபை அருட்சகோதரிகள் திருப்பலி நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல், பங்கு மக்களின் நலம் விசாரிப்பதோடு, நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் கூறி பங்கை முன்னேற்ற பாதையில் வழிநடத்தினார்கள்.
தற்போது அருட்தந்தை. சேவியர் ராஜ் அவர்கள் பங்குதந்தையாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பாலர் சபை,
2. சிறுவழி இயக்கம்,
3. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்,
4. இளைஞர் இயக்கம்,
5. மரியாயின் சேனை,
6. கத்தோலிக்க சேவா சங்கம்
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. சேவியர் ராஜ் அவர்கள்.