புனித சவேரியார் ஆலயம்
இடம்: இளயநேரி (கீழக்குளம்), கொம்பன்குளம் அஞ்சல், 628704
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்
பங்குத்தந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன்
குடும்பங்கள்: 17
வழிபாட்டு நேரம்:
மாதத்திற்கு ஒருமுறை மாலை 07:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்
திருவிழா: மே 02-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 11-ம் தேதி திருவிழா.
வழித்தடம்:
சாத்தான்குளத்திலிருந்து 6கி.மீ.
கொம்பன்குளத்திலிருந்து 1கி.மீ.
நெடுங்குளத்திலிருந்து 5கி.மீ.
Location map: St. Xavier's Church - Elayaneri
https://maps.app.goo.gl/ukh9nya5hsgMwj1g9
வரலாறு:
இளயநேரியில் 1896 ஆம் ஆண்டு பனையேற்றத் தொழில் செய்வதற்காக வந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஓலையால் ஆன குருசடி ஒன்று கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளயநேரியில் நாடார் சமூக மக்களில் பெரும்பாலானோர், கத்தோலிக்க கிறிஸ்தவம் தழுவியுள்ளனர்.
1920-களில் இங்கு தொற்று நோய் பரவியதால், சிலர் இறந்து போயினர். சிலர் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தனர். சிலர் மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பினர். வேறு சிலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகவே நிலைத்திருந்தனர். சிலர் குளத்திற்கு அருகே குடியிருப்புகளை மாற்றிக் கொண்டனர். அப்போது ஓலைக் குருசடியில் தான் மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அந்த குருசடிக்கு அருகில் பாடசாலை அமைத்து சிலகாலம் கல்வியறிவு புகட்டப்பட்டு வந்தது. பின்னர் பாடசாலை மூடப்பட்டது. இந்த குருசடிக்கு அருகில் தற்போது பிறசமய மக்கள் தான் பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றனர். ஒரே கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தினர் மட்டுமே, கிறிஸ்தவம் தோன்றிய இந்தப் பகுதியில் இன்றும் வசித்து வருகின்றனர். அந்த இடம் தான் தற்போது தூய மிக்கேல் அதிதூதர் குருசடியாக உள்ளது.
1924 ஆம் ஆண்டு முதல் சோமநாதபேரி பங்கின் கிளைப்பங்காக இளயநேரி ஆனது. அங்கிருந்து அருட்பணியாளர்கள் வந்து, இளயநேரி இறைமக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனித்து வந்தனர்.
புனித சவேரியார் ஆலயம்:
தொற்றுநோயின் காரணமாக குளத்தின் அருகே குடிபெயர்ந்த மக்களில் ஒருசிலர், புனித சவேரியாரின் பெயரில் ஜெபித்து வந்ததால், இதன் அருகே ஆலயம் அமைக்க மக்கள் ஆவல் கொண்டனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப, சோமநாதபேரி பங்குதந்தை அருட்பணி. கபிரியேல்நாதர் அவர்களின் வழிகாட்டலில், 1943 ஆம் ஆண்டு குளத்தருகே மண்ணால் ஆன சிறிய ஆலயம் கட்டப்பட்டு, புனித சவேரியார் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது.
1960களில் சோமநாதபேரி பங்குதந்தை அருட்பணி. இஞ்ஞாசியார் பணிக்காலத்தில், ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது.
அருட்பணி. மரியதாஸ் (1968-72) பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
1984-ம் ஆண்டு நெடுங்குளம் தனிப்பங்கான போது, இளயநேரி ஆலயமானது நெடுங்குளத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
1984 ஆம் ஆண்டு அருட்பணி. ம. இருதயராஜா அவர்களால் புனித சவேரியார் ஆலயத்திற்கு அருகிலேயே, புனித சவேரியார் ஆரம்பப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளிக்கூடம் அமைப்பதற்காக திரு. முத்துராஜமணி அவர்களால், 7 சென்ட் நிலமானது ஆலயத்திற்கு தானமாக வழங்கப்பட்டது.
அருட்பணி. U. அமலதாஸ் (1988-93) அவர்களின் பணிக்காலத்திலும் இந்த ஆலயமானது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
அருட்பணி. R. அமல்ராஜ் அவர்களின் முயற்சியால், ஆலயமானது புதிதாக கட்டப்பட்டு 24.06.2004 அன்று Msgr. ஜோசப் சேவியர் DCL., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு அருட்பணி. ஜான்சன் ராஜ் பணிக்காலத்தில், இளயநேரி மக்களின் தாராளமான நன்கொடையால், புனித மிக்கேல் அதிதூதர் குருசடி புதுப்பிக்கப்பட்டு உயிரோட்டம் கொடுக்கப்பட்டது.
1960இல் திரு. பாலையா அவர்கள் வாய்மொழியாக ஆலயம் அமைக்க கொடுத்த இடமானது, பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்ததால், 60 ஆண்டுகளாகவே நிலப்பிரச்சினையாகவே இருந்து வந்தது. தற்போது 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மறைமாவட்ட வழிகாட்டுதலுடன், பங்குதந்தை அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் அவர்களின் முயற்சியால், நிலப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு, மறைமாவட்டத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலத்திற்கு நிரந்தர தீர்வுகாணும் பொருட்டு, அப்போது ஆலய கணக்கபிள்ளையாக இருந்த திரு. கிறிஸ்துராஜ் அவர்கள், ஆலயம் இருந்த நிலத்தை தமது பெயரில் வாங்கி, பின்னர் மிகக்குறைந்த விலைக்கு அந்த நிலத்தை தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு தந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டு பள்ளிக்கென திரு. முத்துராஜமணி அவர்கள் வழங்கிய நிலத்தில் ஏற்பட்டு வந்த ஒருசில தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகள், அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் அவர்களின் பணிக்காலத்தில், மறைமாவட்ட வழிகாட்டலில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் முழுமையாக தீர்க்கப்பட்டு, திரு. முத்துராஜமணி அவர்களின் வாரிசுகளால் பத்திரப் பதிவும், நிரந்தர தீர்வும் காணப்பட்டது.
புனித சவேரியார் ஆலயத்திற்கு சற்று தொலைவில் தனியாக
இங்கு அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் கெபி சிறியதாகக் காணப்பட்டாலும், இன்றுவரை இப்பகுதியில் உள்ள மக்கள் நம்பிக்கையுடன் வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்வது சிறப்பு. ஏனெனில் இவ்விடம் தான் இளயநேரி மக்களில் கிறிஸ்தவ விதை விதைக்கப்பட்ட முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குறைந்த குடும்பங்களைக் கொண்டிருந்தாலும், இறைவன் மீதும் புனித சவேரியார் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்ட இளயநேரி இறைசமூகமானது, நெடுங்குளம் பங்குதந்தையர்களின் வழிகாட்டலில் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் அவர்கள்.