புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: குமார்நகர், திருப்பூர் 3
மாவட்டம்: திருப்பூர்
மறைமாவட்டம்: கோயம்புத்தூர்
மறைவட்டம்: கருமத்தாம்பட்டி
பங்குதந்தை அருட்பணி. பிலிப். S
குடும்பங்கள்: 1000
அன்பியங்கள்: 17
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி, காலை 08:00 மணி மற்றும் மாலை 05:30 மணி
திங்கள், புதன் திருப்பலி காலை 06:15 மணி
செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி மாலை 06:15 மணி
திருவிழா: மே மாதம் 01-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. A. கிறிஸ்டோபர் ரோச், கோவை மறைமாவட்டம்
வழித்தடம்: கோயம்புத்தூர் -அவிநாசி வழித்தடத்தில், ஆர்.டி.ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம்.
Location map: St. Joseph's Church
https://maps.app.goo.gl/dUqsZQj9oc6wUdP99
வரலாறு
தொழில் நகராம் திருப்பூரில் முன்பு புனித கத்தரீனாள் ஆலயம் என்ற ஒரே ஒரு ஆலயம் மட்டுமே இருந்தது. 1947 ஆம் வருடம் கோவை மறைமாவட்டத்தின் முயற்சியால், குமார் நகர் எனப்படும் இப்பகுதியில் பிஷப் உபகாரசாமி பள்ளியானது துவக்கப் பட்டது. அப்பள்ளியின் ஒரு பகுதியில் அதாவது தற்போது அந்தோணியார் கெபி அமைந்துள்ள இடத்தில், ஓடுகளால் வேயப்பட்ட ஒரு சாதாரண பள்ளிக் கட்டிடத்தில், சிறு பீடம் ஒன்று அமைத்து, திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. பள்ளியை நிர்வகித்து வந்த அருட்தந்தையர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இறைமக்கள் ஞாயிறு கடன் திருப்பலிகளில் கலந்து கொண்டாலும் பிற சடங்குகள், குருக்களுடன் தொடர்பு, திருச்சபை தொடர்பு போன்றவற்றில் நல்ல ஈடுபாடு கொள்ள போதிய வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. திருப்பூர் நகரின் அனைத்து இறை மக்களும் ஒரே பங்கான புனித கத்தரீனாள் ஆலயத்திற்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். ஆண்டுகள் செல்லச் செல்ல குமார் நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இறைமக்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இம்மக்கள் அனைவரும் சற்று தொலைவில் உள்ள புனித கத்தரீனாள் ஆலயத்திற்குச் சென்று வர மிகவும் சிரமப்பட்டனர்.
இச்சூழலில் இப்பகுதி இறைமக்கள் அனைவரும் தங்களுக்காக ஆலயம் ஒன்று தேவை என்பதை, அச்சமயத்தில் பள்ளியின் தாளாளராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அருட்பணி. தர்மநாதர் அடிகளார் அவர்களிடம் முறையிட்டனர். ஆண்டு தோறும் இவர்களின் வேண்டுகோள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
1972 ஆம் ஆண்டு அருட்பணி. தர்மநாதர் அடிகளாரின் மனதில் இப்பகுதி இறைமக்களுக்காக ஆலயம் ஒன்று அமைத்துத் தர வேண்டுமென்று எண்ணம் முதன்முதலாக வேரூன்றத் துவங்கியது. பள்ளி வளாகத்தில் மிகப் பொருத்தமான இடத்தில், அழகான ஒரு ஆலயம் அமைய வேண்டும் என மனஉறுதி கொண்டார்.
ஆலயம் கட்டுவது என்பது சாதாரணப் பணியா? பொறுப்புள்ள, இலட்சியம் மிகுந்த உயர்ந்த பணி அல்லவா!
1975 ஆம் ஆண்டு அருட்தந்தை அவர்கள், ஆண்டிற்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு "புனிதரின் விழா" என்று நடத்தி, இப்பகுதி இறைமக்களை ஒன்றிணைக்க வேண்டும் என திட்டமிட்டார். அதனால் தொழில் நகரான திருப்பூரில் தொழிலாளரும், தொழிலாளரின் பாதுகாவலருமான "புனித ஜோசப் விழா" கொண்டாடலாம் என முடிவெடுத்து, மக்களோடு இணைந்து விழாவினைச் சிறப்பாக கொண்டாடினர். இதன் காரணமாக அடிகளாருக்கு "புனித ஜோசப்" ஆலயம் கட்ட வேண்டிய எண்ணம் உருவெடுத்தது.
1978 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் இவ்வாலயத்திற்கு மறைந்த முன்னாள் ஆயர் விசுவாசம் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கப் பெறாததால், இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அடிக்கல் மட்டுமே நின்றது.
1980 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் தந்தையவர்கள் மன உறுதியுடன் கட்டிட வேலையைத் துவங்கினார். 3 மாதங்கள் வேலைகள் விரைவாக நடந்தன. அதன்பின் சிமெண்ட் தட்டுப்பாட்டின் காரணமாகவும், நிதி நெருக்கடியாலும் வேலை தடைபட்டது. ஓராண்டுக்குப் பின்னர் ரோம் மற்றும் ஜெர்மனியிலிருந்து கிடைத்த ரூபாய் இரண்டு இலட்சம், இவ்வட்டார இறைமக்கள் அளித்த நிதி, மேலும் பிஷப் உபகாரசாமி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர் சேர்ந்து அளித்த ரூ.15000/- போன்ற நிதியுதவிகளால், கட்டிடப்பணி வெகுவேகமாக தொடர்ந்து நடைபெற்றது. மேலும் ஆலயத்திற்கு வேண்டிய மணி, பீட அமைப்பு மேடை, பீடம், மின் விளக்குகள், மின் விசிறிகள், ஒலி பெருக்கி சாதனங்கள் போன்றவை அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றன. பலருடைய தியாகத்தாலும், நிதியுதவியாலும் ஆலயம் சிறப்பாக உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியாக 1982 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் நாளன்று புனித சூசையப்பர் பெயரால் அமையப்பெற்ற இவ்வாலயம் ஆயர்களால் அர்ச்சித்து அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னாள் பெங்களூர் பேராயர் டாக்டர். ஆரோக்கியசாமி D.D. அவர்களால் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது. கோவை மறைமாவட் முன்னாள் ஆயர் டாக்டர். M. அம்புரோஸ் D.D., D.C.L., அவர்களால் ஆலயம் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. ஊட்டி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் டாக்டர். அருள்தாஸ் ஜேம்ஸ் D.D அவர்களால் ஆலய மணி மந்திரிக்கப்பட்டது. இத்தகு சிறப்பான, அழகான உயரமான ஆலயத்தை அமைத்த பெருமை அருட்பணி. தர்மநாதர் அடிகளாரையே சாரும். அன்று முதல் இன்று வரை இவ்வாலயம் சீராகவும், சிறப்பாகவும் வளர்ச்சி பெற்றுக் கொண்டு வருகிறது.
ஆலய வளர்ச்சிப் பணிகள்:
ஆலயப் பணிகள் நிறைவுற்றும் தனிப்பங்காக செயல்படாமல், அருட்தந்தை தர்மநாதர் அடிகளாரின் வழிகாட்டுதலின்படி திருப்பலிகளும், திருவிழாக்களும் ஏறக்குறைய 4 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. 1986 ஆம் ஆண்டு தனிப்பங்காக பிரிக்கப்பட்டு அருட்தந்தை K.P. வின்சென்ட் அடிகளார் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரின் சீரிய முயற்சியால் பங்கு மக்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
அருட்பணி. பங்ராஸ் அடிகளார் பணிக்காலத்தில் கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபியைக் கட்டி, இறைமக்களை பக்தி முயற்சியில் திளைக்கச் செய்தார்.
அருட்பணி. ஜோசப் பெலிக்ஸ் அடிகளார் பணிக்காலத்தில் மக்கள் அமர்வதற்கு இருக்கைகளும், ஆலயத்தின் மூன்று கதவுகளும் தேக்கு மரத்தினால் அமைக்கப்பட்டன. ஆலயத்தின் முன்புறம் குழந்தை இயேசு கெபியும், ஆரோக்கிய மாதா கெபியும் கட்டப்பட்டது. மேலும் தற்பொழுதும் தொடர்ந்து நடைபெற்று வரும் குழந்தை இயேசு நவநாள் பக்தி முயற்சியும் தொடங்கப்பட்டது. மேலும் இவருடைய காலத்தில் பங்குத் தந்தையின் இல்லம் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிடப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
அருட்தந்தை பால்ராஜ் அடிகளார் பங்கு மக்கள் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை ஊக்கப்படுத்தி, ஒழுங்குபடுத்தி பங்கு நடவடிக்கைகளில் முழுமனதுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட வைத்தார். பங்குத் தந்தையின் இல்ல கட்டிடப் பணிகள் நிறைவுற்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
அருட்பணி. பயஸ் சவரிமுத்து அடிகளார் பணிக்காலத்தில் ஆலயப் பீடமானது பளிங்கு கற்கள் பொருத்தப்பட்டு மெருகேற்றப்பட்டது.
2002 ஆம் ஆண்டு ஜூன் முதல் அருட்தந்தை. மரிய முடியப்பன் அடிகளார் பங்குத் தந்தையாய் பொறுப்பேற்று மக்களை ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்ளச்செய்தார். இவரது பணிக்காலத்தில் ஆலயத்தின் முகப்பு கோபுரம் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் அருட்தந்தை. மரியநாதர் அடிகளார் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று தன் முதிர்ந்த வயதிலும் இளமைத் துடிப்புடன் செயல்பட்டார். ஆலயத்தில் முதன் முறையாக “அன்னதானம்” வழங்கிய பெருமை இவரையே சாரும். 10 அன்பியங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அன்பியக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அருட்தந்தை R. அருள்முத்து பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் குழந்தை இயேசுவிற்கும், இறை இரக்கத்தின் ஆண்டவருக்கும் ஆலயத்தின் உட்புறம் சிறு பீடங்கள் அமைக்கப்பட்டன. மற்றும் 14 சிலுவைப்பாதை சுரூபப் படங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. சமயப் பொருட்கள் விற்பனையகம் அமைக்கப்பட்டது. 25வது ஆண்டு வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு, ஆலய முகப்பு வளைவு மற்றும் ஆலயத்தின் முன்புறம் சீரிய தளம் அமைக்கும் பணி, ஆலய கோபுரத்திலுள்ள கண்ணாடியில் வண்ண இறைச் சித்திரங்கள் வரைதல் போன்ற பணிகளை செவ்வனே நிறைவேற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணியாளர்கள் பங்கு மக்களை சீரிய முறையில் வழிநடத்தி, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர்.
ஆலயச் சிறப்புகள்:
புனித சூசையப்பர் ஆலயப்பங்கு 75 குடும்பங்களை கொண்டு துவங்கி, தற்போது ஏறத்தாழ 1000 குடும்பங்களைக் கொண்ட பெரிய குடும்பமாக மலர்ந்துள்ளது. வியாழக்கிழமை தோறும் குழந்தை இயேசு நவநாள் வேண்டுதல் தேருடன், அற்புதங்களோடு நடைபெற்று வருகிறது. மேலும் செவ்வாய்க்கிழமைகளில் கோடி அற்புதர் புனித அந்தோணியார் மன்றாட்டும், வெள்ளிக்கிழமைகளில் இறை இரக்கத்தின் மன்றாட்டும் நடைபெற்று வருகிறது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
மரியாயின் சேனை
புனித வின்சென்ட் தே பவுல் சபை
இளைஞர் இயக்கம்.
பங்கின் கல்வி நிறுவனம்:
Infant Jesus Matriculation School
பங்கின் கெபி:
புனித அந்தோனியார் கெபி.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. K. P. வின்சென்ட் (1986-1987)
2. அருட்பணி. பங்ராஸ் (1987-1990)
3. அருட்பணி. ஜோசப் பெலிக்ஸ் (1990-1996)
4. அருட்பணி. பால்ராஜ் (1996-1998)
5. அருட்பணி. பயஸ் சவரிமுத்து (1998-2002)
6. அருட்பணி. மரிய முடியப்பன் (2002-2003)
7. அருட்பணி. மரியநாதர் (2003-2005)
8. அருட்பணி. R. அருள்முத்து (2005-2010)
9. அருட்பணி. ஜார்ஜ் ரொசாரியோ (2010-2015)
10. அருட்பணி. பிரான்சிஸ் ரொசாரியோ (2015-2021)
11. அருட்பணி. பிலிப். S (2021...)
தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்...
ஆலய வரலாறு: பங்குதந்தை அருட்பணி. பிலிப். S அவர்கள்.
தகவல்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திரு. ஆனந்தகுமார் அவர்கள்.
புகைப்படங்கள்: திரு. சந்திரன் அவர்கள்.