என்பேரில் வைத்த நேசத்துக்காக நித்திய ஞானத்தைச் சிறுபிள்ளையின் பலவீனத்துக்குள் மறைத்த அன்பு நிறைந்த சேசுவே! என் எதிர் காலத்துக்கு உமது ஆசீர்வாதத்தைக் கிரகிக்க நான் என் இளமைப் பருவத்தை எப்படி பரிசுத்தப் படுத்தவேணு மென்று, உமது பரிசுத்த இளமைப் பருவத்தை எனக்குக் காண்பித்த தற்காக நான் தாழ்ச்சியோடு நமஸ்காரவந்தனம் செய்கிறேன். உமது பயத்தையும் நேசத்தையும் என் இருதயத்துக்குள் பிரவேசிக்கச் செய்து, அதனால் நீர் எனக்குக்காட்டிய பாவனையை நான் பிரயோசனப்படுத்தும்படி உம்மை மன்றாடுகிறேன். மேலும் நான் இவ்வுலகத்தில் வந்த ஒரே ஒரு முடிவின்படியே உமக்கு ஊழியஞ் செய்கிறதை விட, வேறே எந்த விதத்திலும் என் சீவிய காலத்தின் நாட்களில் ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரமாகிலும் வீணாகப் போக விடாதேயும்.
ஆராதனைக்குரிய சேசுவே! நீர் என் இருதயத்தை ஆசையோடு கேட்கிறபடியால் நான் என்றென்றைக்கும் அதை உமக்கே ஒப்புக் கொடுக்கின்றேன். அதை உமது திரு இருதயம் போல் மாற்றி உமது நேச அக்கினியால் எரித்தருளும். அந்த இருதயம் பாவத்தால் பலவீனமாகாதபடிக்குப் பாவத்தின் பயங்கரத்தை அதில் பதியவைத்து, உமது பரிசுத்த பாலத்துவத்தின் புண்ணிய பலன்களையும் சாந்தத்தையும் பரிசுத்தத்தையும் சிரவணத்தையும் அதில் ஏவும்படி உம்மை மன்றாடுகிறேன். நீர் உமது பரிசுத்த மாதாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததற்காக, நான் என் பெரியோருக்கு மாறாத கீழ்ப்படிதலால் சங்கை செய்ய ஆசையாயிருக்கிறேன். நீர் பூலோகத்தில் இருக்கும்போது நீர் செய்த சொற்ப காரியமுதலாய் அளவற்று மேலாக உயர்த்தப்பட்டதே, அந்தப்பரிசுத்தமும் தெய்வீகமுமான கருத்தோடு நான் செய்யும் எல்லாக் கிரியைகளையும், உமது கருத்தோடு ஒன்றாய்ச் சேர்த்து உம்மோடு ஒப்புக்கொடுக்கிறேன். உமது சிறுவயதில் நீர் செய்த தாழ்ச்சியுள்ள பிரயாசையான வேலைக்குச் சங்கையாக என் எளிய கிரியைகளையும், படிப்பையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். ஓ, பரிசுத்த சேசுவே! உமது அபாத்திரப் பிள்ளையாகிய என்னை உமது ஆதரவில் வைத்துக் கொள்ளும். உமது சத்துராதியா யிருக்கிற இவ்வுலகத்தின் சோதனையிலும் ஆபத்திலும் இருந்து என்னைக் காப்பாற்றி, என் எல்லாக் கிரியைகளையும் நினைவுகளையும் விருப்பங்களையும் உமது மகிமைக்கே நடத்தியருளும். ஆமென்.