ஞானஸ்நானம்:
பிறந்தது முதல் ஞானஸ்நானம் பெறும் வரை உங்கள் குழந்தை ஜென்மப் பாவத்தால் பசாசின் அடிமையாகவும், கடவுளின் எதிரியாகவும் இருக்கிறது. குழந்தை பிறந்த அன்றே அதற்கு ஞானஸ்நானம் தர ஏற்பாடு செய்த நல்ல கத்தோலிக்கப் பெற்றோரை நீங்களும் கண்டுபாவியுங்கள்.
பாவசங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை:
ஐந்து வயதுக் குழந்தை ஒன்று நரகத்தில் இருப்பதாக அர்ச். கிரகோரியார் கூறுகிறார். புத்தி விபரம் அறிந்தவுடன் குழந்தை பாவசங்கீர்த்தனம் செய்து தேவ மன்னிப்படைய அவனுக்கு உதவுங்கள். அவன் திவ்ய நன்மை உட்கொள்ளவும் உடனே ஆயத்தம் செய்யுங்கள்.
இவ்வாறு சேசுவின் அரவணைப்பிற்கும், நேசத்திற்கும் அவனை ஒப்புக்கொடுங்கள். அவனது புதுநன்மை நாளன்று அபத்தமான டிஜிட்டல் பேனர்கள், காதைக் கிழிக்கும் சினிமா பாடல்கள் இவைகளைத் தவிர்ப்பதில் எச்சரிக்கையாயிருங்கள். திவ்ய அன்பர் அவனிலும், அவன் திவ்ய அன்பரிலும் இளைப்பாறவிடுங்கள்.
அவஸ்தைப்பூசுதல்:
இறந்து விடும் ஆபத்தில் இருக்கும் உறவினர் முதலில் தம் ஆன்ம மருத்துவராகிய குருவானவரை சந்திக்க சற்றும் தாமதியாமல் ஏற்பாடு செய்வது உங்கள் தலையாய கடமை. அதன்பின் உடலுக்கான மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் உடலின் மரணத்தை விட, ஆயத்தமற்ற ஆத்தும் மரணம் அதிபயங்கரமானது!
நரகத்தின் அக்கினிப் பற்களிலிருந்து உங்கள் உறவினரைக் காப்பாற்ற எப்போதும் விழிப்பாயிருங்கள்! பாவசங்கீர்த்தனமும், அதைத் தொடர்ந்து வழங்கப்படும் அவஸ்தைப் பூசுதலும், அவஸ்தை நன்மையும், பரிபூரணப் பலனுள்ள இறுதி ஆசீர்வாதமும் நரகத்திலிருந்து மட்டுமின்றி உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்தும் கூட ஆன்மாவை விடுவிக்க வல்லவை!