ஏகாதிபதியான கர்த்தாவே! எப்பொழுது என்னுள்ளத்தில் கடவுளாக ஆளுவீர்! எப்பொழுது என் சரீரமும் ஆத்துமமும் தேவரீருக்கு முழுதும் கீழ்ப்படியும்? அடியேன் எத்தனையோ வருஷ காலம் தேவரீர் என்னை ஆள வேண்டாமென்று அகங்காரம், காய்மகாரம், மோகம், உலோபித்தனம், கோபமென்னும் இவை முதலான பாவப் பசாசுகளை எனக்கு இராசாக்களாகவும் கொடுங்கோல் அரசர்களாகவும் தேர்ந்து கொண்டேன். ஐயையோ! கர்த்தருக்கு துரோகியாய்ப் போனேன். கர்த்தருக்கு துரோகம் செய்தவன் கொலைப்பட வேண்டுமென்றமையால் அடியேன் தேவரீருக்குச் செய்த சதிமானத்துக்கும், கர்த்தர் துரோகத்துக்கும் ஆக்கினையாக இப்பொழுது அடியேனுக்கு நேரிடுகிற மரணத்தைப் பொறுமையாய் ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் எல்லா மனிதரிலும் கெட்டவனாயும், எல்லாத் துரோகிகளிலும் பெருந் துரோகியாயும் இருக்கிறேன். ஆகிலும் அடியேனைப் பரம இராச்சியத்திலிருந்து அகற்றாதேயும் பிதாவே. என் ஆத்துமமே, உன் பாவங்களை நிவர்த்தியாக்கத்தக்கதாகச் சேசுநாத சுவாமி பாடுபட்டு மரித்தார் என்கிறதினால் வாளாவிருந்துவிடாதே. மோட்ச இராச்சியத்தை உனக்கே பெறுவித்தார், அவ்விடத்துக்குச் சேரத் தீவிரி.