என் சர்வேசுரா! உமது சத்திய வேதத்தை அறியாத அநேகமாயிரம் பேர்களுக்குள்ளே அடியேனைத் தெரிந்தெடுத்துக் கொண்டு, உமது திரு மறையை எனக்குப் போதித்தீர் இந்தத் தேவ மறையை நான் முழு மனதோடு கைக் கொண்டு தீர்க்கதரிசிகளைக் கொண்டு, தேவரீர் அறிவித்த சத்தியங்களை எல்லாம் மிகுந்த அடக்கத்துடனே செவி கொடுத்துக் கேட்கிறது மல்லாமல், அவைகள் தேவ வசனங்களாகையால் மிகவும் பணிந்த மனதோடு அவைகளை ஆசித்து, மன மகிழ்ச்சியோடு அந்த வசனங்கள் நிறைவேறுகின்றதைக் கண்டு களிகூருகிறேன்.
என் சர்வேசுரா! பூர்வ வேதத்திலிருந்த அர்ச்சியசிஷ்டவர்களைப் போல் நானும் இருந்தால் அல்லவோ நல்லது. நான் பிதாப் பிதாக்களைப் போல் உம்மை விரும்பி தீர்க்கத்தரிசிகளைப் போல் உம்மை அறிந்து நமஸ்கரித்து, அப்போஸ்தலர்களைப் போல் உம்மை நேசித்து முழுதும் உமது வசமாயிராமல் இருப்பதேனோ?